அனுராதபுரம் மாவட்டத்தில் கடந்த வருடம் நாய்கள் மற்றும் பூனைகள் என்பவற்றால் கடியுண்டவர்களுக்காக 17 ஆயிரம் ஊசி மருந்துகள் பாவிக்கப்பட்டிருப்பதாக அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டபிள்யூ.எம்.ரி. விஜேகோன் தெரிவித்தார். இதேவேளை, இவ்வருடம் ஜனவரி மாதத்தில் மாத்திரம் இவ்வாறு நாய் போன்ற பிராணிகளின் கடிக்கு ஆளாகியவர்களுக்கு 2,212 ஊசி மருந்துகள் ஏற்றப்பட்டிருப்பதாகவும் தெரிவித்த பணிப்பாளர் விஜேகோன் பூனைகள், அணில், கரடி, நரி மற்றும் வெளவால் என்பவற்றினால் கடியுண்டவர்களும் இவர்களில் அடங்குவதாகத் தெரிவித்தார். இது தொடர்பில் வட மத்திய மாகாண சுகாதாரப் பணிப்பாளர் அலுவலகத்தின் அநுராதபுர மாவட்ட பொதுச் சுகாதரப் பரிசோதகர் டபிள்யூ. ஏ. ரஞ்சித் தெரிவிக்கையில்;
அநுராதபுர மாவட்டத்தில் ஒரு இலட்சத்திற்கும் அதிக எண்ணிக்கையிலான கட்டாக்காலி நாய்கள் காணப்படுகின்றன. அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள தேசிய கொள்கையின் பிரகாரம் நாய்களைக் கொல்வதற்குத் தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. எனவே, நாம் நாய்களின் இனப் பெருக்கத் தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகிறோம். கடந்த வருடம் ஆயிரம் நாய்களுக்கு இன விருத்தித் தடைக்கான சத்திரசிகிச்சைகளை மேற்கொண்டோம். இவ் ஆண்டில் அத்தகைய சத்திர சிகிச்சைகளை மேற்கொள்வதற்கென எமது திணைக்களத்திற்கு 10 மில்லியன் ரூபா நிதி கிடைத்துள்ளது என்றார்.