விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளித்து வருவதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ள உள்ளூர் அமைப்பு தொடர்பாக விசாரணை நடத்துவது குறித்து கம்போடிய அரசாங்கம் பரிசீலனை செய்துவருவதாக அந்நாட்டு ஊடகமொன்று திங்கட்கிழமை தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக கம்போடிய வெளிவிவகார அமைச்சு உள்துறை அமைச்சர் சார் கெங்கிற்கு கடிதமொன்றை அனுப்பியிருப்பதாக கம்போடியா தினசரி தெரிவித்துள்ளது.
அமெரிக்காவை தளமாக கொண்ட தமிழ் மன்றமொன்று கம்போடியாவில் இயங்குவதாக அமெரிக்கத் தூதரகத்திடமிருந்து கடிதமொன்று வெளிவிவகார அமைச்சுக்கு கிடைத்துள்ளது. பெப்ரவரி 26 ஆம் திகதியிடப்பட்ட கடிதமென பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
“இந்த அமைப்பு குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கவும்’ என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்மன்றமொன்று கம்போடியாவில் இயங்குகின்றதா என்பது பற்றிய விபரம் அதில் தெரிவிக்கப்படவில்லை.
2007 ஜூலையில் சர்வதேச பாதுகாப்பு விவகாரங்களை வெளியிடும் சஞ்சிகையான “ஜேன்ஸ் இன்ரலிஜன்ஸ் ரிவியூ’ வெளியிட்ட தகவலில் புலிகளுக்கு ஆயுதங்களை பெற்றுக்கொள்ளும் குறிப்பிடத்தக்க இடமாக கம்போடியா விளங்குவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பெற்றுக்கொள்ளும் வட்டாரங்கள் தொடர்பாக குறிப்பிட்டிருக்கவில்லை. அதனை அச்சமயம் கம்போடிய அரசாங்கம் மறுத்திருந்தது.