“அரசியல்வாதிகள் தங்கள் இலக்குகளை அடையவே கிழக்கில் தமிழ்முஸ்லிம் உறவை சீர்குலைத்தனர்’

17f1ba5605a9cde0.jpgஅரசியல் வாதிகள் தங்கள் இலக்குகளை அடைவதற்கு சமூகங்களை முறுகவிட்டு தமிழ் முஸ்லிம் உறவை சீர்குலைத்து வந்துள்ளனர் என தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா தெரிவித்தார். தேசிய காங்கிரஸ் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட சமாதான தூது மகாநாடு அக்கரைப்பற்று பஸ் நிலைய சதுக்கத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற போது தலைமைவகித்து உரையாற்றிய அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இம் மகாநாட்டுக்கு பிரதம அதிதியாக கலந்துகொண்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அங்கு உரையாற்றும் போது; கிழக்கு மாகாணாத்தில் நிரந்தர சமாதானத்தையும் ஜனநாயகத்தையும் ஏற்படுத்துவதன் மூலமே கிழக்கை கட்டியெழுப்ப முடியும்.

கிழக்கில் சிறார்கள் ஆயுதங்களை கண்டு அச்சமடைவதாகவும் சட்டவிரோதமான முறையில் ஆயுதங்களை வைத்திருப்பதைத் தவிர்ப்பதற்காகவும் ஆயுதங்களை அரசிடம் ஒப்படைத்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய கிழக்கு மாகாண சுகாதார சமூக சேவைகள் விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா கல்வித்துறையில் கிழக்கு மாகாணம் 9 ஆவது இடத்திலுள்ளது. கல்விப் பொதுத்தராதர சாதாரண பரீட்சையில் 50 சதவீதத்தினரே உயர்தரம் கற்க தகுதி பெற்றுள்ளனர்.

அக்கரைப்பற்று கல்வி வலயமும் மட்டக்களப்பு மத்திய கல்வி வலயமும் இல்லாது போனால் இதையும் விட மோசமாக 42 சதவீதம் காணப்பட்டிருக்கும் எனவும் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் வழங்கப்படும் நியமனங்கள் அனைத்தும் இன விகிதாசாரப்படி வழங்கப்படுகின்றது.

ஆசிய அபிவிருத்தி வங்கி, ஜப்பான் அபிவிருத்தி வங்கி, உலக வங்கி, ஐ.எம்.எவ். போன்ற நிறுவனங்களால் வழங்கப்படும் அனைத்து நிதிகளும் கிழக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட கல்வி, விளையாட்டு, மீன்பிடி, சுகாதாரம் போன்ற துறைகளை அபிவிருத்தி செய்யப் பயன்படுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இம் மகாநாட்டில் மாகாண அமைச்சர்களான எம்.எஸ்.உதுமாலெப்பை, விமலவீரதிசாநாயக்கா, மாகாணசபை உறுப்பினர்களான துல்கர்நயிம், அமீர், அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ஏ.எல்.தவம், தேசியகாங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவர் டாக்டர் உதுமா லெப்பை, தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்த பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் முதலமைச்சரின் ஊடகப்பேச்சாளர் ஆஸாத்மௌலானா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *