![]()
பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்குரிய குறுகிய, நீண்டகால நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் உலகபொருளாதார நெருக்கடியிலிருந்தும் தெற்காசிய நாடுகள் குறிப்பாக இலங்கை, இந்தியா ஆகியவை தாக்குப்பிடிக்க முடியுமென ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது. நேற்று திங்கட்கிழமை வெளியிட்ட ஆய்வறிக்கையிலேயே ஆசிய அபிவிருத்தி வங்கி இதனை சுட்டிக்காட்டியுள்ளது.
உலக பொருளாதார நெருக்கடி மோசமடைகையில் மூலதனத்தில் பாதிப்பும் பொருட்களின் விலைகளில் தாக்கமும் ஏற்படும் அத்துடன் ஏற்றுமதியில் வீழ்ச்சியும் வெளிநாட்டிலிருந்து அனுப்பப்படும் நிதி குறைவடைவதும் ஏற்படும். இந்த விளைவுகளை தெற்காசியா எதிர்கொள்ள நேரிடும் என்று “உலக பொருளாதார பின்னடைவு தெற்காசியாவில் ஏற்படுத்தும் தாக்கம்’ என்ற தலைப்பிலான ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெருக்கடியின் தாக்கத்தை குறைப்பதற்காக குறுகியகால நடவடிக்கைகள் பல மேற்கொள்ளப்பட்டுள்ளன நாணயக்கொள்கையில் தளர்வு, நிதி அதிகரிப்பு திட்டங்கள் இந் நடவடிக்கைகளில் அடங்கும். அதேசமயம் வட்டி வீதக்குறைப்புக்கு இன்னமும் இடம் இருக்கின்றது. குறிப்பாக இந்தியா, இலங்கை நாடுகளில் வட்டி வீதக்குறைப்புக்கு இடமுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலுள்ள பணியாளர்கள் உள்நாட்டுக்கு பணத்தை அனுப்புவதை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை அரசாங்கங்கள் மேற்கொள்ளவேண்டும்.
விசேட சேமிப்புக் கணக்குகள் மற்றும் நாணய மாற்று ஏற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாட வேண்டும். தமது நிதி நடவடிக்கைகளை ஸ்திரமானதாக வைத்திருக்க இவற்றை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீண்டகால அடிப்படையிலான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டால் தமது நிதிப்பற்றாக்குறைகளை தெற்காசிய நாடுகள் குறைத்துக் கொள்ள வேண்டிய தேவைப்பாடு உள்ளது. தமது பொருளாதாரத்தை வெவ்வேறானதாக விரிவுபடுத்துவதும் உள்சார் கட்டமைப்பு முதலீடுகளை அதிகரிப்பதுடன், பிராந்தியங்களுக்கிடையிலான வர்த்தகத்தையும் விரிவுபடுத்த வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்காசியாவின் சில நாடுகள் நெருக்கடி தொடர்பாக ஒப்பீட்டளவில் குறைந்த அளவிலேயே வெளிப்படுத்திக் காட்டுகின்றன. மூலதனப்பாய்ச்சல் தொடர்பாக மோசமான பாதிப்பு குறித்து அவை வெளிப்படுத்துவது குறைவானதாகவே உள்ளது. தெற்காசியாவில் 45 கோடி மக்கள் நாளொன்றுக்கு 1.25 டொலரிலேயே உயிர் வாழ்கின்றனர். ஆதலால் பொருளாதார வளர்ச்சி விடயத்தில் தளர்வான அணுகுமுறையானது கவலைக்கு காரணமாகிவிடும் என்று ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் ஹருகிசோ குரூடோ தெரிவித்துள்ளார்.