வன்னி யிலிருந்து வரும் மக்களை தங்க வைப்பதற்கென வவுனியாவில் அமைக்கப்பட்ட இரண்டாவது நிவாரணக் கிராமமான ஆனந்த குமாரசுவாமி நிவாரணக் கிராமத்தில் மக்களை தங்கவைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு இதுவரை 849 குடும்பங்களைச் சேர்ந்த 3215 பேர் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளதாக மீள் குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் கூறினார். இக்கிராமத்துக்கு நேற்று அமைச்சர் ரிசாட் பதியுதீன் விஜயம் மேற்கொண்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் மற்றும் தேவைகள் குறித்து ஆராய்ந்தார். இந்த மக்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் தடையின்றி துரிதமாக வழங்குமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.
வவுனியாவுக்கு இதுவரை 40 ஆயிரம் பொதுமக்கள் வந்துள்ளதோடு அவர்கள் தாங்களாகவே சமைப்பதற்குத் தேவையான பொருட்கள் வழங்கும் நடவடிக்கை புதன் கிழமைக்கு முன் பூர்த்தி செய்யப்பட உள்ளன. நிவாரணக் கிராமங்களிலுள்ள மக்கள் புதன்கிழமை முதல் தாங்களாகவே சமைக்க உள்ளதாக வவுனியா அரச அதிபர் திருமதி சாள்ஸ் தெரிவித்தார். இதேவேளை வவுனியா வந்துள்ள மக்களுக்கு தேவையான வசதிகள் குறித்து ஆராயும் உயர்மட்ட மாநாடு அமைச்சர் ரிசாட் பதியுதீனின் தலைமையில் வவுனியா கச்சேரியில் நடைபெற்றது.
வன்னியிலிருந்து அடுத்த சில தினங்களில் மேலும் அதிகளவான பொதுமக்கள் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு வருவார்கள் என நாம் அறிகின்றோம். இடைத்தங்கல் முகாம்களில் வசதிகள் மேலும் விஸ்தரிக்கப்பட வேண்டிய தேவை உள்ளது என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இங்கு தெரிவித்தார்.
கடந்த இரு தினங்களில் மட்டும் மூவாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் வந்துள்ளார்கள். இவர்களை நான் சனிக்கிழமை சந்தித்தபோது அவர்கள் நீண்ட தூரம் நடைபவனியாக வந்து இராணுவத்திடம் சரண் அடைந்துள்ளார்கள் என்பதை அறிந்ததாகவும் அமைச்சர் கூறினார்.
இந்த உயர்மட்ட மகாநாட்டில் குடிநீர், சுகாதாரம், உணவு விநியோகம், மின்சாரம், தொடர்பான விடயங்களுக்கு பொறுப்பான அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.ஆனந்த குமார சுவாமி கிராமத்தில் உள்ள சில நோயாளர்களுக்கு மேலதிக சிகிச்சையளிக்க தேவையேற்படின் அவர்களை மன்னார் வைத்திய சாலைக்கு உடன் அனுப்பு வற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பாதுகாப்பு பிரிவினருக்கு அமைச்சர் உத்தரவு பிறப்பித்தார்.
இதேவேளை அங்கவீனமுற்ற வர்களுக்கான சக்கர நாற்காலிகள், ஊன்றுகோல்கள் என்பனவற்றை யும் அமைச்சர் வழங்கி வைத்தார். இதேவேளை அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகளையும் அமைச்சர் சந்தித்தார். நிவாரணக் கிராமங்களில் உள்ள மக்களுக்கு வழங்க வேண்டிய வசதிகள் குறித்து இங்கு ஆராயப்பட்டது. மக்களுக்கு இதன்போது குடிநீர் வசதி அளிப்பதற்கென 2 பவுசர்கள் வழங்க அரச சார்பற்ற நிறுவனமொன்று இணக்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை மூன்றாவது நிவாரணக் கிராமம் அமைப் பதற்கான பணிகள் ஆரம்பிக்க ப்பட்டுள்ளதோடு இந்த பணிகளை துரிதப்படுத்துமாறு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.