புலிகள் தமது வசமிருக்கும் சிறிய பிரதேசத்தையும் எதிர்வரும் நாட்களில் இழக்கக் கூடிய சூழ்நிலையில் அவர்கள் தெற்கில் தாக்குதலை நடத்தலாமென ஊடக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேயவர்தன தெரிவித்தார். இந் நிலையில் உயிர் இழப்பையும் சொத்துகள் சேதமடைவதையும் தவிர்க்கும் பொருட்டு எச்சரிக்கையாக இருக்குமாறும் ஏதேனும் சந்தேகமான நடமாட்டங்கள் மற்றும் பொருட்கள் குறித்த தகவலை பொலிஸாருக்கு அறிவிக்குமாறும் கேட்டுள்ளார்.
தகவல் திணைக்களத்தில் சனிக் கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில்; தற்போது புலிகளிடமுள்ள சிறியளவு பகுதியையும் எதிர்வரும் சில தினங்களில் கைப்பற்றிவிட முடியுமென பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் விரக்தியடைந்த புலிகள் தெற்கில் அழிவையேற்படுத்தும் வகையில் தாக்குதலை நடத்தலாம். எனவே பஸ்கள் மற்றும் பொது இடங்களில் சந்தேகமான நடமாட்டங்கள் மற்றும் பொருட்கள் காணப்படின் உடனடியாக பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் அறிவிப்பதுடன் அவதானமாக இருக்குமாறும் பொதுமக்களைக் கேட்டுள்ளார்.