திபெத் ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா தென்னாப்பிரிக்காவுக்கு மேற்கொள்ளவிருந்த பயணத்தை ஒத்திப்போடச்சொல்லி தென்னாப்பிரிக்க அரசாங்கம் கோரியிருப்பதாகவும், தலாய் லாமாவுக்கு அது இதுவரை பயண விசா வழங்கியிருக்கவில்லை என்றும் லாமாவின் பிரதிநிதிகள் கூறுகின்றனர்.
2010ஆம் ஆண்டு கால்பந்து உலகக் கோப்பை போட்டிகளை நடத்த தென்னாப்பிரிக்கா தயாராகிவரும் நிலையில், கால்பந்து விளையாட்டைப் பயன்படுத்தி இனத்துவேஷத்துக்கு எதிரான கருத்தைப் பரப்பும் வழிமுறைகள் பற்றி விவாதிப்பதற்காக வரும் வெள்ளிக்கிழமை நடக்கவுள்ள ஒரு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தலாய் லாமா அங்கு பயணிக்கவிருந்தார். நொபெல் அமைதிப் பரிசு வென்ற வேறு சில பிரமுகர்களும் அந்த மாநாட்டில் கலந்துகொள்கிறார்கள்.
தலாய் லாமா தென்னாப்பிரிக்கா வருவதை நிறுத்துமாறு தென்னாப்பிரிக்காவிடம் சீன அரசு வலியுறுத்தியிருந்ததாக சீன தூதரக அதிகாரியை மேற்கோள்காட்டி தென்னாப்பிரிக்க நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.