மெளலவி ஆசிரியர் நியமனத்திற்கான போட்டிப் பரீட்சை முடிவுகள் அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த் நேற்று முன்தினம் தெரிவித்தார்.
அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் 39வது வருடாந்த மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். சம்மேளனத்தின் தலைவர் தலைமையில் கொழும்பு, பொரல்லை நகரோதய மண்டபத்தில் நடைபெற்ற இம்மாநாட்டில் அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
மெளலவி ஆசிரியர் நியமனத்திற்கான போட்டிப் பரீட்சை முடிவுகள் அடுத்தவாரம் வெளியிடப்படும். அதனைத் தொடர்ந்து முதற்கட்டமாக 200 பேர் மெளலவி ஆசிரியர்களாக சேர்த்துக்கொள்ளப்ப டுவர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் தான் முஸ்லிம் மாணவ/ மாணவிகளின் நன்மை கருதி மெளலவி ஆசிரியர் நியமனத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. இந் நடவடிக்கை கடந்த இருபது வருடங்களுக்குப் பின்னர் இடம்பெறுகின்றது.
கடந்த கால ஆட்சியாளர்கள் மெளலவி ஆசிரியர் நியமனத்திற்கு எதுவிதமான நடவடிக்கையையுமே மேற்கொள்ளவில்லை. அரசாங்கப் பாடசாலைகளில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவ/ மாணவிகளின் நலன்கள் கருதி மூன்று கட்டங்களில் 640 மெளலவி ஆசிரியர்களை நியமிப்பதற்கு அமைச்சரவை ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளது என்றார்.