March

March

ரணிலுக்கு எதிரானதைப் போன்ற நடவடிக்கையை மு.காவும் பின்பற்றட்டும்

ulama-party.jpgரணில் விக்ரமசிங்கவின் தலைமையை மாற்ற முன்வந்துள்ள அக்கட்சி செயற் குழுவினரின் துணிச்சலை நாம் பாராட்டுவதோடு இது போன்ற துணிவு சமூகப்பற்றற்ற ரவூப் ஹக்கீமின் தலைமையையும் மாற்ற முஸ்லிம் காங்கிரஸ் அங்கத்தவர்களுக்கும் ஏற்பட வேண்டும் என உலமா கட்சி தலைவர் மெளலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.

கல்முனை கட்சிக் காரியாலயத்தில் இடம்பெற்ற உலமாக்களுடனான கூட்டத்தில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்து உரையாற்றிய அவர், ஐ. தே. க. என்ற வண்டியின் சாரதியாக ரணில் இருக்கும் வரை அதில் நான் ஒரு போதும் ஏற மாட்டேன் என அன்று தலைவர் அஷ்ரப் கூறியதை மு. காவின் தலைமையும் அதன் உறுப்பினர்களும் உதாசீனம் செய்த போதும் இன்று அக்கருத்தை ஐ. தே. கவின் செயற் குழு உறுப்பினர்கள் ஏற்று செயற்படுத்த முன்வந்துள்ளமை பாராட்டுக்குரியதாகும்.

இது போன்ற துணிவு மு. காவினருக்கு வருமா என்பது சந்தேகமே. என்றாலும் அத்தகைய துணிவு வந்தால் மட்டுமே அவர்களுக்கு சமூகப்பற்று இருக்கின்றது என்பது தெளிவாகும். அத்தகைய துணிவை ஏற்படுத்த வேண்டுமாயின் முஸ்லிம் சமூகமும் ஒன்றுபட்டு மு. காவின் தேர்தல் வேட்பாளர்களை நிராகரிக்க முன்வரவேண்டும்.
எவ்வாறு ஐ. தே. க. ஆதரவாளர்கள் கடந்த தேர்தல்களில் அக்கட்சிக்கு வாக்களிப்பதை தவிர்த்து அதன் செயற் குழுவினருக்கு இத்தகைய தைரியத்தை அளித்தார்களோ அதே போல் முஸ்லிம் சமூகமும் மு. காவுக்கு வாக்களிப்பதை தவிர்த்துக்கொள்வதன் மூலம் அக்கட்சி உயர் உறுப்பினர்களுக்கும் தைரியத்தை வரவழைக்க முடியும்.
இல்லையேல் ரவூப் ஹக்கீமும் அவரை சார்ந்துள்ளோரும் இந்த சமூகத்தை அதளபாதாளத்தில் தான் கொண்டு போய் நிறுத்துவார்கள் என்பதை எச்சரிக்கின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்.

உலக மரபுரிமை அமைப்பின் பணிப்பாளர் சபை மாநாடு

உலக மரபுரிமை அமைப்பினது பணிப்பாளர் சபையின் சர்வதேச மட்டத் திலான மாநாடு நாளையும் நாளை மறுதினம் கண்டி மாநகர சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

ரஷ்யா, ஐக்கிய அமெரிக்கா, நெதர்லாந்து, அவுஸ்திரேலியா, கனடா, கிரீஸ், இங்கிலாந்து மற்றும் இலங்கை ஆகிய நாடு கள்s கலந்து கொள்கின்றன.

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்தோருக்கு உதவுமாறு இந்து அமைப்புகள் கோரிக்கை

navy_rescue_civil.jpgவன்னி யிலிருந்து யாழ்ப்பாணம் வந்துள்ள அகதிகளின் நலன் கருதி, அரச கூட்டுத்தாபன நியதிச் சபை பணியாளர்கள் மட்டுமல்ல தனியார்துறை ஊழியர்களும் தமது ஒருநாள் ஊதியத்தை வழங்குமாறு யாழ்.இந்து அமைப்புகளின் ஒன்றியம் கோரிக்கைவிடுத்துள்ளது.  இக்கோரிக்கையை சனிக்கிழமை நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதீனகலாசார மண்டபத்தில் கூடிய இந்து அமைப்புகளின் ஒன்றியம் விடுத்துள்ளது.

இக் கூட்டத்துக்கு நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாசாரிய தம்பிரான் சுவாமிகள் தலைமை தாங்கினார்.

அரச, தனியார் வங்கி, கூட்டுறவுச் சபை பணியாளர்கள் தமது ஒருநாள் ஊதியத்தை வழங்குவதற்கான பட்டியல் சகல திணைக்கள, வங்கி தனியார் நிறுவனத் தலைவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, யாழ்.மாவட்ட இந்து அமைப்பு ஒன்றியம் தம்மால் சேகரிக்கப்பட்ட இருபது இலட்சம் ரூபா பெறுமதியான உணவுப்பொருட்களை அகதிகளுக்கு வழங்க யாழ்.மாவட்ட அரசாங்கம் அதிபர் கே.கணேஷிடம் கையளித்துள்ளது.

லிந்துலை தோட்டத்தில் பலத்த காற்று; மழை. மரம் வீழ்ந்து இரு இளைஞர்கள் பலி

தலவாக்கலை – லிந்துலை, தங்கக்கலை தோட்டத்தில் நேற்று (24) முற்பகல் திடீரென வீசிய பலத்த காற்று மழையினால் மரங்கள் சரிந்து வீழ்ந்ததில் இரண்டு இளைஞர்கள் ஸ்லத்திலேயே உயிரிழந்தனர். நேற்று முற்பகல் 11.30 அளவில் தங்கக்கலை ரேப்பன்ரைன்ற் (கருப்பந்தைல) மரக் காட்டுப் பகுதிக்கு விறகு வெட்டச் சென்றபோதே இந்தப் பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது.

திடீரென வீசிய பலத்த காற்று மழையால் இரு இளைஞர்களும் அருகிலிருந்த குடிசையொன்றுக்குள் ஒதுங்கியிருந்துள்ளனர். அப்போது ஐந்தாறு மரங்கள் வேருடன் பிடுங்கப்பட்டு சரிந்து வீழ்ந்துள்ளன. இதில் பாரிய மரமொன்று குடிசை மீது வீழ்ந்ததில் இளைஞர்கள் இருவரும் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் உயிரிழந்த இருவரில் ஒருவரான தங்கக்கலை, கேம்பிரிட்ஜ் கீழ்ப்பிரிவைச் சேர்ந்த செல்வராஜ் சந்திரமோகன் (17) க. பொ. த. சாதாரணதரப் பரீட்சை எழுதிவிட்டு பெறுபேற்றுக்காகக் காத்திருந்தவரெனத் தெரியவருகிறது. மற்றையவரான அதே தோட்டத்தைச் சேர்ந்த சதாசிவம் ரகுவரன் (18) கடந்த வருடம் சாதாரண தரப் பரீட்சை எழுதியவராவார்.

இருவரது சடலங்களும் லிந்துலை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு மேலதிக பரிசோதனைகளுக்காக நுவரெலியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மரங்கள் சரிந்து வீழ்ந்ததால் மறேயா – எல்கின் வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், தோட்டத் தொழிலாளர்கள் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மன்மோகன்ஒபாமா சந்திப்பில் இலங்கை நிலைவரத்தை ஆராயும் சாத்தியம்

g-20_logo_.jpgபிரிட்டனில் அடுத்த மாதம் இடம்பெறவுள்ள ஜி20 உச்சி மாநாட்டில் சந்திக்கும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும் இலங்கை உட்பட்ட தெற்காசிய பிராந்திய நிலைவரங்கள் தொடர்பாக பேசும் சாத்தியம் உள்ளது.

ஜி20 உச்சி மாநாட்டுக்கு புறம்பாக இரு நாடுகளின் தலைவர்களும் சந்தித்து பேசவிருப்பதாகவும் கல்வித்துறை பங்கு?டமை, உயர் தொழில்நுட்பம், காலநிலை மாற்றம், பொருளாதார உறவுகளை வலுப்படுத்துதல் என்பன இவ்விருவரின் பேச்சுக்களில் முன்னுரிமைவகிக்கும் என்றும் அகில இந்திய வானொலி செய்திச் சேவை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

அத்துடன் உலக பொருளாதார நெருக்கடியால் தொழில் வாய்ப்புகளை இழப்போருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது பற்றியும் ஆராயப்படுமென தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச நிதி நிறுவனங்களுக்கு ஜி20 நாடுகள் அதிகளவு நிதி ஒதுக்கீட்டை ஒதுக்கீடு செய்வது தொடர்பாகவும் ஆராயப்படவுள்ளது. அதேசமயம், இலங்கை, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ் நிலைவரம் குறித்து இரு தலைவர்களும் ஆராய்வார்ளெனவும் எதிர்பார்க்ப்படுகிறது.

மொரவெவவுக்குள் ஊடுருவ முயன்ற புலிகள் மீது விமானப்படை தாக்குதல்

மொரவெவ, வேப்பங்குளம் பிரதேசத்தில் ஊடுருவ முயன்ற புலிகளின் குழுவொன்றுக்கும் விமானப் படையினருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றுள்ளன.

நேற்று அதிகாலை 4.45 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தின் போது விமானப் படையினர் நடத்திய கடுமையான தாக்குதல்களில் படுகாயமடைந்த புலிகள் காட்டுப்பகுதிக்கு தப்பிச் சென்றுள்ளதாக விமானப் படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தில் விமானப் படைவீரர் ஒருவர் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். திருமலை, மொரவெவ பிரதேசத்திலுள்ள விமானப் படையின் இணை முகாமிற்குள் ஊடுருவும் நோக்குடனேயே புலிகள் வந்துள்னர்.

அந்தப் பிரதேசத்தில் வீதி ரோந்து கடமையில் ஈடுபட்டிருந்த விமானப் படையினர், குழுவொன்று வருவதை அவதானித்துள்ளனர். பொது மக்கள் போன்று வந்த அவர்கள் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த விமானப் படையினரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனையடுத்து விமானப் படையினர் நடத்திய பதில் தாக்குதல்களின் பின்னர் அங்கிருந்து காட்டு வழியாக தப்பிச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவத்தையடுத்து பொலிஸாரும், விமானப் படையினரும் இணைந்து காட்டுப் பகுதியில் மேற்கொண்ட தேடுதலின் போது இரத்தக் கறைகளையும் முதலுதவி செய்தமைக்கான தடயங்களையும் கண்டுள்ளனர்.

காயமடைந்த நிலையில் புலிகள் தப்பிச் சென்றிருக்கலாம் என்று விமானப் படைப்பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

சீனாவின் பக்கம் இலங்கையின் பார்வை

sri-lanka-air-lanka.jpgஉள்நாட்டு யுத்தத்தாலும் உலக பொருளாதார நெருக்கடியாலும் மோசமாக பின்னடைவு கண்டிருக்கும் உல்லாசப் பயணத்துறையை மேம்படுத்த சீனாவின் பக்கம் எதிர்பார்ப்புடன் பார்வையை செலுத்தியுள்ளது இலங்கை. 

சீன தேசிய சுற்றுலா நிர்வாகத்துறைப் பணிப்பாளர் சாவோ கிவெய்யை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உல்லாசப் பயணத்துறை அமைச்சர் மிலிந்த மொரகொட சீனாவுக்கு சென்றுள்ளார்.

இலங்கைக்கு உல்லாசப்பயணத்துறையை மேம்படுத்தும் பிரதான சந்தையாக சீனா விளங்கும் என்பது கொழும்பின் எதிர்பார்ப்பாகும்.

“எமது உல்லாசப் பயணத்துறை அபிவிருத்தி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு சீனா முக்கியமானதாகும். குறிப்பாக நிதி நெருக்கடியால் ஐரோப்பா, அமெரிக்காவிலிருந்து வரும் உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை வீழ்ச்சி கண்டுள்ளது என்று சீனத் தினசரிக்கு அமைச்சர் மொரகொட கூறியுள்ளார்.

இலங்கையின் உல்லாசப்பயணத்துறையை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள உலக சுற்றுப்பயணத்தின் முதலாவது இடமாக சீனாவுக்கு அமைச்சர் சென்றுள்ளார். சீனாவின் நாணயம் வலுவான பெறுமதியுடன் இருப்பதாகவும் வெளிநாட்டு சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்குரிய பாரிய சந்தை வாய்ப்பை அது கொண்டிருப்பதாகவும் மிலிந்த மொரகொட கூறியுள்ளார்.

பாதுகாப்பு பிரச்சினையால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவது வீழ்ச்சியடைந்துள்ளது.

2006 ஐ விட 2008 இல் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 11 சதவீதத்தினால் வீழ்ச்சி கண்டுள்ளது. இலங்கையில் வெளிநாட்டுப் பயணிகளின் பாதுகாப்பை எப்போதுமே நாம் உறுதிப்படுத்தி வருகிறோம். இப்போது நிலைமை முன்னேற்றம் கண்டுள்ளது. வடக்கு, கிழக்கிலும் நிலைமை அதிகளவு முன்னேற்றம் அடைந்துள்ளது என்று அமைச்சர் மொரகொட கூறியுள்ளார்.

பெய்ஜிங்கிலிருந்து கொழும்புக்கு மூன்று நேரடி விமான சேவைகள் இடம்பெறுகின்றன. சீனாவின் ஏனைய நகரங்களிலிருந்து அதிகளவு விமான சேவைகளை நடத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை இடம்பெறுவதாகவும் மொரகொட கூறியுள்ளார்.

30 ஆயிரம் சுயதொழில் முயற்சிகளை ஆரம்பிக்க திட்டம்

இவ்வருட முடிவுக்குள் நாடளாவிய ரீதியில் 30,000 சுயதொழில் முயற்சிகளை ஆரம்பிக்க தொழிலமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் அதாவுத செனவிரத்ன தெரிவித்தார்.

பிரதேச செயலாளர் பிரிவுகளை இலக்காகக் கொண்டு இச் செயற் திட்டத்தை நடைமுறை ப்படுத்தத் தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

கிராமியப் பிரதேசங்களில் நிலவும் தொழில் வாய்ப்பின்மையை நிவர்த்தி செய்யும் நோக்கிலேயே இத்திட்டம் நடைமுறைப் படுத்தப்படவுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர்; மேற்படி சுய தொழில் முயற்சிகளில் குழுக்களாக இணைந்து செயற்பட விரும்புபவர்களுக்கு அதற்கான வாய்ப்புடனான அமைச்சு ஏற்படுத்தித் தருமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

சுயதொழில் முயற்சிகளுக்குக் கடன் வழங்கும் திட்டமொன்றை தொழிலமைச்சும் மக்கள் வங்கியும் இணைந்து செயற்படுத்தி வருகின்றன. இதன் இரண்டாம் கட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் மக்கள் வங்கியின் தலைவர் டபிள்யூ. கருணாஜீவ, அமைச்சின் செயலாளர் மஹிந்த மடிஹஹேவா உட்பட துறைசார்ந்த முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

காத்தான்குடி முகைதின் பள்ளிவாயல் பிரதேசம் புனித பூமி.

kattankudy.jpgமுதன் முறையாக கிழக்கு மாகாணத்தின் காத்தான்குடி முகைதீன் மெத்தைப்பள்ளிவாயல் பிரதேசத்தைப் புனித பூமியாக, நகர அபிவிருத்தி அமைச்சு பிரகடனப்படுத்தியுள்ளது.

நகர அபிவிருத்தி அமைச்சு இதற்கென பலகோடி ரூபாவை நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. புனித பிரதேச திட்டத்தின் ஒருகட்டமாக முகைதீன் மெத்தை பெரிய ஜும்மா பள்ளிவாயலின் நீர்த்தடாகம் நவீன வசதிகளைக்கொண்ட மலசலகூடத்தொகுதி என்பனவற்றை கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா திறந்து வைத்தார். இத்திட்டத்திற்கென 45 லட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகப் பள்ளிவாயலின் பிரதம நம்பிக்கையாளர் மர்சூக் அகமட் லெப்பை தெரிவித்தார்.

நகர அபிவிருத்தி அமைச்சு 25 லட்சம் ரூபாவையும் பள்ளிவாயல் நிர்வாகம் 20 லட்சம் ரூபாவையும் இதற்கென ஒதுக்கீடு செய்துள்ளது. இத்திட்டத்தினால் சுமார் 2000 குடும்பங்கள் நன்மையடைந்துள்ளன.

“மூவின மக்களுக்கும் அர்ப்பணிப்புடன் சேவை புரிபவர் திருமலைப் பிரதேசசெயலாளர் சசிதேவி ஜலதீபன் ‘

மூன்று இனங்களும் வாழும் திருகோணமலையில் அனைவரையும் திருப்திப்படுத்தக்கூடிய விதத்தில் சேவையாற்றுவது அரச அலுவலகங்களைப் பொறுத்தவரையில் மிகவும் கஷ்டமான பணியாகும். திருகோணமலைப்பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளராகப் பணிபுரிந்துவரும் திருமதி சசிதேவி ஜலதீபன் , இப்பொறுப்பை அர்ப்பணிப்புடன், இதய சுத்தியுடன் நிறைவேற்றி அனைத்து மக்களின் இதயங்களையும் வென்றுள்ளார்.

இவ்வாறு திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் மேஜர் ஜெனரல் ரஞ்சித் ஆர். டி. சில்வா கடந்த சனிக்கிழமை காலை திருகோணமலைப் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடத்தப்பட்ட பாராட்டு நிகழ்வில் பங்குபற்றிப் பேசும்போது தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பதினொரு பிரதேச செயலகங்களுக்கு இடையே நடத்தப்பட்ட நிர்வாகத்திறன் போட்டியில் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகம் மாவட்டத்திலேயே முதலாவது இடத்தை சுவீகரித்தது. அதனை ஒட்டியே இப் பாராட்டு நிகழ்வு நடத்தப்பட்டது.

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலர் பிரிவினுள் 42 கிராம சேவையாளர்கள் பணியாற்றுகின்றனர்.

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகம், 2006 ஆம் ஆண்டில் உள்நாட்டு அமைச்சு நடத்திய மாவட்ட மட்டப் போட்டியில் 2 ஆம் இடத்தைப் பெற்றது. 2007 ஆம் ஆண்டுக்கான போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.

திருமலை பிரதேச செயலாளர் திருமதி சசிதேவி ஜலதீபனுக்குத் திருகோணமலை அரசாங்க அதிபர் மேஜர் ஜெனரல் ரஞ்சித் ஆர்.டி.சில்வா, முதலில் பதக்கம் அணிவித்துக் கௌரவித்தார்.

அதனையடுத்து, திருகோணமலைப் பிரதேச செயலக அலுவலர்கள், வெளிக்களப் பணியாளர்கள் அனைவரும் அதிதிகளால் பதக்கம் அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

பிரதேச செயலாளர் திருமதி சசிதேவி ஜலதீபனின் சிறப்பான நிர்வாகத்திறன், பொதுமக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் ஆற்றல் இவை காரணமாகவே , திருகோணமலைப் பிரதேச செயலகம், மாவட்டத்திலேயே முதலாம் இடத்தைப் பெற முடிந்தது. அவரின் பணி தொடரவேண்டும் என்றும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

பிரதேச செயலாளர் திருமதி சசிதேவி ஜலதீபன் பேசும்போது, திருமலைப் பிரதேச செயலகம் முதலிடம் பெற்றது. செயலகத்தில் பணிபுரியும் அனைத்து அலுவலர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பே காரணமாகும் என்று கூறினார்.