மூன்று இனங்களும் வாழும் திருகோணமலையில் அனைவரையும் திருப்திப்படுத்தக்கூடிய விதத்தில் சேவையாற்றுவது அரச அலுவலகங்களைப் பொறுத்தவரையில் மிகவும் கஷ்டமான பணியாகும். திருகோணமலைப்பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளராகப் பணிபுரிந்துவரும் திருமதி சசிதேவி ஜலதீபன் , இப்பொறுப்பை அர்ப்பணிப்புடன், இதய சுத்தியுடன் நிறைவேற்றி அனைத்து மக்களின் இதயங்களையும் வென்றுள்ளார்.
இவ்வாறு திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் மேஜர் ஜெனரல் ரஞ்சித் ஆர். டி. சில்வா கடந்த சனிக்கிழமை காலை திருகோணமலைப் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடத்தப்பட்ட பாராட்டு நிகழ்வில் பங்குபற்றிப் பேசும்போது தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பதினொரு பிரதேச செயலகங்களுக்கு இடையே நடத்தப்பட்ட நிர்வாகத்திறன் போட்டியில் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகம் மாவட்டத்திலேயே முதலாவது இடத்தை சுவீகரித்தது. அதனை ஒட்டியே இப் பாராட்டு நிகழ்வு நடத்தப்பட்டது.
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலர் பிரிவினுள் 42 கிராம சேவையாளர்கள் பணியாற்றுகின்றனர்.
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகம், 2006 ஆம் ஆண்டில் உள்நாட்டு அமைச்சு நடத்திய மாவட்ட மட்டப் போட்டியில் 2 ஆம் இடத்தைப் பெற்றது. 2007 ஆம் ஆண்டுக்கான போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.
திருமலை பிரதேச செயலாளர் திருமதி சசிதேவி ஜலதீபனுக்குத் திருகோணமலை அரசாங்க அதிபர் மேஜர் ஜெனரல் ரஞ்சித் ஆர்.டி.சில்வா, முதலில் பதக்கம் அணிவித்துக் கௌரவித்தார்.
அதனையடுத்து, திருகோணமலைப் பிரதேச செயலக அலுவலர்கள், வெளிக்களப் பணியாளர்கள் அனைவரும் அதிதிகளால் பதக்கம் அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
பிரதேச செயலாளர் திருமதி சசிதேவி ஜலதீபனின் சிறப்பான நிர்வாகத்திறன், பொதுமக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் ஆற்றல் இவை காரணமாகவே , திருகோணமலைப் பிரதேச செயலகம், மாவட்டத்திலேயே முதலாம் இடத்தைப் பெற முடிந்தது. அவரின் பணி தொடரவேண்டும் என்றும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
பிரதேச செயலாளர் திருமதி சசிதேவி ஜலதீபன் பேசும்போது, திருமலைப் பிரதேச செயலகம் முதலிடம் பெற்றது. செயலகத்தில் பணிபுரியும் அனைத்து அலுவலர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பே காரணமாகும் என்று கூறினார்.