உள்நாட்டு யுத்தத்தாலும் உலக பொருளாதார நெருக்கடியாலும் மோசமாக பின்னடைவு கண்டிருக்கும் உல்லாசப் பயணத்துறையை மேம்படுத்த சீனாவின் பக்கம் எதிர்பார்ப்புடன் பார்வையை செலுத்தியுள்ளது இலங்கை.
சீன தேசிய சுற்றுலா நிர்வாகத்துறைப் பணிப்பாளர் சாவோ கிவெய்யை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உல்லாசப் பயணத்துறை அமைச்சர் மிலிந்த மொரகொட சீனாவுக்கு சென்றுள்ளார்.
இலங்கைக்கு உல்லாசப்பயணத்துறையை மேம்படுத்தும் பிரதான சந்தையாக சீனா விளங்கும் என்பது கொழும்பின் எதிர்பார்ப்பாகும்.
“எமது உல்லாசப் பயணத்துறை அபிவிருத்தி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு சீனா முக்கியமானதாகும். குறிப்பாக நிதி நெருக்கடியால் ஐரோப்பா, அமெரிக்காவிலிருந்து வரும் உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை வீழ்ச்சி கண்டுள்ளது என்று சீனத் தினசரிக்கு அமைச்சர் மொரகொட கூறியுள்ளார்.
இலங்கையின் உல்லாசப்பயணத்துறையை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள உலக சுற்றுப்பயணத்தின் முதலாவது இடமாக சீனாவுக்கு அமைச்சர் சென்றுள்ளார். சீனாவின் நாணயம் வலுவான பெறுமதியுடன் இருப்பதாகவும் வெளிநாட்டு சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்குரிய பாரிய சந்தை வாய்ப்பை அது கொண்டிருப்பதாகவும் மிலிந்த மொரகொட கூறியுள்ளார்.
பாதுகாப்பு பிரச்சினையால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவது வீழ்ச்சியடைந்துள்ளது.
2006 ஐ விட 2008 இல் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 11 சதவீதத்தினால் வீழ்ச்சி கண்டுள்ளது. இலங்கையில் வெளிநாட்டுப் பயணிகளின் பாதுகாப்பை எப்போதுமே நாம் உறுதிப்படுத்தி வருகிறோம். இப்போது நிலைமை முன்னேற்றம் கண்டுள்ளது. வடக்கு, கிழக்கிலும் நிலைமை அதிகளவு முன்னேற்றம் அடைந்துள்ளது என்று அமைச்சர் மொரகொட கூறியுள்ளார்.
பெய்ஜிங்கிலிருந்து கொழும்புக்கு மூன்று நேரடி விமான சேவைகள் இடம்பெறுகின்றன. சீனாவின் ஏனைய நகரங்களிலிருந்து அதிகளவு விமான சேவைகளை நடத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை இடம்பெறுவதாகவும் மொரகொட கூறியுள்ளார்.