வன்னி யிலிருந்து யாழ்ப்பாணம் வந்துள்ள அகதிகளின் நலன் கருதி, அரச கூட்டுத்தாபன நியதிச் சபை பணியாளர்கள் மட்டுமல்ல தனியார்துறை ஊழியர்களும் தமது ஒருநாள் ஊதியத்தை வழங்குமாறு யாழ்.இந்து அமைப்புகளின் ஒன்றியம் கோரிக்கைவிடுத்துள்ளது. இக்கோரிக்கையை சனிக்கிழமை நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதீனகலாசார மண்டபத்தில் கூடிய இந்து அமைப்புகளின் ஒன்றியம் விடுத்துள்ளது.
இக் கூட்டத்துக்கு நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாசாரிய தம்பிரான் சுவாமிகள் தலைமை தாங்கினார்.
அரச, தனியார் வங்கி, கூட்டுறவுச் சபை பணியாளர்கள் தமது ஒருநாள் ஊதியத்தை வழங்குவதற்கான பட்டியல் சகல திணைக்கள, வங்கி தனியார் நிறுவனத் தலைவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, யாழ்.மாவட்ட இந்து அமைப்பு ஒன்றியம் தம்மால் சேகரிக்கப்பட்ட இருபது இலட்சம் ரூபா பெறுமதியான உணவுப்பொருட்களை அகதிகளுக்கு வழங்க யாழ்.மாவட்ட அரசாங்கம் அதிபர் கே.கணேஷிடம் கையளித்துள்ளது.