லிந்துலை தோட்டத்தில் பலத்த காற்று; மழை. மரம் வீழ்ந்து இரு இளைஞர்கள் பலி

தலவாக்கலை – லிந்துலை, தங்கக்கலை தோட்டத்தில் நேற்று (24) முற்பகல் திடீரென வீசிய பலத்த காற்று மழையினால் மரங்கள் சரிந்து வீழ்ந்ததில் இரண்டு இளைஞர்கள் ஸ்லத்திலேயே உயிரிழந்தனர். நேற்று முற்பகல் 11.30 அளவில் தங்கக்கலை ரேப்பன்ரைன்ற் (கருப்பந்தைல) மரக் காட்டுப் பகுதிக்கு விறகு வெட்டச் சென்றபோதே இந்தப் பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது.

திடீரென வீசிய பலத்த காற்று மழையால் இரு இளைஞர்களும் அருகிலிருந்த குடிசையொன்றுக்குள் ஒதுங்கியிருந்துள்ளனர். அப்போது ஐந்தாறு மரங்கள் வேருடன் பிடுங்கப்பட்டு சரிந்து வீழ்ந்துள்ளன. இதில் பாரிய மரமொன்று குடிசை மீது வீழ்ந்ததில் இளைஞர்கள் இருவரும் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் உயிரிழந்த இருவரில் ஒருவரான தங்கக்கலை, கேம்பிரிட்ஜ் கீழ்ப்பிரிவைச் சேர்ந்த செல்வராஜ் சந்திரமோகன் (17) க. பொ. த. சாதாரணதரப் பரீட்சை எழுதிவிட்டு பெறுபேற்றுக்காகக் காத்திருந்தவரெனத் தெரியவருகிறது. மற்றையவரான அதே தோட்டத்தைச் சேர்ந்த சதாசிவம் ரகுவரன் (18) கடந்த வருடம் சாதாரண தரப் பரீட்சை எழுதியவராவார்.

இருவரது சடலங்களும் லிந்துலை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு மேலதிக பரிசோதனைகளுக்காக நுவரெலியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மரங்கள் சரிந்து வீழ்ந்ததால் மறேயா – எல்கின் வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், தோட்டத் தொழிலாளர்கள் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *