16

16

விபரங்களை பதிவு செய்யாத தொலை பேசிகளின் இணைப்பினை துண்டிப்பதற்கு ஜனாதிபதி பரிந்துரை.

cdma-t-p.jpgஉரிய விபரங்கள் சமர்ப்பிக்கப்படாத சிடிஎம்ஏ மற்றும் கையடக்க தொலைபேசிகளின் இணைப்பினை துண்டிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ உயர் நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்துள்ளார்.

சிடிஎம்ஏ மற்றும் கையடக்க தொலைபேசி பாவனையாளர்களின் விபரங்களை திரட்டுவதற்காக இலங்கை தொலைத் தொடர்பு ஆணைக்குழு வெளியிட்டிருந்த சுற்றறிக்கைக்கு அமைய எதிர்வரும் ஏப்பிரல் 30ம் திகதிக்கு முன்னர் தகவல்களை பதிவு செய்து கொள்ளாத தொலைபேசிகளின் இணைப்பினை துண்டிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘இன அழித்தலுக்கு எதிரான இந்தியர்கள்’ – புதியஅமைப்பு

india_map_.jpgஇலங்கை யில் போர் நிறுத்தம் கொண்டு வரவும், அங்கிருக்கும் தமிழர்களை காப்பாற்றுவதற்கும் ‘இன அழித்தலுக்கு எதிரான இந்தியர்கள்’ என்ற புதியஅமைப்பு ஒன்றே துவங்கியிருப்பதாக பாதிரியார் ஜெகத் கஸ்பார் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், ஒருங்கிணைத்து போராட்டங்களை நடத்தவும் பாமக, விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள், அமைப்புகள் இடம் பெற்ற இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்பட்டது.

இதைப் பார்த்து திமுக சார்பில் இலங்கைத் தமிழர்கள் நல உரிமைப் பேரவை என்ற அமைப்பும், அதற்கு ஒரு துணை அமைப்பும் தொடங்கப்பட்டது.

இந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த பாதிரியார் ஜெகத் கஸ்பார் ஒரு அமைப்பைத் தொடங்கியுள்ளார்.

இது குறித்து ஜெகத் கஸ்பார் கூறுகையில், இலங்கை தமிழர்களின் நலனுக்காக அரசியல் சுவடு இல்லாத ‘இன அழித்தலுக்கு எதிரான இந்தியர்கள்’ என்ற அமைப்பை ஆரம்பித்துள்ளோம். இலங்கை தமிழர்களின் நலனில் அக்கறை கொண்ட அனைவரின் களமாக இந்த அமைப்பு செயல்படும்.

இலங்கையின் வடக்கே தொடரும் மோதல்கள்

civilians.jpgஇலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டம் வட்டுவாகல் பொதுப்பிரதேசத்திலும், விசுவமடு பிரதேசத்திலும் இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ள இராணுவ தலைமையகம், இந்த மோதல்களின் பின்னர் நடத்தப்பட்ட தேடுதலின்போது இராணுவ தளவாடங்கள், ஆயுதங்கள் வெடிப்பொருட்களைக் கைப்பற்றியிருப்பதாகக் கூறியிருக்கின்றது.

இதனிடையே, இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இல்லாத பகுதிகளில் இருந்து இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்திற்கு இதுவரையில் 33 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இடம்பெயர்ந்து வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். பதினொரு பாடசாலைகள் உட்பட உயர் கல்வி நிலையங்கள் பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் முகாம்களில் இவர்கள் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதாகப் படைத்தரப்பு தெரிவித்திருக்கின்றது.

இதேவேளை, வன்னிப் பிரதேசத்தில் விடுதலைப்புலிகளி்ன் பிரதேசத்தில் தொடர்ந்து எறிகணை தாக்குதல்கள் இடம்பெற்று வருவதாகவும், இதனால் பலர் கொல்லப்படுவதுடன் காயமடையவும் நேரிட்டுள்ளதாகவும் வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.சி.ஆர்.சி. வழித்துணையுடன் வன்னிக்கு கடல் வழியாக உணவுப் பொருட்களை அனுப்புவது குறித்து ஆராய்வு

ship.jpgவன்னிக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் வழித்துணையுடன் கடல் மார்க்கமாக உணவுப் பொருட்களை அனுப்புவது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது. வன்னிக்கான உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் கடந்த மாதம் 16 ஆம் திகதிக்குப் பின்னர் சுமார் ஒரு மாதமாக கொண்டு செல்லப்படாததால் இடம்பெயர்ந்த மக்கள் பெரும் அவலங்களைச் சந்தித்து வருகின்றனர்.

முல்லைத்தீவின் புதுக்குடியிருப்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தொடர்ந்தும் கடும் மோதல்கள் நடைபெற்று வருவதாகவும் உணவு மற்றும் மருந்துப் பொருட்களை விநியோகிக்கக் கூடிய பாதுகாப்பான இடங்கள் இல்லையெனவும் அரசு தரப்பு கூறிவந்தது. இதனால் சுமார் ஒரு மாதமாக உணவுப் பொருட்கள் எதுவும் அங்கு அனுப்பப்படவில்லை. இந்த நிலையில் அண்மையில் முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற்பகுதியிலிருந்து யுத்தத்தால் படுகாயமடைந்த சுமார் 700 பொதுமக்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் வழித்துணையுடன் கப்பல் மூலம் திருகோணமலைக்கு கொண்டு வரப்பட்டனர்.

இதனையடுத்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் வழித்துணையுடன் கடல்மார்க்கமாக வன்னிக்கு உணவுப் பொருட்களை அனுப்பிவைப்பது பற்றி அரச உயர் அதிகாரிகள் மட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது. திருமலை துறைமுகத்திலிருந்து செஞ்சிலுவைச் சங்க கொடியினை தாங்கிய கப்பலில் ஏற்றப்பட்டு முல்லைத்தீவு புதுமாத்தளன் கடல் பகுதியில் உணவுப் பொருட்களை இறக்குவது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது. உணவுப் பொருட்களை இறக்கி கரைக்கு கொண்டு செல்வதற்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் உதவியும் கோரப்படவுள்ளது.

வவுனியாவில் உள்ள உலக உணவுத்தாபனத்தின் களஞ்சியத்தில் வன்னிக்கு அனுப்புவதற்கான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கையிருப்பில் உள்ளன. ஆனாலும் பொதுமக்கள் உள்ள பகுதிக்கு செல்ல வவுனியாவிலிருந்து 80 கிலோ மீற்றர் தூரத்தை கடக்கவேண்டியுள்ளது. புதுக்குடியிருப்பு, புதுமாத்தளன் பகுதிகளிலேயே அதிகளவான பொதுமக்கள் உள்ளனர். தரை வழியாக அங்கு லொறிகளில் உணவுப் பொருட்களை அனுப்புவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கண்ணிவெடிகள் வீதிகளில் புதைக்கப்பட்டுள்ளதால் பெரும் ஆபத்தான பிரதேசமாகவுள்ளது. நிவாரணப் பொருட்களை எடுத்து செல்லும் ஐக்கிய நாடுகள் சபை பணியாளர்களுடைய பாதுகாப்பு முக்கியமாகக் கருதப்படுகின்றது. எனவே தான் கடல் மார்க்கமாக உணவுப் பொருட்களை அனுப்புவது பற்றி தீவிரமாக ஆலோசிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

றுகுணு பல்கலைக்கழகத்தில் பகிடிவதையை தடுத்த பாதுகாப்பு ஊழியர்கள் மீது தாக்குதல்

university-srilanka.jpgமாத்தறை மெத்தவத்தயில் அமைந்துள்ள றுகுணு பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக பாதுகாப்பு ஊழியர் ஒருவர் படுகாயமடைந்து மாத்தறை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  புதிய மாணவர்களை பழைய சிரேஷ்ட மாணவர்கள் பகிடிவதைக்கு உட்படுத்திய போது அதனை பாதுகாப்பு ஊழியர்கள் தடுத்ததாகவும் இதனையடுத்து மாணவர்களுக்கும் பாதுகாப்பு ஊழியர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியதாகவும் புதிய மாணவர்கள் தெரிவித்தனர்.

எட்டுப் பாதுகாப்பு ஊழியர்கள் அவ்விடத்திற்கு வந்த போதிலும் சிரேஷ்ட மாணவர்கள் அவர்களைத் தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. புதிய மாணவர்கள் ஆங்கில வகுப்புக்கு சென்றுவிட்டு திரும்பி வரும்போதே இச்சம்பவம் இடம்பெற்றது.

இத்தகராறின் போது ஒரு பாதுகாப்பு ஊழியரின் தங்கச் சங்கிலியும் கையடக்கத் தொலைபேசியும் காணாமல் போயுள்ளதாகவும் முறையிடப்பட்டுள்ளது. இச் சம்பவத்தையடுத்து புதிய மாணவர்களுக்கான ஆங்கில வகுப்பும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்தையடுத்து மாத்தறை பொலிஸார் பல்கலைக்கழகத்துக்கு வந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன் விசாரணைகளையும் நடத்தி வருகின்றனர்.

றுகுணு பல்கலைக்கழக நிர்வாகமும் இது தொடர்பாக விசாரணைகளை நடத்திவருகிறது. பல்கலைக்கழகங்களில் பகிடிவதை தடை செய்யப்பட்டுள்ள போதிலும் சில சிரேஷ்ட மாணவர்கள் அதனைச் செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அண்மையில் உயர்கல்வி அமைச்சினால் பகிடிவதைகள் மற்றும் மாணவர்களின் போராட்டங்கள் மோதல்கள் குறித்து உயர்மட்ட மாநாடும் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.