January

January

கிளேமோர் குண்டுத் தாக்குதல் 7 பேர் பலி

morawawa_.jpg
திருகோணமலை மாவட்டத்திலுள்ள மொரவேவா நெலுவ பிரதேசத்தில் கிளேமோர் குண்டுத் தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாகத் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இத்தாக்குதலில் மூன்று விமானப்படை அதிகாரிகளும் 4 பொதுமக்களும் பலியாகியுள்ளனர் எனவும் 6 பேர் காயமடைந்துள்ளதாகவும்  விமானப்படையின் டிரக் வண்டி ஒன்றை இலக்குவைத்தே இக்கிளேமோர் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

94 லொறிகளில் உணவுப் பொருட்கள் அனுப்பி வைப்பு

aid-loryes1712.jpgஉலக உணவுத் திட்டம் மற்றும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளரினால் அனுமதிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் 94 லொறிகளில் நேற்று வியாழன் காலை வன்னிக்கு கொண்டு செல்லப்பட்டன. உலக உணவுத்தாபனம் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கு 54 லொறிகளில் 600 மெற்றிக்தொன் பொருட்களை அனுப்பிவைத்துள்ளது. வவுனியா தேக்கம்காடு களஞ்சியத்திலிருந்து இராணுவத்தின் பாதுகாப்புடன் லொறிகள் புறப்பட்டன.

ஓமந்தையிலிருந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் புதுக்குடியிருப்பு வரை லொறிகளுக்கு பாதுகாப்பு வழங்கியதென தெரிவிக்கப்படுகின்றது. கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளரினால் அனுமதிக்கப்பட்ட சுமார் 300 மெற்றிக்தொன் உணவுப் பொருட்களும், மரக்கறிகளும் 40 லொறிகளில் அனுப்பி வைக்கப்பட்டன. இவை ஓமந்தை சோதனைச்சாவடியிலிருந்து புறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கிளிநொச்சி நகரம் பாதுகாப்புப் படையினரிடம் வீழ்ந்த பின்னர் வன்னிக்கு புறப்பட்ட முதலாவது உணவு லொறி தொடரணி இதுவாகும். புளியங்குளம் வீதி வழியாக ஒட்டிசுட்டான் சென்று தர்மபுரம் புதுக்குடியிருப்பு பகுதிக்கு உணவு லொறிகள் சென்றன.

ஈழத்தமிழர்கள் யாருமற்ற அநாதைகள் அல்ல; இன்னல் ஏற்பட்டால் 7 கோடி தொப்புள் கொடி உறவுகள் குரல் கொடுப்பர் – புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளர்

nadesan.jpgஈழத்தமிழர்கள் யாருமற்ற அநாதைகள் அல்லர். அவர்களுக்கு இன்னல்கள் ஏற்பட்டால் தொப்புள்கொடி உறவுகளான ஏழு கோடி தமிழர்கள் தமிழகத்திலிருந்து குரல் கொடுப்பார்கள் என்ற செய்தியே இலங்கை அரசிற்கும் இந்த உலகத்திற்கும் முக்கிய செய்தியாக எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது என்று விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். தமிழகத்திலிருந்து வெளிவரும் ஜுனியர் விகடன் வாரமிருமுறை இதழுக்கு அவர் அளித்த நேர்காணல் வருமாறு;

பத்தாண்டுகளாக உங்கள் கட்டுப்பாட்டில் இருந்த கிளிநொச்சி கடைசியில் இலங்கையின் வசம் போய்விட்டது. புலிகளுக்கு பின்னடைவுதானே…?

கிளிநொச்சி இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது முதல் தடவையல்ல பல தடவைகள் இராணுவத்திடமிருந்து கிளிநொச்சியை நாம் மீட்டதுமட்டுமல்ல கட்டுப்பாட்டுக்குள்ளும் நீண்ட காலம் வைத்திருந்துள்ளோம். இதுதான் வரலாறு. நாம் இதனைப் பின்னடைவாகப் பார்க்கவில்லை.

தற்போது நடந்து வரும் போரில் விடுதலைப் புலிகள் சில இடங்களில் எதிர்த்தாக்குதல் நடத்தாமல் பின்வாங்கி போகிறார்களே ஏன்…?

யுத்தத்தில் இழப்புக்களை குறைப்பதற்காக பின்வாங்குவதென்பது தந்திரோபாயம்.

இந்தப் போரால் என்ன சாதிக்க நினைக்கிறது இலங்கை அரசு?

முழுத்தமிழ் தேசிய இனத்தையும் பூண்டோடு அழிக்கவே இலங்கை அரசு நினைக்கின்றது. ஈழத் தமிழர்கள் யாருமற்ற அநாதைகள் அல்லர் என்பதையும் ஈழத் தமிழர்களுக்கு இன்னல்கள் ஏற்பட்டால் தொப்புள்கொடி உறவுகளான ஏழு கோடி தமிழர்கள் தமிழகத்திலிருந்து குரல் கொடுப்பார்கள் என்ற செய்தியை இலங்கை அரசிற்கும் உலகத்திற்கும் முக்கிய செய்தியாக எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது.

பிரபாகரனின் கனவு நகரமாக உருப்பெற்ற கிளிநொச்சி சிதைந்து தகர்க்கப்பட்டதில் உங்களுக்கு வருத்தம் இல்லையா…?

வருத்தம்தான். கட்டடங்கள் பாதிக்கப்பட்டனவே ஒழிய விடுதலைக்கான எமது கதவுகள் தகர்க்கப்படவில்லை. மீளவும் இழந்த பிரதேசங்களை கைப்பற்றி கட்டிடங்களை உருவாக்குவோம். ஆனால் காவல்துறை, வங்கி, நிதித்துறை என்பன இடம்பெயர்ந்த நிலையில் இயங்கி வருகிறது என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

கிளிநொச்சியில் இருந்த மக்கள் எல்லாம் இப்போது எங்கே இருக்கிறார்கள்?

அவர்கள் அனைவரும் வன்னிப்பெரு நிலப்பரப்பில் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து உள்ளனர். எமக்கு சாதகமாக சூழல் ஏற்படும்பொழுது கிளிநொச்சியை மீளவும் கைப்பற்றி மக்களை குடியேற்றுவோம்.

புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலப்பரப்பில் தற்போதுள்ள நிலைமை என்ன?

எம்முடைய மக்கள் தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகளுக்கும் இடம்பெயர்வுகளுக்கும் முகங்கொடுத்த நிலையில் இழந்த பிரதேசங்களை மீளக்கைப்பற்ற வேண்டும் என்ற மனோநிலையில் வாழ்ந்து வருகின்றனர். இதற்காக சகல மக்களும் அளப்பரிய தியாகங்களையும் அர்ப்பணிப்புகளையும் நல்கி வருகின்றனர்.

புலிகளின் தலைமை மற்றும் புலிகளின் மனவுறுதி குறித்து வரும் செய்திகள் பற்றி…?

இந்த விடுதலைப் போராட்டம் ஒரு மக்கள் விடுதலைப் போராட்டமாக வளர்ச்சிபெற எம்முடைய மனவலிமையே காரணம். இந்த மனவலிமையே கடந்த முப்பது வருடங்களாக இராணுவத்துடன் வீராவேசத்துடன் நாங்கள் போரிடக் காரணம்.

புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் இராணுவத்தின் பிடியில் போனது அவர்களுக்கு பலம் என்பதை ஒத்துக்கொள்கிறீர்களா?

இலங்கை ஒரு அரசு. அதற்கு பல நாடுகள் இராணுவ பொருளாதார உதவிகளை நல்கி வருகின்றன. நாம் ஒரு விடுதலை இயக்கம். தமிழ் தேசிய இனத்தின் எண்ணிக்கை சிங்கள தேசிய இனத்தின் எண்ணிக்கையோடு ஒப்பிடும் போது சிறியதே. எம்முடைய மக்களின் பலத்துடனும் உலகத்தமிழ் இனத்தின் தார்மீக ஆதரவுடனும் இந்த விடுதலைப் போராட்டம் நடைபெற்று வருகின்றது. சமர்க்களங்களில் இடங்கள் பறிபோவதும் மீளநாம் கைப்பற்றுவதும் வழமை.

புலிகள் மீதான தடையை அகற்றி, விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டும் என்கிறீர்கள். இது நடக்கக்கூடியதா?

உலகத் தமிழினம் ஒன்றுபட்டு எமது விடுதலைப் போராட்டத்திற்காக நல்கிவரும் ஆதரவு, எதிர்காலத்தில் இது சாத்தியம் என்பதை காட்டுகிறது.

புலிகளைவிட இலங்கை அரசு மீது இந்தியாவுக்கு நேசம் அதிகமாக இருக்கிறதே…?

இது எமக்கு மிகவும் மனவேதனையைத் தருகின்றது. இந்தியாவின் உண்மையான நண்பர்கள் தமிழ் மக்கள் தான் என்பதனை இந்திய அரசு விளங்கிக் கொள்ளவேண்டும் என்ற உண்மையை நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

இலங்கையோடு பிற நாடுகள் கைகோர்த்துக் கொண்டு போர் நடத்தி வருகிறது என்று சொல்லப்படுகிறதே?

இது முற்றிலும் உண்மை. அவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து குறிப்பாக சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து கப்பல் கப்பலாக ஆயுதங்கள் வந்த வண்ணம் உள்ளன. இதை கொழும்பில் உள்ள ஊடகங்களே உறுதிப்படுத்துகின்றன.

இலங்கைப் பிரச்சினையில் இந்தியாவின் தலையீடு எந்த வடிவில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

இலங்கை அரசுக்கு இராணுவ உதவிகளை நிறுத்தி எம்முடைய மக்களின் விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்கவேண்டுமென எதிர்பார்க்கிறோம்.

இலங்கை அரசின் வானூர்தி குண்டு வீச்சுகள், ஏறிகணைத் தாக்குதல்கள் அதிகமாகி வருகிறதே… இதில் இருந்து மக்கள் எப்படித் தங்களைத் தற்காத்து கொள்கிறார்கள்?

முப்பது வருடகாலமாக எம்முடைய மக்கள் வானூர்தி குண்டு வீச்சுக்களுக்கும் எறிகணை வீச்சுக்களுக்கும் பாரிய இராணுவ நடவடிக்கைகளுக்கும் முகங்கொடுத்த வண்ணமே வாழ்ந்து வருகின்றனர். அரசின் கொடிய தாக்குதல்களுக்கு இலக்காகும் பொழுது தம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்பதில் மக்களுக்கு நிறைய அனுபவங்கள் உண்டு. போராட்டமே வாழ்வாக மாறிவிட்ட எம் மக்கள் சிறு குழந்தைகளிலிருந்து முதியோர் வரை தம்மை தற்காத்துக்கொள்வதில் தேர்ச்சிபெற்று வருகின்றனர். உலக அளவில் தடைசெய்யப்பட்ட கிளஸ்டர் குண்டுகளையே அரசு எம்மக்கள் மீதான தாக்குதல்களுக்கு பயன்படுத்தி வருகின்றது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்கிறேன்.

தமிழக மக்கள் அனுப்பிய நிவாரணப் பொருட்கள் நேர்மையான முறையில் விநியோகிக்கப்பட்டதா?

தமிழக மக்களால் அனுப்பப்பட்ட உணவுப் பொருட்களும் உடைகளும் எம்முடைய பிரதேசத்தில் செயற்பட்டுவரும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தினூடாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன. முழுமையாக நேர்மையான முறையில் பொருட்களின் விநியோகம் இருக்கிறது. தொப்புள்கொடி உறவுகளான தமிழக மக்களின் இவ்வுதவி எமது மக்களின் மனங்களில் பசுமரத்தாணி போல பதிந்துள்ளது.

மரண வீட்டைப் போல காணப்பட்ட பாராளுமன்றம்

sl-parlimant.jpgஇன்று பாராளுமன்றம் 45 நிமிடங்களே கூடியது. பாராளுமன்றம் இன்று கூடிய போது அழுகுரல்களும்,  கூக்குரல்களும், ‘ஊ’ சப்தங்களுமே முக்கியத்துவம் பெற்றிருந்தன. பாராளுமன்றத்தில் மத்தியில் அமர்ந்திருந்த ஐக்கிய தேசியக் கட்சியினர் கருப்பு மற்றும் சிவப்பு துணிகளை கட்டியிருந்தனர். எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சிவப்பு நிற துணியினால் வாயை மூடிக்கட்டியிருந்தார். அரசாங்கக் கட்சி அமைச்சர்கள் சபையில் பேச எழுந்தநேரத்தில் “ஐயோ கொலைகாரர்களே” என்று கூறிக்கொண்டு மரண விட்டில் அழுவதைப்போல அழுதனர்.

எதிர்க் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்த அரசுக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்தது. பாராளுமன்றத்துக்குள் எதிர்க் கட்சியினரும்,  ஆளும்கட்சியினரும் அமைதியை கடைபிடிக்காதமையினால் இன்றைய கூட்டத் தொடர் 45 நிமிடங்களில் முடிவடைந்தது. இச்சந்தர்ப்பத்தில் எதிர்க் கட்சித் தலைவர் சண்டை லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை குறித்தும்,  சிரஸ ஊடக நிலைய தாக்குதல் குறித்தும் சர்வதேச ரீதியில் விசாரணை நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார். அரசுக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.   

‘ஐ.தே.க. தப்புவதற்கு எத்தனிக்கிறது’- நிமல் சிறிபால டி சில்வா

nimal-sripala.jpgஅரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்த பின்னரும் ஐ. தே. க அதிலிருந்து தப்பிச் செல்ல எத்தனிக்கிறதென அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவந்த பின்னர் அதனை நாம் சாதாரணமாக கருதவில்லை. அதனை அரசுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள பாரதூரமான விடயமாக கருதியதுடன், அதற்கு முக்கியத்துவம் அளித்தே ஒழுங்குப் பத்திரத்திலும் சேர்த்துள்ளோம். ஒழுங்கு பத்திரத்துள் சேர்க்கப்பட்டதன் பின்னர் இது ஐ.தே.க வுடையது என்று கூறமுடியாது. முழு சபைக்குமே சொந்தமானது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த விடயத்தை நன்கு ஆராய்ந்த பின்னரே சபாநாயகரும் அதற்கான தீர்ப்பையும் வழங்கினார். இருப்பினும் நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ஐ.தே.க தோல்வியை சந்திக்கும் என்பதுமட்டும் உண்மை. தொடர்ந்தும் ஐ.தே.க தோல்விகளையே சந்தித்து வருகிறது என்றும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பாக எப்போது விவாதம் நடத்தினாலும் தாம் ஆயத்தமாக இருப்பதாக ஜே. வி. பியினர் தெரிவித்தனர். ஐ.தே.கவினருக்கும் அரச தரப்பினருக்கும் இடையே இவ்விடயம் தொடர்பாக நீண்டநேரம் வாக்குவாதங்கள் ஏற்பட்டன. 
 
 

ஐ.தே. கட்சி நேற்று வெளிநடப்பு

parliment_inside.jpg
பாராளுமன்ற விவாதங்களில் இனி கலந்து கொள்வதில்லை எனக் கூறி ஐ. தே. க. உறுப்பினர்கள் நேற்று சபையிலிருந்து வெளியேறிச் சென்றனர். அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்தது ஐ. தே. க. தலைமையிலான எதிர்க்கட்சியினரே. விவாதம் நடத்த வேண்டிய நாட்களை தீர்மானிக்க வேண்டியதும் எதிர்க்கட்சியினரே. எனினும் ஆளும் கட்சியே இதனைத் தீர்மானிக்கும் நிலை உருவாகியுள்ளது. எனவே, விவாதங்களில் கலந்து கொள்வதில்லை என ஐ. தே. க. தீர்மானிப்பதுடன் சபையிலிருந்து வெளிநடப்பும் செய்கிறது எனக் கூறிய ஜோசப் மைக்கல் பெரேரா சபையிலிருந்து வெளியேறிச் சென்றார்.

அவரைத் தொடர்ந்து ஐ. தே. க. உறுப்பினர்கள் வெளியேறிச் சென்றனர். நேற்றுக் காலை பாராளுமன்றம் சபைநாயகர் வி. ஜே. மு. லொக்கு பண்டார தலைமையில் கூடியது. சபையின் வழமையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எதிர்க்கட்சியினர் கொண்டு வந்த நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் நாளை வெள்ளிக்கிழமை (இன்று) நடைபெறும் என சபாநாயகர் சபையில் அறிவித்தார்.

ஆளும் தரப்பு, எதிர்த்தரப்பு இருவரையும் ஒரு இணக்கப்பாட்டுக்குள் கொண்டு வந்து வியாழன், வெள்ளி ஆகிய இரு தினங்களிலும் விவாதத்தை நடத்துவதற்கு முயற்சிகள் செய்த போதும் முடியாமல் போனது. நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இரண்டு தினங்கள் நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சியினர் கேட்டுக் கொண்டதுடன் அடுத்த வாரம் பாராளுமன்ற அமர்வுகள் இல்லாத இரு தினங்களில் விசேடமாக பாராளுமன்ற அமர்வுகளை ஏற்படுத்தி விவாதம் நடத்துமாறும் எதிர்க்கட்சி கேட்டுக் கொண்டது. அதற்கும் ஆளும் தரப்பு இணக்கம் தெரிவிக்கவில்லை என்றும் சபாநாயகர் தெரிவித்ததுடன் இன்று வெள்ளிக்கிழமை விவாதம் நடத்தப்படும் என்றும் குறிப்பிட்டார்.

இதனை ஆட்சேபித்த ஜோசப் மைக்கல் பெரேரா இவ்விவாதத்துக்கு ஐ. தே. க. ஆயத்தமாக இல்லை என்றும் இன்று விவாதம் நடத்தப்படுமானால் நள்ளிரவு வரை நடத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். அத்துடன் உடனடியாக எமது எதிர்க்கட்சி உறுப்பினர்களை அவசரமாக அழைக்கவும் முடியாது. அவர்கள் வெவ்வேறு கடமைகள் நிமித்தம் சென்றுள்ளார்கள் என்றும் குறிப்பிட்டார்.

கருத்துக்களை அடக்கவோ அழிக்கவோ முற்படுவது கடும் கண்டனத்துக்குரியதாகும்.

daglas.jpg
பயங்கரவாதத்துக்கு எதிராக யுத்தமொன்று நடைபெறுகையில் ஊடகங்கள் சமூக அக்கறையோடும் தேவையற்ற பதற்றத்துக்கு இடம்தராத வகையிலும் பணியாற்ற வேண்டும். அதேவேளையில் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்களை கருவிகொண்டு அழிப்பது, அச்சுறுத்துவது, ஊடக நிறுவனங்களைத் தாக்குவது போன்ற மிலேச்சத்தனமான செயற்பாடுகளை எவரும் அனுமதிக்க முடியாது. இவ்வாறான சம்பவங்கள் மிக வன்மையான கண்டனத்துக்குரியவையாகும் என்று செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தனது கண்டனச் செய்தியில் தெரிவித்துள்ளார்.  ஒவ்வொருவருக்கும் கருத்துச் சொல்லும் சுதந்திரம் உண்டு. அதை இன்னொரு கருத்தினால் எதிர்கொள்வதே சரியானதாகும். மாறாக ஆயுதங்களைக் கொண்டு கருத்துக்களை அடக்கவோ அழிக்கவோ முற்படுவது கடும் கண்டனத்துக்குரியதாகும்.

அது ஒருவகையில் இயலாமையின் வெளிப்பாடுமாகும். பத்திரிகை விநியோகங்களுக்குத் தடை விதிப்பது, அச்சுறுத்துவது, ஊடக நிறுவனங்களைத் தாக்குவது ஊடகவியலாளர்களைக் கொலை செய்வது என்பன கருத்துக்களின் குரல் வளையை நெரிக்கின்ற கொடூரமாகும். இதை எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. அண்மையில் எம்.ரி.வி. நிறுவனம் தாக்கப்பட்டது, சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டது போன்ற சம்பவங்கள் எமக்கு அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளன.

இவ்வாறான சம்பவங்கள் மேலும் தொடராதிருக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென கேட்டுக் கொள்கின்றோம். மக்களுக்கு செய்திகளையும் நாட்டு நடப்புக்களையும் அறிந்து கொள்ளும் உரிமையை ஒவ்வொருவரும் மதிக்க வேண்டும். அதற்காக ஊடகங்கள் ஆற்றும் பணி மகத்தானதாகும். கருத்து ரீதியாக விமர்சனங்கள் இருக்கின்றபோதும் இன்னொருவரின் கருத்துச் சொல்லும் சுதந்திரத்தை ஈ.பி.டி.பி. யினராகிய நாம் என்றும் மதிக்கின்றோம். எனவே, நடைபெற்றுள்ள கசப்பான மற்றும் துயரமான சம்பவங்களுக்குக் காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். தவிரவும் இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாது என்பதையும் உரியவர்கள் உத்தரவாதப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

புலிகள் இயக்கத்தின் மீதான தடை சமாதான பேச்சுக்கு இடையூறாக அமையாது ‘- அரசாங்கம் அறிவிப்பு

anura-priyatharsana.jpgபுலிகள் இயக்கத்தினர் மீதான தடை சமாதானப் பேச்சுவார்த்தைக்கு இடையூறாக அமையாது என்று தகவல் ஊடகத் துறை அமைச்சரான அனுர பிரியதர்ஷன யாப்பா நேற்றுத் தெரிவித்தார். புலிகள் இயக்கத்தினர் ஆயுதங்களைக் கீழே வைத்து விட்டு பேச்சுவார்த்தைக்கு வருவார்களாயின் அவர்களுடன் பேச அரசாங்கம் தயாராக உள்ளது. இதனை அரசாங்கம் ஏற்கனவே அறிவித்துள்ளது எனவும் அவர் கூறினார்.

சமாதானப் பேச்சுவார்த்தைக்கு இடையூறாக அமையாத வகையில் புலிகள் இயக்கத்தினர் மீதான தடை வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது. இச்செய்தியாளர் மாநாட்டின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இச்செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மேலும் கூறுகையில், புலிகள் இயக்கத்தினர் அப்பாவி மக்களைத் தடுத்து வைத்துள்ளனர்.  அவர்களது சுதந்திர நடமாட்டத்திற்கு இடமளிக்கின்றார்கள் இல்லை. அப்பாவி மக்களை அவர்கள் மனித கேடயங்களாகப் பயன்படுத்துகின்றனர். அம் மக்களின் அடிப்படை மனித உரிமைகளை மறுக்கின்றனர். புலிகள் இயக்கத்தினர் தடுத்து வைத்துள்ள அப்பாவி மக்களை விடுவிப்பதை பிரதான நோக்காகக் கொண்டுதான் இத்தடை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழேயே புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டிருக்கிறது.

இத்தடையை அரசாங்கம் சுய முடிவாகவே மேற்கொண்டிருக்கிறது. புலிகள் இயக்கத்தை இந்தியா உட்பட பல நாடுகள் ஏற்கனவே தடை செய்துள்ளன. இலங்கையில் இப்போது தான் இந்த அமைப்பு தடை செய்யப்படுகின்றது. அவர்கள் ஆயுதங்களைக் கீழே வைத்து விட்டு சமாதான பேச்சுவார்த்தைக்குத் திரும்புவதற்கு கால அவகாசம் வழங்கும் வகையில் தான் இற்றைவரையும் அவ்வியக்கத்தைத் தடை செய்யப்படவில்லை. ஆனால் அவர்கள் ஆயுதங்களைக் கீழே வைத்து விட்டு சமாதான பேச்சுவார்த்தைக்குத் திரும்பவில்லை.

என்றாலும் புலிகள் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு பேச முன்வந்தால் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் ஏற்கனவே விருப்பம் தெரிவித்திருக்கிறது. அதனால் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு இடையூறு ஏற்படாத வகையிலேயே புலிகள் இயக்கத்தின் மீது தடை விதிக்கப்பட்டிருக்கிறது என்றார்.

இச்செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன உரையாற்றுகையில், புலிகள் இயக்கத்தைத் தடைசெய்யும் 32வது நாடாகவே இலங்கை அமைந்திருக்கிறது. புலிகள் இயக்கத்தினரின் பிடியிலுள்ள அப்பாவி மக்களை விடுவிக்கவே இத்தடை விதிக்கப்பட்டிருக்கிறது. புலிகள் இயக்கத்தினர் அங்கு தடுத்து வைப்பவர்களில் 14, 15 வயது சிறுவர்களை பலாத்காரமாக யுத்தத்தில் ஈடுபடுத்தத் தொடங்கியுள்ளனர். இது தொடர்பான தகவல்கள் எமக்குக் கிடைத்துள்ளன என்றார்.

பளை வீழ்ந்தது

_army.jpgபுலிகளின் மற்றுமொரு முக்கிய பிரதேசமான பளை பிரதேசத்தை பாதுகாப்பு படையினர் நேற்று கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

முகமாலை மற்றும் கிளாலி பிரதேசங்களிலிருந்து முன்னேறி வந்த இராணுவத்தின் 53 வது மற்றும் 55 வது படைப்பிரிவினர் பளை பிரதேசத்தை தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இராணுவத்தின் 53 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் கமல் குணவர்தன தலைமையிலான படையினரும், 55 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் பிரசன்ன சில்வா தலைமையிலான படையினருமே பளை நகரையும் அதன் சுற்றுப்புறத்தையும் முழுமையாக கைப்பற்றியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

முகமாலைக்கும் ஆனையிறவுக்கும் மத்தியில் அமைந்துள்ள பளை பிரதேசம் ஒரு பாரிய நகரமாகும். முகமாலை மற்றும் கிளாலி பகுதிகளிலுள்ள புலிகளுக்கான பிரதான விநியோக பாதையாகவும், புலிகளின் ஆட்டிலறி தளமாகவும் பளை விளங்கியதாக தெரிவித்த பிரிகேடியர், தற்பொழுது அந்தப் பிரதேசம் கைப்பற்றப்பட்டுள்ளதன் மூலம் படையினருக்கு இருந்த அச்சுறுத்தல் நீங்கி உள்ளதாகவும் தெரிவித்தார்.

படையினரின் கடுமையான தாக்குதல்களை அடுத்து புலிகள் தொடர்ந்தும் பின்வாங்கி வருவதாக தெரிவித்த இராணுவப் பேச்சாளர் பளையிலிருந்து ஆனையிறவை நோக்கிய படை முன்னகர்வுக்கு 14 கிலோ மீற்றர் தூரமே எஞ்சியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பிலிருந்து 280 வது கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள பளை, முகமாலைக்கும், ஆனையிறவுக்கும் இடையில் அமைந்துள்ள ஒரு முக்கிய பிரதேசமாகும். தென்னை செய்கைக்கு பெயர்போன பிரதேசமாகவும் இது விளங்கியுள்ளது. ஏ-9 யாழ். – கண்டி பிரதான வீதிக்கு அண்மித்த பகுதியிலுள்ள பளை பிரதேசத்தில் ஆனையிறவுக்கும் கொடிகாமத்திற்கும் இடையிலான ரயில் நிலையம் ஏற்கனவே இருந்தது. பளை பிரதேசத்தில் தமது நிலைகளை பலப்படுத்தி வரும் பாதுகாப்பு படையினர் சோரண்பற்று பிரதேசத்தை நோக்கி முன்னேறி வருவதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கிறது.

இதேவேளை, யாழ். – கண்டி ஏ-9 பிரதான வீதி எந்தவேளையிலும் படையினரின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் வரும் நிலையில் உள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ற் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். யாழ். – கண்டி ஏ-9 பிரதான வீதியின் ஒவ்வொரு பகுதிகள் மாத்திரம் இதுவரை காலமும் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வந்தது. முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் வரவுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
 
 

கிளிநொச்சியை படையினர் கைப்பற்றியமை சமாதானத்தை விரும்புபவர்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி – கிழக்கு முதலமைச்சர் சி. சந்திரகாந்தன்

cm.jpgவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாக விளங்கிய கிளிநொச்சியை படையினர் கைப்பற்றி இருப்பதானது பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு சமாதானம், ஜனநாயகம் என்பன ஏற்படுத்தப்பட வேண்டும் என விரும்புகின்ற அனைவருக்குமே கிடைத்த ஓர் மாபெரும் வெற்றியாகும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை முதலமைச்சரின் மட்டக்களப்பு அலுவலகம் பத்திரிகைகளுக்கு விடுத்த செய்திக் குறிப்பிலேயே மேற்கண்டவாறு முதலமைச்சர் சி. சந்திரகாந்தனால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; இந்த வெற்றியினூடாக வட பகுதிக்குள் குறிப்பாக பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டு எல்லைக்குள் சிக்கித் தவிக்கின்ற அப்பாவி பொதுமக்கள் மற்றும் இளைஞர், யுவதிகளையும் மீட்டு அவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்படுகின்ற போது இவ்வெற்றியானது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுக்கொள்ளும் என்பதில் எதுவித ஐயமுமில்லை. கிழக்கைப் போன்றே வடக்கிலும் ஒரு ஜனநாயக சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்காக எஞ்சியிருக்கின்ற பயங்கரவாதம் முற்றுமுழுதாக ஒழிக்கப்பட வேண்டும். இவ்வாறு பயங்கரவாதம் ஒழிக்கப்படுவதனூடாக கிழக்கு மக்களைப் போன்று வடபகுதி மக்களும் ஓர் ஜனநாயகப் பாதைக்கு வந்து தங்களுக்கான பலமான அரசியல் இருப்பை ஏற்படுத்திக்கொள்ள முடியும்.

அண்மைக் காலமாக இராணுவ முன்னேற்றங்களை வைத்துப் பார்க்கின்றபோது இப்பாரிய வெற்றியானது சமாதான விரும்பிகள் எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகும். உண்மையிலேயே இலங்கையின் இறைமைக்குட்பட்ட எந்த ஓர் நிலப்பிரதேசத்திலும் இருக்கின்ற பயங்கரவாதம் முற்று முழுதாக ஒழிக்கப்படுகின்ற அதேவேளை, மீண்டும் ஒருமுறை பயங்கரவாதமானது துளிர்விடுவதற்கு யாருமே அனுமதியளிக்கக்கூடாது, பயங்கரவாதத்தின் கொடூரங்களுக்கு பலியாவது அப்பாவி பொதுமக்களும், அரச உடைமைகளுமே. ஜனாதிபதியின் வழிகாட்டலில் படையினர் ஈட்டியிருக்கின்ற இந்தப் பாரிய வெற்றியினூடாக ஏற்படவிருக்கின்ற அனுகூலங்களை முழுமையாக பாதிக்கப்பட்ட மக்கள் அனுபவிக்க வேண்டும். இப்பயங்கரவாதத்தின் பிடியில் சிக்குண்ட மக்களை மீட்டெடுத்து ஜனநாயக முறையில் வாழ்வதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றபோது அந்த மக்கள் நிம்மதியுடன் வாழ்கின்ற நிலை தோற்றுவிக்கப்படும் என கிழக்கு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.