2009

2009

ஸ்ரீலங்கன் எயார்வேஸ் விமானத்தில் மோதிய பறவை

images-01.jpg
கொழும்பிலிருந்து சென்னைக்குச் சென்ற ஸ்ரீலங்கான் எயார்வேஸிக்குச் சொந்தமான விமானமொன்று சென்னை விமான நிலைய ஓடுபாதையை நோக்கி வரும் போது பறவையொன்று மோதி அதன் இயந்திரப் பகுதிக்குள் சென்று விட்டது. இதனையறிந்த விமானி விமானத்தை சமார்த்தியமாக நிறுத்தினார். இந்த விமானத்தில் 89 பயணிகள் இருந்தனர்.

இந்த விமானம் மீண்டும் நேற்றிரவு 11.00 மணிக்குக் கொழும்பு திரும்ப வேண்டியிருந்தது. ஆனால் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமானம் புறப்படுவது ரத்துச் செய்யப்பட்டது. இந்த விமானத்தில் கொழும்பு வருவதற்காகவிருந்த 152 பயணிகளும் நேற்றிரவு சென்னையிலுள்ள ஹோட்டலொன்றில் தங்க வைக்கப்பட்டனர். இன்று காலையில் இந்த விமானம் பயணிகளுடன் கொழும்பு புறப்பட்டது.

இராமநாதபுரம் விடுவிக்கப்பட்டுள்ளது

truck.jpgஇராணுவத்தின் 57வது படையணியினர் புலிகளின் பிடியிலிருந்து இராமநாதபுரத்தை விடுவித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. 571 மற்றும் 572 வது படைப் பிரிவுகள் இப்பகுதியில் கடந்த சில நாட்களாக மேற்கொண்ட தாக்குதல்களை அடுத்தே இன்று பிற்பகல் இந்தப் பகுதி விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி நகருக்கு அடுத்ததாக முக்கிய புலிகளின் தளங்களில் ஒன்றாக இராமநாதபுரம் விளங்கி வந்தது. இராமநாதபுரம் படையினரால் விடுவிக்கப்பட்டதையடுத்து புலிகள் இயக்க உறுப்பினர்கள் முத்தையன்கட்டு காட்டுப் பகுதிகளுக்குள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா- நெடுங்கேணி பயணிகள் பஸ் சேவை வெள்ளி ஆரம்பமானது

bus-17o1.jpgநெடுங்கேணி பிரதேசம் புலிகளிடமிருந்து விடுவிக்கப்பட்டதை அடுத்து வவுனியா  நெடுங்கேணியிடையேயான பயணிகள் பஸ் சேவை வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இப்பயணிகள் பஸ் சேவை முன்னர் புலிகளின் சோதனைச் சாவடியாயிருந்த ஓமந்தை மற்றும் புளியங்குளம் ஊடாக நடத்தப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலிகள் தமிழர்களின் பிரதிநிதிகள் அல்ல – ஜெயலலிதா –

jayalalitha-1701.jpgவிடுதலைப் புலிகள்தான் இலங்கை தமிழர்களின் ஒரே பிரதிநிதி என்பதை நாங்கள் நம்பவில்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். சென்னையில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்த பின்னர் நிருபர்களுக்கு ஜெயலலிதா அளித்த பேட்டி:

கேள்வி: இலங்கை தமிழர் பிரச்சனைக்காக திருமாவளவன் 3வது நாளாக உண்ணாவிரதம் இருக்கிறார். அவரை உங்கள் கூட்டணி கட்சியினரான மதிமுக, சிபிஐ, சிபிஎம் நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆதரவளித்துள்ளனர். இதில் உங்கள் நிலைப்பாடு என்ன?

ஜெயலலிதா: இலங்கை பிரச்சனையைப் பொறுத்தவரை எங்களுக்கென்று தனிக்கொள்கை உண்டு. எங்கள் கூட்டணியில் சில கட்சிகள் இருந்தால், அவர்கள் அனைவருக்குமே எல்லாப் பிரச்சனையிலும் ஒருமித்த கருத்து இருக்க முடியாது. அவரவருக்கும் ஒரு கொள்கை உண்டு. இந்த உண்ணாவிரதம் கருணாநிதியும் திருமாவளவனும் பேசி வைத்துக் கொண்டு நடத்தும் நாடகம்.

கேள்வி: இலங்கை விஷயத்தில் உங்கள் கட்சியின் நிலை என்ன? மத்திய அரசு இதில் தலையிட வேண்டுமா? கூடாதா?

ஜெயலலிதா: இதுகுறித்து நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். மற்ற நாடுகளின் உள்நாட்டுப் பிரச்சனையில் எந்த நாடும் தன்னிச்சையாக தலையிட முடியாது. இலங்கை பிரச்சனையைப் பொறுத்த அளவில் அங்குள்ள தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க வேண்டும். கௌரவமான வாழ்வு அமைய வேண்டும். சிங்கள மக்களைப் போலவே சுதந்திரமான உரிமைகளோடு தமிழ் மக்களும் வாழவேண்டும் என்பது தான். ஆனால் பயங்கரவாதத்தை நாங்கள் கடுமையாக எதிர்ப்போம். விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு பயங்கரவாத அமைப்பு என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது. இதை பல நாடுகளும் அறிவித்துள்ளன. பல நாடுகளில் தடையும் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இலங்கை தமிழர்களுக்கான ஒரே பிரதிநிதி விடுதலைப் புலிகள்தான் என்பதை நாங்கள் நம்பவில்லை.

கேள்வி: போர் நிறுத்தத்தை வலியுறுத்துகிறார்களே?

ஜெயலலிதா: கருணாநிதியும் திருமாவளவனும் தொடர்ந்து போர் நிறுத்தம் என மக்களை ஏமாற்றுகிறார்கள்.

கேள்வி: 1983ம் ஆண்டில் எம்ஜிஆர் விடுதலைப் புலிகளை முழுமையாக ஆதரித்தாரே?

ஜெயலலிதா: அப்போதிருந்த நிலை வேறு. இப்போதுள்ள நிலைமை வேறு.

கேள்வி: ஈழத் தமிழர்கள் அங்கு கொல்லப்பட்டு வருகிறார்களே?

ஜெயலலிதா: ஈழம் என்ற ஒரு நாடே இல்லை. அவர்கள் எல்லோரும் இலங்கைத் தமிழர்கள்தான். எங்கு யுத்தம் நடந்தாலும் அங்கு அப்பாவி பொதுமக்கள் சிலர் கொல்லப்படுவார்கள். இலங்கையில் தமிழர்களை கொல்ல ராணுவம் எண்ணவில்லை. போர் நடக்கும் போது அப்பாவிகளும் கொல்லப்படுவார்கள். இதில் எந்த நாடும் விதி விலக்கு அல்ல. இப்போது இலங்கையில் என்ன நடக்கிறது என்றால் அங்குள்ள தமிழர்கள் பாதுகாப்பான இடம் தேடி செல்ல முடியவில்லை. அவர்களை புலிகள் பிடித்து வைத்து, ராணுவத்திற்கு முன் கேடயமாக பயன்படுத்தி வருகிறார்கள். எனவே விடுதலைப் புலிகள் நினைத்தால், அப்பாவித்தமிழர்களை சாவிலிருந்து காப்பாற்ற முடியும்.

கேள்வி: ஸ்பெக்ட்ரம் ஊழல் போன்ற பிரச்சனையை மறைப்பதற்காகத்தான் இந்த நாடகமா?

ஜெயலலிதா: ஆமாம். நிச்சயமாக அதுதான் காரணம். சத்யம் என்கிற தனியார் நிறுவனத்தில் ரூ. 7,000 ரூபாய் மோசடிக்கே அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கிறது. போலீசார் ஐபிசியின் கீழ் வழக்குப்பதிவு செய்து முன்னாள் தலைவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர் அரசு பணம் எதையும் களவாடவில்லை. ஆனால் ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் இந்திய அரசுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் வரையிலும் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனாலும் இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தனியார் மீது வேகமாக நடவடிக்கை எடுத்தவர்கள் இதில் தொடர்புடைய மத்திய அமைச்சர் மீதோ, அதற்கு உடந்தையானவர்கள் மீதோ ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

கேள்வி: சத்யம் நிறுவனத் தலைவர் குற்றத்தை ஒப்புக் கொண்டார். ஆனால் மத்திய அமைச்சர் ராஜா ஒப்புக் கொள்ளவில்லையே?

ஜெயலலிதா: உங்கள் கேள்வியே தவறு. ஏற்கனவே சந்தனக்கடத்தல் கொள்ளையன் உட்பட பலர் தவறு செய்தார்களே? அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்ட பிறகா அரசு நடவடிக்கை எடுத்தது?

கேள்வி: சத்யம் நிறுவன ஊழலில் அரசியல்வாதிகளும் உடந்தை என சொல்லப்படுகிறதே?

ஜெயலலிதா: யாராக இருந்தாலும் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரத்தில் என்னுடைய கேள்வி என்பது தனியார் நிறுவனத்தின் ரூ. 7,000 கோடிக்கே நடவடிக்கை எடுத்த அரசு ஒரு லட்சம் கோடி அரசுப் பணம் முறைகேட்டின்போது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதுதான்.

கேள்வி: அதிமுக கூட்டணிக்கு பாமகவுக்கு அழைப்புண்டா?

ஜெயலலிதா: நிச்சயம் எங்கள் கூட்டணி மேலும் வலுப்பெறும். போகப் போக அது உங்களுக்குத் தெரியும்

கேள்வி: பாஜக உங்கள் அணிக்கு வருமா?

ஜெயலலிதா: ஏற்கனவே இதற்கு பதிலளித்து விட்டேன். வீணாக என்னை வம்புக்கு இழுக்க முடியாது. என்னை யாரும் கோபப்படுத்த முடியாது.

கேள்வி: வரும் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்துக்கும் தேர்தல் வருமா? நீங்கள் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவீர்களா?

ஜெயலலிதா: நான் ஏற்கனவே எம்எல்ஏ மற்றும் எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறேன். நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை.

கேள்வி: சட்டமன்றத்திற்கு விரைவில் தேர்தல் வருமா?

ஜெயலலிதா: சட்டமன்றத்துக்கும் தேர்தல் எப்படியாவது வரும். வரவழைப்போம். எப்படியாவது அது வரும்வரை ஓயாது செயல்படுவோம். ஏனென்றால் நாடு விடுதலை அடைந்த பிறகு இந்த அளவுக்கு மிக மோசமான ஊழலாட்சி தமிழகத்தில் நடந்ததில்லை. வரலாறு காணாத ஊழல் ஆட்சியாக திமுக ஆட்சி நடக்கிறது. முதல்வரும் செயல்படவில்லை. கையாலாகாத்தனம், நிர்வாக திறமையின்மை தினமும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஒரு குடும்பம்… குடும்பம் என்றும் சொல்ல மாட்டேன். ஒரு வன்முறை கும்பல் தமிழகத்தையே வேட்டை காடாக்கி வருகிறது. நிர்வாகத்தில் துளியும் அக்கறை இல்லாமல் தமிழகத்தை வளைத்துப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். எனவே இந்த குடும்பத்தின் ஆட்சியை அகற்றி அழிவுப் பாதையிலிருந்து தமிழகத்தை மீட்டெடுக்க வேண்டும். அதற்கு என்ன வழியோ அதற்கான வேலைகளில் நாங்கள் ஈடுபடுவோம். திமுக ஆட்சியை அகற்றி நிச்சயம் எங்கள் இலக்கை அடைவோம் என்றார் ஜெயலலிதா.

நன்றி: வன் இந்தியா

ஒவ்வொரு ஜனவரி 4 ம் திகதியையும் சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிரான தேசிய தினமாக பிரகடனம்?

sumeda-jayasena.jpgநாட்டின் எதிர்கால சொத்துக்களான குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்தி அமைச்சர் சுமேதா ஜி ஜயசேன தெரிவித்துள்ளார். சிறுவர் பாதுகாப்பு சேவைகளுக்கான விருது வழங்கும் நிகழ்வு நேற்று கொழும்பில் இடம்பெற்ற போது அங்கு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். குழந்தைகளின் திறமைகளை இனங்கண்டு அவற்றை அபிவிருத்தி செய்வதற்கு பெற்றோர் முயற்சிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், ஒவ்வொரு ஜனவரி 4 ம் திகதியையும் சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிரான தேசிய தினமாக பிரகடனப்படுத்தப் போவதாகவும் சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்தி அமைச்சர் சுமேதா ஜி ஜயசேன தெரிவித்தார்.

கருணாநிதி வாக்குறுதி: உண்ணாவிரதத்தை திருமா. கைவிட வேண்டும்-ராமதாஸ்

thirumavalavan-1601.jpgமுதல்வர் கருணாநிதி அளித்துள்ள உறுதிமொழியை ஏற்று திருமாவளவன் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை:

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் நல்லதோர் தீர்வு காண்பதற்கு 50 ஆண்டுக் காலமாக என்னால் முடிந்ததை எல்லாம் செய்துவிட்டேன். இன்னும் செய்வதற்கு தயாராக இருக்கிறேன். என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்திருக்கிறார். கருணாநிதியை நம்புவோம். பலமுறை வாக்குறுதி அளித்து வந்துள்ள இந்திய பேரரசு மீது முதல்-அமைச்சர் நம்பிக்கை வைத்திருக்கிறார். நாமும் நம்புவோம். எல்லாவற்றிற்கும் மேலாக இந்தப் பிரச்சினையில் நாம் விரும்புகின்ற முடிவை மேற்கொள்வார் என்று முதல்வரை நாம் நம்புவோம்.

முதல்வர் பெரிதும் நம்பியிருக்கிற இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளரின் கொழும்பு பயணத்தினால் என்ன விளைவுகள் ஏற்படப் போகிறது என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும். அங்கே நாம் விரும்புகின்ற போர் நிறுத்தம் ஏற்படுமா என்பது முக்கியமாகத் தெரிந்துவிடும். அப்படிப் போர் நிறுத்தம் ஏற்பட வழி பிறக்காவிட்டால் அதன்பிறகு, தமிழக மக்களின் சார்பில், தமிழக அரசின் சார்பில் முதல்வர் என்ற முறையில் கருணாநிதி என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நாம் அனைவரும் கலந்து பேசி முடிவெடுத்து அவரிடம் தெரிவிப்போம்.

எனவே ஒடுக்கப்பட்ட மக்களின் நலன் கருதி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், தனது உண்ணாவிரதப் போராட்டத்தை உடனடியாக விலக்கிக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அவரது உடல்நிலை குறித்து அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களும் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் முதல்வர் கருணாநிதி புதிதாக அறிவித்திருக்கும் வாக்குறுதியையும், அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் கவலையையும் மனதில் கொண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தனது உண்ணாவிரதத்தை இன்றோடு முடித்துக் கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

கிளிநொச்சி, முல்லைத்தீவுக்கு 59 லொறிகளில் உணவுப் பொருள்

aid-loryes1712.jpg
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு நேற்று 59 லொறிகளில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அனுப்பப்பட்டன. உலக உணவுத் திட்டத்தின் கீழ் இந்த உணவுப் பொருட்கள் அனுப்பப்பட்டதாக அதிகாரியொருவர் கூறினார். வவுனியா தேக்கங்காடு களஞ்சியத்திலிருந்து ஓமந்தை வரை இராணுவப் பாதுகாப்புடன் உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டன.

ஓமந்தையிலிருந்து சர்வதேச செஞ்சிலு வைச் சங்கத்தின் வழித்துணையுடன் இந்த லொறிகள் புதுக்குடியிருப்பு களஞ்சியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதென வவுனியா மாவட்ட செயலாளர் கூறினார். இதற்கிடையில், வன்னியிலிருந்து வந்து பாதை மூடப்பட்டதனால் திரும்பி செல்ல முடியாது கடந்த ஒரு வார காலம் வவுனியாவில் தரித்து நின்ற சுமார் 300 பொது மக்களும் நேற்று நெடுங்கேணி வரை பஸ்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சியின் அபிவிருத்தியை துரிதமாக முன்னெடுக்க அரசு திட்டமிட்டுள்ளது -லக்ஷ்மன் அபேவர்த்தன

laksman-yaappa.jpg
கிழக்கை விட கிளிநொச்சியை மிக துரிதமாக அபிவிருத்தி செய்ய அரசு உத்தேசித்துள்ளதாகவும் இது தொடர்பில் வடக்கு அரசியல் தலைவர்களுடன் அரசாங்கம் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் ஊடக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார். தகவல் திணைக்களத்தில் நடத்திய ஊடகவியலாளர் மகாநாட்டின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மனிதாபிமான நடவடிக்கைகள் குறித்து இந்தியா தலையிட வேண்டுமென வலியுறுத்த வேண்டிய அவசியம் மலேசியாவுக்கு இல்லை. எனவே, இலங்கைக்கு எதிரான ஆர்ப்பாட்டம் தேவையில்லை. இலங்கையில் நடப்பது பிரிவினை வாதம். காஸாவில் நடப்பது இன அழிப்பே. எனவே இரண்டும் வேறுபட்டது என்றும் இலங்கைக்கு எதிரான ஆர்ப்பாட்டம் தேவையில்லையென மலேசிய வீடமைப்பு அமைச்சர் செய்யித் ஹமீட் அஸ்வர் மலேசிய பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இலங்கைப் பிரச்சினை தொடர்பில் உலகம் நன்கு தெரிந்துகொண்டுள்ளது என்பதையே இது காட்டுகின்றது. கிழக்கிலும் பார்க்க கிளிநொச்சி அரசாங்கத்தினால் துரிதமாக அபிவிருத்தி செய்யப்படும். அதற்கான சந்தர்ப்பம் படையினர் ஈட்டிய வெற்றியின் மூலம் கிடைத்துள்ளது. இது தொடர்பில் வடக்கிலுள்ள அரசியல் தலைவர்களுடன் அரசாங்கம் முதல் கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இந்த கூட்டத்தில் இந்திய உயர்ஸ்தானிகர் கலந்துகொண்டு இவ்விடயத்தைப் பாராட்டியதுடன் இந்திய நிவாரண உதவிப் பொருட்களை சரியாக விநியோகிப்பதற்காக நன்றி தெரிவித்துள்ளார். கிளிநொச்சி வெற்றிக்குப் பின்னர் அரசாங்கம் படிப்படியாக வெற்றியை ஈட்டிவருகின்ற நிலையில் ஊடகங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் நடத்த வேண்டிய எந்த அவசியமுமில்லை. எதிர்க்கட்சியினர் தமது அரசியல் லாபம் கருதி அரசு மீது பொய்க் குற்றம் சுமத்துகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

தர்மபுரத்தில் புலிகளின் முக்கிய நிலகீழ் முகாம் படையினரால் கண்டுபிடிப்பு

_army.jpgபடையினரால் விடுவிக்கப்பட்ட தர்மபுரம் பிரதேசத்திலுள்ள புலிகளின் பல முக்கிய முகாம்களை பாதுகாப்பு படையினர் நேற்று கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். தர்மபுரத்தை நேற்று முன்தினம் கைப்பற்றிய இராணுவத்தின் 58 வது படைப் பிரிவினர் அங்கிருந்து முன்னேறி மேற்கொண்ட தேடுதல்கள் மற்றும் படை நடவடிக்கைகளின் போதே இங்குள்ள முக்கிய முகாம்களைக் கைப்பற்றியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சுமார் 12 மணி நேரம் தர்மபுரம் பிரதேசம் முழுவதையும் சுற்றி வளைத்து பாதுகாப்பு படையினர் பாரிய தேடுதல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். பெருந்தொகையான குண்டுகளை தயாரிக்கும் பிரதேசம் ஒன்றை கைப்பற்றிய படையினர் அதற்கு அருகிலுள்ள பாரிய நிலக்கீழ் முகாம் ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர். இந்த நிலக்கீழ் முகாமிற்கு அடியில் மூன்று மாடிகள் நிர்மாணிக்கப் பட்டிருப்பதாகவும பிரிகேடியர் குறிப்பிட்டார்.

இந்தப் பிரதேசத்தில் தொடர்ந்தும் தேடுதல் நடத்திய படையினர் அங்கு அமைக்கப்பட்டிருந்த புலிகளின் மற்றுமொரு பாரிய பயிற்சி முகாம் ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர். அந்த முகாமுக்கு அருகிலிருந்து துப்பாக்கி ரவைகள் பெருந்தொகையானவற்றை புதைத்து வைத்திருந்த கிடங்கு ஒன்றையும் பிடித்துள்ளனர்.

ட்ரக் வண்டி-01, மோட்டார் சைக்கிள்-01, உழவு இயந்திரம் –01, முச்சக்கரவண்டி –01 மற்றும் வாகனங்களையும் இந்தப் பிரதேசத்திலிருந்து கண்டெடுத்துள்ளனர் என்றும் இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார். தற்பொழுது தர்மபுரத்திலிருந்து முல்லைத்தீவை நோக்கி படையினர் தொடர்ந்தும் முன்னேறி வருவதாகவும் இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்

கொழும்பில் மேனன் கட்சிகளின் தலைவர்களுடன் சந்திப்பு

sivashankar.jpg
இலங்கைக்கு இருநாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகாரச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் இன்று சனிக்கிழமை கண்டியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக எதிர்பார்க்கப்படும் அதேசமயம், நேற்று வெள்ளிக்கிழமை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

ஜனாதிபதியுடனான இன்றைய சந்திப்பில் இருதரப்பு நலன்கள் சம்பந்தப்பட்ட விடயங்களுடன் வடக்கு போர் நிலவரம் தொடர்பாக விரிவாக கலந்துரையாடவுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன. இதேவேளை, நேற்று வெள்ளிக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு , ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட் ஈ.பி.ஆர்.எல்.எவ். (பத்மநாபா பிரிவு) ஆகிய கட்சி பிரமுகர்களுடன் மேனன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அதேசமயம், நேற்று இரவு எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையும் மேனன் சந்திக்கவிருந்தார்.

தமிழ்க் கட்சிகளின் தலைவர்களுடனான சந்திப்பின் போது, வன்னிப்போர் நிலpவரம் குறித்து அறிந்து கொள்வதில் மேனன் அதிக ஆர்வம் காட்டியதாகக் கூறப்படுகிறது. மக்கள் வெளியேற்றம் குறித்தும் வெளியேறும் மக்கள் கூறுவது என்ன என்பது பற்றியும் அறிந்துகொள்வதில் மேனன் அதிகம் கரிசனை காட்டியதாக சந்திப்பில் கலந்துகொண்ட தமிழ் கட்சிகளின் பிரதி நிதிகள் தெரிவித்தனர் சிவ்சங்கர் மேனனின் வருகை வழமையான இராஜதந்திர தொடர்பாடலின் ஓரங்கம் என்று கூறப்பட்டாலும் இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியை கொழும்புக்கு அனுப்புமாறும் இலங்கை மோதலை முடிவுக்கு கொண்டுவர அழுத்தம் கொடுக்குமாறும் இந்திய மத்திய அரசாங்கத்திடம் தமிழக முதலமைச்சர் கருணாநிதி உட்பட தமிழக கட்சிகள் பல வலியுறுத்தி வருவதன் பின்னணியாகவே மேனனின் வருகை அமைந்துள்ளதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

இது இவ்வறிருக்க எதிரான நிலைப்பாட்டை கொண்டிருக்கும் ஜே.வி.பி. மேனனின் வருகையில் “உள்நோக்கம்’ இருப்பதாக சாடியுள்ளது.அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு அப்பால் சென்றதான அதிகாரப் பகிர்வுக்கு இலங்கை அரசாங்கம் செல்ல வேண்டுமென்ற அழுத்தத்தை சிவ்சங்கர் மேனன் கொடுக்கக் கூடுமென ஜே.வி.பி. எம்.பி. பிமல் இரட்நாயக்க கூறியுள்ளார்