2009

2009

ஆயிரக் கணக்கான பொதுமக்கள் மீட்பு!

pokkanai.jpgபுலிகளிடம் சிக்கியிருந்த ஆயிரக் கணக்கான பொது மக்கள் இன்று காலை படைப் பிரிவினரால் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கின்றது. அரச கட்டுப்பாடற்ற பிரதேசங்களில் புலிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொது மக்களை மீட்கும் பணிகளை படையினர் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.

புதுமாத்தளன் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மண் மேட்டை தகர்த்து பொதுமக்களுக்கு தப்பி வருவதற்கு படையினர் வழி வகுத்ததால் ஆயிரக்கணக்கான மக்கள் மீட்கப்பட்ட பிரதேசங்களை நோக்கி வந்துகொண்டிருப்பதாக அமைச்சு மேலும் தெரிவிக்கின்றது. 

காணாமற்போன சிறுவனும் சிறுமியும் சடலமாக மீட்பு- அக்மீமனை கிராமத்தில் துயரம்

baby-01.jpgகாலி மாவட்டம் அக்மீமன பகுதியில் கடந்த வாரம் முதல் காணாமற் போயிருந்த சிறுவனும் சிறுமியும் சடலங்களாக மீட்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். தனுஜா ஐராங்கனி (10) எனும் சிறுமியும் கவின் ரஸ்மிக்க (03) எனும் சிறுவனுமே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாகத் தெரிவிக்கபடுவதாவது:- அக்மீமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொனாமுள்ள நுகேகந்த கிராமத்தைச் சேர்ந்த மேற்படி சிறுவனும் சிறுமியும் கடந்தவாரம் முதல் காணாமற் போயுள்ளார்கள். ஒன்றாக விளையாடிக் கொண்டிருக்கும் போதே இவ்விருவரும் காணாமற் போயுள்ளனர். சிறுவனும் சிறுமியும் வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.

இரு குடும்பத்தாரும் தமது பிள்ளைகள் காணாமற் போனது தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்ததுடன் ஊர்மக்கள் அனைவரும் ஒன்றாகத் திரண்டு பிள்ளைகளைத் தேடியும் வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை (18) நண்பகல் வேளையில் பாடசாலை மாணவியான தனுஜா ஐராங்கனி (10) எனும் சிறுமி தனது வீட்டு வளவுக்குள்ளிருந்த பழைய மலசல கூடமொன்றிலிருந்து அக்மீமன பொலிஸாரால் சடலமாக மீட்கப்பட்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தாரும் ஊர் மக்களும் பொலிஸாரின் உதவியுடன் சிறுவனைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இருப்பினும் துர்திஷ்டமாக கவின் ரஸ்மிக்க (03) எனும் சிறுவனும் நேற்று (19) காலை சடலமாகவே கண்டெடுக்கப்பட்டார். துகேகந்த கிராமத்தில் ஜயந்தி எனும் சந்தியிலிருந்த காட்டுக்குள்ளிருந்த வீடொன்றின் அருகிலிருந்தே சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இம்மர்ம கொலைகள் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணைகளை நடத்தி வருகின்றனர். பெரியவர்களிடையே ஏற்பட்ட முரண்பாடுகளுக்கு சிறுவர்கள் பலிக்கடாவாக்கப் பட்டிருப்பதாகவும் பொலிஸார் கூறினர். இரண்டு குடும்பங்களுடனும் கோபமுள்ள ஒருவராலேயெ இப்பிள்ளைகள் கடத்தப்பட்டிருக்க வேண்டுமெனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.கொல்லப்பட்டுள்ள சிறுவனதும் சிறுமியினதும் சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளன.

இதுவரையில் இச்சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்

இந்தியாவின் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஜி இன்று இலங்கை வருகிறார்

sri_sri_ravisangar_.jpg இந்தியாவின் ஆன்மீகத்தலைவரும், வாழும்கலை அமைப்பின் நிறுவனருமான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஜி இன்று (20.04.2009) இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் 3 நாட்கள் தங்கியிருக்கும் இவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உட்பட பல அரசியல் தலைவர்களையும் சர்வமத தலைவர்களையும் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். மேலும் வவுனியா முகாம்களில் தங்கியிருக்கும் மக்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

வெள்ளமுள்ள வாய்க்கால் நோக்கி படையினர் நகர்வு

பரந்தன் – முல்லைத்தீவு ஏ-35 வீதியில் அமைந்துள்ள வெள்ளமுள்ள வாய்க்கால் பாலத்தை பாதுகாப்புப் படையினர் அண்மித்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். வெள்ளமுள்ள வாய்க்கால் பாலத்திற்கு 700 தொடக்கம் 800 மீற்றர் தொலைவில் இராணுவத்தின் 53வது மற்றும் 58வது படைப் பிரிவினர் நிலை கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பாதுகாப்பு வலயத்திற்கான ஒரு பிரதான பாதையை அமைத்து புலிகளின் பிடியில் சிக்கியுள்ள அப்பாவி பொது மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதே படையினரின் நோக்கம் என பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கிறது.

இலங்கையர் 5400 பேருக்கு கொரியாவில் வேலைவாய்ப்பு – ‘கோட்டா’ முறையில் இலங்கைக்கு மூன்றாமிடம்

krambukkela.bmp

இலங்கையைச் சேர்ந்த 5400 பேருக்கு இவ்வருட இறுதிக்குள் கொரியாவில் வேலை வாய்ப்பினை வழங்க அந்நாட்டு அரசாங்கம் இணக்கம் தெரிவித்திருப்பதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் பேச்சாளர் எஸ். போபிட்டிய தெரிவித்தார்.

வேலையாட்கள் கோரி, கொரிய அரசாங்கத்தினால் 15 நாடுகளுக்கு வெளியிடப்பட்ட ‘கோட்டா’ முறையின் கீழ் இலங்கை இம்முறை மூன்றாம் இடத்தைத் தட்டிப்பிடித்துள்ளது. இது நாட்டுக்குக் கிடைத்த பெரும் கீர்த்தியும், வெற்றியுமாகுமென வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு நலன்புரி அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுட்டிக்காட்டியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஏப்ரல் மூன்றாம் திகதி முதல் டிசம்பர் 31ம் திகதிக்குட்பட்ட காலப் பகுதிக்குள் 15 நாடுகளிலிருந்து 59 ஆயிரம் பேருக்கு தொழில்வாய்ப்பினை வழங்க கொரிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வேலையாட்கள் கோரி, கொரிய அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் ‘கோட்டா’ வில் மூன்றாம் இடத்தை எய்தியிருக்கும் இலங்கையிலிருந்து 5 ஆயிரத்து 400 பேருக்கு இவ்வருட இறுதிக்குள் கொரியாவில் தொழில் வாய்ப்புக்கள் வழங்கப்படவுள்ளன.

முதலாம் இடத்தில் வியட்நாமும் இரண்டாம் இடத்தில் பிலிப்பைன்சும் இருப்பதாகவும் அமைச்சின் பேச்சாளர் மேலும் கூறினார். கொரியாவுக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டிருந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு நலன்புரியமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அந்நாட்டின் வேலைவாய்ப்பு அமைச்சர் மற்றும் அதனுடன் தொடர்புடைய உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சு நடத்தியிருந்தார்.

இலங்கையிலிருந்து கொரியா வரும் தொழிலாளிகள் பெற்றிருக்கும் விசேட பயிற்சி முறைகள் மற்றும் அவர்களுடைய திறமைகள் காரணமாக அந்நாட்டில் அவர்களுக்கு பெரும் கிராக்கி ஏற்பட்டிருப்பதாக இச்சந்திப்பின் போது கொரிய அமைச்சரினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையிலேயே கடந்த வருடம் இருந்த ஸ்தானத்திலிருந்து முன்னேறி இலங்கை இம்முறை மூன்றாம் இடத்தை அடைந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். கொரியா செல்வதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினால் ஏற்கனவே 7 ஆயிரம் பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கூடுமானவரையில் இவர்களனைவரையும் இவ்வருட இறுதிக்குள் கொரியா அனுப்பி வைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம் எனவும் அமைச்சர் கெஹெலிய நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தற்போது கொரியாவில் இது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் அமைச்சின் பேச்சாளர் கூறினார். இதேவேளை கொரியா செல்ல விருப்போருக்கு மேலும் விசேட பயிற்சி முறைகளை வழங்குவது குறித்து அமைச்சு ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

56 சடலங்கள் அரச செலவில் அடக்கம்

வவுனியா பொது வைத்தியசாலை சவச்சாலையில் வைக்கப்பட்டிருந்த அடையாளம் காணப்பட்டு உறவினர்களினால் பொறுப்பேற்காததும், அடையாளம் காணப்படாததுமான 56 உடல்கள் அரச செலவில் நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை 6.30 மணியளவில் அடக்கம் செய்யப்பட்டது.

மாவட்ட நீதிவானின் அனுமதியுடன் உடல்கள் பூந்தோட்டம் பொதுமயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு கனரக இயந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது என பொது வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

சுமார் இரண்டு வாரத்திற்கு மேலாக இந்த சடலங்கள் சவச்சாலையில் வைக்கப்பட்டிருந்தது.

4 இலட்சத்து 90 ஆயிரம் துப்பாக்கி ரவைகள், அதிகளவான ஆயுதங்கள் புதுமாத்தளனில் மீட்பு

udaya_nanayakkara_brigediars.jpg
முல்லைத்தீவு, புதுமாத்தளன் பிரதேசத்திலிருந்து 4 இலட்சத்து 90 ஆயிரம் துப்பாக்கி ரவைகள் உட்பட அதிசக்திவாய்ந்த வெடிபொருட்கள் மற்றும் பெருந்தொகையான ஆயுதங்களை பாதுகாப்புப் படையினர் மீட்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

புலிகளிடமிருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் பாரிய தேடுதல்களை மேற்கொண்டுவரும் படையினர் ஒரே இடத்திலிருந்து 4 இலட்சத்திற்கு மேற்பட்ட ரவைகள் உட்பட பெருந்தொகையான ஆயுதங்களை மீட்டெடுத்துள்ளமை இதுவே முதற்தடவையாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, முதலியார் கட்டுக்குளம் பிரதேசத்திலிருந்து எட்டு இலகு ரக விமானக் குண்டுகள் உட்பட 650 ரி-56 ரக துப்பாக்கி ரவைகளையும் படையினர் மீட்டெடுத்துள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார். புதுமாத்தளன், புதுக்குடியிருப்பு, அம்பகாமம், ஒலுமடு மற்றும் முதலியார் குளம் பிரதேசங்களில் படையினர் தொடர்ந்தும் தேடுதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இராணுவத்தின் 58வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா தலைமையிலான படையினர் புதுமாத்தளன் பிரதேசத்தில் மேற்கொண்ட பாரிய தேடுதல்களின்போது 130 மி.மீ. ரக கனரக பீரங்கி ரவுண்ட்கள் 10, எஸ்.ஏ-14 ரக ஏவுகணைகள் 2, 12.7 ரக பீரங்கிக் குழல்கள் 2, தற்கொலை அங்கிகள் 3, ரி-56 ரக துப்பாக்கிகள் 3, அதிசக்தி வாய்ந்த கிளேமோர் குண்டுகள் 2, அதிசக்தி வாய்ந்த வெடிமருந்துகள் பொருத்தப்பட்ட 60 மி.மீ. ரக குண்டுகள் 14, 60 மி.மீ. ரக புகைக் குண்டுகள் 7, பாவிக் கப்பட்ட ஏவுகணையின் வெற்றுக் கூடு 1, கைக்குண்டுகள் 14, ஆர்.பி.ஜி குண்டுகள் 23, ரி-56 ரக துப்பாக்கி ரவைகள் 250, 5.56 ரக துப்பாக்கி ரவைகள் 4 இலட்சத்து 90 ஆயிரம் (490,000), இயந்திரத் துப்பாக்கிகள் 2, அமுக்கவெடி 1, சார்ஜ் பேக்ஸ் 11, இயந்திரத் துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் ரவைகள் 500, தொலைத் தொடர்பு கருவிகள் 3, பவுச்சர்ஸ் 3 என்பவற்றை ஒரே இடத்திலிருந்து மீட்டெடுத்துள்ளனர். இதேவேளை இராணுவத்தின் மூன்றாம் படையணியினர் முதலியார் குளத்தில் வைத்து எட்டு இலகுரக விமானக் குண்டுகள் மற்றும் 650 ரி-56 ரக அம்யூனிசன்களையும் மீட்டுள்ளனர்.

இதேவேளை, படையணியினர் அம்பலகாமம் பகுதியில் நடத்திய தேடுதல்களின்போது இரண்டு ரி-56 தோட்டாக்கள், ஒரு 81 மில்லிமீற்றர் குண்டு, 37 ரி-56 ரவைகள், ஹெல்மட் 3 ஆகியவற்றையும் மீட்டுள்ளனர் என்றும் பிரிகேடியர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் யுத்த நிறுத்தம் ஏற்பட பிரிட்டன் வலியுறுத்தல்

front.jpgஇலங்கையின் வடக்கில் ஏற்பட்டுவரும் உக்கிர மோதல்கள் குறித்து தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ள பிரித்தானிய அரசு, அங்கே சிவிலியன்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த உடனடி யுத்தநிறுத்தமொன்று ஏற்படவேண்டுமென்று மீண்டும் வலியுறுத்தியிருக்கிறது.

இலங்கையில் போர் நிறுத்தம் வர வேண்டும் என்று பிரிட்டிஷ் அரசாங்கத்தோடு சேர்ந்து அமெரிக்கா பிரான்ஸ் உள்ளிட்ட பிற நாடுகளும் கோரிவருகின்றன என்றும் ஐ.நா.மன்றமும் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுவருகிறது என்று பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சரால் சனிக்கிழமை இரவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுத்தப் பிரதேசங்களில் சிக்குண்டுள்ள மக்களை விடுவிக்கும் நோக்கில் இலங்கை அரசுடனும் விடுதலைப் புலிகளுடனும் உடன்பாடொன்றை எட்டும் முயற்சியில் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் தற்போது ஈடுபட்டுள்ளது என்று குறிப்பிடும் அந்த அறிக்கை, இது தொடர்பில் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த ஐ.நா. தலைமை செயலரின் விசேட பிரதிநிதி விஜய் நம்பியார், தனது பயணம் குறித்த அறிக்கை ஒன்றை ஐ.நா.மன்றப் பாதுகாப்பு சபையில் விரைவில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கோரியுள்ளது.

இலங்கை குறித்து விவாதிக்க டேஸ் பிரவுண் அமெரிக்கா செல்கிறார்

இலங்கை தொடர்பில் ஐ.நா.மன்றத்தில் விவாதிக்க பிரிட்டிஷ் பிரதமரின் இலங்கைக்கான விசேட பிரதிநிதி டேஸ் பிரவுண் நியூயார்க் செல்வதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.  இலங்கையில் சமாதானம் ஏற்பட தன்னாலான சகல முயற்சிகளையும் பிரிட்டன் மேற்கொள்ளும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட தொலைபேசி பாவனை திடீரென்று பாதிப்பு

மன்னார் மாவட்டத்தில் கடந்த 09 மாதங்களுக்கு மேலாக கையடக்கத் தொலைபேசி மற்றும் இலங்கை ரெலிகொம் நிறுவனத்தினால் வழங்கப்பட்ட சி.டி.எம்.ஏ. தொலைபேசி போன்றவற்றின் செயற்பாடுகள் திடீரென இடை நிறுத்தம் செய்யப்பட்டிருந்தது.  இந்தச் செயற்பாட்டினால் மன்னார் மாவட்ட பாவனையாளர்கள் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் கடந்த 9 மாதங்களுக்கு மேலாக இடை நிறுத்தம் செய்யப்பட்டிருந்த மொபிட்டெல் கையடக்கத் தொலைபேசிச் சேவையின் இணைப்புக்கள் திடீரென வெள்ளிக்கிழமை மதியம் 12 மணியளவில் வழங்கப்பட்டிருந்தது.

இதன் போது பாவனையாளர்கள் தொலைபேசிச் சேவையை பெற்றுக் கொண்டனர். மொபிட்டெல் இணைப்பின் மீள் நிரப்பும் அட்டைகள் பல ஆயிரக்கணக்கான ரூபாவுக்கு மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மீண்டும் சனிக்கிழமை காலை 8 மணியளவில் தொலைபேசி இணைப்புகள் நிறுத்தப்பட்டது. இந்தச் செயற்பாட்டினால் மன்னார் மாவட்ட பாவனையாளர்கள் பெரிதும் ஏமாற்றத்திற்குட் படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாண சபையின் விசேட அமர்வுகள் இன்று நடைபெறாது

pillaiyan.jpgஅரசாங்கம் கொண்டு வந்துள்ள உத்தேச உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தைத் தொடர்ந்து நடத்துவதற்காக கிழக்கு மாகாணசபையின் விசேட அமர்வு முன்னர் அறிவிக்கப்பட்டபடி இன்று திங்கட்கிழமை (ஏப்ரல் 20 ) நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சட்ட மூலம் மீதான விவாதத்தை நடத்துவதற்காக மே மாதம் 12 ஆம் திகதியே கிழக்கு மாகாண சபையின் விசேட அமர்வு கூட்டப்படவிருப்பதாக மாகாணசபை செயலாளர் கு. தியாகலிங்கம் சனிக்கிழமை தெரிவித்தார்.

உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச் சட்டமூலம் மீதான ஒருநாள் விவாதம் வெள்ளிக்கிழமை காலை முதல் மாலை வரை கிழக்கு மாகாணசபையின் விசேட அமர்வில் இடம்பெற்றது. விவாத முடிவில் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் பேச்சை அடுத்து சட்டமூலத்தை ஏற்பதில்லை என்று சபை ஏகமனதான முடிவை எடுக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடைசி நிமிட திருப்பத்தின் காரணமாக சபையின் கூட்டத்தை ஏப்ரல் 20 வரை ஒத்திவைப்பதாக சபையில் தவிசாளர் அறிவித்தார். இந்த நிலையில் கிழக்கு மாகாண சபையின் விசேட அமர்வு மே 12 ஆம் திகதியே நடக்கும் என்றும் அப்போது திருத்தச் சட்டமூலம் மீதான விவாதம் நடக்கும் என்றும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது