2009

2009

ஓய்வு பெற்றுச் செல்லும் பிரதான பாதுகாப்பு அதிகாரி ஜனாதிபதியூடன் சந்திப்பு!

donald_perera.jpgதமது சேவையிலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் பிரதான பாதுகாப்பு அதிகாரி எயார் சீப் மார்ஷல் டொனால்ட் பெரேரா நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து கலந்துரையாடினார்.

அலரி மாளிகையில் இச்சந்திப்பு இடம்பெற்றது. எயார் சீப் மார்ஷல் டொனால்ட் பெரேராவின் சேவையை கௌரவிக்கும் முகமாக அவருக்கு ஜனாதிபதி நினைவுக் கேடயம் ஒன்றைப் பரிசளித்தார். 

மிஹின்-லங்கா இன்றுமுதல் திருச்சிக்கு புதிய சேவை

mihinlankaflight.jpgமிஹின்- லங்கா விமான நிறுவனம் கொழும்பிலிருந்து இந்தியாவின் திருச்சி நகருக்கான சேவையை இன்றுமுதல் ஆரம்பித்துள்ளது. வாரத்தில் நான்கு தடவைகள் திருச்சிக்கான போக்குவரத்தில் ஈடுபடவுள்ள மிஹின்-லங்கா விமான சேவையில் கத்தோலிக்க பக்தர்களின் வசதியைக் கருத்திற்கொண்டு புதிய சலுகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக விமான சேவைகள் பிரதி அமைச்சர் சரத் குமார குணரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று திருச்சிக்குச் செல்லும் விமானத்தில் பிரதி அமைச்சர் சரத் குமார குணரத்னவுடன் கத்தோலிக்க மத குருக்கள் மற்றும் பக்தர்கள் பயணம் செய்யவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் தங்கியிருந்த 37 குடும்பங்கள் இன்று மீள்குடியேற்றம!

உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக மூதூர் கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தங்கியிருந்த 37 குடும்பங்கைளச் சார்ந்தவர்கள் இன்று கிளிவெட்டியில் மீள் குடியேற்றப்பட்டனர். சத்துருக்கொன்டான் – இலக்கம் 02 முகாமில் கடந்த 3 வருடங்களாக தங்கியிருந்தவர்களில் நான்காவது தொகுதியினராக  37 குடும்பங்கைளச் சேர்ந்த 122 பேர் 7 பஸ் வண்டிகளில் வெருகல் ஊடாக கிளிவெட்டிக்கு அதிகாரிகளினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சுயவிருப்பத்துடனேயே இக்குடும்பங்கள் கிளிவெட்டி இடைத்தரிப்பு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பிட்ட உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக தமது இருப்பிடங்களை இழந்துள்ள குடும்பங்களில் 745 குடும்பங்களைச் சேர்ந்த 2565 பேர் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 11 முகாம்களிலும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளிலும் தங்கியிருந்தனர்.

அதிகாரிகளின் தகவல்களின் படி மட்டக்களப்பு மாவட்டத்தில் இது வரை பலாச்சோலை, மாவடிவேம்பு, கிரிமுட்டி ஆரையம்பதி ஆதிவைரவர் கோவிலடி முகாம் மற்றும் சத்துருக்கொன்டான் இலக்கம் -02 ஆகிய முகாம்கள் மூடப்பட்டு 4 கட்டங்களில் கடந்த யூன் 16 ஆம் திகதி முதல் 155 குடும்பங்களைச் சேர்ந்த 608 பேர் இது வரை அங்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்

அணிசேரா நாடுகளின் உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள ஜனாதிபதி இன்று எகிப்து பயணம்

mahinda-rajapa.jpgஅணிசேரா நாடுகளின் 15ஆவது உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று எகிப்துக்குச் செல்லவுள்ளார். இந்த உச்சிமாநாடு எகிப்தின் ஷாம் அல்-ஷேக் நகரில் நாளை ஆரம்பமாகவுள்ளது. இரண்டு நாட்களுக்கு நடைபெறவுள்ள இம்மாநாட்டின் நாளைய முதல் நாள் அமர்வில் ஜனாதிபதி உரையாற்றவுள்ளார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த மாநாட்டில் பங்குபற்றுவதற்காக எகிப்து செல்லவுள்ள ஜனாதிபதி தலைமையிலான இலங்கைக் குழுவில் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கொஹன மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் உட்பட சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

அபிவிருத்திக்கான சமாதானமும் சர்வதேச ஒருமைப்பாடும் எனும் தொனிப்பொருளில் நடைபெறவுள்ள இந்த உச்சிமாநாட்டில் உலகம் எதிர்நோக்கும் சவால்கள், பாதுகாப்பு, ஆயுதக் களைவு, சூழல் மாற்றம், மற்றும் மனித உரிமைகள் உட்பட பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பாக ஆராயப்படவுள்ளன.

இதேவேளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இம்மாநாட்டில் கலந்துகொள்ளும் அணிசேரா நாடுகளின் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதோடு, இலங்கையின் பயங்கரவாத ஒழிப்பு மற்றும் நாட்டின் சமகால நிலைவரங்கள் என்பன தொடர்பாக இச்சந்திப்புக்களின்போது அவர்களுக்கு விளக்கிக் கூறவுள்ளார் என்றும் வெளிவிவகார அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

அணிசேரா நாடுகள் அமைப்பில் 118 நாடுகள் அங்கத்துவம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் பாகிஸ்தானை வீழ்த்தியது இலங்கை அணி

srilanka-cri.jpg“பாகிஸ் தான் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 7 விக்கட்டுக்களால் வெற்றியீட்டியது. மூன்று நாட்களில் முடிவடைந்த இந்த டெஸ்ட் போட்டியில் 171 ஓட்டங்கள் எனும் இலகுவான வெற்றி இலக்கை நோக்கி தனது 2ஆவது இன்னிங்ஸக்காகத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 3 விக்கட் இழப்பிற்கு 174ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது

கிரிக்கெட் சுற்றுலா மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்குமிடையிலான இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்பு பீ. சரவணமுத்து மைதானத்தில் கடந்த 12ஆம் திகதி ஆரம்பமானது.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி ஈட்டிய பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. பாகிஸ்தான் அணி தனது முதலாவது இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 90 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. தொடர்ந்து தனது முதலாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி 240 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

தொடர்ந்து 150 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த பாகிஸ்தான் அணி 320 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது. இதில் பாகிஸ்தான் அணி சார்பில் தனது கன்னி டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் பவாட் அலாம் தனது கன்னி டெஸ்ட் செஞ்சரியைப் பெற்றார். பவாட் அலாம் பெற்ற ஓட்டங்கள் 168

ஒரு கட்டத்தில் 294 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்களை மாத்திரமே இழந்து வலுவான நிலையிலிருந்த பாகிஸ்தான் அணி இலங்கை அணி வீரர்களின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஏனைய 7 விக்கட்டுக்களையும் 26 ஓட்டங்களுக்குள் அடுத்தடுத்து இழந்தது.

இலங்கை அணி சார்பாக இரு இன்னிங்ஸிலும் சிறப்பாகப் பந்து வீசிய நுவன் குலசேகர மொத்தமாக 8 விக்கட்டுக்களை வீழ்த்தினார். இவரைத் தவிர இரண்டாவது இன்னிங்ஸில் சுழல் பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் 5 விக்கட்டுக்களைக் கைப்பற்றினார்.

171 ஓட்டங்கள் எனும் இலகுவான வெற்றி இலக்கை நோக்கி தனது 2ஆவது இன்னிங்ஸ{க்காகத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 3 விக்கட் இழப்பிற்கு 174ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. வர்ணபுர 54 ஓட்டங்களையும், குமார் சங்கக்கார 46 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கை அணி அதன் புதிய தலைவரான குமார் சங்கக்கார தலைமையில் தனது இரண்டாவது டெஸ்ட் வெற்றியைப் பெற்றுக்கொண்டதோடு இன்றைய போட்டியின் சிறப்பாட்டக்காரர்களாக பவாட் அலாம், நுவன் குலசேகர தெரிவானர்.

இரு அணிகளுக்குமிடையிலான 3 போட்டிகளைக்கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் 3 போட்டி எதிர்வரும் 20 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது

நமக்காக நாம் நிதியத்துக்கு அமெரிக்காவிலுள்ள இலங்கையர்கள் 5050 டொலர்; அன்பளிப்பு

பாதுகாப்புப் படைவீரர்களின் நலன்புரி விடயங்களுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள நமக்காக நாம்  நிதியத்துக்கு அமெரிக்காவிலுள்ள சமாதானத்துக்கான இலங்கையர்கள் எனும் அமைப்பு 5050 அமெரிக்க டொலர்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் நிவ் இங்லேன்ட் எனும் பகுதியில் வசிக்கும் இலங்கையர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட இந்த நிதி நேற்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது. சமாதானத்துக்கான இலங்கையர்கள் அமைப்பின் பிரதிநிதிகளான ரோஹன பெர்ணான்டோ மற்றும் சுஜீவ டி சில்வா ஆகியோர் இந்த நிதியை பாதுகாப்புச் செயலாளரிடம் கையளித்ததாக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

பங்ளாதேஷூக்கு வெளிநாட்டில் கிட்டிய முதல் டெஸ்ட் வெற்றி!

cricket.jpgகிரிக்கெட் உலகில் அந்நிய மண்ணில் முதல் டெஸ்ட் வெற்றியை பங்ளாதேஷ் பெற்றுள்ளது.

மேற்கிந்திய தீவுகளுக்கு கிரிக்கெட் சுற்று பயணம் மேற்கொண்டுள்ள பங்ளாதேஷ் அணி 2 டெஸ்ட,  3 ஒருநாள் போட்டி மற்றும் 1 டுவென்டி-20 போட்டிகளில் விளையாடி வருகிறது.

முதல் டெஸ்ட் போட்டி கிங்ஸ்டனில் நடந்தது. முதலில் களம் இறங்கிய பங்ளாதேஷ் அணி முதல் இன்னிங்சில் 238 ஓட்டங்கள் எடுத்தது. மேற்கிந்திய தீவுகள் அணி 302 ஓட்டங்கள் எடுத்தது.

இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த பங்ளாதேஷ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 321 ஓட்டங்கள் எடுத்து ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

அதனையடுத்து  களம் இறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 181 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் பங்ளாதேஷ் அணி 95 ஓட்டங்;கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பங்ளாதேஷ் அணி அந்நிய மண்ணில் பெறும் முதல் டெஸ்ட் வெற்றி இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது

இடம்பெயர்ந்தவர்களில் 60 வீதத்தினரை ஜனாதிபதி தேர்தலுக்கு முன் விடுவிப்பு – அமெரிக்க சஞ்சிகைக்கு ஜனாதிபதி தெரிவிப்பு

mahinda_raajapakse11.jpgயுத்த சுழ்நிலை காரணமாக இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் தங்கியுள்ள மூன்று இலட்சம் பேரில் குறைந்த பட்சம் 60 வீதமானவர்களை அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் அவர்களின் சொந்த இடங்களில் குடியேற்ற எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நம்பிக்கை தெரிவித்தார். அமெரிக்காவின் ரைம் சஞ்சிகைக்கு அளித்த பேட்டி ஒன்றின்போதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

பிரபாகரன் கொல்லப்பட்டதாக அறிந்ததும் இறைவனுக்கும் மும்மணிகளுக்கும் நன்றி தெரிவித்தேன். அது ஒரு வரம். பிரபாகரன் சுடப்பட்டார் என்பது மட்டும் தெரியும் ஆனால் எப்படி சுடப்பட்டார் என்பதில் ஆர்வம் காட்டவில்லை.

பிரபாகரன் தற்போது இல்லை என்பதே முக்கியமானது. அவரை இங்கு அழைத்துவந்து கதைக்க விரும்பினேன். நான் ஒரு போதும் அவரைப் பார்த்ததில்லை. சந்தித்திருந்தல் ஏன் இந்தப் பைத்தியக்காரத்தனம் எனக் கேட்டிருப்பேன். இதைத்தவிர வேறு எதைக் கேட்க முடியும்.

அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் குறுகிய மனப்பான்மை கொண்ட நாடுகள் எனக் கருதவில்லை. பயங்கரவாதத்தை அழிப்பதற்கு எமக்கு உற்சாகமளித்தவர்கள். ஜோர்ஜ் டப்ளியு புஷ்ஷை நாம் பின்பற்றினோம். அவர் விரும்பியதை நாம் நிறைவேற்றினோம். பயங்கரவாதத்தை அழித்த எங்களை அவர்கள் பாராட்ட வேண்டும்

மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் விபத்துக்குள்ளானார்.

jegath-dias.jpgமேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் நேற்றிரவு பொலிஸ் பார்க்குக்கு அருகே விபத்துக்குள்ளாகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ஜகத் டயஸின் காலில் காயங்கள் காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

இலங்கை – பாகிஸ்தான் இரண்டாவது டெஸ்ட் – பாகிஸ்தான் சகல விக்கட்டுகளையும் இழந்து 320 ஓட்டங்கள்

pakisthan-cri.jpg“இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் சகல விக்கட்டுகளையும் இழந்து 320 ஓட்டங்கள் பெற்றுள்ளது.

இதேவேளை இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 240 ஓட்டங்களைப் பெற்று பாகிஸ்தான் அணியை விட 150 ஓட்டங்கள் கூடுதலாகப் பெற்று இருந்தது. ஆனால் பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்சில் இலங்கை அணியை விட 170 ஓட்டங்கள் கூடுதலாகப் பெற்றுள்ளது. இப்போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற 171 ஓட்டங்கள் பெற வேண்டும்