2009

2009

ஸ்வைன்: இந்தியாவில் இதுவரை 102 பேர் மரணம்

10092009.jpgநேற்று இரவு பன்றி காய்ச்சலுக்கு புனேவில் இரண்டு பேரும், முசெளரியில் ஒருவரும் பலியானார்கள். இதையடு்த்து இந்தியா முழுவதும் பலியானவர்களின் எண்ணிக்கை 102 ஆக உயர்ந்துள்ளது. பன்றி காய்ச்சல் பாதிப்பு இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் நேற்று ஒரே நாளில் இந்தியா முழுவதும் சுமார் 128 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் உத்தர பிரதேத்தை சேர்ந்தவர்கள் 27 பேர். டெல்லி  22, தமிழகம்  21, கர்நாடகா  17, மேற்கு வங்கத்தில் 10 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தை சேர்ந்த 10 ஆயிரம் பேரை மீள்குடியேற்ற பாதுகாப்பு அனுமதி

idp tamilsவவுனியா, மன்னார் மாவட்ட நலன்புரி முகாம்களிலுள்ள யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 10 ஆயிரம் பேரை மீள் குடியேற்றுவதற்கான பாதுகாப்பு அனுமதி கிடைத்துள்ளதாக பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இவர்களின் பாதுகாப்பு அனுமதிக்கான விபரங்கள் கிராம அலுவலர்கள் மற்றும் பொலிஸார் மூலம் திரட்டப்பட்டு மீள் குடியேற்ற அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து இவர்களை யாழ். மாவட்டத்தில் மீளக் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மாவட்ட செயலகம் மேற்கொண்டு வருவதுடன் பொலிஸாரும் தமது நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளனர்.

போர்க்குற்றச்சாட்டு விசாரணை கோரிக்கை இலங்கை அரசாங்கத்தினால் நிராகரிப்பு

ExtraJudicialKillingsசனல் 4 தொலைக்காட்சி விவகாரத்தையடுத்து போர்க்குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று எழுந்துள்ள கோரிக்கைகளை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

“இலங்கையில் போர்க்குற்றச்சாட்டு தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை விசாரணை நடத்தவேண்டும் என்ற நோர்வேயின் கோரிக்கையையும் செனல் 4 விவகாரம் குறித்து இலங்கை சுயாதீன விசாரணை நடத்தவேண்டும் என ஐ.நா.வின் நிபுணர் ஒருவர் வலியுறுத்தியுள்ளதையும் முழுமையாக நிராகரிக்கின்றோம்” என்று மனித உரிமைகள் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

“மனித உரிமைகள் அமைச்சர் என்ற வகையில் செனல் 4 விவகாரம் தொடர்பில் இராணுவத் தளபதியிடம் விசாரித்தேன். இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் தனிப்பட்ட விசாரணை ஒன்றை நடத்தியதாகவும் அதன்மூலம் இவ்வாறான சம்பவம் ஒன்று இடம்பெறவில்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ தளபதி எனக்கு அறிவித்துள்ளார்” என்றும் குறிப்பிட்டார்.

“எதிர்வரும் 13 ஆம் திகதி நான் ஜெனீவாவுக்குச் சென்று செனல் 4 விவகாரம் தொடர்பில் சுயாதீன விசாரணையைக் கோரியுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் பிலிப்ஸ் அல்ஸ்டனைச் சந்தித்து இலங்கை அரசாங்கத்தின் ஆட்சேபனையை வெளியிடவுள்ளேன்” என்றும் அமைச்சர் சமரசிங்க கூறினார். இலங்கையில் போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை விசாரணை நடத்தவேண்டிய தேவை உள்ளதாக நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் அண்மையில் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு கடும் அதிருப்தியை வெளியிட்டிருந்தது. அதேவேளை, செனல் 4 விவகாரம் தொடர்பில் இலங்கை சுயாதீன விசாரணை நடத்தவேண்டும் என்று ஐ.நாவின் நிபுணர் பிலிப் அல்ஸ்டன் கோரிக்கையொன்றை விடுத்துள்ளார். இந்நிலையில் இந்த விவகாரங்கள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் மஹிந்த சமரசிங்க மேற்கண்ட விடயங்களை குறிப்பிட்டார்.

ஈராக்கிலிருந்து வெளியேற அமெரிக்கப் படைகள் ஆயத்தம்

us-army.jpgஈராக் அரசுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, இன்னும் ஓராண்டுக் காலத்திற்குள் வெளியேற வேண்டிய அமெரிக்கப் படைகள், அதற்கான பணியைத் தாம் ஆரம்பித்திவிட்டதாக அதன் தளபதிகளில் ஒருவர் தெரிவித்துள்ளார். ஈராக்கில் மறைத்து வைக்கப்பட்டுள்ள பேரழிவு ஆயுதங்களை வெளிக்கொணரப் போவதாகக் கூறியே அந்நாட்டின் மீது 2003ஆம் ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்கா படையெடுத்தது.

தனது நிலையில் இருந்து மாறிய அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஷ், ஈராக்கில் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதே தங்கள் நோக்கம் என்று கூறினார். அமெரிக்கப் படைகளிடம் பிடிப்பட்ட அந்நாட்டு அதிபர் சதாம் உசேன் நீதிமன்ற விசாரணை நடத்தப்பட்டுத் தூக்கிலிடப்பட்டார்.

ஈராக்கின் எண்ணெய்க் கிணறுகளைக் கைப்பற்றி, அவற்றை நிரந்தரமாக அமெரிக்காவின் பிடியில் கொண்டு வர அமெரிக்கா மேற்கொண்ட முயற்சியை, அதன் துணையுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அரசே முறியடித்துவிட்டது. அதே நேரத்தில் ஈராக்கில் நிலைபெற்ற அமெரிக்க படைகள் மீது அந்நாட்டு தீ்விரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தனர். ஈராக்கில் தீவிரவாதத்தை ஒழிப்பதாகக் கூறி அமெரிக்கா கடந்த ஆறரை ஆண்டுகளாக நடத்திய தாக்குதல்களில் 12 லட்சம் ஈராக்கியர்களே கொல்லப்பட்டனர். அமெரிக்கப் படையினர் 4,000 பேருக்கு மேல் பலியாகினர். இந்த நிலையில் அந்நாட்டில் இருந்து 2010ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் திகதிக்குள் வெளியேறுவது என்று அமெரிக்க அரசு, ஈராக் அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது.

அதன்படி, தனது படையணிகளைத் திரும்பப் பெறும் நடவடிக்கையைத் தாம் தொடங்கிவிட்டதாக அமெரிக்கப் படைத் தளபதிகளில் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ராடார்களில் இருந்து கனரக வாகனங்கள் மற்றும் ஆயுதங்கள் என்று 15 லட்சம் போர்க் கருவிகள் உட்பட ஒரு பெரும் படையை அங்கிருந்து மீண்டும் அமெரிக்கா கொண்டு செல்ல, பல நூற்றுக்கணக்கான கோடி டொலர்கள் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

எரிக் சொல்ஹெய்ம்மின் கூற்று தொடர்பில் சட்ட ரீதியாக நோர்வேயிடம் முறைப்பாடு

இலங்கையின் யுத்தக் குற்றம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை அவசியம் என்று நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளமை தொடர்பில் நோர்வே அரசாங்கத்திடம் சட்டரீதியாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக வெளியுறவு செயலாளர்  பாலித கோஹன தெரிவித்துள்ளார்.
 
இலங்கையில் அமைந்துள்ள நோர்வே தூதரகம் ஊடாக வார இறுதியில் இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் யுத்தக்குற்றங்கள் தொடர்பில் விசாரணை வேண்டும் என்று கோரியுள்ளமை துரதிஷ்டவசமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சொல்ஹெய்ம்மின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என்றும் வெளியுறவுச் செயலாளர் பாலித கோஹன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சொல்ஹெய்ம் தெரிவித்துள்ள இக்கருத்து தொடர்பாக வெளிவிவகார அமைச்சு ஏற்கனவே தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொலம்பிய ஜனாதிபதி பன்றிக் காய்ச்சலினால் பாதிப்பு

swine.jpgகொலம்பிய ஜனாதிபதி அல்வாரோ யூரிப் பன்றிக் காய்ச்சல் நோயினால் பீடிக்கப்பட்டுள்ளதாக அவரது பேச்சாளர் அறிவித்துள்ளார். ஜனாதிபதி அல்வாரோவிற்கு அவரது இல்லத்தில் வைத்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர் தமது கடமைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதகாவும் கொலம்பிய அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன..

ஆர்ஜன்டீனாவில் நடைபெற்ற தென் அமெரிக்க நாடுகளது தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு நாடு திரும்பிய போது அவருக்கு பன்றிக் காய்ச்சல் வைரஸ் தொற்றியிருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது..கொலம்பியாவில் மொத்தமாக 621 பேர் பன்றிக் காய்ச்சல் நோயினால் பீடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

திஸ்ஸாநாயகத்தை விடுவிக்ககோரி நீதிமன்ற முன்றலில் ஆர்ப்பாட்டம்

tissanayaga000.jpgபயங் கரவாதத் தடுப்புப் பிரிவினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜே.எஸ். திஸ்ஸநாயகம் வழக்கு விசாரணைகளுக்காக இன்று காலை கொழும்பு உயர் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட போது அங்கு வந்திருந்த ஊடகவியலாளர்கள் திஸ்ஸாநாயகத்தை விடுவிக்கக் கோரி முன்றலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். 

சந்திராயன்-1 திட்டம் நிறுத்தப்படுகிறது – மாதவன் நாயர்

29-chandrayaan.jpgசந்திர யான்-1 விண்கலத்தில் உள்ள கம்ப்யூட்டர்கள் முற்றிலும் செயலிழந்து போனதால்தான் அதிலிருந்து தரைக் கட்டுப்பாட்டுத் தளத்திற்கு எந்தவித சிக்னலும் வரவில்லை. கம்ப்யூட்டர்கள் செயல்படாத நிலையில், சந்திரயான்-1 திட்டத்தை தொடருவது சாத்தியமல்ல. எனவே அது முடித்துக் கொள்ளப்படுகிறது என்று இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார்.

ரூ. 400 கோடி மதிப்பீட்டிலான இந்தியாவின் முதலாவது நிலவுப் பயணத் திட்டமான சந்திரயான்-1 திட்டம் பெரும் ஆரவாரத்திற்கு மத்தியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22ம் தேதி நிறைவேற்றப்பட்டது. நிலவை நோக்கிய சந்திரயான்-1 விண்கலத்தின் பயணம் இந்திய மக்களின் மனதில் பெருமிதத்தையும், உற்சாகத்தையும் கொடுத்தது.

ஆனால் எதிர்பாராதவிதமாக சனிக்கிழமை அதிகாலையில், சந்திரயான்-1 விண்கலத்துக்கும், தரைக் கட்டுப்பாட்டுத் தளத்துக்கும் இடையிலான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது. இதனால் இந்தியர்கள்  அனைவரும் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இருப்பினும் சந்திரயான்-1 திட்டத்தின் பலனில் 95 சதவீதத்தை ஏற்கனவே எட்டி விட்டதாக விஞ்ஞானிகளும், இஸ்ரோவும் அறிவித்துள்ளனர். மேலும், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், சந்திரயான்-1 திட்டம் மிகப் பெரும் வெற்றிதான் என்று வர்ணித்துள்ளார்.

இந்த நிலையில் சந்திரயான் -1 திட்டத்தை முடித்துக் கொள்வதாக இஸ்ரோ தலைவர்  மாதவன் நாயர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

திஸ்ஸாநாயகத்திற்கு 20 வருட சிறைத்தண்டனை : உயர் நீதிமன்றம் தீர்ப்பு

tissanayaga000.jpgபயங்க ரவாதத் தடுப்புப் பிரிவினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜே.எஸ். திஸ்ஸாநாயகம் தொடர்பான வழக்கு விசாரணை இன்றைய தினம் உயர்நீதிமன்றத்தில் நடத்தப்பட்டது. வழக்கு விசாரணையையடுத்து உயர்நீதிமன்றம் அவருக்கு 20 வருட கால சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இலங்கையின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படும் வகையிலான ஆக்கங்களை ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறியே அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினால் கைது செய்யப்பட்ட திஸ்ஸாநாயகம், விசாரணைகள் ஏதுமின்றி மொத்தம் 426 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

tissanayagam333.jpg

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டம் கல்வி, சுகாதார, உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு ரூ.160 கோடி

mullai-ga.jpgகிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை வடக்கின் வசந்தம் 180 நாள் வேலைத் திட்டத்தில் துரிதமாகப் புனரமைக்கவென அரசாங்கம் 160 கோடி ரூபாவை ஒதுக்கியுள்ளது. இந்த நிதி தேசத்தைக் கட்டியெழுப்பும் அமைச்சு, வட மாகாண சபை மற்றும் அந்தந்தத் திணைக்களங்கள் ஆகியவற்றின் ஊடாக ஒதுக்கப்பட்டிருப்பதாக முல்லைத்தீவு அரசாங்க அதிபரும், கிளிநொச்சி பதில் அரசாங்க அதிபருமான இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.

இந்நிதி ஊடாக 180 நாட்களுக்குள் மேற்கொள்ளப்பட வேண்டிய சகல புனரமைப்பு வேலைகளையும் தாமதிமின்றி துரிதகெதியில் ஆரம்பிப்பதற்குத் தேவையான சகல அறிவுறுத்தல்களையும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ வழங்கியுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிதி ஒதுக்கீடு இவ்விரு மாவட்டங்களினதும், கல்வி, சுகாதாரம், மின்சாரம் பொது வசதிகள் உட்பட சகல துறைகளையும் மேம்படுத்தவென மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். இதன்படி இவ்விரு மாவட்டங்களினதும் புனரமைப்புக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் நிதி விபரம் வருமாறு, சுகாதார துறைக்கு 487.4 மில்லியன், மின்சாரத்திற்கு 451 மில்லியன், வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு கீழான வீதிகளுக்கென 122. 7 மில்லியன், வீதி அபிவிருத்தித் திணைக்களத்திற்குக் கீழான வீதிகளுக்கு 150 மில்லியன், உள்ளூராட்சி மன்றங்களுக்குக் கீழான உள்வீதிகளுக்கு 130. 12 மில்லியன், கல்வி துறைக்கு 90 மில்லியன், கமநல சேவைக்கு 51 மில்லியன், நீர்ப்பாசனத்துறைக்கு 65 மில்லியன், விவசாய அபிவிருத்திக்கு 36.3 மில்லியன், நன்னீர் மீன்வளப்பு துறைக்கு 26.2 மில்லியன், கூட்டுறவு துறைக்கு 37 மில்லியன், மாவட்டங்களின் நிர்வாக கட்டடத்திருத்த வேலைகளுக்கென 29.5 மில்லியன், பிரதேச செயலக கட்டிட திருத்த வேலைகளுக்கென 22.7 மில்லியன் என்றபடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பு துறைக்கென 11.6 மில்லியனும், தென்னை அபிவிருத்திக்கென 5.8 மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்திற்கென மகநெகும திட்டத்தின் கீழ் 20 மில்லியனும், தளபாடக் கொள்வனவுக்கென 12 மில்லியனும், சிறுவர் பராமரிப்புக்கு 6.6 மில்லியனும் உள்ளூராட்சி கட்டிடத் திருத்தத்திற்கு 12 மில்லியனும், விவசாயத் திணைக்களத்திற்கு 6 மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளது.