2009

2009

சரணடைந்த, கைதான புலி உறுப்பினர்களின் புனர்வாழ்வு நடவடிக்கைக்கு 20 நிலையம்

புலிகள் இயக்கத்திலிருந்து பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்த மற்றும் மனிதாபிமான நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்டவர்களின் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கென 20 புனர்வாழ்வு நிலையங்கள் புதிதாக நிறுவப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் தயாரத்னாயக்க நேற்றுத் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கின் பல்வேறு பிரதேசங்களில் இந்த 20 புனர்வாழ்வு நிலையங்கள் நிறுவப்படவுள்ளன.

ஐநூறு பேர் வீதம் 20 நிலையங்களில் இவர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்படவுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஷேட பணிப்பின் பேரில் தற்பொழுது பத்தாயிரம் பேருக்கும் உச்சகட்ட புனர்வாழ்வு வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். உறுப்பினர்களின் தனித்தனி விபரங்களை சேகரிக்கும் நடவடிக்கைகள் தற்பொழுது பூர்த்தி செய்யப்பட்டுள்ளது என்றும் இத ற்கு சுமார் மூன்று வாரங்கள் செலவிடப் பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

10 ஆயிரம் பேர்களில் 1777 பெண் உறுப்பினர்களும 565 பாடசாலை பருவ மாணவர்களும் அடங்குவர். இவர்களில் பாடசாலை செல்லும் வயதுடைய மாணவர்கள் தமது கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான சகல செயற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் தெரிவித்தார்.

தற்பொழுது 10 ஆயிரம் பேர்களும் 12 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவற்றில் நான்கு பாடசாலைகளாகும். இந்த பாடசாலைகளை கற்றல் நடவடி க்கைகளுக்காக வெகுவிரைவில் பொறு ப்புக் கொடுக்க வேண்டியுள்ளதால் தற்காலிகமாக 5 முகாம்கள் நிறுவப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த இவர்களது செயற்பாடுகளையும், சிந்தனைகளையும் முழுமையாக மாற்றியமைத்து சமாதான சிந்தனையுடன் வாழ தேவையான வகையில் உச்சகட்ட புனர்வாழ்வு வழங்குவதே பிரதான நோக்கம் என்றும் மேஜர் ஜெனரல் தயா ரத்னாயக்க குறிப்பிட்டார்.

பெருந்தொகையானவர்களுக்கு இது போன்ற புனர்வாழ்வு வழங்கப்படுவது உலகிலேயே இதுவே முதற் தடவை என்று குறிப்பிட்ட அவர் பயங்கரவாதத்தை முறியடித்து அரசாங்கம் முன்னெடுத்து வரும் இதுபோன்ற திட்டங்களை பாராட்டும் வகையில் உலகின் பல நாடுகள், முன்னணி அமைப்புக்கள் ஒத்துழைப்புக்களை வழங்க முன்வந்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.

ஷெல், லாப் காஸின் விலைகள் அதிகரிப்பு

shellgas.jpgகாஸ் விலை நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. “ஷெல் காஸ்’ 103 ரூபாவினாலும் “லாப் காஸ்’ 69 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டிருப்பதாக அந்த நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இதனடிப்படையில், ஷெல் காஸ் சிலிண்டர் ஒன்றின் புதிய விலை 1550 ரூபா என்றும் இந்த அதிகரிப்பு நேற்று  நள்ளிரவு முதல் அமுலுக்கு வருவதாகவும் ஷெல் காஸ் நிறுவனத்தின் தலைவர் வேஹகபிட்டிய தெரிவித்துள்ளõர்.

இதேவேளை, லாப் காஸ் சிலிண்டர் ஒன்றின் புதிய விலை 1476 ரூபா என அந்நிறுவனத்தின் நிதிப்பணிப்பாளர் ரிமோய்ன் சல்டின் தெரிவித்தார்.

நீதிமன்ற உத்தரவின்படி உலக சந்தையில் ஏற்படுகின்ற விலை மாற்றங்களுக்கு ஏற்ப இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவை உள்ளூரின் காஸ் விலைகளை நிர்ணயம் செய்ய முடியும். இவ்விலை நிர்ணயத்தின்படி சமையலுக்காக பாவிக்கப்படுகின்ற காஸின் விலைகளை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இறுதியாக கடந்த ஜூலை மாதம் முதலாம் திகதி காஸ் சிலிண்டர்களின் விலை நிர்ணயத்தின் அடிப்படையில் ஷெல் காஸ் 53 ரூபாவினால் குறைவடைந்த அதேவேளை லாப் காஸின் விலை 100 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

வாஸின் மகன் உட்பட ஐவர் அடையாளம் காணப்பட்டனர்

nimal_madiwaka.jpgமாலபே தகவல் தொழில் நுட்பக் கல்லூரி மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நேற்று நடத்தப்பட்ட அடையாள அணிவகுப்பில் வாஸ் குணவர்தனவின் மகன் உட்பட ஐவர் அடையாளம் காணப்பட்டி ருப்பதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிமல் மெத்திவக்க கூறினார்.

கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் வாஸ் குணவர்தனவின் மகன் மேற்குறிப்பிட்ட கல்லூரி மாணவனான நிபுண என்பவரை சில பொலிஸ் அதிகாரிகளின் உதவியுடன் கடத்திச் சென்று தாக்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் வாஸ் குணவர்தனவின் மனைவி, மகன் மற்றும் 14 பொலிஸ் அதிகாரிகள், பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு அதன் பின் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பாசிக்குடா சுற்றுலாத்துறை அபிவிருத்தி : உள்ளூர் மீனவர் விசனம்

srilanka_passikuda.jpgஇலங் கையின் கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையில் பிரபல்யம் பெற்றுள்ள பாசிக்குடா கடலோரப் பிரதேசத்தில் சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்ய மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளினால் தமக்கு தொழில் ரீதியாகப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் மீனவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

பல வருடங்களாக மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டு வந்த மீனவர்களை அந்த இடங்களிலிருந்து வெளியேறுமாறு தற்போது அதிகாரிகள் அறிவித்துள்ள நிலையிலேயே மீனவர்கள் இது தொடர்பான தமது கவலையை வெளியிட்டுள்ளனர்.

இதன் காரணமாக கல்குடா பகுதியைச் சேர்ந்த குடும்பங்களில் 99 சதவீதமான குடும்பங்கள் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக கல்குடா மீனவர் சங்கத் தலைவர் மயில்வாகனம் சுந்தரராஜா தெரிவித்தார்.

பன்றிக்காய்ச்சல்: தென்கிழக்கு ஆசிய அமைச்சர்கள் கூட்டம்

swine.jpgஇந்தியா, பாகிஸ்தான், நேபாளம் உட்பட 11 தென் கிழக்கு ஆசிய நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் மற்றும் உலக சுகாதார நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்கும் கூட்டம் காட்மாண்டுவில் வரும் 7ஆம் தேதி தொடங்குகிறது.

செப்டம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் பன்றிக்காய்ச்சல் தொற்று நோய் பாதிப்பு, அதனைத் தடுக்க எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்ட சுகாதார பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

தட்ப வெப்பநிலை மாற்றத்தால் மனிதனுக்கு ஏற்படும் சுகாதார பிரச்சினைகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. தென் கிழக்கு ஆசிய உலக சுகாதார நிறுவனத்தின் மண்டலக் குழுக் கூட்டமும் அப்போது நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

500 பாடசாலைகளில் கணனி கூடங்களை அமைக்க நடவடிக்கை -கல்வி அமைச்சு தீர்மானம்

susil_premajayant000.jpgநாடெங் கிலுமுள்ள 500 பாடசாலைகளில் கணனி கூடங்களை அமைக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

2009 ஆம் ஆண்டு ஆங்கிலம் மற்றும் தகவல் தொழில்நுட்ப வருடமாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு ஆயிரம் கணனி கூடங்களை அமைக்க கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதன்படி முதற்கட்டமாக 500 கணனி கூடங்கள் அமைக்கப்பட வுள்ளன. யாழ்ப்பாணம், திருகோணமலை, மன்னார், வவுனியா மாவட்டங்களிலும் கணனி கூடங்களை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திலுள்ள 23 பாடசாலைகளிலும், வவுனியாவிலுள்ள 4 பாடசாலைகளிலும், மன்னாரிலுள்ள 2 பாடசாலைகளிலும் இக் கணனி கூடங்கள் அமைக்கப்படும். மாத்தறையில் 27, காலியில் 30, கம்பஹாவில் 12, கண்டியில் 38, களுத்துறையில் 17, குருனாகலையில் 21, அநுராதபுரத்தில் 29, பதுளையில் 27, ஹம்பாந்தோட்டையில் 17, கேகாலையில் 25, புத்தளத்தில் 15, மட்டக்களப்பில் 17, மாத்தளையில் 12, நுவரெலியாவில் 8, பொலன்னறுவையில் 19, மொனராகலையில் 14, திருகோணமலையில் 15, அம்பாறையில் 13, இரத்தி னபுரியில் 25 அமைக்கப்பட வுள்ளதாக கல்வி அமைச்சு கூறியது.

இலங்கை ராணுவத்தின் போர்க்குற்றங்கள்: பட்டியலிட்டு காட்டுகிறது அமெரிக்கா

1111srilanka_army.jpgவன்னியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை ராணுவம் நடத்திய தாக்குதல்களின் போது இடம்பெற்ற போர்க் குற்றங்கள் குறித்து அமெரிக்காவின் போர்க் குற்றங்கள் தொடர்பான அலுவலகம் அறிக்கை ஒன்றைத் தயாரித்து வருகின்றது.  செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி அந்த அறிக்கை வெளியிடப்படும் எனத்தெரிகிறது.

இறுதிப் போரின்போது 20 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளக அறிக்கைகளை மேற்கோள்காட்டி லண்டனில் இருந்து வெளிவரும் ‘ரைம்ஸ்’ நாளேடு செய்தி வெளியிட்டிருந்தது.

ஏப்ரல் மாதம் இறுதிவரை 6 ஆயிரத்து 500 பொதுமக்கள் உயிரிழந்தமை ஐக்கிய நாடுகள் சபையால் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர் மே மாதம் 19 ஆம் நாள் வரை நாள்தோறும் சுமார் ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபையின் ரகசிய உள்ளக அறிக்கைகள் தெரிவிப்பதாக ‘ரைம்ஸ்’ கூறியது.  உயிரிழப்புக்கள் அநேகமாக ராணுவத்தின் எறிகணைத் தாக்குதல்களாலேயே ஏற்பட்டன எனவும் ‘ரைம்ஸ்’ நாள் ஏடு கூறியிருந்தது.

கண்களும் கைகளும் கட்டப்பட்டு, ஆடைகள் களையப்பட்ட தமிழ்க் கைதிகள் படையினரால் சுட்டுக்கொல்லப்படும் காணொலிக் காட்சிகள் அண்மையில் பிரித்தானியாவின் ‘சனல் – 4’ நிறுவனத்தால் வெளியிடப்பட்டிருந்தது. இலங்கையின் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு இந்தக் காணொலியை வழங்கியிருந்தது. இவை அனைத்தும் சிங்களப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கான உறுதியான சான்று ஆதாரங்களாக அனைத்துலக மனித உரிமை அமைப்புக்களால் சுட்டிக்காட்டப்படுகின்றது.

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஆராய்வதற்காக கடந்த மே மாதம் 26, 27 ஆம் நாட்களில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சிறப்பு கூட்டத் தொடர் கூட்டப்பட்டது.  எனினும் இதில் இலங்கைக்கு எதிராக எந்தவித தீர்மானங்களும் நிறைவேற்றப்படவில்லை. இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய பலம் வாய்ந்த நாடுகளின் துணையுடன் தனக்கு எதிரான முயற்சியை கொழும்பு வெற்றிகரமாக தடுத்திருந்தது.

போரின் கடைசிக் காலப் பகுதியில் ராணுவத்தினர் மற்றும் விடுதலைப் புலிகளால் பெருமளவில் மனித உரிமை மீறல்கள் மேற்கொள்ளப்பட்டன எனக் குற்றம் சாட்டிய 90 அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள் இந்த கூட்டத் தொடருக்கு அழைப்பு விடுத்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.  மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று விடுக்கப்படும் கோரிக்கைகளை ஏற்க  அரசு தொடர்ந்து மறுத்து வருகின்றது. போரில் வெற்றி பெற்றவர்களுக்கு எதிராக அத்தகைய விசாரணைகள் நடத்தப்படுவதில்லை என அது கூறிவருகின்றது.  இத்தகைய நிலையிலேயே இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து அமெரிக்க போர்க் குற்றங்கள் தொடர்பான அலுவலகம் அறிக்கை தயாரித்து வருகின்றது.

இந்த அறிக்கையில் இறுதிப் போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் குறித்த பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ராணுவம் மற்றும் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் தொடர்பாக ஆதாரபூர்வமான பல தகவல்களை இந்த அறிக்கை வெளியிடும் என மனித உரிமை ஆர்வலர்களும் ஊடகவியலாளர்களும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

புல்மோட்டை இடைத்தங்கல் முகாம் மக்கள் துயரங்களுக்கு மத்தியில்

இலங்கையின் வடக்கே யுத்த காலத்தில் இடம்பெயர்ந்து திருகோணமலை மாவட்டம் புல்மோட்டை இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருப்பவர்களைப் பார்வையிட தற்போது இராணுவத்தினரால் உறவினர்களுக்கு அனுமதியளிக்கப்பப்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

போர்க்காலத்தில் கடல் வழியாக புல்மோட்டையை வந்தடைந்த சுமார் 6000 பேர் இரண்டு நலன்பரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

கடந்த காலங்களில் இந்த நிலையங்களில் தங்கியிருப்பவர்களைப் பார்வையிட தங்களுக்கு அனுமதியளிக்கப்படவில்லை என்று கூறும் உறவினர்கள் தற்போது அனுமதியளிக்கப்படுவதாகத் தெரிவிக்கின்றனர்.

அங்கு சென்று தனது மகனைப் பார்வையிட்டு மட்டக்களப்பு திரும்பிய தாயொருவர் அந்த நிலையத்தில் தங்கியிருப்பவர்கள் பலவேறு சிரமங்களை எதிர் நோக்குவதை தன்னால் அறிய முடிந்ததாகக் கூறுகின்றார்.

வவுனியா இடைத்தங்கல் முகாம்கள் பற்றியே பலரும் ஆர்வம் காட்டுவதாக தனது கவலையை வெளிப்படுத்தியுள்ள அவர், புல்மோட்டை நலன்புரி நிலையம் தொடர்பாக எவரும் அக்கறை கொள்வதாக இல்லை என்றும் வருத்தம் தெரிவித்தார்.

குடியேற்ற பிரச்சனை: பிரிட்டனில் 470 சிறுவர்கள் கைது

britain.jpgஇந்த ஆண்டில் குடியுரிமை ஆவணங்கள் இல்லாமல் பிரிட்டன் வந்தவர்களில் 470 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜிம்பாப்வே, சூடான், இலங்கை போன்ற நாடுகளை சேர்ந்த ஏழை குடும்பங்கள் பிரிட்டனில் தஞ்சம் அடைகின்றன. இதில் பெரும்பாலானோர் முறையான குடியுரிமை ஆவணங்கள் வைத்திருப்பதில்லை. இவர்கள் குடியுரிமை அதிகாரிகளால் கைது செய்யப்படுகின்றனர்.

கடந்த ஜூன் 30ம் தேதி நிலவரப்படி, இந்த ஆண்டில் குடியுரிமை இல்லாமல் பிரிட்டன் வந்தவர்களில் 470 சிறுவர்கள் தங்களது குடும்பத்தினருடன் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் லண்டன் விமானம் நிலையம் வந்து இறங்கியதும் கைது செய்யப்பட்டனர்.

இதில் பெரும்பாலான சிறுவர்கள் 5 வயதுக்கும் குறைவானவர்கள். இவர்களில் மூன்றில் ஒரு பங்கு சிறுவர்கள் 28 நாட்களுக்கும் அதிகமாக சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த ஜூன் மாதத்தில் 225 பேர் விடுதலை செய்யப்பட்டு விட்டனர். 100 பேர் பிரிட்டனில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டனர். லண்டனில் இருந்து வெளியாகும் நாளிதழ் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

ஊவா மாகாண சபையின் முதல் அமர்வு நாளை

5வது ஊவா மாகாண சபையின் முதலாவது அமர்வு நாளை பதுளையில் அமைந்துள்ள ஊவா மாகாண சபை கேட்போர் கூடத்தில் ஆரம்பமாகவுள்ளது.

ஊவா மாகாண ஆளுநர் நந்தா மெதியூ தலைமையில் இடம்பெறும் இவ்விசேட நிகழ்வில் ஊவா மாகாண சபைத் தலைவர், சபை முதல்வர், ஆளும் கட்சியின் பிரதம கொறடா ஆகியோர் தெரிவு செய்யப்படவுள்ளனர்.