2009

2009

தோட். தொழிலாளர் சம்பள உயர்வு பேச்சு நேற்றும் இணக்கப்பாடின்றி முடிவு – மீண்டும் இன்று கொழும்பில் பேச்சுவார்த்தை

080909teawomen.jpgதோட்டத் தொழிலாளர்களின் ஒரு நாட் சம்பளத்தை 500 ரூபாவாக அதிகரிப்பது தொடர்பாக 7வது தடவையாக நேற்று நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையும் இணக்கப்பாடின்றி முடிவடைந்துள்ளது.

முதலாளிமார் சம்மேளனத்துக்கும் கூட்டு தொழிற்சங்கங்களுக்கு மிடையில் நேற்று மாலை நடைபெற்ற பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி முடிவுக்கு வந்ததையடுத்து ஒத்துழையாமை போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க கூட்டுத் தொழிற்சங்கங்கள் தீர்மானித்திருப்பதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் இளைஞர் வலுவூட்டல் சமூக பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

இராஜகிரியில் உள்ள சம்மேளன அலுவலகத்தில் நேற்று பிற்பகல் 4.30 மணிக்கு ஆரம்பமான இந்தப் பேச்சுவார்த்தை தொடர்ந்து சுமார் ஒரு மணித்தியாலங்கள் வரை நீடித்தது. இப்பேச்சுவார்த்தையில் முதல் வருடத்தில் ஒரு நாள் சம்பளத்தை 330 ரூபாவிலிருந்து 360 ரூபாவாக அதிகரித்துத் தருவதாக முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்தது.

இருப்பினும், அதற்கு கூட்டுத் தொழிற்சங்கங்கள் இணங்காமையினால் இந்தப் பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாக செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

எமது கோரிக்கைபடி ஒரு நாட்சம்பளத்தை 500 ரூபாவாக அதிகரிக்கும்வரை முதலாளிமார் சம்மேளனத்தின் எந்தவொரு தீர்மானத்துக்கும் இணங்கப் போவதில்லையென தெரிவித்த அமைச்சர் தோட்டத் தொழிலாளிகளுக்கு 500 ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுக்க முடியுமென்ற நம்பிக்கையிருப்பதாகவும் கூறினார்.

இதேவேளை, இன்று 11 ஆம் திகதி காலை 11 மணிக்கு முதலாளிமார் சம்மேளனத்துடன் மீண்டும் எட்டாவது தடவையாக பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுடன் கூட்டுத் தொழிற்சங்கம் சார்பில் கே. வேலாயுதம், பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம், இரா. யோகராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தோட்டத் தொழிலாளிகளின் ஒத்துழையாமை போராட்டம் நேற்றும் 09வது நாளாக முன்னெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சில தோட்டங்களில் தொழிலாளர்கள் சம்பள அதிகரிப்புக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதோடு, முதலாளிமாருக்கெதிராக கோஷங்களையும் எழுப்பினர்.முதலாளிமாருக்கும், தொழிற் சங்கங்களுக்கும் இடையிலான கூட்டு ஒப்பந்தம் கடந்த மார்ச் மாதம் 31ம் திகதியுடன் காலாவதியானது. இரண்டு வருடங்களுக்கொரு தடவை இந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கையடக்கத் தொலைபேசி மூலம் ரயில் ஆசனப் பதிவு – அமைச்சரவை அங்கீகாரம்

mobile-phone.jpgசெலியூலர் தொலைபேசியினூடாக ரயில் ஆசனப் பதிவுகளை மேற்கொள்ளக்கூடிய புதிய நடைமுறையொன்று அமுல்படுத்தப்படவுள்ளது. மொபிடெல் செலியூலர் தொலைபேசி சேவையினூடாக ஆசனப்பதிவு மேற்கொள்வதற்கு வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன.

மொபிடெல் நிறுவனத்துடன் இதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது. போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும இது தொடர்பாக சமர்ப்பித்திருந்த அமைச்சரவை பத்திரத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் அனுரபிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

ரயில் ஆசனம் ஒன்றைப் பதிவு செல்ல வேண்டுமாயின் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னர் ரயில் நிலையத்திற்கு நேரடியாக சென்று பதிவு செய்துகொள்ள வேண்டும். இந்தியா போன்ற நாடுகளில் ஆசனப் பதிவுகள் செலியூலர் தொலைபேசியினூடாக செய்யப்படுகின்றன. இதேபோன்று தூர இடங்களுக்குச் செல்லும் பயணிகள் ரயில் நிலையத்திற்கு செல்லாமலேயே தமது கையடக்கத் தொலைபேசியினூடாகப் பதிவு செய்து கொள்ள முடியும்.

நிலையியற் கட்டளைச் சட்டத்தில் திருத்தம்

26parliament.jpgபாராளு மன்றத்தினூடாக நிதி ஒதுக்கப்படுகின்ற எனினும், கணக்காய்வாளர் நாயகத்தினால் கணக்காய்வுக்கு உட்படுத்த முடியாத நிறுவனங்களை “பொது நிறுவனங்கள் பற்றிய பாராளுமன்ற தெரிவுக்குழுவின் முன் ஆஜர்படுத்தும் வகையில் பாராளுமன்ற நிலையியற் கட்டளைச் சட்டத்தில் திருத்தங்களை செய்வதற்கு சபையில் நேற்று இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

பொது நிறுவனங்கள் பற்றிய பாராளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவர் அமைச்சர் ஜோன் செனவிரட்ன ‘கோப்’ பற்றிய அறிக்கையொன்றை சமர்ப்பித்துப் பேசினார். இதனைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சையையடுத்தே சபையில் மேற்படி இணக்கம் தெரிவிக்கப்பட்டது

பொது நிறுவனங்கள் பற்றிய பாராளுமன்ற தெரிவுக்குழுவின் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படும் சில நிறுவனங்களை கணக்காய்வாளர் நாயகத்தினால் கணக்காய்வுக்கு உட்படுத்த முடியாது என்பது பற்றியும் ஜே.வி.பி. எம்.பி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். அத்துடன் ஐ.தே.க பாராளுமன்ற உறுப் பினர்களான தயாசிரி ஜயசேக்கர, ரவிகருணாநாயக்க ஆகியோரும் ‘கோப்’ குழு வில் கலந்து கொண்டன நபர்கள் என்ற வகையில் கருத்துக்களை தெரிவித்தனர்.

2008 டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்ற பொது நிறுவனங்கள், தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாகவும் ஆனால் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு நேர் எதிரான கருத்துக்கள் பின்னர் ஊடங்களில் வெளிவந்ததாகவும் அமைச்சர் ஜோன் செனவிரட்ன குறிப்பிட்டார்.

பத்திரிகை பேரவையொன்றை அமைக்க வேண்டும். அதுவும் ஒரு மாதத்தினுள்ளேயே இதனை அமைக்க வேண்டும் எனக் கூறியவர்கள் பின்னர் அதற்கு எதிராக பேசிக் கொண்டிருக்கின்றனர் என அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை கம்பனிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களை கணக்காய்வாளரின் கணக்காய்வுக்குட்படுத்த சட்டத்தில் வழிவகைகள் செய்யப்படவில்லை என்று கோப் கூட்டத்தில் பேசப்பட்டதாகவும் சபையில் நேற்று தெரிவிக்கப்பட்டது.

கோப் தலைவர் அமைச்சர் ஜோன் செனவிரட்ன அனுரகுமார திஸாநாயக்க, ரவி கருணாநாயக்க, தயாசிறி ஜயசேக்கர ஆகியோருக்கிடையே விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது சபாநாயகர் வி.ஜே.மு. லொக்குபண்டார தலையிட்டு மேற்படி பாராளுமன்றத்தினால் நிதி ஒதுக்கப்படுன்ற நிறுவனங்களை கணக்காய்வாளரின் கணக்காய்வுக்கு உட்படுத்தும் வகையில் கோப் முன்னிலையில் ஆஜர்படுத்து வதற்கென பாராளுமன்ற நிலையியற் கட்டளைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு சபையில் இணக்கமா? என கேள்வி எழுப்பினார். இதற்கு சபையிலுள்ளோர் இணக்கத்தை தெரிவித்தனர்.

இன்று கணிசமான எண்ணிக்கையினரை சொந்த இடங்களுக்கு அனுப்ப ஏற்பாடு

101009displacedidps.gifவவுனியா விலுள்ள நிவாரணக் கிராமங்களிலும் நலன்புரி நிலையங்களிலும் தங்கியுள்ள யாழ்ப்பாணம், மன்னார், திருமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த ஒரு தொகுதியினர் இன்று 11ஆம் திகதி அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். இது தொடர்பான வைபவம் வவுனியா நகர சபையின் கலாசார மண்டபத்தில் நடைபெறவிருக்கி ன்றது.

வவுனியா நிவாரணக் கிராமங்களிலும், நலன்புரி நிலையங்களிலும் இருந்து இன்று விடுவிக்கப்படும் மக்களை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்குரிய போக்குவரத்து வசதிகளை இடம்பெயர்ந்தவர்களுக்கான சர்வதேச அமைப்பு ஏற்பாடு செய்திருப்பதாக வவுனியா அரசாங்க அதிபர் அலுவலக அதிகாரியொருவர் நேற்று கூறினார்.

இவர்களுக்கு உணவு வசதியைச் செய்து கொடுப்பதற்கு யு. என். எச். சி. ஆர். நிறுவனம் முன் வந்துள்ளது எனவும் அவர் கூறினார்.

இன்று விடுவிக்கப்படுபவர்களைப் பொறுப்பெடுப்பதற்காக அந்ததந்த மாவட்ட அரசாங்க அதிபர்களின் பிரதிநிதிகள் வவுனியாவுக்கு வருகை தந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி பொதுமன்னிப்பு ‘முன்டாசர்’ திங்கள் விடுதலை

1099images.jpgகடந்த ஆண்டு டிசம்பரில் பாக்தாதில் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் மீது பாதணிகளை வீசி பிரபலமடைந்த இராக் நாட்டு பத்திரிகை நிருபர் முன்டாசர் அல் ஜெய்திக்கு கார், வீடு,  பணம் என பல்வேறு பரிசுப் பொருள்களை தரத் தயார் என்று ஏராளமானவர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

புஷ் மீது பாதணி வீசிய குற்றத்துக்காக அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு இராக் நீதிமன்றம் ஒன்று 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.  ஜனாதிபதி; பொதுமன்னிப்பு வழங்கியதால் அவர் அடுத்த திங்கள்கிழமை விடுதலை ஆகிறார். அவர் விடுதலை ஆகப்போகும் செய்தி எட்டவே ஏராளமானோர் அவருக்கு வெகுமதி தருவதற்காக காத்திருக்கின்றனர்.  இதற்காக பலர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுகின்றனர்.  இந்த தகவலை தி கார்டியன் பத்திரிகை தெரிவித்துள்ளது.

நிருபர் இதற்கு முன்பு வேலை செய்த நிறுவனத்தின் அதிபர் 4  படுக்கை அறை வசதி கொண்ட வீட்டை கட்டிமுடித்து அவருக்கு அதை இனாமாக வழங்க தயாராக உள்ளாராம். இதுதவிர கார் போன்றவையும் அவருக்கு கொடுப்பதற்கு தயார் நிலையில் உள்ளன. மேலும் அவர் வேலைசெய்த பத்திரிகை அலுவலகத்துக்கு நிறைய பேர் தொடர்பு கொண்டு பணம் தருகிறேன்,  அவரது உடல்நலம் பேண மருத்துவ செலவை ஏற்கிறேன் என்றெல்லாம் தெரிவித்துள்ளனர்.

மொராக்கோவில் வசித்துவந்த இராக்கியர் ஒருவர் முன்டாசர் திருமணம் செய்துகொண்டு உல்லாசமாக இருக்க தனது மகளையே தருகிறேன் என்று தெரிவித்துள்ளாராம். சவூதியிலிருந்து தொடர்பு கொண்ட மற்றொரு நபர் முன்டாசரின் ஷ_க்களுக்காக 1 கோடி டாலர் பணம் தருகிறேன் என்று உறுதி அளித்துள்ளாராம்.

ஆனால் இதையெல்லாம் நம்பிவிடமுடியாது.  புஷ் மீது ஷ_ வீசப்பட்ட உடன் எத்தனையோ பேர் தொடர்புகொண்டு இது தருகிறேன் அது தருகிறேன் என வாய் நிறைய பேசினார்கள். சொன்னதோடு சரி. இப்போதும் இந்த வார்த்தைகளை நம்பிவிட முடியாது.  என்ன நடக்கிறது என்று பார்ப்போம் என்றார் பத்திரிகை ஆசிரியர் அப்துல் ஹமீத்

சிறையிலிருந்து விடுதலையாக உள்ள முன்டாசர் இனி பத்திரிகையாளர் வேலைக்குப் போகத் தயாராக இல்லை என்பது மட்டும் தெரிகிறது. அவர் அநாதைகள் இல்லம் ஆரம்பிக்கப் போகிறாராம். இந்த தகவலை தமது இரு சகோதரர்களிடம் முன்டாசரே தெரிவித்துள்ளார

கள்ள நோட்டு தயாரித்த 3 பெண்களுக்கும் விளக்கமறியல்

1000mony.jpgகெக்கிராவ பிரதேசத்தில் சுமார் ஐந்து இலட்சம் ரூபா கள்ள நோட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பெண்கள் மூவரையும் எதிர்வரும் (23) ஆம் திகதி வரை விளக்கமறி யலில் வைக்குமாறு கெக்கிராவ மாவட்ட நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய பெண்களை நேற்று முன்தினம் (09) ஆம் திகதி கெக்கிராவை பொலி ஸார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போதே நீதவான் மேற்படி உத்தரவைப் பிறப் பித்தார்.

கள்ளநோட்டு தொடர்பான விசாரணைகளை இரகசியப் பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது.

கெக்கிராவை நகரம் உட்பட ஏனைய பிரதேசங்களிலும் கள்ள நோட்டு மக்கள் புழக்கத்தில் உள்ளதால் பொதுமக்கள் விழிப்பாக இருக்குமாறும் இது சம்பந் தமான தகவல்கள் கிடைக்கப் பெற்றால் பொலிஸ் நிலையத்திற்கு வழங்கு மாறு கெக்கிராவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கபில அபேநாயக்க தெரிவித்தார்.

அரச ஊழியர்களுக்கு சலுகை விலையில் கையடக்கத் தொலைபேசி

mobile-phone.jpgஅரச ஊழியர்களின் வசதிக்காக அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும்  பல சலுகைத் திட்டங்களின் அடிப்படையில் சலுகை விலைக்கு அரச ஊழியர்களுக்கு  கையடக்கத் தொலைபேசிகளை பெற்றுக்கொள்ள ஏற்பாடு nசய்யப்பட்டுள்ளதென வர்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரச ஊழியர்களுக்கான விசேட சலுகை விலையில் சம்சுங் கையடக்கத் தொலைபேசிகளை வழங்கும் திட்டத்தை அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தில் நேற்று ஆரம்பித்து வைத்து உரை நிகழ்த்திய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து அவர் கூறுகையில்.

அரசாங்கத்தின் இந்தத்திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்க உலகில் தொலைபேசி தொழில் நுட்பத்தில் இரண்டாம் இடத்திலுள்ள சம்சுங் நிறுவனம் முன்வந்துள்ளமை வரவேற்கத்தக்க ஒன்றாகும். இத்திட்டத்தின் ஊடாக சலுகை விலைக்கு தொலைபேசிகளை கொள்வனவு செய்வதற்கு அரச ஊழியர்களுககு கடனுதவி வழங்க தேசிய சேமிப்பு வங்கி முன்வந்துள்ளது.

இதேவேளை இந்தத்திட்டத்தை அரச வர்த்தக கூட்டுத்தாபனம்
மேற்கொள்வதுடன் இதன் மூலம் அரச ஊழியர்களுக்கு பல சலுகைகளும் வழங்கப்படுகின்றன.

சுந்தையில் நிலவும் விலையை விடக் குறைந்த விலைக்கு பொருள் கிடைப்பது. கொள்வனவு செய்யும்போது அதனை முற்றாகப் பரிசோதித்து கொள்வனவு செய்யலாம். உத்தரவாதச் சாண்றிதழ் ஒன்றும் வழங்கப்படுகிறது. மேலும் இவ்வாறு விநியோகிக்கப்படும் கையடக்கத் தொலை பேசிகளின் திருத்த வேலைக்கு என விசேட அலகு ஒன்றும் நிருவப்பட்டுள்ளது.

மொபிடெல் உபஹார பெற்றுள்ள அரச ஊழியர்களுக்கு இத்திட்டத்தின் ஊடாக மேலும் பல சலுகைகளும் வழங்கப்பட உள்ளன.

கொஹன்னே, அர்ஜுனவுக்கு பிரிட்டிஷ் விசா வழங்கப்பட்டன

26parliament.jpgபாராளு மன்ற உறுப்பினர் அர்ஜுன ரனதுங்க மற்றும் ஐ.நா.வதிவிடப் பிரதிநியாகப் பதவியேற்றுச் செல்லவுள்ள கலாநிதி பாலித கொஹன்னே ஆகியோருக்கு பிரிட்டன் விசா வழங்கியுள்ளதாக வெளி விவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம நேற்றுப் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி. தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். விசா மறுக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தியை முற்றாக மறுப்பதாகத் தெரிவித்த அமைச்சர், மேற்படி விசா கிடைத்துள்ளதாகத் தெரிவித்தார்.

வவுனியா ந. ச: புளொட் உறுப்பினர் சத்தியப் பிரமாணம்

vavuniya-plote_MCMsவவுனியா – நகர சபைக்கு தெரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) உறுப்பினர்கள் மூவரும் நேற்று வியாழன் காலை 10 மணியளவில் வைரவ புளியங்குளத்தில் உள்ள மாவட்ட அலுவ லகத்தில் சமாதான நீதவான் வி. எஸ். தேவராசா முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.

உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட ஜி.ரி. லிங்கநாதன், எஸ். குமாரசாமி, கே. பார்தீபன் ஆகியோரே சத்தியப் பிரமாணம் செய்து கொண்டவர்களாவர். தேர்தலில் போட்டியிட்ட புளொட் அமைப்பின் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் இந்த வைபவத்தில் கலந்து கொண்டனர்.

நடைபெற்ற நகர சபைத் தேர்தலில் சுயமாகவும் தனித்துவமாகவும் நாங்கள் போட்டியிட்ட போது மூன்று உறுப்பினர்களை தெரிவு செய்த வவுனியா நகர வாக்காளர்களுக்கு முதலில் நாம் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டவர்கள்.  இந்த சபை நிர்வாகம் எங்களுக்கு கிடைக்காத போதிலும் மக்களுக்கு வழங்க வேண்டிய சேவைகளை செய்வோம். மக்களுடைய நலனில் முழு அக்கறை கொண்டு புதிய சபை நிர்வாகம் எடுக்கின்ற அனைத்து முயற்சிகளுக்கும் நாம் எதிர்க்கட்சியிலிருந்து பூரண ஒத்துழைப்பினை வழங்குவோம்.

நகரத்தின் தேவைகள், குறைபாடுகள் செய்யப்பட வேண்டிய அபிவிருத்திகள் தொடர்பாக மக்கள் எமக்கு தெரியப்படுத்தினால் அதன் மூலம் மக்களுக்குரிய சேவைகளை செய்ய முடியும் என சத்தியப்பிரமாண வைபவத்தின் பின்னர் உரையாற்றிய உறுப்பினர் லிங்கநாதன் தெரிவித்தார்.

புளொட் வன்னி மாவட்ட அமைப்பாளர் க. சிவநேசன், வவுனியா மாவட்ட அமைப்பாளர் எஸ். கண்ணன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

அர்த்தம் தெரியாமல் ரணில் கூட்டாட்சி பற்றிப் பேசுகிறார் – அமைச்சர் அநுர யாப்பா

anura_priyadarshana_yapa.jpg‘கூட்டாட்சி அரசு உருவாக வேண்டும்’ என்பதன் தெளிவான விளக்கத்தை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வழங்க வேண்டுமென ஊடகத்துறை அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா நேந்றுத் தெரிவித்தார்.

ஐ. தே. க. வின் 63 ஆவது மாநாடு நடைபெற்ற போது அதில் கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க புத்த பெருமானை மேற்கோள்காட்டி இலங்கையில் கூட்டாட்சி
(Confederation) அரசு உருவாக வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

ஒற்றையாட்சியில் மட்டுமே எமது அரசு நம்பிக்கை கொண்டுள்ள நிலையில் கூட்டாட்சி ஒரு போதும் இலங்கைக்கு சாத்தியப்படாது. இவ்வாறு இவர் கூறியதன் நோக்கம் என்ன? 2002 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட உடன் படிக்கையை மனதில் வைத்துக்கொண்டுதான் இவர் இவ்வாறான கூற்றை தெரிவித்திருக்கிறாரா?

மிகவும் பாரதூரமான கூற்றை எதிர்க்கட்சித் தலைவர் கூறியிருக்கிறார். இதற்கு சரியான விளக்கத்தை அவர் வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். கூட்டாட்சி அரசு என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகள் ஒன்றிணைந்து ஏற்படுத்திக்கொள்ளும் அரச நிர்வாக முறையாகும்.

உலகில் இது சாத்தியப்படமாட்டாது என்பதும் தெளிவாகியுள்ளது. சோவியட் யூனியன் போன்ற நாடுகள் கூட்டாட்சி அரசு முறையிலிருந்து விடுபட்டுச் சென்றுவிட்டன என்றும் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா மேலும் தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று பாராளுமன்ற கட்டடத் தொகுதியின் குழு அறையில் நடைபெற்ற போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்