2009

2009

கண்ணிகளை துரிதமாக அகற்ற மேலும் 5 நவீன இயந்திரங்கள் – குரேஷியாவிலிருந்து இறக்குமதி; வடக்கு ஆளுநர் பொறுப்பேற்பு

மக்களை மிக விரைவாக மீளக்குடியமர்த்துவதற்கு ஏதுவாக நிலக்கண்ணிவெடிகள், மிதிவெடிகளை அகற்றும் பணிகளை துரிதப் படுத்தும் நோக்கில் மேலும் ஐந்து தன்னியக்க இயந்திரங்கள் விமானம் மூலம் இலங்கைக்கு நேற்று கொண்டுவரப்பட்டன.

கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கொண்டுவரப்பட்ட ஐந்து இயந்திரங்களையும் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி பொறுப் பேற்றார். மணிக்கு 2700 சதுர மீற்றர் நிலப்பரப்பில் மிதிவெடிகள், கண்ணிவெடிகள் அகற்றும் ஆற்றலைக் கொண்ட மேற்படி இயந்திரங்கள் ஒவ்வொன்றும் தலா ஐந்து தொன் எடை கொண்டவையென்றும் 270 மில்லியன் ரூபா பெறுமதி வாய்ந்தவை எனவும் ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி மேலும் தெரிவித்தார்.

குரேஷியாவிலுள்ள டொன்கின் என்ற நிறுவனத்தில் கொள் முதல் செய்யப்பட்டுள்ளதுடன் எம்.வி-4 ரக இயந்திரங்கள் என்பதாலும், மிகவும் கடினமான இரும்பு தகடுகள் பொருத்தப்பட்டுள்ளதாலும் எவ் வகையான மிதிவெடி, கண்டிவெடிகளாக இருப்பினும் தாக்குப் பிடிக்கக் கூடியதாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய பசில் ராஜபக்ஷ எம்.பியின் வழிகாட்டலுடன் மிகவும் துரிதமாக மக்களை மீளக்குடியமர்த்துவதற்கு ஏதுவாக மிதிவெடிகள், கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த 4ம் திகதியும் ஸ்லோவேக்கியா நாட்டிலிருந்து பொய்கா ரக இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டன.

அவற்றை விட இவை சிறியவை என்பதால் மக்கள் குடியிருப்புகள், ஏரிக் கரைகள், கிணற்றடி, வயற்காணிகள் போன்ற பகுதிகளில் மிதிவெடிகளை மிக எளிதாக அகற்ற முடியும் என்றும் ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்தார். இந்த இயந்திரங்களுக்குரிய உதிரிப்பாகங்களும் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நிலத்தில் சுமார் 30 சென்றி மீற்றர் ஆழம் வரை ஊடுருவி மிதிவெடிகளை அகற்றும் ஆற்றலும் இந்த இயந்திரத்துக்குள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

யூவான் அல்மெய்தா காலமானார்

130909.jpgகியூப புரட்சியின் முக்கியமான ஆரம்பகட்டத் தலைவர்களில் ஒருவரான யூவான் அல்மெய்தா இதய நோயால் காலமாகியுள்ளார். அவருக்கு வயது 82.

கியூபாவின் துணை அதிபரான யூவான் அல்மெய்தா, ஃபிடல் மற்றும் ராவூல் காஸ்ட்ரோவுடன் இணைந்து புரட்சியின் ஆரம்பகாலங்களின் போது போராடியிருந்தார்.

இந்த போராட்டத்தின் முடிவாக ஃபல்கேன்சியோ பாட்டிஸ்டாவின் அரசாங்கம் 1959 ஆம் ஆண்டு ஆட்சியில் தூக்கி எறியப்பட்டது.

ஹவானாவை சேர்ந்த கட்டிட தொழிலாளியான யூவன் அல்மெய்தா, புரட்சியாளர்கள் தலைமை பீடத்தில் இருந்த ஒரே கறுப்பினத்தவர் ஆவார்

ஊழல் அதிகாரிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யோசனை

ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட அரசு அதிகாரிகள், சட்டவிரோதமாக சேர்த்த சொத்துக்களைப் பறிமுதல் செய்ய சட்டம் கொண்டுவர வேண்டும் என்று யோசனை தெரிவித்துள்ளார் இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன்.

பொதுமக்களின் பணத்தில் அரசு அதிகாரிகள் சொத்து சேர்த்தால், அதை பறிமுதல் செய்ய அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என்று தலைமை நீதிபதி கருத்துத் தெரிவித்தார்.

ஊழல் ஒழிப்புத் தொடர்பான கருத்தரங்கு ஒன்றில் பேசும்போது, தலைமை நீதிபதி இந்தக் கருத்தை வலியுறுத்தினார். அதேபோல், ஊழல் குற்றம் சாட்டப்பட்ட முக்கியப்புள்ளிகள் மீது வழக்குத் தொடர்வதற்கு அனுமதியளிப்பதில் தேவையற்ற காலதாமதம் ஏற்படுவதாகவும் அவர் கவலை தெரிவித்தார்.

சிறப்பு நீதிமன்றங்கள் பற்றாக்குறையால், ஏற்கெனவே 9 ஆயிரம் வழக்குகளை முடிவுக்குக் கொண்டுவர முடியாமல் ஊழல் தடுப்பு அமைப்புக்கள் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. அந்த நிலையில், வழக்குத் தொடர அனுமதியளிப்பது மற்றும் பெருமளவு சாட்சிகளை கொணர்வது ஆகியவற்றில் ஏற்படும் தேவையற்ற காலதாமதம் ஆகியவை, ஊழல் வழக்குகளில் முறையான தண்டனை பெற்றுத் தருவதற்கு பெரும் தடையாக உள்ளன என்று தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் கவலை வெளியிட்டார்.

மட்டு. மேற்கு எல்லையில் சட்டவிரோத குடியேற்றங்கள் : இரா.துரைரத்தினம் குற்றச்சாட்டு

120909thurairatnam.jpgமட்டக் களப்பு மாவட்டத்தின் மேற்குப்புற எல்லையில் வெளி மாவட்டத்தவர்களின் சட்டவிரோத குடியேற்றங்கள் இடம் பெறுவதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரத்தினம் குற்றம் சுமத்தினார். மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட எல்லையிலுள்ள கெவிலியாமடு கிராமத்திலேயே இக்குடியேற்றம் இடம்பெறுவதாக அவர் கூநினார்.

கொக்கட்டிச்சோலை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட இக்கிராமத்தில் ஏற்கனவே வசித்து வந்த குடியிருப்பாளர்களும் விவசாயிகளும் 1990ஆம் ஆண்டு தமது பாதுகாப்பின் நிமித்தம் வெளியேறினர்.  இப்படி வெளியேறியவர்கள் மீள் குடியேற்றத்திற்கும், மீண்டும் விவசாயச் செய்கையில் ஈடுபடுவதற்கும் தயாராகி வரும் நிலையில் இந்த சட்ட விரோதக் குடியேற்றம் இடம் பெறுவதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

அந்த இடத்தைத் தாம் பார்வையிடச் சென்றிருந்த போது, பிரதேச செயலாளர் வாசுகி அருள்ராஜாவும் அங்கு வந்திருந்ததார் எனவும், இது தொடர்பாக கெவிலியாமடு காவல்துறை நிலைய பொறுப்பதிகாரியிடம் முறைப்பாடு ஒன்றை பிரதேச செயலாளர் செய்துள்ளார் என்றும் தெரிவித்தார்.  மட்டக்களப்பு மாவட்ட எல்லைக்குட்பட்ட காணியில் சுமார் 40 கொட்டில்கள் சட்ட விரோதமான முறையில் அத்துமீறி அமைக்கப்பட்டுள்ளதைத் தன்னால் அவதானிக்க முடிந்ததாகவும் அவர் தெரிவித்தார்

கிராம அபிவிருத்திக்கு கிழக்கில் முன்னுரிமை கிழக்கு மாகாண முதலமைச்சர் தகவல்

கிராமங்களை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தித் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக ஆராயும் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பேதே அவர் இவ்வாறு கூறினார். முதலமைச்சர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

எமது மாகாணம் பல காலமாக யுத்தத்தின் கோரப் பிடியிலிருந்த ஒரு மாகாணம் என்பதால்,  முழுமையான அபிவிருத்தியினை உடனடியாக எதிர்பார்க்க முடியாது. கட்டம் கட்டமாகவே அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

அபிவிருத்தி என்பது ஒரு போதும் எம்மைத் தேடி வராது. நாம் தான் அதனைத் தேடிப் போக வேண்டும். அப்போதுதான் நாம் எமது பிரதேசங்களை வெகு விரைவாக அபிவிருத்தி செய்ய முடியும் என முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ஆசிரியர்களின் ஆங்கிலக் கல்வி வளர்ச்சிக்கு தனியார் நிறுவனங்களின் உதவி!

susil_premajayant000.jpgஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்களின் ஆங்கில அறிவை அபிவிருத்தி செய்ய தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார். 2009 ஆம் வருடத்தை ஆங்கிலம் மற்றும் தகவல் தொழில்நுட்ப வருடமாக பிரகடனப்படுத்தி உள்ளதால் மாணவர்களின் ஆங்கிலக்கல்வி மேம்பாட்டைக் கருத்தில் கொண்டே இந்தத்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

இத்திட்டத்தின் ஓர் அங்கமாக இலங்கைக்கான பிரித்தானியா உயர்ஸ்தானிகராலயம் மூலம் ஆங்கில ஆசிரியர்களுக்கான பயிற்சிநெறி ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தற்போது இத்திட்டம் ஆறு மாவட்டங்களுக்கு விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஒன்றரை வருடத்துக்குள் நாடளாவிய ரீதியில் 3500 கணணி ஆய்வுகூடங்களை அமைக்க உள்ளதாகவும் வடக்கு மற்றும் கிழக்கில் மின்சார வசதி இல்லாத பகுதிகளில் சூரியசக்தி மூலம் இயங்கும் நிலையங்களை அமைக்கவும் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்

ரூ. 287 கோடியில் அரசாங்க ஆஸ்பத்திரிகள் புனரமைப்பு

அரசாங்க ஆஸ்பத்திரிகள் அனைத்தையும் அடுத்த வரு டம் (2010) புனரமைத்து நவீனப்படுத்துவதற்கு அரசா ங்கம் முடிவு செய்துள்ளது.

சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் இத் திட்டத்திற்கு 287 கோடி ரூபாவை வழங்குவதற்குத் திறைசேரி இணக்கம் தெரிவித்துள்ளது.

இத் திட்டத்தின் கீழ் மத்திய மற்றும் மாகாண அரசாங்க நிர்வாகங்களின் கீழுள்ள சகல ஆஸ்பத்திரி களும் புனரமைத்து நவீனமயப்படுத்தப்படும் என்று அமைச்சின் அதகாரி யொருவர் நேற்றுத் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ் ஆஸ்பத்திரிகளின் கட்டடங்கள் புனரமைத்து நவீனமயப்படுத்தப்படும். அவசியமான மரு த்துவ உபகரணங்களும் கொள்வனவு செய்து கொடுக்க ப்படும். ஆனால் புதிதாகக் கட்டிடங்கள் ஆஸ்பத்திரிகளில் நிர்மாணிக்கப்படமாட்டாது என்றும் அவர் கூறினார்.

அதன்படி மத்திய அரசின் கீழுள்ள 37 அரசாங்க ஆஸ்பத்திரிகள் உட்பட 1100 மருத்துவ மனைகள் புனரமைத்து நவீனப்படுத்தப்படவிருக்கின்றன

என் மீது வீண் பழி சுமத்துகிறார்கள் – வைகோ

“விடுதலைப் புலிகளிடம் இருந்து நான் பணம் பெற்றதாக சுப்ரமணியசுவாமி கூறியிருக்கும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை. என் மீது வீண் பழி சுமத்துகிறார்கள்” என்று வைகோ கூறினார்.

அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:  இன எதிரிகள் நம்மைக் கடுமையாக விமர்சித்தால் நாம் சரியான பாதையிலேயே செல்கிறோம் என்று தந்தை பெரியார் கூறியிருக்கிறார்.

சிங்கள அரசும், தமிழினத் துரோகிகளும் என் மீது பழி சுமத்தும்போதுதான் அவர்கள் எம்மீது எவ்வளவு ஆத்திரத்தில் இருக்கிறார்கள் என்பதும் எமது லட்சிய உறுதியும் நிரூபணமாகிறது. விடுதலைக்காகப் போராடும் அவர்களிடம் காசு வாங்குவது என்பது உலக அரங்கிலேயே பெரிய ஈனச் செயலாக இருக்கும்.

“சீறிவரும் சிங்கத்தை எதிர்த்தால் அது பெருமைக்குரிய போராட்டமாகவே இருக்கும். அருவருக்கத்தக்க அசிங்கத்தில் புரளும் பிராணி வரும்போது, ஒதுங்கிக் கொள்வது மேலானது” என்று பழந்தமிழ்ப் பாடல்கள் சொல்கின்றன. இதுதான் என்னுடைய வாதம்.

அமெரிக்க மனிதாபிமான தமிழ் பணியாளருக்கு இந்தியா செல்ல விஸா மறுப்பு

இலங்கை அரசாங்கத்தை மனித உரிமை மீறல்கள் தொடர்பில்  விமர்சிப்பவரும், அமெரிக்க மனிதாபிமான பணியாளருமான, கலாநிதி எலைன் சந்தர், இந்தியாவுக்கு செல்ல அமெரிக்காவில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம், விசா வழங்க மறுத்துள்ளது. இவர் எதிர்வரும் 20 ஆம் திகதி புதுடில்லியில் நடைபெறவுள்ள தமிழ்ச் சங்க கூட்டத்தில் உரையாற்றவிருந்தார்.

இதற்கு முன்னர் அவர் பெங்களுரில் 15 ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளுர் தமிழ்ச் சங்க கூட்டத்திலும் அவர் பங்கேற்கவிருந்தார். புதுடில்லியில் நடைபெறவிருந்த கூட்டத்தில் அவர் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக செயலாளர் வைகோ சகிதம் பங்கேற்கவிருந்தார்.

இந்தநிலையில் இவரின் விசா மறுக்கப்பட்டமையை, சென்னையை மையமாகக் கொண்ட அரசியல்வாதியும் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கணவருமான நடராஜன் கண்டித்துள்ளார். நடராஜன் சென்னை, பெங்களுர், கோயம்புத்தூர், மதுரை மற்றும் புதுடில்லி ஆகிய இடங்களில் சந்தரை பேச்சாளராகக் கொண்ட கூட்டங்களை ஏற்பாடு செய்திருந்தார்.

சந்தர், இலங்கையில், தமது சொந்த மக்களையே முகாம்களில் தடுத்து வைத்திருக்கும் இலங்கை அரசாங்கத்தை விமர்ச்சித்திருந்தார். வைத்திய கலாநிதி சந்தர்,இலங்கையில் தமிழ் மக்கள் தமது தாயகப் பூமியில் வாழ்வதற்கு தமது ஆதரவை வழங்கி வருகிறார்.

இலங்கை அரசின் அடுத்த குறி, உருத்ரகுமாரன்? “அது ஒன்றும் அவ்வளவு சுலபம் இல்லை என்கிறார் அமெரிக்க அதிகாரி” : ஜூனியர் விகடன்

120909rudrakumaaran_v.jpgகுமரன் பத்மநாதனைக் கைது செய்த கையோடு தங்கள் அடுத்த இலக்கு நியூயோர்க்கில் இருந்து கொண்டு தமிழ் ஈழ அரசு பிரகடனம் செய்த வழக்கறிஞர் உருத்திரகுமாரன்தான் என்று இலங்கை அரசு பகிரங்கமாக அறிவித்துள்ளது
 
இந்தியாவிலிருந்து வெளிவரும் விகடன் நிறுவனத்தாரின் வார இதழான ஜூனியர் விகடன் சஞ்சிகையில் மேற்கண்டவாறு தகவல் வெளியாகியுள்ளது.

அதில் தொடர்ந்து குறிப்பிட்டிருப்பதாவது:-

கே.பி-‘யை தலைவராக அறிவித்து பிரபாகரன் மறைவுக்குப் பிறகு உலக அளவில் ஈழத்தமிழர்களை தன் நாவன்மையால் வசீகரித்தவர் உருத்திரகுமாரன். ‘இனி ஆயுதம் வேண்டாம்; அமைதிப் பேச்சு வார்த்தையே தமிழ் ஈழத்தைப் பெற்றுத் தரும்!’ என்று கூறி இந்தியாவிடமும் நேசக்கரம் நீட்டினார்.

ஐக்கிய நாடுகள் சபையிலும், சர்வதேச கிரிமினல் கோர்ட்டிலும் இலங்கை அரசின் முகத்திரை கிழியக் காரணமாக இருந்தவரே இந்த உருத்திரகுமாரன். எனது உயிருக்கு எந்த நேரமும் ஆபத்து வரலாம்!” என்று அமெரிக்க அரசின் உயர் அதிகாரிகளிடம் கூறியிருக்கிறார்.

உருத்திரகுமாரனை உயிருடன் பிடிக்க இலங்கை அரசின் தீவிரவாதத் தடுப்புத் துறை பொலிஸார், இராணுவ அதிகாரிகள் குழு அமெரிக்கா சென்றுள்ளது. கே.பி. ஸ்டைலில் அலேக்காக அவரை இலங்கைக்கு தூக்கிச் சென்று புலிகளின் சர்வதேசத் தொடர்புகளை விசாரிக்கத் திட்டமாம்.

‘கே.பி.’ மீது பல்வேறு ஊழல் குற்றச் சாட்டுகள் எழுந்ததால், கடைசி காலகட்டங்களில் அன்ரன் பாலசிங்கத்தின் அபிமானத்தைப் பெற்ற உருத்திரகுமாரனைத்தான் பிரபாகரன் வெகுவாக நம்பி வந்தார். புலம்பெயர்ந்த நாடுகளின் ஈழத் தமிழர்களை ஒருங்கிணைக்கும் பணியும் கொடுக்கப்பட்டது.

வழக்கறிஞரான உருத்திரகுமாரன் தன் கூர்மையான வாதத்திறனால் புலிகளின் மீது அமெரிக்க அரசு விதித்திருந்த தடையை நீக்கப் போராடியும் வந்தார். அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் எதிர்க்கட்சி மற்றும் ஆளுங்கட்சி காங்கிரஸ் மகாசபை உறுப்பினர்களைச் சந்தித்து அவர்களை தமிழ் ஈழத்துக்கு ஆதரவாகவும் இலங்கை அரசின் ஜனநாயகப் படுகொலை பற்றியும் ஆதாரங்களுடன் பேசி அவர்களை மசிய வைத்தார். இதில் தொடங்கி ஹிலாரி கிளிண்டன் அதிபர் ஒபாமா வரை தமிழ் ஈழம் பற்றி பேசுமளவு செய்ததில் இவருக்கு முக்கியப் பங்கு உண்டு என்று கூறப்படுகிறது.

சமீப காலமாக கனடா, ஐரோப்பிய நாடுகளில் அடிக்கடி விஜயம் செய்து நாடு கடந்த தமிழ் ஈழம் ஆதரவாக மக்களைத் திரட்டியும் வந்தார். இது இலங்கைக்கு பெரும் குடைச்சலைக் கொடுத்து வந்தது. உருத்ராவை எப்படியாவது பிடித்துப் போட்டுவிட்டால்… புலிகளே இல்லாமல் செய்து விடலாம் என்று கணக்குப் போட்ட இலங்கை அரசு அவரைக் கைது செய்ய தனிப்படையே அமைத்தது.

இது பற்றி அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரிகளிடம் பேசியதில், ”அது ஒன்றும் அவ்வளவு சுலபம் இல்லை…” என்று கூறினார்கள். ”அமெரிக்கா ஒன்றும் மலேசியா இல்லை. இங்கு சட்டதிட்டங்களே வேறு. முதலில் ஓர் அமெரிக்க பிரஜையைக் கைதுசெய்ய சர்வதேச வாரண்ட் வேண்டும். அவர்மீது வழக்குப் பதிவாகி நீதிபதியின் தீர்ப்பு நகலை முதலில் தரவேண்டும். முக்கியமாக அந்நாட்டுடன் ‘நாடு கடத்தப்படுவதற்கான ஒப்பந்தம்’ (EXTRADITION TREATY) அமுலில் இருக்கவேண்டும். இலங்கையிடம் அமெரிக்காவுக்கு அப்படி ஒரு ஒப்பந்தமோ வாக்குறுதியோ இல்லை.

கே.பி. கைது வேறு கதை! அவர் இண்டர்போல் அமைப்பினால் தேடப்பட்ட சர்வதேசக் குற்றவாளி. ஆகவே, மூன்று நாடுகளைக் கடந்து கடத்திப் போக முடிந்தது. எங்களுக்குத் தெரிந்த வரை உருத்திரகுமாரன் மீது எவ்வித வழக்கும் இருப்பதாகத் தெரியவில்லை. அவரை கைது செய்வதானால் முதலில் எங்கள் அனுமதி பெறவேண்டும். அமெரிக்காவின் தனிமனித சுதந்திரம் மிகவும் போற்றப்படக் கூடியது!” என்று கூறினார்கள்.

உருத்திரகுமாரனின் நடவடிக்கைகளை அமெரிக்க அரசே கூட மிகத் தீவிரமாகக் கண்காணித்து வந்தாலும், அவர் மீது தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் இல்லை. இவ்வளவுக்கும் நியூயோர்க் மாநகரில் பிரபாகரன் படம், புலிக்கொடி ஏந்தி பத்தாயிரம் ஈழத்தமிழர்களை வைத்துப் பேரணியைப் நடத்தியவர் உருத்திரகுமாரன்.

உருத்திரகுமாரனையும் சேர்த்து நான்கு தலைவர்களை இலங்கை அரசு ‘கைது’ செய்யத் திட்டமிட்டுள்ளது. அவர்கள் லண்டனில் வாழும் அடேல் பாலசிங்கம், கலிபோர்னியாவில் வாழும் ஜெயந்தா டொனால்டு ஞானக்கோன் மற்றும் ஐரோப்பாவிலுள்ள காஸ்ட்ரோ ஆதரவாளரான நெடியவன்.

அன்ரன் பாலசிங்கத்தின் மறைவுக்குப் பிறகு அவர் மனைவி அடேல், பல்வேறு குழுக்களாக உள்ள தமிழ் ஈழத் தலைவர்களை தனது அன்பினால் தாயைப்போல் உரிமையுடன் கண்டித்து ஒருங்கிணைத்தார். லண்டனில் எந்த ஆர்ப்பாட்டம் என்றாலும் முதலில் நிற்பார். இவரது சக்தி வெள்ளையர்களை புலிகளின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது.

ஞானக்கோன் ஒரு விமான பைலட். முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கவின் நெருங்கிய நண்பர். கலிபோர்னியாவில் வாழும் இவர் புலிகளுக்கு ஆயுத விநியோக முகவர் என்று கூறுகிறது இலங்கை அரசு. லக்ஷ்மன் கதிர்காமர் கொலையிலும் இவரை வளைத்துப்போடப் பார்க்கிறது. ஆனால், எதற்கும் அஞ்சாதவர் ஞானக்கோன். ”என்னைப் பிடிப்பதற்குள் அவர்களைத் தீர்த்து விடுவேன். அமெரிக்காவில் உயிரை காப்பாற்றிக் கொள்ளக் கொன்றால் குற்றமில்லை!” என்று சிரிக்கிறார் அவர்.

இலங்கையில் விழுந்த பிணக் குவியல்களையும், நிகழ்ந்த பட்டினிச் சாவுகளையும் கண்டு கொதித்ததோடு… பிஞ்சுக் குழந்தைகளை வதைமுகாம்களில் அடைத்துக் கொடுமை செய்ததை அமெரிக்காவில் எடுத்துச் சொல்லி பிரசாரம் செய்தவர் உருத்திரகுமாரன். கழிப்பிடம் இல்லாத பெண்களும், கஞ்சி இல்லாத குழந்தைகளையும் கண்டு அமெரிக்க அரசும், ஐக்கிய நாடுகள் சபையும் கடும் கண்டனம் தெரிவித்தன.

சமீபத்தில் பிரபல தொலைக்காட்சியான ‘சனல்-4’ வெளியிட்ட பயங்கரமான காட்சிகளைக் கண்டு உலகமே அதிர்ந்தது. அதே சனல், எப்படி அப்பாவி மக்கள் கண்மூடித்தனமாகச் சுட்டுத் தள்ளப்படுகிறார்கள் என்றும் காட்டியது. ஐக்கிய நாடுகள் இந்த வீடியோக்களை மிக மிக சீரியஸாக எடுத்துக்கொண்டுள்ளது. இதனால், கடுப்பாகிப்போன இலங்கை அரசு, கூலிப் படைகளை வைத்தாவது அமெரிக்காவில் உருத்திரகுமாரனை போட்டுத் தள்ளவும் தயாராகி வருகிறது என்கிறார்கள்.

‘என் தந்தை யாழ் மாநகரின் மேயராக இருந்தவர். எனக்கு அந்த மண்ணின் மீதும் மக்களின் மீதும் உள்ள பிணைப்பை என்ன பயமுறுத்தினாலும் போக்கி விட முடியாது. இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் உலகம் முழுவதும் இப்போது பட்டவர்த்தனமாகத் தெரிந்துவிட்டது. என்னை அவர்கள் அழிக்கப் பார்ப்பது உண்மைதான்! என் உயிரைப்பற்றி கவலைப்படுகிறவன் இல்லை நான். ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்களின் உயிர்களைப் பற்றித் தான் கவலைப்படுகிறேன்” என்று நறுக்கென்று இதற்கு பதில் தருகிறார் உருத்திரகுமாரன்.