April

April

தலைக்கவசம் அணிந்து சந்தேகத்திற்கிடமாக நடமாடினால் சோதனை செய்யுமாறு பொலிஸ் தலைமையகம் தெரிவிப்பு!

தலைக்கவசம் அணிந்து சந்தேகத்திற்கிடமாக நடமாடினால் சோதனை செய்யுமாறு பொலிஸ் தலைமையகம் தெரிவிப்பு!

பாதுகாப்பு தலைக்கவசம் அணிந்து சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொள்ளும் நபர்கள் தொடர்பில் சோதனை செய்யப்பட வேண்டும் என அறிவித்து பொலிஸ் தலைமையகம் அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

கடந்த காலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் துப்பாக்கிச் சூடு மற்றும் கொலைகள் உள்ளிட்ட பல குற்றங்களைச் செய்த சந்தேகநபர்கள் தலை மற்றும் முகங்களை மறைக்கும் வகையில் தலைக்கவசங்களை அணிந்திருப்பது அவதானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எனவே, மோட்டார் சைக்கிளில் பயணிக்காத போது பாதுகாப்பு தலைக்கவசம் அணிந்து சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்துகொள்வது கண்டறியப்பட்டால், அந்த நபரையும் அவரது உடமைகளையும் ஆய்வு செய்யுமாறு அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவராம் யார் ? இரட்டை உளவாளியா ? நம்பிக்கைத் துரோகியா ? மாமனிதனா ?

சிவராம் யார் ? இரட்டை உளவாளியா ? நம்பிக்கைத் துரோகியா ? மாமனிதனா ?

ஏப்ரல் 28, சிவராம் படுகொலை செய்யப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைகின்றது. ஆனால் சிவராம் யார் என்ற கேள்விக்கான விடை மிகக் குழப்பகரமானதாகவே உள்ளது. புளொட் – தமிழீழ மக்கள் விடுதலைக் கழகமே சிவராமைப் படுகொலை செய்ததாக பலமான ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டது. சிவராமின் கொலையாளிகள் முன்னாள் பா உ தர்மலிங்கம் சித்தார்த்தனின் வாகனத்தில் சென்று தான் சிவராமைக் கடத்தி கொலை செய்ததாக செய்திகள் கசகின்றது. இது தொடர்பில் முன்னாள் பா உ சித்தார்த்தன் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிவராம் தமிழீழ மக்கள் விடுதலைக் கழக உறுப்பினராக இருந்தவர். அதன் பின் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நெருங்கிய உறவைக் கொண்டிருந்தவர். கருணா பிரிவின் போது கிழக்குத் தேசியத்தை கருணாவுக்கு ஊட்டியதன் பின்னணயில் சிவராம் இருந்துள்ளார். அதன் பின் வன்னிக்கு சிவராமை அழைத்த புலிகள் கருணாவின் பிரிவுக்கு எதிராக கட்டுரையொன்றை வெளியிட மிரட்டியதாகவும் அதனைத் தொடர்ந்து அவர் கருணாவுக்கு எதிரான கட்டுரையை வெளியிட்டதாகவும் ஒரு சாரார் தெரிவிக்கின்றனர்.

ஆனால் சிவராம், இரட்டை உளவாளியாக புலிகளுக்கும் கருணாவுக்கும் இடையே இருந்ததாக புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த முல்லைமதி தேசம்நெற்க்குத் தெரிவித்தார். சிவராம் தமிழ் தேசியத்துக்காக புலிகளுக்காகச் செயற்பட்ட மாமனிதர் என்றார். அதற்காகவே அந்தப் பட்டம் அவருக்கு அளிக்கப்பட்டதாக முல்லைமதி ஆணித்தரமாகத் தெரிவித்தார்.

நோர்வேயைச் சேர்ந்த எழுத்தாளரும் சிவராமின் நண்பருமான என் சரவணன் தன்னுடைய முகநூல் பதிவில் வருமாறு குறிப்பிடுகின்றார்: “சிவராமிடம் இருந்து தள்ளியே நிற்கும்படியும், அதிக நெருக்கமான நட்பைப் பேண வேண்டாம் என்றும் எனக்கு தமிழீழ மக்கள் கட்சியினால் கட்டளை இடப்பட்டிருந்தது. அந்தளவு நம்பகம் இல்லாத ஒருவராக அவர் இருந்தார். கூடப் பழகிய எம் சக நண்பர்கள் பலரும் அதை அறிவார்கள். எனக்கே சிவராமுடனான அப்படிப்பட்ட தனிப்பட்ட அனுபவங்கள் உள்ளன.

தனிப்பட்ட சிவராமின் மீது ஏராளமான வெறுப்பும், விமர்சனங்களும் உள்ளன. ஆனால் அதே காரணத்துக்காக சிவராமின் படைப்புகளை கழித்திவிடவோ, நிராகரித்துவிடவோ, புறக்கணித்துவிடவோ முடியாது. சிவராமின் எழுத்துக்களில் உள்ள ஆழமும், கனதியும் அவ்வளவுக்கு நிலைத்து நிற்பவை.
சிவராமை களையெடுத்தவர்கள் வெறுமனே சிவராமின் எழுத்துக்காக மட்டும் அதை செய்யவில்லை. சிவராமின் அரசியல், சிவராமின் நம்பிக்கைத் துரோகம் என்பவற்றையும் கூறி நியாயப்படுத்துபவர்கள் இருக்கிறார்கள்.

மூன்று தசாப்த யுத்த காலத்தில் கொல்லப்பட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட அத்தனை ஊடகவியலாளர்களின் சாவுக்கும் நீதி கிடைத்தாக வேண்டும்” என்று சொல்வி தன்னுடைய நண்பன் தராக்கி எனப் பின்னாளில் அறியப்பட்ட சிவராம் பற்றிய குறிப்பை பதிவு செய்துள்ளார் என் சரவணன்.

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் சூத்திரதாரி முக்கிய அரசியல் பிரமுகர்!

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் சூத்திரதாரி முக்கிய அரசியல் பிரமுகர்!

2019 ஆம் ஆண்டு ஆட்சியதிகாரத்தை கைப்பற்றவே ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டது என ஜனாதிபதி அநுரகுமார திஸ்ஸநாயக்க சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்தப் பின்னணியில் ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி ஒரு முக்கிய அரசியல் பிரமுகர் என என்பிபி வட்டாரங்கள் தகவல்களை கசியவிட்டுள்ளன.

குறிப்பிட்ட அரசியல் பிரமுகர் கைதாகும் போது தென்னிலங்கையில் திட்டமிட்ட ஆர்ப்பாட்டங்கள் மற்றும் கலவரங்களை சம்பந்தப்பட்ட தரப்புகள் தூண்டினால் அதனை தடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுள்ளதாக கூறப்படுகிறது. இராணுவம் மற்றும் பொலிஸார் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

யார் அந்த முக்கிய பிரமுகரகாக இருக்க முடியும்? என்ற வாதங்கள் ஏற்கனவே தொடங்கி விட்டன. கைதாகப் போகும் நபர் ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற ஊகங்களும் வெளியிடப்படுகின்றன. இடம்பெறப் போகிற கைது தென்னிலங்கை அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மே தினத்தையொட்டி மேதினச் செய்தியாக இவ்விடயம் வெளிவரலாம் எனவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

“லிற்றில் ஜப்னா” படத்திற்கு எதிர்ப்பு !

“லிற்றில் ஜப்னா” படத்திற்கு எதிர்ப்பு !

லிற்றில் ஜப்னா” என்ற பெயரில், மீன் ஸ் ரீற்ஸ் (Mean Streets) தயாரிப்பு மற்றும் இளம் இயக்குநர் லோறன்ஸ் வாலின் என்பவரின் நெறிப்படுத்துதலில் உருவான இத்திரைப்படம், ஏப்ரல் மாத இறுதியில் பிரான்ஸ் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.

பிரான்சில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த புதிய திரைப்படம் புலம் பெயர் ஈழத்தமிழர் வாழ்க்கையையும், வரலாற்றையும் புனைவுகள் மற்றும் பிழைகள் நிறைந்த முறையில் சித்தரிக்கிறது என்று கூறி ஈழத் தமிழ் திரைப்படச் சங்கம் இப்படத்தை வெளியிடக் கூடாது என கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் இந்த திரைப்படம் நம் இளம் சமூகம் மற்றும் பிற இன மக்களிடம் தவறான எண்ணங்களை விதைக்கும் அபாயம் உள்ளதாகவும், திரைப்பட சங்கம் தெரிவித்துள்ளது. இப்படத்தை முழுமையாக தடை செய்வதற்கான சட்ட நடவடிக்கைளையும் எடுக்க உத்தேசித்திருப்பதாகவும் இச்சங்கம் அறிவித்துள்ளது. இதற்காக கையெழுத்துப் போராட்டத்தையும் ஆரம்பித்துள்ளது.

அந்த வகையில் வகையில், இப்படம் குறித்து பிரான்சில் உள்ள அனைத்து தமிழ்க் கட்டமைப்புகளையும், சமூக ஆர்வலர்களையும் ஒன்றிணைத்து, கலந்துரையாடல் ஒன்றும் நடத்தப்பட்டுள்ளது. லிற்றில் ஜப்னா திரைப்படத்திற்கு மட்டும்மல்ல வேறு சில ஈழத்தமிழர்கள் வரலாற்றை மையமாக வைத்து தயாரித்த படங்களை வெளியிடக் கூடாது என்று அவ்வப்போது போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது.

இது அப்பட்டமான கருத்துச் சுதந்திரத்தின் மீதான அடக்குமுறையாகும். பிரான்ஸ் போன்று படைப்பாளிகளுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் சுதந்திரமான நாட்டிலிருந்து கொண்டு லிற்றில் ஜப்னா படத்தை தடை செய்யக் கோருவது சர்வதிகாரப் போக்கு என பிரான்ஸ் வாழ் படைப்பாளிகள் கண்டிக்கின்றனர். படைப்பாளிகளின் சுதந்திரத்தில் தலையிடுவது ஜனநாயக விரோதமான செயலாகும். மேலும் தமிழ் சமூகத்தில் உள்ள பல்வேறு முரண்பாடுகளையும் வெளிப்படுத்தும் கருத்துக்கள், படைப்புக்கள் வருகின்ற போது அதனைத் தடைசெய்யக் கோரும் முட்டாள்தனமான கலாச்சாரம் யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்தே ஆரம்பிப்பது வழமை. சாதிய ஒடுக்குமுறையை வெளிப்படுத்திய ஆவணப்படத்தை வெளியிட யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடாதிபதி ரகுராம் தடைவிதித்த்தார். அவ்வாறே சுயாதீன கருத்துக்களுக்கு தடை விதிக்கப்பட்டு வருகின்றது.

பிரான்ஸ் நாட்டின் அறிஞரான வோல்ரயர்: “உன்னுடைய கருத்துக்களோடு எனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும், உன்னுடைய கருத்தை வெளியிடுவதற்கு உனக்குள்ள உரிமைக்காக உயிரையும் கொடுப்பேன் எனத் தெரிவித்தார். வோல்ரயர் வாழ்த்த மண்ணில் தங்களுடைய மனித உரிமைகள், கருத்துச் சுதந்திரம் மீறப்படுவதாகச் சொல்லி அரசியல் தஞ்சம் கோரியவர்கள் ஈழத் தமிழ் திரைப்படச் சங்கத்தினர். இபோது பிரான்ஸ் மண்ணில் வாழ்ந்துகொண்டு ஒரு படைப்புக்கு தடைவேண்டி கையெழுத்துப் போராட்டம் நடத்துகின்றனர்.

தங்களை கருத்துச் சுதந்திரர்களாகக் காட்டி கொண்ட சிலர் தேசம்நெற் தளத்தை மூடச்சொல்லி 17 ஆண்டுகளுக்கு முன் கையெழுத்துப் போராட்டம் ஒன்றை மேற்குநாடுகளில் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. தற்போது வேறு சிலர் லிற்றில் ஜப்னா வுக்கு எதிராகக் கெம்பியுள்ளனர்.

 

வாடகைக் கொலையாளி பிள்ளையான் – ரில்வின்: அஸ்தமனமான பிள்ளையானின் அரசியல் பயணம் ! சிறையில் உயிராபத்து இல்லாமல் உள்ளார் !

வாடகைக் கொலையாளி பிள்ளையான் – ரில்வின்: அஸ்தமனமான பிள்ளையானின் அரசியல் பயணம் ! சிறையில் உயிராபத்து இல்லாமல் உள்ளார் !

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஆயுள் கைதியாகும் காலம் சமீபத்திருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. கிருஸ்மஸ் தினத்தில் தேவாலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் வழக்கில் 5 வருடங்கள் சிறையிலிருந்து விடுதலையான பிள்ளையான் என்பிபி ஆட்சியில் தப்ப முடியாது எனக் கூறப்படுகிறது. பிள்ளையான் உள்ளே இருப்பதால் அவர் உயிருடன் உள்ளார். இல்லையேல் படுகொலை செய்யப்படும் அபாயமும் உள்ளதாக அவரை நன்கு அறிந்த சிலர் கருதுகின்றனர்.

அமைச்சரவை பேச்சாளரான நளிந்த ஜயதிஸ்ஸ ஊடகவியலாளர் சந்திப்பின் போது பிள்ளையானிடம் தனியே கிழக்குப் பல்கலைக்கழக பீடாதிபதி ரவீந்திரநாத் சிவசுப்பிரமணியம் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் மட்டுமன்றி ஏனைய பல குற்றங்கள் தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளார். அத்துடன் பிள்ளையானுக்கு எதிரான வலுவான ஆதாரங்கள் விசாரணைகளில் கிடைத்து வருவதாகவும் கூறியுள்ளார். ஏற்கனவே விசாரிக்கப்பட்ட பல்வேறுபட்ட குற்றவியல் வழக்குகளில் பிள்ளையான் சம்பந்தப்பட்டுள்ளதற்கான வலுவான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும் அமைச்சர் பகீர் கிளப்பியுள்ளார்.

மேலும் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல், குற்றப்புலனாய்வுத் துறை மற்றும் நீதிமன்றத்திடம் பாரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். ஈஸ்டர் குண்டுவெடிப்பு சூத்திரதாரி மற்றும் அதன் வலையமைப்பு தொடர்பான முடிவுகளை குற்றப்புலனாய்வுத்துறை மற்றும் நீதிமன்றம் விரைவில் வெளிப்படுத்தும் என அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

பிள்ளையான் சிறையிலிருந்ததால் தான் குற்றங்களில் ஈடுபடவில்லை எனக் கூறி தப்ப முடியாது. சிறையிலிருந்தபடியே பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் உள்ளார்கள் எனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் முன்னாள் ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேனவும், மக்களைக் கொன்ற பெரும் குற்றவாளிகளான கருணா மற்றும் பிள்ளையான் போன்றோருக்கு அரசியலில் பதவிகள் வழங்கியமை குற்றம் என தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வுத் துறையின் தகவல்களின் படி கிழக்கு மாகாணத்தில் பிள்ளையான் செய்த பல அரசியல் கொலைகள் தொடர்பான தகவல்கள் வெளிவந்து கொண்டிருப்பதாக கூறப்படுகின்றது. விடுதலைப் புலிகளிலிருந்து பிரிந்த பிள்ளையான் விடுதலைப் புலிகளுடன் நடத்திய போரில் செய்த கொலைகள் தொடர்பில் விசாரணைகள் நடைபெறவில்லை எனவும் கூறப்படுகிறது.

மாறாக பிள்ளையான் தனது அரசியல் நோக்கங்களுக்காக செய்த, பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொலைகள் உட்பட்ட ஏனைய கொலைகள் மற்றும் சமூகமறியாத மர்மமான குற்றங்கள் தொடர்பான தகவல்களும் விசாரணைகளில் வெளிவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் செய்திகளை வைத்துப் பார்க்கும் போது பிள்ளையானின் எதிர்காலம் கடூழிய சிறையில் தான் கழியும்மோ ? எனக் கூறப்படுகிறது.

இது தொடர்பில் கூட்டத்தில் பேசும்போது குறிப்பிட்ட ஜேவிபி இன் செயலாளர் ரில்வின் சில்வா, பிள்ளையானை ஒரு வாடகைக் கொலையாளியாகக் குறிப்பிட்டார். அதனால் அவரை வாடகைக்கு வைத்து குற்றங்களைச் செய்தவர்கள் சிறையில் பிள்ளையானைத் தொடர்புகொள்ள முயற்சித்தனர். அது சரிவரவில்லை என்றதும் சட்டத்தரணியாக நீதிமன்றமே செல்லாத உதயகம்பன்பில பிள்ளையானின் சட்டத்தரணியாக அவரைக் பார்க்கச் சென்று அதைப் பற்றிச் சொல்லிவிட்டாய? இதைப்பற்றிச் சொல்லி விட்டாயா என்று கேட்டறிவதற்காக அவரை வாடகைக்கு அமர்த்திய ரணிலும் மொட்டுக் கட்சிக்காரரும் உதயகம்பன்பிலவுக்கு கறுப்புக் கோட்போட்டு அனுப்பி உள்ளதாக ரில்வின் சில்வா நளினமாகத் தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில் பிள்ளையான் வேறொன்றுக்குமாக அழவில்லை, உதயகம்பன்பில தனக்கு சட்டத்தரணியாக வந்ததை நினைத்தே அழுதார். ஏனென்றொல் நீதிமன்றத்திற்கே போகாத வக்கீல் ஒருவரை போட்டிருக்கிறார்களே என்னுடைய ஆயுள்காலம் முழுக்க இதுக்குள் இருக்க வேண்டி வரப்போகுதே என்பதை எண்ணியே பிள்ளையான் அழுததாகவும் ரில்வின் சில்வா நகைச்சுவையாகத் தெரிவித்தார்.

 

கனடியத் தேர்தலில் தமிழ் தரப்பு எதிரும் புதிருமான இரு கட்சிகளிலும் நால்வர் போட்டி !

கனடியத் தேர்தலில் தமிழ் தரப்பு எதிரும் புதிருமான இரு கட்சிகளிலும் நால்வர் போட்டி !

ஏப்ரல் 28 இல் நடைபெறவுள்ள கனடியத் தேர்தலில் எதிரும் புதிருமாக உள்ள ஆளும் லிபிரல் கட்சியில் இருவரும் எதிர்க்கட்சியான பழமைவாத கொன்சவேடிவ் கட்சியில் இருவருமாக நால்வர் போட்டியிடுகின்றனர். நீதி அமைச்சராகவுள்ள ஹரி ஆனந்தசங்கரியும் கனடா தேர்தலில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்கள் ஜொவனிற்றா நாதனும் லிபரல் கட்சியில் போட்டியிடுகின்றனர். லைனல் லோகநாதனும் நிரான் ஜெயநேசனும் கொன்சவேடிவ் கட்சியில் போட்டியிடுகின்றனர்.

மார்க் கார்னி தலைமையிலான லிபிரல் கட்சி விரல் விட்டு எண்ணும் விகிதத்தில் முன்னிலை வகிக்கின்றார். ஜஸ்ரின் ரூடோர் தலைமையில் லிபிரல் கட்சி ஏற்கனவே இரு தடவைகள் ஆட்சியில் இருந்ததில் மக்கள் மத்தியில் சலிப்பு ஏற்பட்டுள்ளது. அதனக் காரணமாக கொன்சவேடிவ் கட்சி முன்னணியில் இருந்தது. ஆனால் அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம் ஜனாதிபதியாகி கனடாவை அமெரிக்காவின் 51வது மாநிலம் எனத் தெரிவித்ததும் கனடாவுக்கு எதிராகவும் வர்த்தக வரிகளைப் பயன்படுத்தியதும் கனடாவில் டொனால் ட்ரம்முக்கு எதிராக மார்க் கார்னியின் கருத்துக்கள் வரவேற்பபைப் பெற்றது. சரிந்திருந்து லிபிரல் கட்சி கிசுகிசுவென மேல்நிலைக்கு வந்து தற்போது மூன்று புள்ளிகளால் மட்டும் முன்னணியில் உள்ளது.

டொனால் ட்ரம் உடைய கருத்துக்களோடு ஒத்துப் போகின்ற கொன்சவேடிவ் கட்சியின் தலைவர் பஃரே பொலிவ்ரே தேர்தல் நெருங்கும் தருவாயில் தொழிலுலகிற்குள் நுழையும் இளவயதினரின் ஆதரவை கணிசமான அளவில் பெற்றுவருவதாக அரசியல் சமூக ஆய்வாளர் நடராஜா முரளீதரன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் கொன்சவேடிவ் கட்சி தொழில் முயற்சியாளர்கள், வர்த்தகர்களுக்கான வரிகளைக் குறைப்பதும் குடிவரவாளர்களைக் கட்டுப்படுத்துவது போன்ற இறுக்கமான வலதுசாரிக் கொள்கைகளை முன்வைத்துள்ளதாகக் குறிப்பிடுகின்றார்.

கனடாவுக்கு முந்திச் சென்றவர்கள் கொன்சவேடிவ் கட்சியை ஆதரிப்பதாகவும் பிந்திச் சென்றவர்கள் தங்களுடைய குடியுரிமை மற்றும் உரிமைகளுக்காக லிபிரல் கட்சியை ஆதரிப்பதாகவும் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். தற்போது குடியேறுபவர்களின் வருகையால் வீட்டு வசதி மற்றும் அடிப்படைத் தேவைகளுக்கான போட்டி ஏற்பட்டுள்ளதால் குடிவருவோர் பற்றிய தப்பபிப்பிராயங்கள் பரவலாகக் காணப்படுவதையும் நடராஜா முரளீதரன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

இலங்கைக்கு வெளியே இலங்கைத் தமிழர்கள் அதிகம் வாழும் பிரதேசமாக கனடா உள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய நான்கு மாவட்டங்களதும் மொத்த சனத்தொகைக்கு ஒப்பான தொகையான தமிழ் மக்கள் கனடாவில் வாழ்கின்றனர். இத்தேர்தல் கனடாவில் உள்ள தமிழ் மக்களை மட்டுமல்லாமல் இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இலங்கையிலிருந்து கனடாவுக்குச் செல்வதற்கு பாரிய தடைகள் இருக்கவில்லை. வருகின்ற ஆட்சி மாற்றம் இவ்விடயத்தில் தாக்கத்தைச் செலுத்த வாய்ப்பு உள்ளது.

 

காஷ்மீரில் தீவிரவாதிகள் சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் – 26 பேர் பலி !

காஷ்மீரில் தீவிரவாதிகள் சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் – 26 பேர் பலி !

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள ‘மினி சுவிட்சர்லாந்து’ என அழைக்கப்படும் பைசரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப்பயணிகள் மீதான தாக்குதலில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். இப்பகுதியில் கோடை காலத்தில் பெருமளவு சுற்றுலாப் பயணிகள் வருவது வழமையாகும். கடந்த 22 ஆம் திகதி ஏப்பிரல் பஹல்கமுக்கு வருகை தந்திருந்த சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் ஓர் இந்திய கடற்படை அதிகாரி மற்றும் ஒரு புலனாய்வுப் பணியக அதிகாரி உட்பட 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட செயல்படும் தடைசெய்யப்பட்ட தீவிரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா (LeT) இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.

மேலும் இத் தாக்குதலைத் தொடர்ந்து பெரிய அளவிலான தேடுதல் வேட்டையைஅப்பகுதியில் ராணுவம், மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF), மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீசார் தொடங்கியுள்ளனர் என இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

தீவிரவாதிகளின் இந்த தாக்குதல் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் இத்தாக்குதலை கண்டித்துள்ளனர். அந்தவகையில் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க தனது எக்ஸ தளத்தில் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

“இந்தியாவில் நடந்த கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் எங்கள் இதயங்கள் உள்ளன. இலங்கை எப்போதும் இந்திய மக்களுடன் ஒற்றுமையுடன் நிற்கிறது” என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

என்பிபி வெல்லாத உள்ளூராட்சி சபைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய மாட்டோம் என கூறவில்லை ! ஜனாதிபதி

என்பிபி வெல்லாத உள்ளூராட்சி சபைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய மாட்டோம் என கூறவில்லை ! ஜனாதிபதி

உள்ளூராட்சி சபைகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான தனது கருத்து எதிர்க்கட்சிகளால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸ்ஸநாயக்க தலவாக்கலயில் நடந்த பொதுக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். என்பிபி கட்சி வெற்றி பெறாத உள்ளூராட்சி சபைகளுக்கு அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு செய்ய மாட்டோம் என ஜனாதிபதி அச்சுறுத்தி வாக்குச் சேகரிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தனர். அத்துடன் இது அப்பட்டமான தேர்தல் விதிமீறல் என்றும் முறையிட்டிருந்தன.

இவற்றுக்கெல்லாம் பதிலழித்த ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க மத்திய அரசு திருடாது. ஆகவே உள்ளூராட்சி சபைகளும் திருடக் கூடாது என தான் நான் கூறினேன். என்பிபி வெற்றியடையாத சபைகளுக்கு நான் நிதி ஒதுக்கீடு செய்ய மாட்டேன் என நான் கூறவில்லை எனக் குறிப்பிட்டார். ஊழலற்ற ஆட்சியையே தான் வலியுறுத்துவதாகவும் கூறினார்.

வாக்கு வங்கியற்றவர்கள் கஜாவோடு சைக்கிளில் டபிள்ஸ் – றிபிள்ஸ் ஓடுகிறார்கள் !

வாக்கு வங்கியற்றவர்கள் கஜாவோடு சைக்கிளில் டபிள்ஸ் – றிபிள்ஸ் ஓடுகிறார்கள் !

தமிழ்த்தேசியப் பரப்பில் பயணிக்கும் கட்சிகளுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் தேசிய மக்கள் சக்தியின் பொறிக்குள் தம்மை பாதுகாக்கலாம் என யாழ் முஸ்லிம் மக்கள் ஒன்றியத்தின் தலைவர் அப்துல் பரீக் ஆரீப் தெரிவித்துள்ளார். அந்த வகையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் பேரவைக்கு உள்ளூராட்சித் தேர்தலில் யாழ் முஸ்லீம் மக்கள் ஒன்றியம் ஆதரவு கொடுப்பதாக யாழ் ஊடக அமையத்தில் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு உள்ளூராட்சித் தேர்தலில் ஆதரவு வழங்கவுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்துள்ளார். மேலும் தமிழரசுக் கட்சியில் தனியொரு நபர் ஆதிக்கம் செலுத்துகிறார். தமிழரசுக் கட்சி தன்னை தள்ளி வைத்து விட்டதாகவும் சரவணபவன் வருத்தம் தெரிவித்தார். எச்சூழலிலும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலின அணியினரே தொடர்ந்து தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுப்பதாகவும் பாராட்டினார். அதனாலேயேயும் தனது அரசியல் எதிர்காலம் கருதியும் சைக்கிளை ஆதரிக்கும் முடிவை எடுத்ததாகவும் கூறினார்.

யாழ் நகரின் நீர், சுகாதாரம், போக்குவரத்து, கழிவகற்றல், முன்பள்ளி என சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காணுவோம் ! என்பிபி கபிலன்

யாழ் நகரின் நீர், சுகாதாரம், போக்குவரத்து, கழிவகற்றல், முன்பள்ளி என சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காணுவோம் ! என்பிபி கபிலன்

யாழ் நகர மக்கள் நீண்ட காலமாக எதிர்நோக்குகின்ற, கடந்த காலங்களில் தீர்க்கப்படாத: நீர், சுகாதாரம், போக்குவரத்து, கழிவகற்றல், முன்பள்ளி என சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காணுவோம் என என்பிபி யாழ் மாநகர முதல்வUf;fhd வேட்பாளர் விரிவுரையாளர் கபிலன் சுந்தரமூர்த்தி தெரிவிக்கின்றார். நேற்று ஏப்ரல் 23 இரவு தேசம்நெற்க்கு வழங்கிய சிறப்பு நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

“உள்ளுராட்சி அமைப்புகளின் தேர்தல் முறைமையில் ஒரு தனிக்கட்சி வெற்றபெற்று ஆட்சி அமைக்கின்ற வாய்ப்புகள் இல்லை. தமிழ் தேசியக் கட்சிகள் என்பிபி ஆட்சியைக் கைப்பற்ற தாங்கள் ஒத்துழைக்க மாட்டோம் என்பதில் மிக உறுதியாக உள்ளனர். அப்படியிருக்கையில் உங்களுடைய கனவுத் திட்டங்களை எப்படி நடைமுறைச் சாத்தியமாக்க முடியும் ” எனத் தேசம்நெற் கேள்வி எழுப்பியது. அதற்குப் பதிலளித்த முதல்வர் வேட்பாளர் எஸ் கபிலன், “யாழ் மாவட்டத்தில் வாழ்கின்ற தமிழ் பேசும் மக்கள் தங்களுடைய பூரண ஆதரவைத் தந்து தேசிய மக்கள் சக்தியை மிகப் பெரும்பான்மையுடன் வெற்றியடையச் செய்ய வேண்டும். வெற்றியடையச் செய்வார்கள்” எனத் தெரிவித்தார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முதல்வருக்கான வேட்பாளர் அனுராவின் நிதி தேவையில்லை. அது இல்லாமலேயே நாங்கள் யாழ் மாநகரத்தை கட்டியெழுப்புவோம்’ எனச் சூளுரைத்து இருந்தார். அத பற்றி கபிலனிடம் கேட்ட போது, “அப்படியென்றால் ஏன் இவ்வளவு காலமாக அவர்கள் அதனைச் செய்யாமல் இருந்தனர். இவர்களுக்கு செய்வதற்கான வாய்ப்புக் கிடைத்தும் இவர்கள் செய்யவில்லையே. இப்ப இவர்கள் தேர்தலுக்குப் பிறகு சேருவோம் என்று சொல்வது கூட மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இல்லை. தேசிய மக்கள் சக்தி வந்து அபிவிருத்தியைச் செய்துவிடாமல் தடுப்பதற்கே” எனத் தெரிவித்தார் கபிலன்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் தேசிய மக்கள் சக்தி வெற்றிபெற்று ஆட்சி அமைத்தால் நாங்கள் அளித்த உறுதிமொழிக்கு அமைய அனைத்தையும் சாதித்துக் காட்டுவோம். அப்படிச் செய்ய முடியாது போனால் அதற்கான முழுப்பொறுப்பையும் நான் எடுப்பேன். நாங்கள் எங்கள் மக்களுக்குச் சாதித்துக் காட்டுவோம். உள்ளுராட்சி, நகராட்சி, மாநகராட்சி எப்படி இயங்கும் அதில் எதையெல்லாம் சாதிக்கலாம் என்பதை மக்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் பார்ப்பார்கள்” எனத் தெரிவித்தார் கபிலன்.