March

March

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு அருகில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் உட்பட 10 பேர் கைது !

யாழ்ப்பாண பல்கலைக்கழகவளாகத்தை அண்மித்த பகுதியில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் நீண்ட காலமாக குடு மற்றும் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் நேற்றைய தினம் மாவட்ட குற்றதடுப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் வியாபாரியிடம் குடு வாங்கி பாவிக்கும் 10 வாடிக்கையாளரும் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களிடமிருந்து போதை பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர் எனவும் கைது செய்யப்பட்டோர் 17 தொடக்கம் 22 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப் பொருள் வியாபாரி நீண்ட காலமாக போதை பொருள் விற்று வருவமை தொடர்பில் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் காவல்துறை பரிசோதகர் மேனன் தலைமையிலான அணியினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து குறித்த இடம் சுற்றி வளைக்கப்பட்டு போதை பொருள் வாங்கியோரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கு, கிழக்கு பௌத்த மரபுரிமைகளைப் பாதுகாப்போம் என்ற தலைப்பில் கொழும்பில் இடம்பெற்ற விசேட கூட்டம் !

‘வடக்கு, கிழக்கு பௌத்த மரபுரிமைகளைப் பாதுகாப்போம்’ என்ற தொனிப்பொருளில், கொழும்பில் இன்று(புதன்கிழமை) விசேட கூட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது.

வட மாகாணத்தின் பிரதான பௌத்த தேரர், கல்கமுவே சந்தபோதி தேரர் இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார்.

‘சாசனத்தைப் பாதுகாப்பதற்கான உலகளாவிய சிங்கள கூட்டமைப்பின்’ ஏற்பாட்டில், கொழும்பு – 07 இல் இந்த கூட்டம் நடத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு, கிழக்கில், பௌத்த மரபுரிமைகள் சேதமாக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனவே அவற்றைப் பாதுகாப்பதற்கு முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதன்போது ஆராயப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கூட்டத்தில், வடக்கு, கிழக்கு பௌத்த அமைப்புகள், பௌத்த பிக்குகள், பௌத்த அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெடியரசன் கோட்டை தமிழரின் சொத்து – நெடுந்தீவில் போராட்டம்!

நெடுந்தீவு – வெடியரசன் கோட்டை அருகில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இன்றைய தினம்(புதன்கிழமை)  போராட்டத்தில் ஈடுபட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட அக்கட்சியின் உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெடுந்தீவு – வெடியரசன் கோட்டையை பெளத்த விகாரையுடன் தொடர்புபடுத்தி கடற்படை அமைத்த பதாகையை அடுத்து குழப்பம் ஏற்பட்டிருந்தது.

தொல்லியல் திணைக்களம், கடற்படை ஆகியவற்றினரின் செயற்பாட்டை கண்டித்தும், வெடியரசன் கோட்டை தமிழரின் சொத்து என வலியுறுத்தியும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் 150கிலோ கஞ்சா மீட்பு!

யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 150 கிலோகிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

கடற்படையினரால் நேற்றிரவு இந்த கஞ்சா தொகை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் படகு ஒன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கஞ்சா கடத்தலுடன் தொடர்புடைய எவரும் கைது செய்யப்படாத நிலையில் மீட்கப்பட்ட கஞ்சா சட்ட நடவடிக்கைகளுக்காக காங்கேசன் துறை கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இலங்கையில் அதிர்ச்சியூட்டும் வகையில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை – NDDCB அறிக்கை பகீர் !

கடந்த ஆண்டு ஜனவரி மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் தொடர்பாக 67,900 பேர் கைது செய்யப்பட்டதாகவும் இலங்கையில் போதைப்பொருள் பயன்பாடு அதிர்ச்சியூட்டும் வகையில் அதிகரிக்கிறது என்றும் தேசிய ஆபத்தான மருந்து கட்டுப்பாட்டு சபை (NDDCB) தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களில் 52% பேர் ஹெராயின் வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்களில் 37% பேர் கஞ்சா தொடர்பான குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளனர்” என்று NDDCB இன் இயக்குநர் ஜெனரல் பத்ராணி சேனாநாயக்க தெரிவித்தார்.

எட்டு மாத காலப்பகுதியில் மொத்தம் 6,728 நபர்கள் ‘ஐஸ்’ என அழைக்கப்படும் போதைப்பொருள் வைத்திருந்ததற்காக காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

“இவற்றைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், நாட்டில் ஹெரோயின், கஞ்சா மற்றும் ஐஸ் ஆகியவற்றின் கணிசமான அளவு பயன்பாடு மற்றும் பரவல் காணப்படுகிறது . எனினும் போதைக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வளிக்க போதிய வசதிகள் இல்லாதது வருத்தத்திற்குரியது என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் ஹெரோயின் போதைக்கு அடிமையானவர்கள் குறைந்தது 100,000 பெரும் கஞ்சாவுக்கு அடிமையானவர்கள்
சுமார் 350,000 இருந்த போதிலும் அவர்களில் 4000 பேர் மட்டுமே சிகிச்சை மற்றும் புனர்வாழ்விற்காக வருகை தருவதாக அவர் மேலும் கூறினார்.

“போதைக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மையங்களை அரசு மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் நடத்தினாலும், போதைக்கு அடிமையான பெண்களுக்கு இந்த நிறுவனங்களில் வசதிகள் போதுமானதாக இல்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகள் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க புதிய சட்டம்!

மோசடி மற்றும் ஊழலில் ஈடுபட்டதாக அரசியல்வாதிகள் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் நபர்களை கையாள்வதற்கான ஏற்பாடுகளை புதிய ஊழல் தடுப்புச் சட்டத்தில் உள்ளடக்கியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

தமது நாட்டைக் காப்பாற்றிய தேசியத் தலைவர்களையும் தலைவர்களையும் பாதுகாக்க இந்தியாவில் வலுவான சட்டங்கள் இருப்பதாகவும், இலங்கையிலும் அத்தகைய சட்டங்கள் தேவைப்படுவதாகவும் அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

நாட்டைக் காப்பாற்றிய தேசியத் தலைவர்கள் மற்றும் தலைவர்களை எந்த அடிப்படையும் இல்லாமல் திருடர்கள் என முத்திரை குத்தப்பட்டு, இந்த நாட்டை அழித்தவர்கள் மற்றும் நாட்டுக்கு ஆக்கப்பூர்வமான எதையும் செய்யாதவர்கள் முன்னிலைப்படுத்தப்படும் நிலை இலங்கையில் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

தேசியத் தலைவர்களை திருடர்கள் என முத்திரை குத்துபவர்கள் தோல்வியடைந்தவர்கள், இது வருந்தத்தக்க நிலை, நாட்டின் மோசமான நிலை, இதே நிலை நீடித்தால் முற்போக்குவாதிகள் யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள். என்றார்.

ஏப்ரல் மாதத்திற்குள் புதிய ஊழல் தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று நள்ளிரவுடன் குறைவடைகிறது எரிபொருள் விலை – போக்குவரத்து கட்டணங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பான தகவல்கள் !

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்படவுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் 92 ஒக்டேன் பெற்றோலின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 340 ரூபாவாகும்.

அத்துடன் 95 ஒக்டேன் பெற்றோலின் விலை 135 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 375 ரூபாவாகும்.

மேலும் சுப்பர் டீசலின் விலை 45 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 465 ரூபாவாகும்.

ஒட்டோ டீசலின் விலை 80 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 325 ரூபாவாகும்.

இதேவேளை மண்ணெண்ணை விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 295 ரூபாவாகும்.

இதேவேளை நாளை (30) நள்ளிரவு முதல் பஸ் கட்டணங்கள் 12.9 வீதத்தால் குறைக்கப்படும் என பதில் போக்குவரத்து அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தற்போதைய குறைந்தபட்ச பஸ் கட்டணத்தை நாளை நள்ளிரவு முதல் 35 ரூபாவிலிருந்து 30 ரூபாவாக குறைக்குமாறு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் காரணமாகவே பஸ் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை திருத்தத்தை தொடர்ந்து, முச்சக்கர வண்டி கட்டணத்தை இன்று முதல் குறைக்க அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் (AITWDU) தீர்மானித்துள்ளது.

முதல் மற்றும் இரண்டாவது கிலோமீற்றருக்கான கட்டணத்தை குறைக்கவுள்ளதாக அறிவித்துள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.

அதன்படி இன்று முதல் முதல் கிலோமீற்றருக்கான கட்டணம் ரூ.100 ஆகவும், இரண்டாவது கிலோமீற்றருக்கான கட்டணம் ரூ.80 ஆகவும் வசூலிக்கப்படும். குறித்த அறிவிப்பின் பிரகாரம் கட்டணத்தை குறைக்குமாறு மீற்றர் டாக்சி சாரதிகளிடம் சங்கம் இன்று கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, தமது வாராந்த எரிபொருள் ஒதுக்கீட்டை 15 லீற்றராக அதிகரிக்க நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் மின்வலு எரிசக்தி அமைச்சரிடம் சங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது . பலமுறை கோரிக்கை விடுத்தும், அமைச்சரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை என அவர்கள் குற்றம் சாட்டினர்.

எவ்வாறாயினும், எரிபொருள் விலை குறைப்பு தொடர்பான தீர்மானத்துடன், வாடகை வண்டி கட்டணத்தை குறைத்து நுகர்வோருக்கு அந்த சலுகையை வழங்க முச்சக்கர வண்டி சங்கம் தீர்மானித்துள்ளதாக தர்மசேகர தெரிவித்தார்.

முன்னதாக, முதல் கிலோமீற்றருக்கு முச்சக்கர வண்டி கட்டணம் ரூ. 120 மற்றும் ரூ. இரண்டாவது கிலோமீற்றருக்கு 100 அறவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் தொண்ணூறு வீதமான (90%) மரணங்கள் மாரடைப்பினால் ஏற்படுகிறது !

கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் தொண்ணூறு வீதமான (90%) மரணங்கள் மாரடைப்பினால் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது.

கொழும்பு மாநகரசபை பகுதியில் ஒவ்வொரு வாரமும் மாரடைப்பு காரணமாக சுமார் பதினைந்து மரணங்கள் பதிவாகுவதாக கொழும்பு மாநகர மரண விசாரணை அதிகாரி இரேஷா சமரவீர தெரிவித்துள்ளார்.

முப்பது முதல் எண்பது வயதுக்குட்பட்டவர்களே பெரும்பாலும் மாரடைப்பால் இறந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் இவ்வாறான உயிரிழப்புகள் அதிகம் என கொழும்பு மாநகர விபத்து மரண விசாரணை அதிகாரி இரேஷா சமரவீர தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், சிறிய மார்பு வலியை அலட்சியம் செய்வதும், எண்ணெய் உணவுகளை சாப்பிடுவதும் அதிக மாரடைப்புக்கு வழிவகுப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கூடுமானவரை அடிக்கடி உடற்பயிற்சி செய்வதில் ஆர்வம் காட்டினால் மாரடைப்பு ஏற்படுவதைத் தவிர்க்கலாம் என்றும் மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை நாங்கள்  முற்று முழுதாக எதிர்க்கிறோம் அதனை நிராகரிக்கின்றோம் – எம்.ஏ.சுமந்திரன்

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தினை முற்றாக எதிர்க்கிறோம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

இன்று யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்பட்டு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்கிற புதிய சட்டமூலம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடுப்புச் சட்டம் 40 வருடங்களுக்கு மேலாக நாட்டிலே அமுலில் இருக்கின்றது. ஆறு மாத காலத்திற்காக ஒரு தற்காலிக சட்டமாக கொண்டுவரப்பட்டு பின்னர் சில வருடங்களுக்கு பிறகு 81 ஆம் ஆண்டு அது நிரந்தரமான சட்டமாக மாற்றப்பட்டது.

மிகவும் மோசமான ஒரு சட்டம் பலராலே அப்படியாக விமர்சிக்கப்படுகின்ற சட்டம் அதை நீக்குவதாக. தற்போதைய  ஜனாதிபதியே பிரதமராக இருந்தபோது 2017 ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வாக்குறுதி அளித்திருந்தார்.

அதற்கு பிறகு தான் பயங்கரவாத தடை சட்டத்தை மாற்றி பயங்கரவாத  தடுப்புசட்டம் வர்த்தமானியில்  பிரசுரிக்கப்பட்டது. அது  மக்கள் பிரதிநிதிகளோடும் பொது அமைப்புகளோடும் கலந்துரையாடப்பட்டு அந்த வேளையிலே பல தவறுகளை சுட்டிக்காட்டி  பல திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.

2018 ம்ஆண்டு  குண்டு வெடிப்பை சாட்டாக காட்டி அதனை நிறைவேற்றாமல் கைவிட்டார்கள். இப்பொழுது கொண்டுவந்திருக்கின்ற பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம். பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு ஒப்பானது அல்ல. இப்பொழுது இருக்கின்ற பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை விட மோசமானதாக காணப்படுகின்றது.

தமிழ் மக்களுக்கு  ஏற்கனவே நடந்த அத்துமீறல்கள் தொடர்பில் பொறுப்பு கூறல்களை கூறுவது எல்லாவற்றையும்  இருப்பதையும் விட மோசமாக கொண்டு வரப்படுகின்றது. பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை நாங்கள்  முற்று முழுதாக எதிர்க்கிறோம் அதனை நிராகரிக்கின்றோம் அதற்கு எதிரான சட்டநடவடிக்கை எடுப்போம்.

அதற்கு மேலாக புதிய சட்டம் கொண்டுவரப்படுவதாக இருந்தால் அது முதலிலே பொது அமைப்புகளோடு பேசி இணங்கப்பட வேண்டிய விடயம்.ஆனால் இதில் இன்னொரு விடயத்தை குறிப்பிட வேண்டும். பயங்கரவாத தடுப்புசட்டம் நீக்கப்படல் சம்பந்தமாக மனித உரிமை ஆணைக்குழு ஏற்கனவே சென்ற வருடம் ஒரு சிபார்சினை முன் வைத்திருக்கின்றது.

அதாவது பயங்கரவாதத்திற்கான ஒரு விசேட சட்டம் தேவையில்லை என்று. எனவே பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்ற புதிய சட்டம் அரசாங்கம் கொண்டு வருவதை நாங்கள் எதிர்க்கின்றோம் குறிப்பாக  அரசாங்கமானது தான் செல்லுகின்ற பாதை ஜனநாயகத்துக்கு விரோதமானது என்பதை அறியும்.

தேர்தல்கள் நடத்தப்படாமல் ஜனநாயக பாதையில் இருந்து அரசாங்கம் விலகி மாகாண சபை தேர்தலை பலகாலம் முடக்கி வைத்து தற்பொழுது உள்ளூராட்சி சபை  தேர்தலையும் அறிவிக்கப்பட்ட பிறகு கூட அதனை நடத்தாது நிதி நிலைமையை காரணம் காட்டி நாட்டில் ஒரே ஒரு நபர்  தடுத்து வைத்திருக்கின்றார் .

இந்த செய்கையின் மூலமாக இது ஒரு ஜனநாயக ஆட்சி முறை இல்லை ஒரு தனி மனித சர்வாதிகார ஆட்சி நாட்டிலே நடக்கின்றது என்பதற்கு இதுவே சிறந்த உதாரணமாக இருக்கின்றது.

ஆகையினால் இந்த மோசமான  சூழலிலே இப்படியான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்ற ஒரு விசேட சட்டத்தை கொண்டு வந்து அரசாங்கத்துக்கு எதிராக நியாயமான எதிர்ப்பை தெரிவிக்கின்ற மக்களை அடக்குவதற்கும் ஒடுக்குவதற்கும் தண்டிப்பதற்குமான செயற்பாட்டிலே அரசாங்கம் இறங்கி இருக்கின்றது இதனை வன்மையாக கண்டிக்கின்றோம் இதனை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஈடுபடுவோம் என்றார்.

பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் வலுவூட்டல் தொடர்பான தேசிய கொள்கையை அங்கீகரிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு UNFPA பாராட்டு!

பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் வலுவூட்டல் தொடர்பான தேசிய கொள்கையை அங்கீகரிப்பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அர்ப்பணிப்பை ஐக்கிய நாடுகள்  சனத்தொகை  நிதியம் (UNFPA) பாராட்டியுள்ளது.

ஜனாதிபதியின் இந்த அர்ப்பணிப்பு, இலங்கையில் பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம், உரிமைகள் ஆகியவற்றை உறுதி செய்வதில் மிக முக்கிய பங்கு வகிப்பதாக அந்த நிதியத்தின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் மதிப்பீட்டு அலுவலகப்  பணிப்பாளர் மார்கோ செகோன் உள்ளிட்ட பிரதிநிதிகள், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நேற்று (27) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தபோதே இவ்வாறு குறிப்பிட்டனர்.

கொள்கை மற்றும்  நிறுவன மற்றும் தொழில்சார் மட்டங்களில் வலுவான தேசிய மதிப்பீட்டுத் திறன்களை மேம்படுத்துவதில் இலங்கை அடைந்துள்ள வெற்றிகளுக்கு ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் வாழ்த்துத் தெரிவித்தது.

குறிப்பாக  அரச துறை  மதிப்பீட்டை ஊக்குவிப்பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமைத்துவத்தைப் பாராட்டிய பிரதிநிதிகள், சவால்களை வெற்றிகொள்வதில் இலங்கை தனித்துவமான பாத்திரத்தை வகிக்கும் என்றும்  நம்பிக்கை தெரிவித்தனர்.

ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் வலுவான தேசிய மதிப்பீட்டு திறன்களை அபிவிருத்தி செய்வதில், இலங்கையின் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. இது தொடர்பான சட்டமூலமொன்று எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  தெரிவித்துள்ளார்.

நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு, குறிப்பாக பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் வலுவூட்டல் ஆகிய துறைகளில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லாட்சியை ஊக்குவிப்பதற்கான முக்கியத்துவத்தை எடுத்துரைத்த  மார்கோ செகோன், இலங்கையின் தேசிய மதிப்பீட்டுத் திறனை மேம்படுத்துவதற்கு ஆதரவளிப்பதாகவும் உறுதியளித்தார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம், தேசிய மதிப்பீட்டு திறன் அபிவிருத்தி நிபுணர் அசேல களுகம்பிட்டிய மற்றும் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் மதிப்பீட்டு அலுவலக அதிகாரிகள் குழுவினர் கலந்துகொண்டனர்.