April

April

லிற்றில் எய்ட் அமைப்பின் முதலீட்டு ஒத்துழைப்போடு யாழ்.பல்கலைகழக பட்டதாரி கலைநீதனின் லிட்டில் சை கிட் வெளியீடு !

லிற்றில் எய்ட் அமைப்பின் முதலீட்டு ஒத்துழைப்போடு விஞ்ஞான மற்றும் கணிதத் துறையில் மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் லிட்டில் சை கிட் (little sci kit) வெளியிடப்பட்டது. சை போர்ட் அக்கடமியின் தயாரிப்பான இவ்விளையாட்டுடனான கல்வி உரகரணம் வணிக நோக்கத்தைக் கொண்ட தொழில் முயற்சியாக இருந்தாலும் கூட இதன் இலக்கு எமது சமூகத்தில் மாணவர்களை கணித, விஞ்ஞானத்துறையில் ஊக்குவிப்பது ஆகும்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட பட்டதாரியும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் நடத்தப்படும் மனிதம் அமைப்பின் உருவாக்குனர்களில் ஒருவருமான கலைநீதன் என்பவரால் சை போர்ட் அக்கடமி (scibot academy) உருவாக்கப்பட்டுள்ளது.
No description available.
எங்களுடைய சமூகத்தில் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டில் இருக்கக் கூடிய மிகப் பெரிய பலவீனம் அனுபவ ரீதியான கற்றலின் போதாமை ஆகும். குறிப்பாக விஞ்ஞான பாடத்தில் மாணவர்கள் போதிய ஈடுபாடு காட்டமைக்கு இது முக்கியமான காரணமாக அமைகின்றது. மனிதம் அமைப்பினர் பாடசாலை மாணவர்களுடன் மேற்கொண்ட உரையாடலில் இந்த விடயத்தை தெட்டத் தெளிவாக உணர முடிந்தது. குறித்த மாணவர்கள் அனுபவ ரீதியாக விஞ்ஞான பாடத்தைக் கற்பதில் காட்டிய ஆர்வமும், சர்வதேச ரீதியில் விஞ்ஞான பாடம் எவ்வாறு மாணவர்களுக்கு ஆர்வத்தைத் தூண்டும் வகையில் கற்பிக்கப்படுகின்றது என்பது தொடர்பான அவதானிப்பும் இந்தக் கிட்ஸை உருவாக்குவதற்குத் தூண்டுதலாக அமைந்தது.
லிட்டில் சை கிட்டின் முதலாவது வெளியீடாக வீட்டில் பயன்படுத்தக்கூடிய இலத்திரனியல் உபகரணங்களுக்குப் பின்னால் இருக்கக்கூடிய அறிவியலை விளங்கிக்கொள்ளக்கூடிய வகையில் Diy home automation kit எனப்படும் கிட்ஸ் வெளிவந்துள்ளது. இதன் மூலம் 5 இலத்திரனியல் உபகரணங்களின் செயற்பாடுகளை மாணவர்கள் புரிந்துகொள்ள முடியும். இரவில் தானியங்கியாக ஒளிரும் மின்விளக்கு எவ்வாறு இயங்குகிறது, சலவை இயந்திரம், நுண்ணலை அடுப்பு போன்றவற்றில் டைமர்கள் எவ்வாறு வேலை செய்கின்றன, வீட்டில் பொருத்தப்பட்டுள்ள அழைப்பு மணி எவ்வாறு இலகுவாக செய்யலாம், ஆள் நடமாட்டத்தின் போது தானாக ஒளிரும் மின்விளக்குகள், எச்சரிக்கை ஒலி எழுப்புதல் என்பவற்றை எவ்வாறு செய்யலாம், வீட்டினுள் வளர்க்கப்படும் செடிகளில் ஈரத்தன்மை குறையும் போது நீர் பாய்ச்சக் கூடிய கருவிகளின் செயற்பாடுகள் என்பவற்றை விளங்கிக்கொள்ளக் கூடிய வகையில் இந்தக் கிட் அமைக்கப்பட்டுள்ளது. அதனுடன் இணைக்கப்பட்டுள்ள வழிகாட்டி நூலில் இது தொடர்பான விளக்கம் வழங்கப்பட்டுள்ளது.
No description available.
இந்தக் கிட்ஸ் மாணவர்களுக்கான இலத்திரனியல் சார்ந்த அடிப்படை அறிவை வழங்கும். எடுத்துக்காட்டாக, பாடத்திட்டத்தில் இலத்திரனியல் கொள்ளளவிகள், ஒளியியல் தடையி, இலத்திரனியல் கூறுகள் போன்றவை பற்றி கற்கிறோம். அவற்றை எங்கு எப்படிப் பயன்படுத்துவது என்பதை இந்தக் கிட்ஸ் மூலம் அறிந்து கொள்ள முடியும். மேலும் இலத்திரனியல் கூறுகளை மாணவர்கள் தொட்டுணர்ந்து அவற்றின் வடிவம், செயற்பாடு, அவற்றை எப்படி இன்னொன்றுடன் இணைப்பது போன்றன தொடர்பிலும் கற்கக் கூடிய வாய்ப்பை இந்தக் கிட்ஸ் வழங்குகின்றது.
லிட்டில் சை கிட் தொடர்ந்தும் மாணவர்களுடைய பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறான பிரயோக ரீதியான கிட்ஸ்களை உருவாக்கவுள்ளது. அதன்படி, அடுத்து மின்காந்தப் புலத்தை அடிப்படையாகக் கொண்ட கிட்ஸ் தயாராகி வருகின்றது.
இந்த கிட்ஸ் மாணவர்களுக்காக உருவாக்கப்பட்டாலும் இவற்றை விலை கொடுத்து வாங்கக் கூடிய இயலுமையில் பெற்றோர்கள் இருப்பார்களா என்பது கேள்விக்குரிய விடயம். இதற்குத் தீர்வாக பாடசாலைகளின் பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் கிட்ஸ்களை வாங்கிப் பாடசாலைகளுக்கு அன்பளிப்பு செய்வதனூடாக அனைத்து மாணவர்களும் இதன் பயனைப் பெற முடியும்.
சை போர்ட் அக்கடமியின் மற்றொரு அங்கமாக விஞ்ஞான அறிவியல் சார்ந்த விடயங்களை உள்ளடக்கி விஞ்ஞானத் தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்ளும் வகைளில் சை போட் அக்கடமி எனும் செயலி ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் விஞ்ஞான விளக்கங்கள், புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள், விண்வெளி விஞ்ஞானத் தகவல்கள் எனப் பலவற்றையும் அறிந்துகொள்ள முடியும். விஞ்ஞானத் துறைசார் போட்டிகளும் இந்த செயலி ஊடாக உடனுக்குடன் இற்றைப்படுத்தப்படும். இதுவும் பாடசாலை மாணவர்கள் தொடக்கம் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பயனுடையதாக அமையும்.

பாகிஸ்தானில் கவிழ்க்கப்பட்டது இம்ரான்கான் அரசு – புதிய பிரதமராகிறார்

பாகிஸ்தான் அரசியலில் அதிரடி திருப்பங்களுடன் நேற்று நள்ளிரவு இம்ரான் கான் அரசு கவிழ்ந்தது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு பிரதமர் இம்ரான்கான் அரசின் நிர்வாக திறமையின்மையே காரணம் என்று கூறி எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் அரசுக்கு எதிராக தீர்மானத்தை கொண்டு வந்தன.

கடந்த 3-ந்திகதி நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடக்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அன்று, சட்டசபையை நடத்திய துணை சபாநாயகர், தீர்மானத்தை நிராகரிப்பதாக அறிவித்தார். வெளிநாட்டு சக்தி தூண்டுதலால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டதாக தெரிவித்தார். இதையடுத்து பாகிஸ்தான் பாராளுமன்றத்தை கலைத்து அதிபர் ஆரிப் ஆல்வி உத்தரவிட்டார்.

இவ்விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட்டு, பாகிஸ்தான் பாராளுமன்றத்தை கலைத்தது செல்லாது என்று அதிரடியாக தீர்ப்பு அளித்தது. மேலும் பாராளுமன்றத்தில் இம்ரான் கான் அரசு, மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஏற்கனவே இம்ரான் கான் அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது. முக்கிய கூட்டணி கட்சியான முத்தாஹிதா குவாமி இயக்கம் கட்சி தனது ஆதரவை வாபஸ் வாங்கியதால் அரசின் பலம் 164 ஆக குறைந்தது. மேலும் ஆளுங்கட்சியை சேர்ந்த 22 எம்.பி.க்கள் எதிர்க்கட்சிகளுடன் கைகோர்த்தனர்.

சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு படி நேற்று காலை பாராளுமன்றம் பரபரப்பான சூழலில் கூடியது. எதிர்க்கட்சி எம்.பி.க்கள். சபைக்கு வந்திருந்த நிலையில் பிரதமர் இம்ரான் கான் வரவில்லை. இம்ரான் கான் கட்சியான பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப்பை சேர்ந்த 51 எம்.பி.க்கள் பங்கேற்றனர். நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது எதிர்கட்சி தலைவர் ‌ஷபாஸ் ஷெரீப், வெளியுறவு மந்திரி ஷாமக் மூத்குரேஷி பேசினார்கள்.

பின்னர் சபையை பகல் 12.30 மணிவரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஆசாத் குவைசர் தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. பின்னர் எதிர்க்கட்சி உறுப்பினர்களும், ஆளுங்கட்சி உறுப்பினர்களும் தனித்தனியாக ஆலோசனையில் ஈடுபட்டதால் சபை மீண்டும் கூடுவதில் தாமதம் ஏற்பட்டது.

இப்தார் நோன்பு திறப்புக்காக அவை நடவடிக்கைகளை இரவு 7.30 மணிவரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார். நோன்பு திறப்புக்கு பிறகு சபை மீண்டும் கூடியபோது உடனடியாக இரவு 9.30 மணிவரை ஒத்திவைக்கப்பட்டு இரவு தொழுகைக்கு பிறகு மீண்டும் கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே பிரதமர் இம்ரான் கான் தலைமையில் அமைச்சரவை கூட்டம் இரவில் நடந்தது. அதில் இம்ரான் கான் தனது பதவியை ராஜினாமா செய்யமாட்டார் என்று முடிவு எடுக்கப்பட்டது.

அடுத்தடுத்த பரபரப்பான காட்சிகள் அரங்கேறிய நிலையில் நள்ளிரவு 12 மணிக்கு பாராளுமன்றம் மீண்டும் கூடியது. அப்போது சபாநாயகர் ஆசாத் குவைசர், துணை சபாநாயகர் காசிம் சூரி ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.

இதையடுத்து எதிர்க்கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம்லீக் (நவாஸ்) கட்சியை சேர்ந்த அயாஸ் சாதிக் அவைக்கு தலைமை தாங்கினார். அவர் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடவடிக்கைகளை தொடங்கினார். நள்ளிரவு 1.30 மணிக்கு இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பு நடந்தது.

342 உறுப்பினர்களை கொண்ட பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் ஆட்சியை காப்பாற்ற இம்ரான்கானுக்கு 172 பேரின் ஆதரவு தேவை. அவரது அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு 174 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். இம்ரான் கான் கட்சி உறுப்பினர்கள் வாக்களிக்கவில்லை. அதே போல அதிருப்தி எம்.பி.க்கள் வாக்களிக்கவில்லை.

இதன்மூலம் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றது. இதனால் இம்ரான்கான் அரசு கவிழ்ந்தது. இதைத்தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து இம்ரான் கான் நீக்கப்பட்டார். அவரை பதவியில் இருந்து நீக்கி பாராளுமன்றம் உத்தரவிட்டது.

இம்ரான்கான் அரசு கவிழ்ந்ததையடுத்து பாகிஸ்தானின் புதிய பிரதமர் நாளை தேர்ந்தெடுக்கப்படுகிறார். இதற்காக பாராளுமன்றம் நாளை மீண்டும் கூடுகிறது. சபைக்கு தலைமை தாங்கிய பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியை சேர்ந்த அயாஸ் சாதிக் கூறும்போது, ‘புதிய பிரதமருக்கான வேட்புமனுக்கள் இன்று மதியம் 2 மணிக்குள் சமர்ப்பிக்கப்படலாம் என்றும் பிற்பகல் 3 மணிக்குள் ஆய்வு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

நாளை காலை 11 மணிக்கு அமர்வை கூட்டி உள்ளார். அப்போது புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கூறினார். அதே வேளையில், பாகிஸ்தான் தேசிய சட்டமன்றம் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தேசிய சட்டமன்ற கூட்டம் (பாராளுமன்றம்) ஏப்ரல் 11-ந்தேதி காலை 11 மணிக்கு பதிலாக பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் புதிய பிரதமராக ‌ஷபாஸ் ஷெரீப் தேர்ந்தெடுக்கப்படுகிறார். பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி தலைவரான ‌ஷபாஸ் ஷெரீப்பை பிரதமராக தேர்ந்தெடுத்து எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் அவர் புதிய பிரதமராக தேர்வு செய்யப்படுவது உறுதியாகி இருக்கிறது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் சகோதரர் ‌ஷபாஸ் ஷெரீப் ஆவார். அவர் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதல்- மந்திரியாக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒஸ்கார் அறிவிப்பாளரை அறைந்ததற்காக வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டுகள் தடை !

94-வது ஒஸ்கார் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் சிறந்த நடிகருக்கான ஒஸ்கார் விருது ஹாலிவுட் நடிகர்  வில் ஸ்மித்திற்கு முதன்முறையாகக் கிடைத்தது. ‘கிங் ரிச்சர்ட்’ திரைப்படத்தில் நடித்ததற்காக இந்த விருதை அவர் வென்றார்.

விருது வழங்கும் விழாவில் வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட் பற்றி தொகுப்பாளரும், காமெடி நடிகருமான கிறிஸ் ராக், நகைச்சுவையாக பேசினார். அப்போது ஜடா பிங்கெட்டின் தலைமுடியை கிறிஸ் ராக் கிண்டல் செய்தார். அதனால் அதிருப்தி அடைந்த வில் ஸ்மித் மேடைக்கு சென்று கிறிஸ் ராக் கன்னத்தில் அறைந்தார்.

அதன்பின், வில் ஸ்மித் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டார். சக நடிகரை வில் ஸ்மித் தாக்கிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கிடையே, ஒஸ்கார் மேடையில் நிகழ்ச்சி தொகுப்பாளர் கிறிஸ் ராக்கின் கன்னத்தில் அறைந்த விவகாரம் தொடர்பாக வில் ஸ்மித் ஒஸ்கார் அகடமி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

ஒஸ்கார் விருது விழா மற்றும் பிற அகடமி நிகழ்வுகளில் கலந்துகொள்ள வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டுகள் தடை விதித்து அகடமி அமைப்பு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒஸ்கார் மேடையில் வில் ஸ்மித் வெளிப்படுத்தியது ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தை ஆகும். இந்த எதிர்பாராத சம்பவத்துக்காக நாங்கள் வருந்துகிறோம். அந்த அசாதாரண சூழலிலும் அமைதி காத்த கிறிஸ் ராக்கிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

ஸ்மித்துக்கு தடை என்னும் முடிவு கலைஞர்கள் மற்றும் விருந்தினர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கத்தோடும், அகடமியின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்கும் நோக்கத்தோடும் எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தது.

இந்நிலையில், ஆஸ்கர் அமைப்பின் முடிவை மதித்து ஏற்றுக்கொள்வதாக வில் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் வழங்கிய ஜப்பான் பாதாள உலகத்தலைவர் அமெரிக்காவில் கைது !

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தரையில் இருந்து தாக்க கூடிய ஏவுகணைகளை வழங்க முயற்சித்த ஜப்பானிய பாதாள உலகத் தலைவர் ஒருவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் அவருடன் சேர்த்து மூன்று தாய்லாந்து நபர்களையும் கைது செய்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த மூவரும் நியூயோர்க்கில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் போதைப்பொருள் மற்றும் ஆயுத கடத்தல் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தானியங்கி ஆயுதங்கள், ரொக்கெட்டுகள், இயந்திர துப்பாக்கிகள் மற்றும் தரையிலிருந்து வான்நோக்கி தாக்கக்கூடிய ஏவுகணைகளை ஜப்பானிய பாதாள உலகத் தலைவர் வழங்கியுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் நியூயோர்க்கில் கைது செய்யப்பட்ட குறித்த நான்கு பேரும் அமெரிக்காவிற்குள் எப்படி நுழைந்தனர் என்பதை அமெரிக்க நீதித்துறை அதிகாரிகள் விளக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஐநா மனித உரிமைகள் பேரவையில் இருந்து ரஷ்யா நீக்கம் !

உக்ரைன் மீதான படையெடுப்பின் அட்டூழியங்கள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, ஐநா மனித உரிமைகள் பேரவையில் இருந்து ரஷ்யாவை ஐநா பொதுச் சபை இடைநீக்கம் செய்துள்ளது.

உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போரானது தொடர்ந்து 43வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் துறைமுக நகரான மரியுபோலில் ரஷிய படைகள் ஊடுருவலுக்கு பிறகு 5 ஆயிரம் உக்ரைனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என அந்நகர மேயர் வாடிம் பாய்சென்கோ தெரிவித்துள்ளார்.

ரஷியா மீது கடுமையான புதிய பொருளாதார தடைகளை விதிக்க மேற்கத்திய நாடுகள் தயராகியுள்ளன. ஐ.நா.வில் இருந்து ரஷியாவை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று ஜி 7 நாடுகள் வலியுறுத்தி இருந்தன.

உக்ரைனில் ரஷியாவால் நிகழ்த்தப்பட்டதாக கூறப்படும் போர் குற்றங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் புடினின் இரண்டு மகள்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. மேலும் ரஷிய வங்கிகள் மீதான தடைகளை கடுமையாக்கியுள்ளது. ரஷியாவின் ஸ்பெர் வங்கி, ஆல்பா வங்கி ஆகியவை அமெரிக்க நிதி அமைப்பை தொடர்புகொள்ள முடியாது. இந்த வங்கிகளை அமெரிக்கர்களும் பயன்படுத்த இயலாது என கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷியாவை வெளியேற்ற வாக்கெடுப்பு நடத்துவதற்கான அவசரகால சிறப்பு கூட்டம் தொடங்கி நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் பேசிய ஐ.நா.வுக்கான உக்ரைன் பிரதிநிதி, ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷிய கூட்டமைப்பின் உறுப்பினர் உரிமையை ரத்து செய்ய வேண்டும் என்பது ஒரு வாய்ப்பல்ல. அது ஒரு கடமை என கூறியுள்ளார்.

ஐ.நா. பொது சபையில் ரஷியா சார்பிலான பிரதிநிதி பேசும்போது, இந்த வரைவு தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், நடைமுறையில் இருக்கும் மனித உரிமைகளுக்கான கட்டமைப்பை அழிக்கும் மேற்கத்திய நாடுகள் மற்றும் அவர்களுடைய கூட்டணி நாடுகளின் முயற்சிக்கு எதிராக வாக்களிக்கவும், உண்மையில் உங்களுடைய முடிவை பரிசீலனை செய்யவும், அவையில் கூடியுள்ள அனைவரையும் நாங்கள் அழைக்கிறோம் என கூறியுள்ளார்.

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷிய கூட்டமைப்பை வெளியேற்றுவதற்கான வரைவு தீர்மானத்தின் மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் இருந்து இந்தியா உள்ளிட்ட 57 நாடுகள் விலகி இருந்தன. வாக்கெடுப்பில் கலந்து கொண்ட நாடுகளில் தீர்மானத்திற்கு ஆதரவாக 93 நாடுகளும், எதிராக 24 நாடுகளும் வாக்கு பதிவு செய்துள்ளன.

உலகை உலுக்கிய புச்சா படுகொலை சம்பவ விவகாரம் – உண்மையான குற்றவாளிகள் பிரித்தானியாவும் – உக்ரைன் இராணுவமுமா..? அதிர்ச்சி வீடியோ.. !

உக்ரைனின் கீவ் புறநகரில் 410 பேரின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில் புச்சா நகரில் கொலை, சித்திரவதை, பலாத்காரம், கொள்ளை போன்ற சம்பவங்கள் நடந்துள்ளதாக உக்ரைன் அதிபர் சரமாரியாக குற்றம்சாட்டி உள்ளார்.

உக்ரைன் தலைநகர் கீவ்வை சுற்றியுள்ள நகரங்களின் தெருக்களில் 410க்கும் மேற்பட்ட உக்ரைன் மக்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, அந்நாட்டு அதிபர் ஜெலென்ஸ்கி வெளியிட்ட வீடியோவில், ரஷ்யப் படைகளை கொலைகாரர்கள், சித்திரவதையாளர்கள், பலாத்காரக்காரர்கள் என்று கடுமையாக சாடியுள்ளார்.

இதுதொடர்பாக அவரது வீடியோ பதிவில், ‘உக்ரைனில் ரஷ்யப் படைகள் நடத்திய அனைத்து குற்றங்களையும் விசாரிப்போம். சிறப்பு விசாரணை குழுவை அமைப்போம். நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர். பெண்களை பலாத்காரம் செய்துள்ளனர். பொருட்களை கொள்ளையடித்துள்ளனர். அவர்களுக்கு மரணம் மட்டுமே சரியான தீர்ப்பாக இருக்கும். ஒவ்வொரு ரஷ்ய வீரரின் தாயும் புச்சா, இர்பின், ஹோஸ்டோமலில் கொல்லப்பட்ட மக்களின் உடல்களைப் பார்க்க வேண்டும். அவர்கள் உங்களை என்ன செய்தார்கள்? ஏன் அப்பாவிகள் கொல்லப்பட்டார்கள்? தெருவில் சைக்கிளில் சென்றவர் உங்களுக்கு என்ன செய்தார்? அமைதியான நகரத்தில் வசித்த மக்கள் ஏன் சித்திரவதை செய்யப்பட்டனர்? பெண்களின் காதுகளில் இருந்து காதணிகள் பிடுங்கி கழுத்தை நெரித்து கொன்றது ஏன்? குழந்தைகள் முன்னிலையில் பெண்களை எப்படி உங்களால் பலாத்காரம் செய்து கொல்ல முடியும்? இறந்த பிறகும் அவர்களின் சடலங்களை ஏன் அவமதித்தீர்கள்? டாங்கிகளை கொண்டு அவர்களின் உடல்களை ஏன் நசுக்கினார்கள்? புச்சா நகரம் ரஷ்யாவிற்கு என்ன பாவம் செய்தது? இதெல்லாம் எப்படி சாத்தியமானது? ரஷ்ய தாய்மார்களே! நீங்கள் கொள்ளையர்களை வளர்த்தாலும் கூட, அவர்களும் எப்படி கசாப்புக் கடைக்காரர்கள் ஆனார்கள்? வேண்டுமென்றே மக்களை கொன்றுள்ளனர்’ என்று ஆவேசமாக பேசினார்.

உக்ரைன் அதிபர் பேச்சுக்கு மத்தியில், ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா அளித்த பேட்டியில்,

‘புச்சா நகரில் நடந்துள்ள சம்பவங்கள், உக்ரைன் இராணுவத்தாலும், தீவிர தேசியவாதிகளாலும் நடத்தப்பட்டவை. புச்சா விவகாரம் இருநாடுகளுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுக்களை சீர்குலைக்கும். மேலும்  வன்முறையை அதிகரிக்கும். கடந்த மார்ச் 30ம் தேதி புச்சா பகுதியில் இருந்து ரஷ்ய ராணுவம் வெளியேறிவிட்டது. அதற்கு பின்னர் நான்கு நாட்களுக்குப் பிறகுதான் கொலைக் குற்றங்கள் பற்றிய சான்றுகள் வெளிவந்தன. புச்சா நகரத்தின் மேயர் அனடோலி ஃபெடோருக் வெளியிட்ட வீடியோவில், ‘புச்சாவில் ரஷ்ய துருப்புக்கள் இல்லை’ என்பதை உறுதிப்படுத்தினார். எனினும் அவர் பொதுமக்கள் வீதியில் சுட்டுக் கொல்லப்பட்ட விபரங்கள் தொடர்பாக ஒரு வார்த்தை கூட பேசவில்லை’ என்று கூறினார்.

இதே நேரம் புச்சாவில் இடம்பெற்ற படுகொலைகள், பிரித்தானியாவால் திட்டமிடப்பட்டு உக்ரைனால் அரங்கேற்றப்பட்டது என உக்ரேனிய எம்.பி. Ilya Kiva தெரிவித்துள்ளார். உக்ரைன் எம்.பி. Ilya Kiva வெளியிட்ட வீடியோவில், புச்சாவில் நடந்தது பிரித்தானியா MI6 உளவுத்துறையால் திட்டமிட்டப்பட்டு, உக்ரைனின் SBU-வால் அரங்கேற்றப்பட்டது.

உக்ரைன் SBU படைகள், அதிகாலையில் புச்சாவிக்கு சென்று, அப்பகுதியை சுற்றி வளைத்து, சாலையில் சடலங்கைளை சிதறித்தனர். பின் அவர்கள் ஊடகவியலாளர்களை வரவழைத்தனர். இதனையடுத்து, சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்க்க சம்பவயிடத்திற்கு ஜெலன்ஸ்கி சென்றார். ஆனால், அவை அனைத்தும் போலியானது. ஏன் இதுபோன்ற நிலைமை Sumy அல்லது CHernihiv-வில் இல்லை? என எம்.பி. Ilya Kiva கேள்வி எழுப்பியுள்ளார்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது ஒருபுறமிருக்க உக்ரைனின் புச்சா நகரில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக சர்வதேச அளவில் ரஷ்யப் படைகளுக்கு எதிராக கண்டனங்கள் வலுத்து வருகின்றன. ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில், புச்சா படுகொலை தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என ஐ.நா சபை பொது செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், ‘புச்சாவில் கொல்லப்பட்ட மக்களின் படங்களை பார்த்து அதிர்ச்சியடைந்தேன். இதற்கு காரணமானவர்கள் உரிய பதில் அளிக்க வேண்டும். சுயாதீன விசாரணை நடத்தப்பட்ட வேண்டும்’ என்று கூறினார்.

போலந்து அதிபர் ஆண்ட்ரேஜ் டுடா வெளியிட்ட அறிவிப்பில், ‘மேற்கத்திய நட்பு நாடுகள் உக்ரைனுக்கு அதிகளவில் ஆயுதங்களை அனுப்ப வேண்டும். அமைதி பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவுக்கு கொண்டு வரமுடியும் என்ற நம்பிக்கையை புச்சாவில் இருந்து வெளியாகும் புகைப்படங்கள் பொய்யாக்குகின்றன. எனவே, உக்ரைன் படைகளுக்கு இப்போதைக்கு மூன்று விஷயங்கள் மட்டுமே தேவை. அதாவது ஆயுதங்கள், ஆயுதங்கள், நிறைய ஆயுதங்கள்…’ என்று தெரிவித்துள்ளார்.

கலைக்கப்பட்டது பாகிஸ்தான் பாராளுமன்றம் !

பாகிஸ்தானில் பணவீக்கம் அதிகரித்து, பொருளாதார நெருக்கடி எழுந்துள்ள நிலையில், பிரதமர் இம்ரான் கானை பதவிநீக்கம் செய்ய பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கிடையே, பாகிஸ்தான் பாராளுமன்றம் இன்று காலை கூடியபோது இம்ரான் கான் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் துணை சபாநாயகரால் ரத்து செய்யப்பட்டது. இந்த தீர்மானம் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது எனக்கூறி தீர்மானத்தை நிராகரித்தார்.

இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அந்நாட்டு அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் கூறியதாவது:

துணை சபாநாயகரின் முடிவை ஒவ்வொரு பாகிஸ்தானும் வரவேற்றுள்ளனர். நம்பிக்கையில்லா தீர்மானம் பாகிஸ்தான் அரசுக்கு எதிரான வெளிநாட்டு சதியாகும். நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிராகரிக்கும் முடிவு சரியானதே.

பாகிஸ்தான் பாராளுமன்றத்தைக் கலைக்க வேண்டும். பாராளுமன்றத்தை கலைத்து விட்டு தேர்தல் நடத்த வேண்டும். ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும். பாகிஸ்தான் மக்கள் தேர்தலுக்கு தயாராக வேண்டும். பாகிஸ்தானை யார் ஆட்சி செய்ய வேண்டும் என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், இம்ரான்கானின் பரிந்துரையை ஏற்று பாராளுமன்றத்தை கலைத்து பாகிஸ்தான் அதிபர் அறிவித்துள்ளார்.

கனடாவில் மீட்கப்பட்ட 1000 பழங்குடி குழந்தைகளின் எலும்புக்கூடுகள் – மன்னிப்பு கோரினார் போப் ஆண்டவர் பிரான்சிஸ் !

கனடாவில் பழங்குடி மாணவர்கள் துன்புறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் ஆண்டவர் பிரான்சிஸ் மன்னிப்பு கோரியுள்ளார்.

‘நான் மிகுந்த வேதனைக்கு உள்ளாகி இருக்கிறேன் என்பதை என் இதயத்தில் இருந்து உங்களுக்கு கூற விரும்புகிறேன்’ என அவர் கூறினார்.

மேலும், கனடா பேராயர்களுடன் இணைந்து தான் மன்னிப்பு கோருவதாகவும் விரைவில் கனடா செல்ல உள்ளதாகவும் அவர் அறிவித்தார்.

கனடாவில் 19ஆம் நூற்றாண்டு தொடங்கி, 1970ஆம் ஆண்டுகள் வரை பூர்வகுடி குழந்தைகள் மற்ற சமூகத்தினரிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டு தேவாலயப் பாடசாலைகளில் கல்வி பயில கட்டாயப்படுத்தப்பட்டனர்.

பழங்குடியினரிடையே மதத்தையும், அந்தக் காலத்து அரசுகள் மிக உயர்வாகக் கருதிய தங்களது கலாசாரத்தையும் திணிப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, தேவாலயங்கள் நடத்திய பாடசாலைகளில் மாணவர்கள் பல்வேறு வகைகளில் துன்புறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அத்துடன், கனடாவில் தேவாலயங்கள் நடத்திய பாடசாலைகளின் அருகே நடத்தப்பட்ட ஆய்வுகளில் 1000 பழங்குடி குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. இது உலகளவில் அதிர்வுகளை ஏற்படுத்தின.

இதற்கு, தற்பேதைய போப் ஆண்டவர் பிரான்சிஸ் மன்னிப்பு கோர வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில், வத்திகானில் நேற்று ஃ(வெள்ளிக்கிழமை) நடைபெற்ற கூட்டத்தில் கனடா பூர்வகுடியினரிடம் போப் பிரான்சிஸ் மன்னிப்பு கோரினார்.

“உலகம் முழுதும் பொருட்களின் விலை உயர்வுக்கு புடின் தான் காரணம்.” – என்கிறார் ஜோபைடன் !

உக்ரைன்- ரஷ்யா இடையே இன்று 38வது நாளாக போர் நடந்து வருகிறது. உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பால் உலகளவில் எரிவாயு மற்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது என்றும் இதற்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புடின்தான் காரணம் என்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் குற்றம்சாட்டி உள்ளார்.

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ஜோ பைடன் கூறியதாவது:-

உக்ரைனில் புடினின் படையெடுப்பினால், உலகம் முழுவதும் எரிவாயு விலை மற்றும் உணவு பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளது.  அதை சமாளிக்க உதவுவதற்காக எங்களின் பெட்ரோலிய இருப்புகளில் இருந்து அடுத்த ஆறு மாதங்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் பீப்பாய்களை அனுப்புவதற்கு அங்கீகரித்துள்ளேன்.

தனது நடவடிக்கையின் மூலம் பெட்ரோல் விலை எவ்வளவு குறையும் என்று தெரியவில்லை. ஆனால் அது ஒரு கேலன் 10 சென்ட் முதல் 35 காசுகள் வரை ஏதேனும் இருக்கலாம்.

எரிவாயு விலையை குறைக்க வேண்டும் என்றால் அதிக எண்ணெய் விநியோகம் இருக்க வேண்டும். இது உலகத்திற்கான விளைவு மட்டுமல்ல ஆபத்தின் தருணம்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.