09

09

காதல் விவகாரத்தால் 17 வயது சிறுமி தற்கொலை – தந்தையும் எடுத்த விபரீத முடிவு !

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள களுவங்கேணி பிரதேசத்தில், நேற்று மாலை, 17 வயது சிறுமி ஒருவர் நஞ்சு அருந்தி தற்கொலை செய்து கொண்டதையடுத்து, இன்று காலை சிறுமியின் தந்தை வீட்டின் கூரையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.

களுவங்கேணி முதலாம் பிரிவு அக்கரைவீதியைச் சேர்ந்த 17 வயதுடைய கிருஷ்ணகுமார் கிறிஷ்கா, அவருடைய தந்தையான 53 வயதுடைய முத்து கிருஷ்ணகுமார் ஆகிய இருவருமே இவ்வாறு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த சிறுமி ஆடை தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்துவருவதாகவும் இளைஞன் ஒருவரை அவர் காதலித்துவரும் நிலையில் சிறுமியின் தந்தை காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சம்பவதினமான நேற்று மாலை வீட்டில் நஞ்சு அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனையடுத்து சிறுமி தற்கொலைக்கு காரணம் சிறுமியின் தந்தை தான் என அயலவர்கள் பேசத்தொடங்கியதையடுத்து சிறுமியின் தந்தை இன்று காலையில் வீட்டின் கூரையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்படுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்த இரு சடலங்களையும் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கையினை பொலிசார் மேற்கொண்டுவருவதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“போராடுவோர் மீது தடியடி நடத்துங்கள்.” – ஆளுங்கட்சி உறுப்பினர் ஆலோசனை !

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக தடிகளைப் பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தற்போது பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள சுகாதார நிபுணர்களின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த தொழிற்சங்க நடவடிக்கைகளால் பொதுமக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதால் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு ஏற்பட்ட அசௌகரியத்தின் காரணமாக ஜே.வி.பி.யின் பாராளு மன்ற உறுப்பினர் அனுர திஸாநாயக்க, விஜித ஹேரத் ஆகியோர் முட்டை மற்றும் தடிகளால் தாக்கப்பட்டதையும் அவர் நினைவு கூர்ந்தார்.

இது போன்ற போராட்டங்களில் பொதுமக்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்த ஒரே வழி, தடியடிதான் என்றும் அவர் கூறினார்.

புலிகளை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் வைத்திருப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இலங்கை பாராட்டு !

பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதை இலங்கை குறைக்கவேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கையும் தங்களின் கூட்டு ஆணைக்குழுவின் 24வது கூட்டத்தினை 8 ம் திகதி பிரசல்ஸ்சில் நடத்தின. சினேகபூர்வ திறந்த சூழ்நிலையில் இடம்பெற்ற இந்த சந்திப்பு இருதரப்பு உறவுகள் குறித்தும் ,நல்லாட்சி நல்லிணக்கம் மனித உரிமைகள் வர்த்தகம் காலநிலை மாற்றம் சூழல் பாதுகாப்பு பயங்கரவாதம் உட்பட இரு தரப்பு நலன்களுடன் தொடர்புடைய பல தரப்பட்டவிடயங்கள் குறித்து கருத்துக்களை பரிமாறியது.

கொவிட் 19 பெருந்தொற்றினை பொறுத்தவரை இலங்கையின் சிறப்பான தொற்றுநோய் மூலோபாயத்திற்காக ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையை பாராட்டியது. பெருந்தொற்றினால் தீவிரமடைந்துள்ள பலவீனங்கள், சமத்துவமின்மைகளிற்கு தீர்வை காணவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஐரோப்பிய ஒன்றியம் கொவிட்தடுப்பூசிகள் வருமானம் குறைந்த – நடுத்தர வருமானம் பெறும் நாடுகளிற்கு நியாயமான – சமமான முறையில் கிடைப்பதை உறுதி செய்வதற்கான தனது அர்ப்பணிப்பை வலியுறுத்தியது.

சர்வதேச தடுப்பூசி சமத்துவத்திற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் பங்களிப்பை இலங்கை வரவேற்றது.
ஐரோப்பிய ஒன்றியத்திலும் இலங்கையிலும் உரிய நடவடிக்கைகள் மற்றும் சட்ட மூலங்கள் குறித்து தகவல்களை பரிமாறுவதற்கு இந்த சந்திப்பு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தது. ஜனநாயகம் நல்லாட்சி சட்டத்தின் ஆட்சி மனித உரிமைகள் சிறுபான்மையினத்தவர்களின் உரிமைகள் கருத்துசுதந்திரம் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் போன்றவை குறித்து கலந்துரையாடல்களின் போது கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கை நல்லிணக்கம்,மற்றும் சுயாதீன ஸ்தாபனங்கள் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து எடுத்துரைத்தது. குறிப்பாக காணாமல்போனவர்களின் அலுவலகம்,இழப்பீட்டுக்கான அலுவலகம்,தேசிய ஐக்கியம் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் இலங்கையின் மனித உரிமை ஆணையகம் ஆகியவை குறித்து இலங்கைசுட்டிக்காட்டியது.

ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை மனித உரிமை பேரவை மற்றும் அதன் பொறிமுறைகளுடன் ஈடுபாட்டை ஒத்துழைப்பை தொடரவேண்டும் என வலுவான விதத்தில் வலியுறுத்தியுள்ளது.இந்த சூழமைவில் ஐரோப்பிய ஒன்றியம் சுயாதீன அமைப்புகள் சுதந்திரமாகவும்,சிறப்பாகவும் செயற்படுவதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது. சிவில் சமூகத்தை வலுப்படுத்தவேண்டியதன் ,அது அதன் முழுமையான பன்முகத்தன்மையுடன் செயற்படுவதற்கான தளத்தை வழங்கவேண்டியதன் முக்கியத்துவத்தை ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கையும் ஏற்றுக்கொண்டன.

நீதிச்சீர்திருத்தம் மற்றும் நல்லிணக்கத்திற்கு இலங்கைக்கான தனது தொடர்ச்சியான ஆதரவை ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் முன்மொழிந்துள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தின் மீதான திருத்தங்கள் என சமர்ப்பிக்கப்பட்டவற்றை ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்றது.
எனினும் வர்த்தமானியில் வெளியாகியுள்ள திருத்தப்பட்ட சட்டமூலத்தில் முக்கியமான கூறுகள் இடம்பெற்றிருக்கவில்லை என ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை சர்வதேச தராதரத்திலானதாக மாற்றுவதற்காக எடுக்கப்பட வேண்டிய மேலதிக நடவடிக்கைகள் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்த கருத்துக்களை இலங்கை கருத்தில் எடுத்தது. ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையை பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதை குறைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளதுடன் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படாமல் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களை பிணையில் விடுதலை செய்வதற்கான நடைமுறை சாத்தியமான நிர்வாக நடவடிக்கைகளை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

 

விடுதலைப்புலிகளை தொடர்ந்தும் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் வைத்திருப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இலங்கை தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் ஆகிய விடயங்களில் ஒத்துழைப்பு குறித்து இலங்கையும் ஐரோப்பிய ஒன்றியமும் ஆராய்ந்துள்ளன. விடுதலைப்புலிகளை தொடர்ந்தும் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் வைத்திருப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இலங்கை தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளது.

பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தின்போது சர்வதேச தராதரங்களைபின்பற்றவேண்டியதன் அவசியத்தை இரு தரப்பும் வலியுறுத்தியுள்ளன.

“இந்தியாவை ஏமாற்றவே அமைச்சர் ஜி.எல்.பீரிஸின் இந்திய விஜயம்.” – இந்திய ஊடகத்திடம் விக்கினேஸ்வரன் !

இந்தியாவை தனது நட்பு நாடென காட்டிக்கொள்ளும் விதமாக, இந்தியாவிற்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்கி இந்தியாவை ஏமாற்றும் நடவடிக்கையே இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸின் இந்திய விஜயம் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

எனவே வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸின் வாக்குறுதிகளை நம்பி இந்தியா ஏமாந்துவிட கூடாது என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்கினேஸ்வரன் இந்திய ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களுக்கு அதிகாரப்பகிர்வு வழங்கப்படும் என்பது உள்ளிட்ட இந்தியாவிற்கு கடந்த காலத்தில் வழங்கப்பட்ட எந்தவொரு வாக்குறுதியையும் இலங்கை அரசாங்கம் நிறைவேற்றவில்லை என குறிப்பிட்டார்.

ஆகவே இனப் படுகொலை குறித்த சர்வதேச விசாரணையை இந்தியா நேரடியாக வலியுறுத்தாமல் விட்டாலும் ஏனைய நாடுகளின் ஊடாக அதனை முன்னெடுப்பதற்குரிய இராஜதந்திர நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

மேலும் இந்தியாவினால் எவ்வளவு தூரத்திற்கு எமது அதிகாரங்களை பலப்படுத்த முடியுமோ அதுவே இந்தியாவின் பாதுகாப்பிற்கும் கைகொடுக்கும் என்றும் க.வி.விக்கினேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

“தமிழர்களின் பிரச்சினை தொடர்பாக இந்தியா எந்த அழுத்தமும் தரவில்லை.” – ஜீ.எல்.பீரிஸ்

“தமிழர்களின் பிரச்சினை தொடர்பாக இந்தியாவிடம் இருந்து எவ்வித அழுத்தமும் பிரயோகிகக்கப்படவில்லை.” என  இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார நிலை மற்றும் சீனாவுடனான  உறவு குறித்தும் இந்திய ஊடகங்களிற்கு ஜி.எல்.பீரிஸ் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

நல்லிணக்கம் மற்றும் வடக்கு, கிழக்கிற்கான அதிகாரப் பகிர்வு ஆகிய விடயங்கள் தொடர்பாக சிங்கள பெரும்பான்மையினரிடமிருந்து போதுமான ஒருமித்த கருத்து எட்டப்படாவிட்டால் எந்த முடிவையும் செயற்படுத்த முடியாது.

மேலும் புதிய அரசியலமைப்பு பணிகளுக்காக நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவொன்று இரண்டு மாதங்களுக்குள்  அரச தலைவரிடம் வரைவை சமர்ப்பிக்கும் என தெரிவித்த அவர்,  நாட்டின் பொருளாதார நிலை மற்றும் சீனாவுடனான  உறவு குறித்தும் இந்திய ஊடகத்திற்கு  கருத்து வெளியிட்டிருந்தார். குறிப்பாக சுற்றுலாத்துறை வீழ்ச்சி மற்றும் வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களிடமிருந்து கிடைக்கும் பணம் என்பன குறைந்தமை காரணமாக நிதி அழுத்தத்திற்கு முகம் கொடுத்தவுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் இரு நாடுகளுக்கிடையிலான மின்சார இணைப்பு மற்றும் கொழும்பு துறைமுகத்தில் மேற்கு கொள்கலன் முனைய அபிவிருத்தி குறித்தும் பேசப்பட்டதாக ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மின்சாரம் கிடைக்குமாக இருந்தால் அது பாரியளவில் நன்மை பயக்கும் என்றும் மேற்கு கொள்கலன் முனைய அபிவிருத்தி இரண்டு, மூன்று மாதங்களில் தொடங்கும் என எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.

தமிழர்களின் பிரச்சினை தொடர்பாக இந்தியாவிடம் இருந்து எவ்வித அழுத்தமும் பிரயோகிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார். மேலும் புதிய அரசியலமைப்பு உருவாக்கும் பணிகள் இடம்பெற்றுவருவதாகவும் அதில் அதிகாரப் பகிர்வு குறித்து விசேட கவனம் செலுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ் இந்திய விஜயம் – இலங்கை தமிழர்கள் தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன .?

இந்தியாவிற்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக சென்றுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸூடனான சந்திப்பின்போது இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் “தமிழ் மக்களுக்கான உரிமைகள் தொடர்பில் வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நெருக்கமான மற்றும் நட்புறவை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து இந்த சந்திப்பில் ஆராயப்பட்டது. ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களிற்கு சமத்துவம் நீதி சமாதானம் கௌரவம் ஆகியவற்றினை உறுதிப்படுத்துவதே இலங்கையின் நலனிற்கு உகந்த விடயம் என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார் இதற்கு அதிகாரப்பரவல் மிக முக்கியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கடற்றொழிலாளர்கள் பிரச்சினையை மனிதாபிமான அணுகுமுறையின் மூலம் கையாளவும், வன்முறையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும் நீண்ட காலமாக ஒருமித்த கருத்தை இரு தரப்பினரும் வலியுறுத்தினர். மீன்பிடித்துறைக்கான கூட்டுப் பணிக்குழுவில் தொடங்கி இருதரப்பு வழிமுறைகள் முன்கூட்டியே சந்திக்க வேண்டும் என்று அவர்கள் ஒப்புக்கொண்டனர்.