19

19

“என்னுடன் முரண்பட்டால் விசேட அதிரடிப் படையினர் புரட்டிப்போட்டு முதுகைப்புண்ணாக்குவார்கள்.” – பருத்ததிதுறை மீனவர்கள் பற்றி அமைச்சர் டக்ளஸ் !

பருத்தித்துறை சூப்பர் மடத்தில் உள்ளவர்களோடு நான் கதைக்க போனால் அவர்களது உடம்புதான் புண்ணாகும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இன்று மானிப்பாயில் புதிதாக அமைக்கப்பட்ட பனை தென்னை வள அபிவிருத்தி சங்கங்களின் கொத்தணியின் பிரதான அலுவலகத்திற்கான கட்டடத்தை திறந்து வைத்தபின்னர் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

சூப்பர் மடத்தில் உள்ளவர்கள் அன்றையதினம் குடித்துவிட்டு வெறியில் கூத்தடிக்கும்போது நான் அவ்விடத்திற்கு சென்றுவிட்டு திரும்பி வந்தேன். அப்போது ஒரு ஊடகவியலாளர் ” ஏன் நீங்கள் திரும்பிச் செல்கின்றீர்கள்?” என என்னைக் கேட்டார்.

அதற்கு நான் “இங்கு உள்ளவர்கள் குடித்துவிட்டு வெறியில் கூத்தடிக்கின்றனர். எனவே நான் அவர்களுடன் பேசினால் அவர்களது முதுகுதான் வீணாக புண்ணாகும்.

ஏனெனில் குடித்துவிட்டு வெறியில் சூப்பர் மடத்தில் நின்று கூத்தடிப்பவர்கள் என்னுடன் முரண்பட்டால் என்னுடன் வந்த விசேட அதிரடிப் படையினரும் காவல்துறையினரும் இணைந்து அவர்களை புரட்டிப்போட்டு, அவர்களுடைய முதுகுகளைப் புண்ணாக்கியிருப்பார்கள் – என்றார்.

“13 ஆம் திருத்தத்திற்கு அப்பால்சென்று அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வுக்கு உதவும் இந்தியாவுக்கு நன்றி.” – கூட்டமைப்பினர் !

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று பிற்பகல் இந்திய இல்லத்தில், இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே, துணைத் தூதுவர் வினோத் ஜேக்கப், அரசியல்துறை முதன்மை செயலாளர் பானுபிரகாஷ் ஆகியோரை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், பேச்சாளர் எம்.எ.சுமந்திரனும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இந்தச் சந்திப்பில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்ஷங்கர் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர், அடுத்தமாதம் இலங்கைக்கு வருவதற்கான சாத்தியகூறுகள் பற்றி பேசப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு வடகிழக்கின் பொருளாதார அபிவிருத்தியில் இந்தியாவின் பங்களிப்பு பற்றி விரிவாக ஆராயப்பட்டது.

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின்போதும்  அதற்கு பின்னரும் இலங்கையின் தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு சம்பந்தமாக, தொடர்ந்துவந்த இலங்கை அரசாங்கங்கள் இந்தியாவுக்கு கொடுத்த வாக்குறுதிகளில், 13 ஆம் திருத்தத்திற்கு அப்பால்சென்று அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு முறையை உருவாக்குவதாக இருந்தது.

இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றப்பண்ணுவதில் இந்தியா தொடர்ச்சியாக எடுக்கும் முயற்சிகளுக்கு நன்றி தெரிவிக்கின்ற அதேவேளையிலே, தொடர்ந்தும் இந்தியா அந்த பங்களிப்பை செய்து இலங்கையில், தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முன்வைத்தார்.

சுமார் ஒன்றரை மணிநேரம் நடந்த இந்தச் சந்திப்பில் வேறு  பலவிடயங்களும் தீர்க்கமாக ஆராயப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

“எனது நெஞ்சிலே இருந்து சொல்கின்றேன்.வடக்கு, கிழக்கு, தெற்கு என்ற எந்த வேறுபாடும் என்னிடம்  இல்லை.” – வவுனியாவில் மைத்திரிபால !

“எனது நெஞ்சிலே இருந்து சொல்கின்றேன்.வடக்கு, கிழக்கு, தெற்கு என்ற எந்த வேறுபாடும் என்னிடம்  இல்லை. அனைவரையும் இந்த நாட்டு மக்கள் என்று தான் பார்கின்றேன்.” என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வன்னி மாவட்ட மாநாடு வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றுள்ளது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

“வன்னி மாவட்டத்துடன் நான் சம்பந்தமுள்ளவனாக இருக்கின்றேன். இதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. நான் ஜனாதிபதியாக முன் பல அமைச்சுப் பொறுப்புக்களில் இருந்தேன். சுகாதாரம், நீர்பாசனம், விவசாயம் என பல பொறுப்புக்களில் இருந்தேன். அதன் போது வன்னி பிரதேசத்திற்கு வந்து பல சேவைகளை செய்துள்ளேன்.

2015ஆம் ஆண்டு என்னை ஜனாதிபதியாக தெரிவு செய்ய அதிக வாக்குகளை நீங்கள் வழங்கினீர்கள். நான் ஜனாதிபதியாக இருந்த போதும் பல சந்தர்ப்பங்களில் வன்னிக்கு வந்தேன். ஜனாதிபதியாக இருந்த போது இந்த மாவட்டத்தில் பல அபிவிருத்திகளை செய்துள்ளேன். வடக்கு, கிழக்குக்கு என ஒரு அமைப்பினை நான் நிறுவினேன். யுத்தம் நடந்த பகுதிகளில் அபிவிருத்திகளை துரிதப்படுத்துவதற்கு அந்த அமைப்பை நிறுவினேன். என்னால் பல அபிவிருத்திகளை செய்ய முடிந்தது. சிங்களவர், தமிழர், முஸ்லிம், பறங்கியர் என்ற வேறுபாடு என்னிடம் இல்லை

வடக்கு, கிழக்கு, தெற்கு என்ற எந்த வேறுபாடும் இல்லை. அனைவரையும் இந்த நாட்டு மக்கள் என்று தான் பார்கின்றேன். எனது நெஞ்சிலே இருந்து சொல்கின்றேன். நிரந்தர சமாதானத்தை உருவாக்க வேண்டும் என்று தான் நினைத்து கொண்டிருக்கிறேன். சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டத்தை ஆரம்பித்து வைத்தேன். சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் மூலம் நிதி வழங்கினேன். சீனாவில் இருந்து அதற்கு உதவிகளை பெற்று பொலன்னறுவையில் சிறுநீரக வைத்தியசாலையை நிறுவினேன்.

எனது ஆட்சிக்காலம் ஏழை மக்களுக்கு சுபீட்சமுள்ள ஒரு காலமாக இருந்தது. அன்றாட தேவைக்களுக்கான பொருட்களின் விலைகளை அதிகரிக்கவில்லை.விவசாயத்திற்கு தேவையான பெருட்களுக்கு தட்டுபாடு இருக்கவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான சாட்சியங்களை மறைத்த அரசாங்கமும் சட்டமா அதிபரும் !

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் வழங்கப்பட்ட சாட்சியங்களை அரசாங்கமும் சட்டமா அதிபரும் மறைத்துள்ளனர். என  கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை கவலை வெளியிட்டுள்ளார்.

‘தித்த’ எனும் நூல் வெளியீட்டு நிகழ்வு பண்டாரநாயக்க ஞாபகார்ந்த மாநாட்டு மண்டபத்தில் இன்று(சனிக்கிழமை) இடம்பெற்றது. இந்தநிலையில் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை இவ்வாறு கவலை வெளியிட்டுள்ளார். அங்கு மேலும் பேசிய அவர்,

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்குமென்ற நம்பிக்கை நாளுக்கு நாள் வலுவிழந்து செல்கின்றது. சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியவர்களும் செயற்படுத்த வேண்டிய பொறிமுறைகளும் பிரச்சினைக்குரியதாக மாறியுள்ளது.

ஆணைக்குழுவில் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் வழங்கப்பட்ட சாட்சியங்களை அரசாங்கமும் சட்டமா அதிபரும் மறைத்துள்ளனர். அவற்றைக் கேட்டு கடிதங்களை அனுப்பிய போதும், தமது கோரிக்கை கவனத்திற்கொள்ளப்படவில்லை.

சில நபர்கள் தாக்குதல் குறித்து அறிந்திருந்தும் அது தொடர்பில் எதனையும் செய்யவில்லை என்பதனால், அவர்களுக்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்குமாறு ஆணைக்குழுவின் அறிக்கையில் கோரியுள்ள போதிலும் சட்டமா அதிபர் மற்றும் அவரின் திணைக்களத்தின் தவறான செயற்பாடுகள் காரணமாக நீதி வழங்கப்படாத நிலை ஏற்பட்டுள்ளது.

அரசாங்கம் தமக்கு வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றவில்லை. எனவும் கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை கவலை வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் மீண்டும் ஆயிரத்தை தாண்டிய நாளாந்த கொரோனாத்தொற்று !

நாட்டில் இன்றைய தினம் மேலும் 1,273 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 635,606 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் மேலும் 20 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரை 15,969 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர். இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 252 பேர் பூரணமாக குணமடைந்த வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 596,891 ஆக அதிகரித்துள்ளது.

“க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மோசடி சம்பவங்கள் குறைவு.” – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு !

தற்போது நடைபெறும் 2021 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் இதுவரையிலும் குறைந்த எண்ணிக்கையிலான மோசடி சம்பவங்களே பதிவாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டின் பல பாகங்களில் இருந்தும் இதுவரை இரண்டு சம்பவங்கள் மாத்திரமே பதிவாகியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல். எம். டி. தர்மசேன சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இம்முறை க.பொ.த உயர்தரப் பரீட்சையின் போது நடைமுறைப்படுத்தப்பட்ட வினாத்தாள் விநியோகம் மற்றும் நேரக் கணிப்பீடு என்பன புதிய தொழில்நுட்ப முறையின் கீழ் தற்போது வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், வலய மட்டத்தில் மேற்கொள்ளப்படும் மேற்பார்வை நடவடிக்கைகளும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் கூறினார்.

இதே நேரம் உயிரியல் பாட முதலாம் பகுதி வினாத்தாளின் தமிழ் மொழி பெயர்ப்பில் பாரிய குறைபாடுகள் இருந்ததால் மாணவர்களால் சரியான விடையெழுத முடியாத நிலையேற்பட்டதாக முன்னாள் பிரதம பரீட்சகர் ஒருவரை மேற்கோள் காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுமையாக நீக்கக் கோரிய போராட்டத்தில் இணைந்தார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா !

பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுமையாக நீக்கக் கோரிய மனுவில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரும் கையெழுத்திட்டுள்ளார்.

பயங்கரவாத தடைக்ச் சட்டத்தின் கீழ் பலர் கைது செய்யப்பட்டு விசாரணை இன்றி நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். எனவே அதனை முழுமையாக நீக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடளாவிய ரீதியில் கையெழுத்து போரட்டத்தை ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில் நேற்று குறித்த மனுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவும் கையொப்பமிட்டனர்.

முன்னதாக கொழும்பில் இந்த வாரம் இடம்பெற்ற கையெழுத்து போராட்டத்தில் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையும் கையெழுத்திட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

“பயங்கரவாதிகளை நினைவுகூர அனுமதிக்க முடியாது.” – வெளியாகியுள்ள இறுதி அறிக்கை அறிவிப்பு !

பயங்கரவாதிகளை நினைவுகூர அனுமதிக்க முடியாது. யுத்தத்தில் ஒருவர் உயிரிழந்திருந்தால் அவரை தனிப்பட்ட முறையில் நினைவுகூரலாம் என ஜனாதிபதி நியமித்த ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

மனித உரிமை குழுக்கள் மனித உரிமை ஆணைக்குழுக்களின் பரிந்துரைகள் தீர்மானங்களை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இரண்டாவது இடைக்கால அறிக்கை நேற்று ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டது.

உயர்நீதிமன்ற நீதியரசர் எம்எம்டீ நவாஸினால் இந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
2021 ஜனவரியில் ஜனாதிபதி மனித உரிமைகள் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மீறல்கள் மற்றும் அதுபோன்ற பாரதூரமான குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுகள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுக்கள் ஆணைக்குழுக்கள் தொடர்பில் ஆராய்வதற்காக இந்த குழுவை நியமித்திருந்தார்.

இந்த ஆணைக்குழுவின் முதலாவது அறிக்கை ஏற்கனவே கடந்த வருடம் ஜூலை மாதம் வெளியாகியிருந்தது. கிளிநொச்சி யாழ்ப்பாண மாவட்டங்களில் யுத்தத்தை எதிர்கொண்ட 75 பேரின் ஆதாரங்களை அடிப்படையாக வைத்து ஆணைக்குழு தனது பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளது. இரண்டவாது அறிக்கை 107 பக்கங்களை உள்ளடக்கியதாக வெளியாகியுள்ளது.

2015 இல் வெளியான பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்து உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறும் வழக்குதாக்கல் செய்யுமாறும் அல்லது இழப்பீட்டினை வழங்குமாறும் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது. ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த மக்கள் பொருளாதார ரீதியில் எழுச்சி பெறுவதற்கு அரசாங்கத்தின் ஆதரவு அவசியம் என தெரிவித்துள்ளனர் ஆணைக்குழு அந்த பரிந்துரைகளை பரிந்துரைத்துள்ளது.

 

பயங்கரவாதிகளை நினைவுகூறுவதற்கு இடமளிக்க கூடாது என ஆணைக்குழு தெரிவித்துள்ளதாகவும் யுத்தத்தில் எவராவது உயிரிழந்தால் உயிரிழந்தவர்களை தனியாக நினைவுகூரலாம் எனவும் ஆணைக்குழுவின் தலைவர் உயர்நீதிமன்ற நீதியரசர் ஏஎச்எம்டிஎ நவாஸ் தெரிவித்துள்ளார்.