February

February

13 வயதுடைய சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பிக்கு கைது !

வட்டவளை – ரொசெல்ல பகுதியில் உள்ள விகாரையில் வைத்து 13 வயதுடைய சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் பிக்கு ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சிறுமியின் தந்தை வட்டவளை காவல்துறையில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய சந்தேகத்தின் பேரில் பிக்கு கைது செய்யப்பட்டுள்ளார்.

விகாரையின் பிரதமகுருவால் தான் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக மாணவி தனது தந்தையிடம் கூறியதையடுத்து தந்தை வட்டவளை காவல்துறை முறைப்பாடு செய்துள்ளார்.

துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சிறுமி ஆதார வைத்தியசாலையின் விசேட நீதி வைத்திய அதிகாரி முன்னிலையில் முன்னிலைப்படுத்தி வைத்திய அறிக்கை பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட பிக்குவை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக வட்டவளை காவல்துறையினர் தெரிவித்தனர்.

பிரித்தானிய அரசாங்கம் உள்ளிட்ட தரப்புக்கு அனுப்பபடவுள்ள மலையக மக்களின் அபிலாசைகளை உள்ளடக்கிய கடிதம் !

மலையக மக்களின் அபிலாசைகளை உள்ளடக்கி பல்வேறு தரப்பினருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ள கடிதம் இன்றைய தினம் இறுதி செய்யப்படவுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இந்தவிடயம் தொடர்பில், கொழும்பில் நேற்று (21) மாலை கூடி ஆராயவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த கடிதம் இந்தியப் பிரதமர், பிரித்தானிய அரசாங்கம் உள்ளிட்ட தரப்புக்கு அனுப்பப்படுவதுடன், இலங்கையின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டவர்களுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

கடன் தொல்லை – ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் தற்கொலை !

இந்தியாவின் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொடுங்கல்லூர் உழவத் கடவை சேர்ந்தவர்  (வயது 40). என்ஜினீயரான இவர் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி ஆசிரா (34). இவர்களுக்கு அசரா பாத்திமா (13), அனோநிஷா (8) என்ற 2 மகள்கள் இருந்தனர்.

இவர்கள் 4 பேரும் வீட்டின் மாடியில் வசித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை நீண்ட நேரமாகியும் வீடு திறக்கப்படாததால் ஆஷிப்பின் சகோதரி மாடிக்கு சென்று கதவை தட்டினார். ஆனால் உள்ளே இருந்து எந்தவொரு தகவலும் இல்லாததால் சந்தேகம் அடைந்த அவர் பொலிசுக்கு தகவல் தெரிவித்தார்.

உடனே பொலிஸார் விரைந்து வந்து கதவை உடைத்து பார்த்தனர். அப்போது வீட்டுக்குள் இருந்து நச்சுத்தன்மை உடைய வாயு வெளியேறியது. இதனால் பொலிசாருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனே சுதாரித்து கொண்ட பொலிசார் வெளியே சென்றனர்.

பின்னர் வீட்டுக்குள் விஷவாயு படர்ந்து இருப்பதை உணர்ந்த அவர்கள் முதற்கட்டமாக அதனை வெளியேற்றும் முயற்சியில் இறங்கினர். தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. அப்போது ஜன்னல் இடுக்குகளில் காற்று வெளியேறாதவாறு டேப் ஒட்டப்பட்டிருந்தது தெரியவந்தது. பின்னர் அதனையும் அகற்றி வீடு முழுவதும் பரவியிருந்த விஷ வாயுவை வெளியேற்றிய பிறகு பொலிசார் வீட்டுக்குள் நுழைந்தனர்.

அங்கு ஒரே அறையில் ஆஷிப் உட்பட 4 பேரும் இறந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் 4 பேர் உடல்களையும் பொலிசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

மேலும் இதுதொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தியதில், விஷ வாயுவை வீட்டுக்குள் நிரப்பி 4 பேர் தற்கொலை செய்ததாக திடுக்கிடும் தகவல் வெளியானது.

கார்பன் மோனாக்சைடு என்ற விஷவாயுவை அவர்கள் பயன்படுத்தியுள்ளனர். கடன் தொல்லை காரணமாக ஆஷிப் இந்த விபரீத தற்கொலை முடிவை தேர்ந்தெடுத்திருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடன் கொள்கை ரீதியான சந்திப்புக்கு பைடன் இணக்கம் !

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடன் கொள்கை ரீதியான சந்திப்பு ஒன்றை நடத்துவதற்கு, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இணக்கம் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மெக்ரோனின் ஏற்பாட்டில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.

பேச்சுவார்த்தை எப்போது இடம்பெறும் போன்ற விபரங்கள் இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை.

ரஷ்யா விரைவில் உக்ரைன் மீது படையெடுக்கவிருப்பதாக அமெரிக்கா உறுதியாக நம்புகிறது. இந்த நிலைமையை தவிர்ப்பதற்கான நடவடிக்கையின் ஒரு கட்டமாக இந்த பேச்சுவார்த்தை அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் ரஷ்யா உக்ரைன் மீதான படையெடுப்புத் திட்டத்தை கைவிட்டால் மாத்திரமே அமெரிக்க ஜனாதிபதி இந்த பேச்சுவார்த்தைக்கு வருவார் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

எவ்வாறாயினும், உக்ரைன் மீது படையெடுக்கும் எண்ணம் இல்லை என்று ரஷ்யா தொடர்ந்து தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

“அரசியல்வாதிகளைப் பற்றி வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்ளும் முறை ஒழிக்கப்பட வேண்டும்.” – அமைச்சர் டலஸ் அழகப்பெரும

நாட்டின் கல்வி முறை வீழ்ச்சியடைய இடமளிக்கக்கூடாது என அமைச்சரான டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

கம்புருபிட்டியவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பொருளாதார வீழ்ச்சியை மீண்டும் வலுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்பட்டாலும் கல்வித்துறை வீழ்ச்சியடைந்தால் நாடு பாரிய நெருக்கடிக்கு உள்ளாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

படித்த, அரசியல்வாதிகளைப் பின்பற்றி வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்ளும் முறை நாட்டிலிருந்து ஒழிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அரசியல்வாதிகளை நாடி தகுதியுள்ளவர்கள் வேலை தேடும் கலாசாரம் வேறு எந்த நாட்டிலும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்வீடன், கனடா, இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ள குழந்தைகள் இதுபோன்ற நடைமுறைகளை பின்பற்ற வேண்டிய கட்டாயம் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

அத்தகைய நாடுகளில் தகுதியுடையவர்கள் நல்ல ஊதியம் பெறும் வேலைகளைப் பெறுவதற்கான அமைப்புகள் நடைமுறையில் இருப்பதால், அவர்கள் அரசியல்வாதிகளின் பின்னால் செல்வதில்லை. எனவே நாட்டின் கல்வித் துறை வீழ்ச்சியடைவதை குடிமக்கள் அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

“அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பண்பு தெரியாத வகையில் விடுதலைப் புலிகளின் தலைவர் தொடர்பில் வசைபாடுகிறார்.” – எம்.கே. சிவாஜிலிங்கம் காட்டம் !

“டக்ளஸ் தேவானந்தாவின் கட்சியான ஈ.பி.டி.பி பற்றி பொது மக்களுக்கு நன்றாகத் தெரியும். எவ்வளவு படுகொலைகள் அட்டூழியங்கள் புரிந்தார் என்பது தெரியும்.” என  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய கட்சியின் பொதுச் செயலாளருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இறப்புத் தொடர்பில் அரசாங்கமும் அரசாங்கத்தில் உள்ளவர்களும் மாறுபட்ட கருத்துக்களையே கூறிவருகின்றார்கள். இதன்மூலம் போர்க்குற்றம் நடந்தது என்பதை அவர் ஏற்றுக்கொள்கின்றார்கள். இதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பண்பு தெரியாத வகையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றி வசைபாடியுள்ளார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சியான ஈ.பி.டி.பி பற்றி பொது மக்களுக்கு நன்றாகத் தெரியும். எவ்வளவு படுகொலைகள் அட்டூழியங்கள் புரிந்தார் என்பது தெரியும். 2001 ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரசாரத்திற்காக ஊர்காவற்றுறை சென்றபோது ஈ.பி.டி.பி குண்டர்களினால் சுட்டும் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மூவருக்கு இரட்டை மரண தண்டனை தீர்ப்பு நீதி மன்றத்தினால் வழங்கப்பட்டது.

பிரபாகரன் உயிருடன் சரணடைந்தார் என்று டக்ளஸ் தேவானந்தா கூறுகிறார். இது முதல் தடவை அல்ல. அப்படி என்றால் சரணடைந்தவர்களை நீங்கள் படுகொலை செய்தீர்களா என்பதற்கு பதில் கூறவேண்டும். இறுதியுத்தத்தின் போது பிரபாகரனின் படம் என காண்பிக்கப்பட்ட படத்தில் நெற்றியில் துப்பாக்கிச்சூட்டுக் காயங்கள் இருந்தமை அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

பிரபாகரன் சரணடைந்திருந்தால் விசாரணை செய்திருப்பீர்கள் இலங்கை பூராகவும் பவனியாக கொண்டு சென்றிருப்பீர்கள். ஆனால் தற்போது குறித்த விடயங்கள் தொடர்பில் ஒன்றுக்கொன்று முரணாகவே கூறிவருகின்றீர்கள். சரணடைந்த பின்னர் கொல்லப்பட்டார் என்பது உங்கள் கருத்து அவ்வாறு என்றால் இந்தப் போர்க்குற்றத்திற்கு யார் பொறுப்பு? இதற்கு யார் பதில் கூறுவது? அன்று இராணுவத் தளபதியாக இருந்த சரத்பென்சேகா, பிரபாகரன் ஒரு வீரன் கடைசி வரை போராடியே மறைந்தார் என்பதை கூறுகின்றார்.

படைத்தளபதியின் கீழ் இருந்த ஓய்வுநிலை ஜெனரல் கமால் குணரட்ண என்பவர் கழுத்தில் இருந்த இலக்கம் ஒன்று என்ற இலக்கத்தகட்டையும் பிஸ்ரலையும் கைப்பற்றினோம் எனக் கூறியுள்ளார். அவ்வாறு என்றால் பிஸ்ரலுடனா அவர் சரணடைந்தார். சரணடைவது என்றால் ஆயுதங்கள் இல்லாமல் தான் சரணடைவது. அவருடைய உடலை நாங்கள் புதைத்துவிட்டோமென ஒரு சிலர் கூறினார்கள். எங்கு புதைத்தோம், யார் புதைத்தது என்பது கூறப்படவில்லை. இன்னுமொரு பகுதியினர் எரித்துவிட்டு சாம்பலை கரைத்துவிட்டோம் எறிந்துவிட்டோம் என்றார்கள். ஒரு போர் வீரனது உடலுக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்பது மரபு.

பிரபாகரனது இறப்புத் தொடர்பில் ஒன்றுக்கொன்று முரண்பட்ட கருத்துக்களையே அரசாங்கங்கள் கூறிவருகின்றது. பிரபாகரனின் உடலை அடையாளம் காண்பதற்காக கருணாவையும் தயா மாஸ்ரரையும் கூட்டிச் சென்றீர்கள். ஒருவர் கொல்லப்பட்டால் குறித்தநபர் இந்தியாவாலும் தேடப்படுகின்றார் என்றால் ஏன் அவரின் மரண விசாரணை நடைபெறவில்லை.

உலங்கு வானூர்தி மூலம் கருணாவை கூட்டிச் செல்ல முடியும் என்றால் ஏன் சட்ட வைத்திய அதிகாரியை கூட்டிச்சென்று மரண சான்றிதழை வழங்கவில்லை. இந்தியாவிற்கு ஒரு நீதிமன்ற சான்றிதழை வழங்கியுள்ளீர்கள் இதனைவிட ஏன் டி.என்.ஏ. பரிசோதனை செய்யவில்லை. அன்றைய காலத்தில் பிரபாகரனின் தாயும் தந்தையாரும் பனாகொட இராணுவ முகாமில் தான் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள்.

பிரபாகரன் எனக் காண்பிக்கப்பட்ட உடலை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒன்றில் அவர் தன்னைத்தானே மாய்த்திருக்கவேண்டும் அல்லது அவர் உயிருடன் இருக்கின்றாரா இல்லையா என்பதை வரலாறு கூறும். அதனை விடுத்து சரணடைந்தார் சடலத்தை எடுத்தோம் புதைத்தோம் என்று கூறுவதில் அர்த்தம் இல்லை. பிரபாகரன் கொல்லப்பட்டிருந்தால் எதற்காக பிரபாகரனின் தாயாரிடன் பிரபாகரன் எங்கு இருக்கின்றார் என விசாரணை செய்தீர்கள் என்பதற்கான பதிலையும் கூறவேண்டும். அல்ஜசீரா தொலைக்காட்சிக்கும் தாயார் இதனைக் கூறியுள்ளார்.

பிரபாகரனின் இறப்புத் தொடர்பில் அரசாங்கத்தின் அமைச்சர்களின் மாறுபட்ட கருத்துக்களானது பித்தலாட்டங்களும் பொய் பிரட்டுக்களுமே இருப்பதாகவே நாங்கள் உணருகின்றோம் என்றார்.

யாழிலிருந்து முல்லைத்தீவுக்கு வன்முறையில் ஈடுபட சென்ற பெண் உள்ளிட்ட 13 பேர் கைது !

யாழ்ப்பாணத்தில் இருந்து முல்லைத்தீவுக்கு வன்முறையில் ஈடுபட சென்ற பெண் உள்ளிட்ட 13 பேர் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வழித்தடத்தில் சேவையில் ஈடுபடும் மினிவான் ஒன்றினை வாடகைக்கு அமர்த்தி கீரிமலை பகுதியை சேர்ந்த பெண் உள்ளிட்ட 13 பேர் முல்லைத்தீவு அளம்பில் பகுதிக்கு சென்று வன்முறையில் ஈடுபட்டள்ளனர். குறித்த கும்பலின் தாக்குதலில் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

வாகனம் ஒன்றினில் வந்த கும்பல் தமது பகுதியில் தாக்குதலை மேற்கொண்டு 5 பேரை படுகாயங்களுக்கு உட்படுத்தி விட்டு தப்பி செல்வதனை அறிந்த ஊரவர்கள் வானை துரத்தி சுற்றிவளைத்து மடக்கி பிடித்தனர்.

வாகனத்தில் பெண் உள்ளிட்ட 13 பேர் இருந்த நிலையில் சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. தகவலின் பிரகாரம் சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசாரிடம் வாகனத்துடன் அதில் இருந்த 13 பேரையும் ஊரவர்கள் ஒப்படைத்துள்ளனர்.

தனிப்பட்ட பகை காரணமாகவே யாழில் இருந்து வாகனத்தில் முல்லைத்தீவு சென்று தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளில் தெரியவருந்துள்ளது.

“தமிழரின் பிரச்சினையை தீர்க்க ஞானசார தேரர் போன்ற துவேஷம் கொண்டவர்கள் தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.” – அருட்தந்தை மா.சத்திவேல்

“தமிழர் தாயகத்தில் அக பிரச்சினையை தீர்க்க வெளி சக்திகள் அதுவும் ஞானசார தேரர் போன்ற சமய மற்றும் இன துவேஷம் கொண்டவர்கள் தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.”  என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு செல்லும் வழியில் வைக்கப்பட்டுள்ள மாதா சொரூப விடயம் தொடர்பாக வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

 

வட-கிழக்கில் குறிப்பாக மன்னார் பிரதேசத்தில் இந்துக்களுக்கும் கத்தோலிக்கர்களுகுமிடையே சமய முறுகல் நீண்ட காலமாக தொடர்ந்து வரும் நிலையில் தற்போது திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு செல்லும் வழியில் வைக்கப்பட்டுள்ள மாதா சொரூப பிரச்சினை தொடர்பாக ஒரே நாடு ஒரே சட்ட செயலணியின் தலைவர் ஞானசார தேரர் தலையிடுவதை தவிர்க்க மன்னார் ஆயர் உட்பட கத்தோலிக்க சமயத் தலைவர்களும், இந்து மதத் தலைவர்களும் பேச்சுவார்த்தை ஈடுபட்டு சமய நல்லிணக்கத்தை உறுதி செய்தல் வேண்டும்.

 

இந்த நாட்டில் பௌத்த மற்றும் இந்து மக்களே பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். அரச சார்பற்ற அமைப்புக்கள் அறிக்கை தயாரித்து வெளிநாடுகளுக்கு அனுப்புகின்றனர். இது திட்டமிட்ட அரசியல் செயல் என குற்றச் சாட்டை முன்வைப்பதன் மூலம் கிறிஸ்தவத்திற்கும் ஏனைய சமயங்களுக்கும் இடையில் முரண்பாட்டை வலியுறுத்துவதோடு திருக்கேதீச்சர சமயப் பிரச்சினையை தான் தீர்க்கப் போவதாக குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே மடு தேவாலயம் காணிப்பிரச்சினை ஒன்றில் இந்து மக்களுக்கு நியாயம் பெற்றுக் கொடுக்க முயற்சிப்பதையும் நாம் அறிவோம்.

 

பௌத்த துறவிகளையும், பௌத்தர்களையும் அதிகமாகக் கொண்ட தொல்பொருளியலாளர்கள் வடகிழக்கில் இந்துக்களின் பூர்வீக வழிபாட்டு தலங்களை ஆக்கிரமித்து சிங்கள பௌத்த மயமாக்குவதை எதிர்க்காதவர், வடகிழக்கில் யுத்தக் காலத்தில் சமயத் தளங்கள் மீது போடப்பட்ட குண்டுகளால் சேதமடைந்த வணக்க தலங்கள் தொடர்பிலும், அங்கு கொல்லப்பட்டவர்கள் விடயத்திலும் வருத்தம் தெரிவித்து நீதியை பெற்றுக்கொடுக்க முயற்சிக்காதவர் மன்னார் திருக்கேதீஸ்வர சுரூப விடயத்தில் இந்துக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்க போகிறேன் என்பது அரசியல் உள்நோக்கம் கொண்ட கபட செயலாகும்.

 

அரசியல் ரீதியாக தமிழர்கள் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்துகின்ற காலகட்டத்தில் தமிழர் தாயகத்தில் அக பிரச்சினையை தீர்க்க வெளி சக்திகள் அதுவும் ஞானசார தேரர் போன்ற சமய மற்றும் இன துவேஷம் கொண்டவர்கள் தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அத்தோடு சமய பிரச்சினையை அரசியல் பிரச்சினையாக்கவும் இடமளிப்பது தமிழர்களின் எதிர்காலத்தை பாதிப்பதாகவும் அமைந்துவிடும்.

ஆதலால் தேசிய பிரச்சினைக்கு நீதியை தேடும் வடகிழக்கு ஆயர்கள் சமய உட்பூசல்களுக்கு இடமளிக்காது காலத்திற்கு காலம் தோன்றும் உள்ளக சமய பிரச்சனைகளை தீர்த்திட அடிமட்டத்திலும், மேல்மட்டத்திலும் கலந்துரையாடல்களை ஏற்படுத்த வேண்டும்.

அவ்வாறான சூழ்நிலை இன்மை காரணமாகவே வெளிச் சக்திகள் உள்நுளைய முயற்சிக்கின்றன. இதனை தவிர்க்கவும், சமய நல்லிணக்கத்தை உருவாக்கி தாயக அரசியல் மீட்புக்காக ஒன்றுபட்ட சக்தியாக செயல்படவும் வடகிழக்கு சமயத் தலைவர்களின் அவசர சந்திப்புக்களை மேற்கொண்டு சமய உறவையும் நல்லிணக்கத்தையும் உருவாக்கிட அவசரமாக செயல்படல் வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

“பிரபாகரன் ஒரு சிறந்த போர் வீரன். அதனால் அவர் மீது எனக்குத் தனிமரியாதை உண்டு.” – டக்ளஸ் தேவானந்தாவின் கருத்து தொடர்பில் பொன்சேகா !

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன், போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த பின்னரே உயிரிழந்தார் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தார்.

இந்தக் கருத்து தொடர்பில் இறுதிப் போரில் இராணுவத் தளபதியாகப் பதவி வகித்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்த போது,

 

விடம் கேட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்துரைத்த அவர்,

“பிரபாகரனின் சாவை வைத்து அன்று தொடக்கம் இன்று வரை சிலர் அரசியல் செய்து வருகின்றனர். இராணுவத்தினருடனான நேரடி மோதலிலேயே பிரபாகரன் உயிரிழந்தார் என்பது உண்மை. அவரின் வெற்றுடலையே இராணுவத்தினர் மீட்டனர். பிரபாகரன் ஒரு பயங்கரவாதக் குழுவின் தலைவர். எனினும், அவர் சிறந்த போர் வீரன். அதனால் அவர் மீது எனக்குத் தனிமரியாதை உண்டு. பிரபாகரனை உயிருடன் பிடிக்க வேண்டும் என இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் விரும்பின.

அந்த நாடுகள் இலங்கை அரசுக்கு அன்று அழுத்தமும் கொடுத்திருந்தன. எனினும், பிரபாகரன் எந்தத் தரப்பிடமும் சிக்காமல் இறுதி வரைப் போராடியே சாவடைந்தார்” என்றார்.

தென்னிலங்கையைச் சேர்ந்தவர்களை கூலிக்கு அமர்த்தி யாசகம் எடுக்க வைத்த யாழ்ப்பாணத்திலுள்ள விடுதி உரிமையாளர் !

சாவகச்சேரியில் குழந்தைகளுடன் யாசகம் பெற்றவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணத்திலுள்ள விடுதி ஒன்றின் உரிமையாளர், தென்னிலங்கையைச் சேர்ந்தவர்களை கூலிக்கு அமர்த்தி யாசகம் பெறுவதாக அண்மைய நாள்களில் பல்வேறு இடங்களில் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

அதனடிப்படையில் சாவகச்சேரி நகரில் யாசகம் பெற்றவர்கள் இன்று (திங்கட்கிழமை) கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறு யாசகம் பெறுபவர்களின் பணம் விடுதி உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டதும் யாசகத்தில் ஈடுப்பட்டோருக்கு தினக் கூலி வழங்கப்படுவதாக பல தரப்பினராலும் குற்றச்சாட்டப்பட்டது.

அதனடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.