இலங்கை அரசாங்கத்திற்கும் அதன் ஆயுதப் படைகளுக்கும் எதிரான குற்றச்சாட்டுகளை பிரிட்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் முழுமையாக நிராகரித்துள்ளது.
பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகளினால் மனிதக் கேடயங்களாக வைக்கப்பட்டிருந்த பொதுமக்களை மீட்கும் நோக்கத்துடன் மனிதாபிமான நடவடிக்கையில் அரசாங்கத்தின் பாதுகாப்புப் படைகள் ஈடுபட்டிருந்ததாக உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்திருக்கிறது. பிரிட்டன் உட்பட பல நாடுகளில் புலிகள் தடை செய்யப்பட்ட அமைப்பாகும். மனிதாபிமான நடவடிக்கைகளானவை சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிமுறைகளின் பிரகாரம் இடம்பெற்றது. பொதுமக்களுக்கு எந்தவொரு இழப்பும் ஏற்படக்கூடாது என்ற கடுமையான உத்தரவின் பிரகாரம் படையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.
இலங்கை அரசாங்கம் இப்போது மீளக்கட்டியெழுப்புதல் மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஜனாதிபதி நியமித்துள்ளார். இலங்கையின் சகல இனக் குழுக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மாண்புமிக்கோர் உறுப்பினர்கள் கொண்டதாக அக்குழு அமைந்துள்ளது. அத்தகைய கவலைகள் எதிர்காலத்தில் மீண்டும் ஏற்படாமல் தடுப்பதற்கான நிர்வாக மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் குறித்து இந்த ஆணைக்குழு விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளது. அத்துடன், தேசிய ஐக்கியத்தையும் நல்லிணக்கத்தையும் சகல சமூகங்கள் மத்தியிலும் மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை இந்த ஆணைக்குழு மேற்கொள்ளவுள்ளது.
ஒளிநாடாவைப் பார்க்காமல் அதில் கூறப்பட்டிருக்கின்ற விசேட குற்றச்சாட்டுகள் தொடர்பாக கருத்துகளைத் தெரிவிப்பதற்கான நிலைப்பாட்டில் உயர்ஸ்தானிகராலயம் இல்லை. ஆதலால், கூறப்படும் ஒளிநாடாவை பார்வையிட அனுப்பிவைக்க முடியும். ஒளிபரப்புவதற்கு முன்னர் அதன் உண்மைத் தன்மை குறித்து பரிசீலிப்பதற்காக அதனை பார்வையிட அனுப்பிவைக்க முடியும்.
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் முடிவின்போது இடம்பெற்ற நீதி விசாரணைக்குப் புறம்பான தண்டனைகள் உயர்மட்ட உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்டதாக பிரிட்டனின் சனல்4 தொலைக்காட்சியில் வெளிநாட்டு நிருபர் ஜொநாதன் மில்லரின் செய்தி இணையத்தளங்களில் வெளியாகியிருந்தன. 18 மே 2010 இல் இந்த அறிக்கை பிரிட்டனிலுள்ள இலங்கைத் தூதரகத்தால் வெளியிடப்பட்டதாக அத தெரண இணையத்தளம் நேற்று தெரிவித்திருந்தது.