கோழிக்கூட்டு கூடாரத்தில் வன்னி மக்கள், யுத்த நாயகன் பொன்சேகா சிறைக்கூண்டில் – ரணில்

ranil.jpgயுத்த வெற்றியின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு பெரும் செலவில் தேசிய வைபவம் நடைபெறவுள்ள நிலையில், வன்னியிலுள்ள மக்கள் வீடுகளின்றி கோழிக் கூடுகளிலும், யுத்த வெற்றிக்கு பொறுப்புக் கூற வேண்டிய ஜெனரல் சரத் பொன்சேகா சிறைக் கூண்டிலும் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று செவ்வாய்க்கிழமை சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விசேட வியாபார பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான கட்டளைகளை அங்கீகரிப்பதற்கான விவாதத்தில் பேசும்போதே ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கூறினார்.

அவர் இங்கு மேலும் பேசுகையில்;

அரசாங்கம் மக்களின் வாழ்க்கைச் செலவை அதிகரித்தது. மக்களின் சுதந்திரத்தை குறைத்து வருகிறது. பாராளுமன்ற அனுமதி இல்லாமல் எப்படி செலவினங்களை அரசாங்கத்தால் குறைக்க முடியுமென்பதே எமது கேள்வியாக இருக்கிறது. மக்களின் உரிமைகளை முடக்கியே இவற்றை செய்கின்றனர்.

இதேநேரம், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது பற்றி எதிர்க்கட்சியினருடன் பேசினார் என்று குற்றஞ்சுமத்தியே ஜெனரல் சரத் பொன்சேகாவை கைது செய்தனர். எனினும், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஓய்வு பெற்றுச் செல்ல ஜனாதிபதியே அவருக்கு அனுமதி வழங்கியிருந்தார். இவ்வாறான நிலையில் எப்படி இராணுவ நீதிமன்றத்தினால் சரத் பொன்சேகாவை கைது செய்ய முடியும்?

வாக்களிப்பதற்கும் வாக்கு கேட்பதற்கும் அரசியலமைப்பில் ஒருவருக்கு வழங்கப்பட்டிருக்கும் உரிமை சரத் பொன்சேகாவின் இந்த கைதின் மூலம் மீறப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாது சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சாசனத்தை மீறுவதாகவும் இந்த செயற்பாடு அமைந்திருக்கிறது.

இதேநேரம், யுத்த வெற்றியின் ஒரு வருட நிறைவை முன்னிட்டு படை அணிவகுப்பு நிகழ்வை பெரும் செலவில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. படையினருக்கு மதிப்பளிக்க வேண்டியது அவசியம். எனினும், பெருந் தொகை செலவில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் யுத்த வெற்றிக்கு பொறுப்பு கூற வேண்டிய சரத் பொன்சேகா ஏன் அங்கு இல்லை. எதற்காக அவரை சிறையில் வைத்திருக்கிறீர்கள் என்பதே எமது கேள்வியாக இருக்கிறது.

யுத்தத்தை வென்றவரை சிறையில் வைத்து கொண்டு பெருந்தொகையை செலவிடுகிறீர்கள். இயற்கையும் அதனுடன் இணைந்து விட்டது. யுத்தம் முடிவடைந்த ஒரு வருடம் பூர்த்தியடைந்து விட்ட போதிலும் வன்னியில் மக்களுக்கு வீடுகள் இல்லை. கோழி கூடுகள் போன்ற சிறு கூடாரங்களிலேயே இருக்கின்றனர். யுத்தத்தை வென்ற சரத் பொன்சேகா சிறை கூண்டிலும் வன்னி மக்கள் கோழி கூடுகளிலும் வைக்கப்படுகின்றனர்.

அது மட்டுமல்லாது கொழும்பு கொம்பனி வீதி பகுதியில் முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாசாவினால் நிரந்தர உறுதி பத்திரங்கள் மூலம் வழங்கப்பட்ட வீடுகள் இடித்தழிக்கப்பட்டுள்ளன. இது சட்ட விரோதமாகும். ஏனெனில், இந்த வீடுகளை அகற்ற வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டிருக்க வேண்டும். நட்டஈடு வழங்கப்பட வேண்டும். எனினும், இதில் எதுவும் அங்கு நடக்கவில்லை. வீடமைப்பு அமைச்சருக்கு கூட என்ன நடந்ததென தெரியாது. எதற்காக இந்த வீடுகள் உடைக்கப்பட்டன என்பது எமக்கு தெரியும். அந்த இடத்தில் 15 மாடிகள் கொண்ட சொகுசு மாடி கட்டிடங்களை நிர்மாணித்து 4,5 கோடிகளுக்கு விற்பதற்கு பேசியுள்ளனர்.

இதேநேரம், கடந்த இரு நாட்களாக கொழும்பு மாநகரின் பல பிரதேசங்களும் வெள்ளத்தில் மூழ்கி பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அது குறித்து நகர அபிவிருத்தி அதிகாரசபை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *