வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கம் யாழ்ப்பாணத்திற்கு 600 கிலோ மீற்றர் வடகிழக்காக நகர்ந்து கொண்டிருப்பதாக வானிலை அவதான நிலையத்தின் பொறுப்பாளர் ஜயசிங்க ஆராய்ச்சி நேற்றுத் தெரிவித்தார்.
இத்தாழமுக்கம் இந்தியாவின் ஒரிஸா மாநிலப் பகுதியை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதால் இலங்கைக்கு நேரடிப் பாதிப்பு ஏற்படாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இருந்த போதிலும் தற்போதைய மழை காலநிலை அடுத்துவரும் இரண்டொரு நாட்களுக்கு நீடிக்கும் என்றும் அவர் கூறினார். தற்போது இந்தத் தாழமுக்கம் நாளுக்கு நூறு கிலோ மீற்றர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கின்றது. அதேவேளை தற்போதைய சீரற்ற காலநிலை காரணமாக நாட்டைச் சூழவுள்ள கடலில் கொந்தளிப்பு நிலைமை காணப்படுகின்றது. அதனால் கடலுக்குச் செல்லும் மீனவர்கள் மிகுந்த அவதானத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
தற்போது கடலில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 40-60 கிலோ மீற்றர்களாகக் காணப்பட்டா லும் அது சில வேளைகளில் 90 கிலோ மீற்றர்கள் வரையும் அதிகரி க்க முடியும் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
இதேநேரம் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணித்தியால மழை வீழ்ச்சிப் பதிவுப்படி அதிக மழை வீழ்ச்சி காலி மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளது. இம்மழை வீழ்ச்சி பதிவுப்படி காலியில் 283.8 மி.மீ., களுத்துறையில் 278.6 மி.மீ., இரத்மலானை 177.1 மி.மீ., கொழும்பில் 133.1 மி.மீ., புறக்கோட்டையில் 147.3 மி.மீ., மாலிம்பொடவில் 106.8 மி.மீ. என்ற படி அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்றார்.