பாராளுமன்ற அமர்வுகள் நேற்று மழை காரணமாக இடைநிறுத்தம்

parliament2.jpgஸ்ரீஜய வர்த்தனபுர கோட்டே பகுதி உட்பட கொழும்பில் பெய்த கடும் மழை காரணமாக பாராளுமன்ற அமர்வுகள் நேற்று இடைநடுவில் நிறுத்தப்பட்டன. வழமையாக பாராளுமன்றத்தினுள் செல்லும் பிரதான நுழைவாயில் பகுதி வீதி முழுமையாக நீரில் மூழ்கிக் காணப்பட்டது. மாற்று வழியாக பத்தரமுல்ல பகுதியிலிருந்து நுழைவு வீதி பயன்படுத்தப்பட்டது. தியவன்னா ஓயாவை ஊடறுத்து பாராளுமன்றம் நோக்கிச் செல்லும் வீதியும் சிறிதளவு நீரில் மூழ்கியிருந்தது.

வழமைபோன்று பாராளுமன்ற அமர்வுகள் நேற்றுக்காலை 9.30க்கு ஆரம்பமானது. இச்சமயத்திலிருந்து கடும் மழையும் இடைவிடாது பெய்து கொண்டிருந்தது. மதிய உணவு வேளைக்கு பின்னரும் சபை அமர்வுகள் ஆரம்பமாகின. பிற்பகல் 2.00 மணியளவில் அமைச்சர் டிலான் பெரேரா ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பினார்.

எமக்கு தற்போது கிடைத்துள்ள தகவல்களின் படி இடைவிடாது பெய்துவரும் கடும் மழை காரணமாக பல வீதிகள் நீரில் மூழ்கிவருவதாக தெரியவருகிறது.

பாராளுமன்றத்தின் முன்னாலுள்ள வீதியும் நீரில் மூழ்கி வருகிறது. பாராளுமன்றத்தில் தொழில் புரியும் அனைவரும் தங்களது சொந்த இடங்களுக்குச் செல்ல வேண்டும். நேரம் ஆக ஆக நிலைமை மேலும் மோசமடையலாம். எனவே சபை நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதா? இல்லை இடைநிறுத்துவதா? என சபை முடிவெடுக்க வேண்டும் என்றார்.

இதனை ஆமோதித்த அமைச்சர் விமல் வீரவன்ச “கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் இது குறித்து பேசப்பட்டது. சபை இதற்கு முடிவு எடுக்க வேண்டும்” என்றார். சபாநாயகரின் ஆலோசனையை பெற்று சபையை இன்று காலை 9.30 மணிவரை ஒத்திவைப்பதாக உதவி சபாநாயகர் பிரியங்கர ஜயரட்ண தெரிவித்தார். சபை நடவடிக்கைகள் நேற்று இரண்டு மணிக்கு முடிவடைந்த வேளையிலும் மழை குறைவடைந்ததாக தெரியவில்லை.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *