21

21

தேர்தல் காலத்தில் விசேட வீதிச் சோதனைகள்

தேர்தல் காலத்தில் விசேட வீதிச் சோதனைகளை முன்னெடுப்பதற்கு பொலிஸ் திணைக்களம் தீர்மானித்திருப்பதாக தேர்தல் நடவடிகைகளுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் காமினி நவரட்ண நேற்றுத் தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் இதற்கென அமைக்கப்பட விருக்கும் விசேட சோதனைச் சாவடிகளினூடாக போக்குவரத்திலீடுபடும் வாகனங்கள் சோதனைக்குட் படுத்தப்படுமெனவும் அவர் கூறினார்.

தேர்தல் வேட்பாளர்களுக்கோ கட்சிகளுக்கோ அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையிலான சட்டத்துக்கு முரணான போஸ்டர்கள், கட்அவுட்கள் கொண்டு செல்லல், பிரசாரத்துக்கு கேடு விளைவிக்கும் வகையிலான குண்டர்களின் செயற்பாடுகள், ஆயுதங்கள் கடத்தல் போன்றவற்றை தடுக்கும் முகமாகவே வீதிச் சோதனைகள் முன்னெடுக்கப்பட விருப்பதாகவும் கூறினார்,

இந்திய அணிக்கு இஷாந்த் சர்மா, தினேஷ் கார்த்திக்

ms-dhoni.bmpஇலங்கை அணிக்கு எதிராக அடுத்து நடக்க உள்ள இரண்டு ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இதில் இஷாந்த் சர்மா, தினேஷ் கார்த்திக் மீண்டும் வாய்ப்பு பெற்றுள்ளனர். இந்தியா வந்துள்ள இலங்கை அணி 5 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது.

நாக்பூரில் நடந்த போட்டியில் இலங்கை வெற்றிபெற தொடர் 1-1 என சமநிலையை எட்டியுள்ளது. மூன்றாவது போட்டி இன்று ஒரிசாவில் உள்ள கட்டாக்கில் நடக்கிறது. நான்காவது போட்டி எதிர்வரும் 24 ஆம் திகதி கோல்கட்டாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்க உள்ளது. இவ்விரு போட்டிகளுக்கான இந்திய அணியை தேர்வு செய்வதற்கான கூட்டம் சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் தமிழக வீரர் தினேஷ்கார்த்திக் மற்றும் இஷாந்த் சர்மா புதிதாக சேர்க்கப்பட்டனர். தடை விதிக்கப்பட்டுள்ள டோனிக்கு பதிலாக விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக் செயற்படுவார்.

பன்றிக் காய்ச்சலால் அவதிப்பட்ட ஸ்ரீசாந்த் நீக்கப்பட்டுள்ளார். இவருக்கு பதில் இஷாந்த் சர்மா வாய்ப்பு பெற்றுள்ளார். விரல் காயம் மற்றும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள யுவராஜ் அணியில் நீடிக்கிறார். அடுத்து வரும் போட்டிகளில் இவர் பங்கேற்க வாய்ப்பு உள்ளது.

இலங்கை அணிக்கு எதிரான மூன்று, நான்காவது போட்டிக்கான இந்தியா அணி: செவக் (தலைவர்), காம்பிர், சச்சின், யுவராஜ், தினேஷ் கார்த்திக், சுரேஷ் ரெய்னா, ரவிந்திர ஜடேஜா, ஹர்பஜன், ஜாகிர் கான், நெஹ்ரா, இஷாந்த் சர்மா, விராத் கோஹ்லி, சுதிப் தியாகி, பிரவீண் குமார், பிரக்யான் ஓஜா.

காலநிலை சீர்கேடால் சுரங்கப்பாதை ரயில் சேவைகள் இடை நிறுத்தம் – லண்டன், பிரான்ஸ், பெல்ஜிய பயணிகள் அவதி

காலநிலை சீர்கேடு காரணமாக சுரங்கப்பாதையினூடான ரெயில் சேவைகள் சீர்குலைந்தன. இதனால் சுமார் இரண்டாயிரம் பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாக நேர்ந்தது. குறித்த நேரத்துக்கு தங்கள் இடங்களைச் சென்றடைய முடியாது போனதால் ரெயில் நிலையங்களில் இரவைக் கழிக்க நேர்ந்தது. லண்டன், பிரான்ஸ், பெல்ஜியம் ஆகிய இடங்களுக்கான சுரங்கப்பாதை ரெயில் சேவை கடும் குளிர் காரணமாக சென்ற சனிக்கிழமை சீர்குலைந்தன.

வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி முதல் 11.30 மணி வரை ஐந்து ரெயில்கள் இயங்க முடியாத நிலைக்கு வந்தன. இதனால் லண்டன், பிரான்ஸ், பெல்ஜியம் போன்ற நகரங்களுக்கான சுரங்கப் பாதை ரெயில் சேவைகள் சீர்குலைந்தன.

பயணிகள் இரவை ரெயில் நிலையங்களில் தொலைக்காட்சிகளைப் பார்த்துக் கழிக்க வேண்டியேற்பட்டது. சில இடங்களில் ஆங்கில ஒளிபரப்புகள் இடம்பெறவில்லையென பயணிகள் புகார் தெரிவித்தனர்.

கிறிஸ்மஸ் பண்டிகைக் காலமாகையால் லண்டன், பிரான்ஸ், பெல்ஜிய ரெயில் சேவைகள் மிகவும் சுறுசுறுப்பாக இயங்குகின்றன. கடும் குளிரான கால நிலையால் ரெயில் சேவைகள் சில ரத்துச் செய்யப்பட்டன.

பிரதான சேவையில் ஈடுபட்ட ரெயில்களில் ஐந்து இயங்க முடியாதளவுக்குப் பழுதடைந்தன. இது மாத்திரமன்றி விமான சேவைகளும் மோசமான பனிப் பொழிவால் தடைப்பட்டன. படகுகள் போக்குவரத்தும் வெள்ளிக்கிழமை தடைப்பட்டன.

தற்போது ரெயில், விமான சேவைகள் மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தடங்கலுக்கு வருந்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் நஷ்டஈடும் அறிவிக்கப்பட்டுள்ளது.