05

05

தவறான செயல்களில் ஈடுபடுவோரை திருத்த சமூக மாற்றம் அவசியம் -ஜனாதிபதி

mahinda0.jpgஇந்த நாட்டில் எவ்வளவோ நல்ல வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் சிலர் இந்நாட்டை பிழையான நாடாக உலகிற்குக் காட்ட முயற்சி செய்கின்றனர் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று காலியில் தெரிவித்தார்.

நாட்டை எவ்வளவு தான் அபிவிருத்தி செய்த போதிலும் சமூகத்தில் நற்பண்புகள் வீழ்ச்சி அடையுமாயின் அந்த அபிவிருத்திகள் அனைத்தும் அர்த்தமற்றதாகிவிடும். அதனால் நற்பண்புகள் நிறைந்த சமூகத்தைக் கட்டியெழுப்புவதை எமது கடமையாக கருதி வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம் என்றும் ஜனாதிபதி கூறினார்.

காலி சங்கமித்தா மகளிர் வித்தியாலயத்தின் பரிசளிப்பு வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இவ்வைபத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்று கையில், அன்றைய கால கட்டத்தில் காணப்பட்ட மிசனறி பாடசாலைகளுக்குப் பதிலாகவே சங்கமித்தா மகளிர் வித்தியாலயம், ஆனந்தா, நாலந்தா, விசாகா கல்லூரிகளும் உருவாக்கப்பட்டன. இக் கல்லூரிகளின் ஊடாக நற்பண்புகள் நிறைந்த, நாட்டுப்பற்று மிக்க மனிதர்களின் உருவாக்கமே பிரதானமாக எதிர் பார்க்கப்பட்டது. இந்த நாட்டில் எவ்வளவோ நல்ல மனிதர்கள் வாழுகின்றார்கள். எவ்வளவோ சிறப்பான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இருந்தும் சிலர் இவற்றைக் கண்டு கொள்ளுவதில்லை. அவர்கள் எல்லாவற்றையுமே தவறாகவே பார்க்கின்றனர். அதனால் அவர்களுக்கு எல்லாமே குறையாகவும், தவறாகவுமே தெரிகின்றது. இவர்கள் தான் இந்நாடு குறித்து வெளிநாடுகளில் பிழையாகக் கூறி மகிழ்ச்சி அடைகின்றனர். இங்கு ஒன்றும் நடப்பதில்லை. எல்லாமே பொய் என்று கூறி அவர்கள் அகமகிழ்கின்றனர்.

இங்கு பல இன, மத மக்கள் வாழ்கின்றனர். அவர்களுக்கிடையில் எந்த பிரச்சினையுமே இல்லை. அவர்கள் புரிந்துணர்வுடன் ஒற்றுமையாக உள்ளனர். இதேவேளை “சார்க்” மாநாட்டில் பங்கு பற்ற இங்கு வருகை தந்த ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி “ஒரு வைபவத்தில் பல மதங்களின் ஆசீர்வாதம் இடம்பெறும் நிகழ்வை தாம் வெறெங்கும் கண்டதில்லை” என்று குறிப்பிட்டார்.

இவ்வாறு உயர் பண்புகள் நிறைந்து காணப்படும் மக்கள் வாழும் கெளரவமான நாடு இது. என்றாலும் தவறான செயல்களில் ஈடுபடக் கூடிய மனிதர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். அதற்காக முழு சமூகத்தையும் குறை கூற முடியாது. தவறான செயல்களில் ஈடுபடுபவர்களை திருத்த சமூக மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

இதேநேரம் போதைப் பொருள், துஷ்பிரயோகம், பாதாள உலகம் என்பன நாட்டை சீரழிக்கப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. இவற்றைப் புரிந்து கொண்டு ஒவ்வொருவரும் செயற்படுவது அவசியம். சில பெண்கள் சம உரிமை கோருகின்றனர். இந்த கோரிக்கையை நான் ஏற்றுக் கொள்ளவில்லை.  இக் கோரிக்கையை விடவும் மேலானவர் களாகவே பெண்களை நான் பார்க்கின்றேன். எம் தாய்மாரை நாம் புனிதமானவர்களாகத் தான் பார்க்கின்றோம். அதன்படி பெண்களைப் புனிதமானவர்களாகவே நான் கருதுகின்றேன்.

இரத்மலானை இந்துக் கல்லூரி: புனர்வாழ்வு பெறும் புலி உறுப்பினர்களுக்கு உதவ தமிழ் வர்த்தர்கள் முன்வருகை

இரத்மலானை இந்துக் கல்லூரியில் கல்வி கற்று வரும் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு உதவி புரிவதற்கு பல தமிழ் வர்த்தக பிரமுகர்கள் முன்வந்துள்ளனர்.

நேற்றுமுன்தினம் கல்லூரிக்கு விஜயம் செய்த அவர்கள், மாணவர்களின் நிலவரத்தை நேரில் அறிந்து கொண்ட பின் இந்த உறுதி மொழியை வழங் கியுள்ளனர். பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, அமைச்சர் மிலிந்த மொறகொட ஆகியோரு டன் கல்லூரிக்கு விஜயம் செய்த இல ங்கை வங்கியின் முன்னாள் தலைவர் இராஜன் ஆசீர்வாதம், ஜோன் கீல்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதித் தலைவர் விஸ்வநாதன் கைலாசபிள்ளை ஆகியோரே இந்த மாணவர்களுக்கு உதவி புரிவதாக உறுதியளித்துள்ளனர்.

பாகிஸ்தான் மசூதி தாக்குதலில் நாற்பது பேர் பலி

pakisthan.jpgபாகிஸ் தானின் ராவல்பிண்டி நகரில் உள்ள இராணுவ தலைமையகத்திற்கு அருகிலிருக்கும் மசூதியில் மக்கள் நிறைந்திருந்த நேரத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் நாற்பது பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.

அங்கே தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது குறைந்தது நான்குபேர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டும் கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினார்கள். மசூதியின் ஆண்கள் மற்றும் பெண்கள் தொழுகை செய்யும் இரண்டு பகுதிகளிலும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. அங்கே மனிதர்கள் விலங்குகளைபோல படுகொலை செய்யப்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறினார்.

தாக்குதல்தாரிகளுடன் பாதுகாப்பு படையினர் சுமார் ஒரு மணித்தியாலம் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டதாகவும், இறுதியில் தாக்குதல் நடத்தியவர்களில் இருவர் தம்மீது கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. பாகிஸ்தான் ராணுவத்தில் பணிபுரியும் இந்நாள் மற்றும் முன்னாள் அதிகாரிகள் பலரும் இந்த மசூதிக்கு வருவது வழமை.

இலங்கையில் என்றுமில்லாதளவு வெளிநாட்டு கையிருப்பு – 5200 மில் டொலர்; ஆளுநர் தகவல்

இலங்கையில் என்றும் மில்லாத அளவுக்கு வெளிநாட்டு கையிருப்பு சுமார் 5200 மில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது. இவற்றில் ஒரு பகுதியை கையிருப்பாக தங்கத்தை வைத்திருப்பதற்கு மத்திய வங்கி முடிவு செய்துள்ளது. இதன்படியே தங்கத்தைக் கொள்முதல் செய்ததாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.

மத்திய வங்கியின் கையிருப்பிலுள்ள தங்கம் பற்றி ஒவ்வொருவரும் தமக்கு வந்ததெல்லாம் கூறிக்கொண்டு இருக்கிறார்கள். இவற்றில் எவ்வித உண்மையுமில்லை எனக் கூறிய ஆளுநர், எமது அயல் நாடான இந்தியா உட்பட உலக நாடுகள் தங்கத்தை கையிருப்பில் வைத்துள்ளன. வைத்திருப்பதில் ஆர்வமும் காட்டுகின்றன.

பணத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை ஈடுசெய்வதற்கு தங்கத்தின் கையிருப்பு வெகுவாக உதவிபுரியும் என்றும் கூறினார்.வன்னியில் வெள்ளைமுள்ளி வாய்க்கால் பகுதியில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின்போது கைப்பற்றப்பட்ட ஒரு தொகை தங்கம் தொடர்பாக எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்புகின்றனர். இதன் உண்மைநிலை என்ன? என ஆளுநரிடம் கேட்டபோது;

கைப்பற்றப்பட்ட தங்கம் ஒருபோதும் மத்திய வங்கிக்கு நேரடியாக கிடைப்பதில்லை. அவற்றுக்கு ஒரு சட்டரீதியான நடைமுறைகள் உள்ளன. நீதிமன்றத்தினூடாகவே அவை மத்திய வங்கிக்கு ஒப்படைக்கப்படும். அவ்வாறு ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனவா? என கேட்டபோது; இதுவரை அவ்வாறான நடைமுறைகள் எடுக்கப்படவில்லை என்றார்.

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கிடைக்கும் நிதி பற்றி கேட்டபோது; சர்வதேச நாணயம் எமக்கு வழங்குவதாக கூறிய நிதியை வழங்கிவருகிறது. எமது இலக்கை சரியான முறையில் பூர்த்தி செய்வதற்கு முடியும் என்றும் ஆளுநர் தெரிவித்தார்.

பொன்சேகாவின் இந்திய விஜயம் குறித்து அரசியல் வட்டாரங்களில் பல்வேறு ஊகங்கள்

sara-pon.jpgஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக களமிறங்கியுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவின் இந்திய விஜயம் பல்வேறு ஊகங்களுக்கு வழி வகுத்திருக்கிறது.சமய யாத்திரையை மேற்கொண்டே அவர் இந்தியாவுக்குச் சென்றிருப்பதாகக் கூறப்பட்டாலும் மும்பைக்கு அவர் சென்றிருப்பதாகவும் பீகாரிலுள்ள புத்தகாயாவுக்கு அவர் விஜயம் மேற்கொள்ளக்கூடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

புதுடில்லி சென்று அவர் இந்தியத் தலைவர்களைச் சந்திப்பாரென்பது பற்றித் தெளிவாகத் தெரியவரவில்லை. ஆனால், புதுடில்லியில் இந்தியத் தலைவர்களுடனான சந்திப்புக்கு ஏற்பாடுகளைச் செய்து தருமாறு அவர் இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் காந்தாவை கோரியிருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று வெள்ளிக்கிழமை அவர் நாடு திரும்புவாரென அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறியிருந்தன.

இந்தியாவுடன் நெருக்கமாக செயற்படுவதற்கான விருப்பத்தை பொன்சேகா பல வழிகளில் வெளிப்படுத்தி வருகிறார். இந்திய இராணுவத்துடன் தான் நெருக்கமாக இருந்ததாகவும் இந்தியாவின் சகலவற்றையும் நேசிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ராஜபக்ஷக்கள் பக்கம் இந்தியா சாய்ந்திருப்பதாக இலங்கையின் எதிர்க்கட்சிகள் நம்புகின்ற நிலையில், இந்தியாவுடன் நெருக்கத்தை ஏற்படுத்த பொன்சேகா விரும்புவதாகத் தென்படுவதாக எக்ஸ்பிரஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

அவரின் தீவிரமான பெரும்பான்மை (சிங்கள) தேசியவாத கருத்துகளையிட்டு அவர் தொடர்பாக இந்தியா ஐயுறவுகளைக் கொண்டிருப்பது அறிந்ததொன்றாகும். ஆனால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் அவர் முற்றிலும் வித்தியாசமான தொனியில் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். இது டில்லி தொடர்பான இரகசியத் திட்டமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ராஜபக்ஷவின் அரசாங்கத்திடமிருந்து தனக்குப் போதிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என பொன்சேகா கவலையடைந்திருப்பதாக ஐ.தே.க. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தனக்கு வேண்டிய பாதுகாப்புத் தொடர்பாக இந்திய அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்க அவர் அங்கு சென்றிருக்கலாமெனவும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.

கெப்ரக வாகனத்தில் வந்தோர் அதிரடி படையினராலேயே கைது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தகவல்

பொரளை சந்தியில் கெப் ரக வாகனத்தில் வந்த நால்வரும் விசேட அதிரடிப் படையினராலேயே கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இரகசிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ. எம். கருணாரட்ன தெரிவித்தார்.

ராஜகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த நால்வர் கெப்ரக வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது பொரளை தேவி பாளிகா கல்லூரிக்கு அருகில் வைத்து விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருக்கும் நால்வர் மீதும் நடத்தப்படும் இரகசியப் பொலிஸாரின் விசாரணையின் பின்னரே சந்தேக நபர்கள் தொடர்பான விபரங்கள் தெரியவரும் என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையால் சிறுபான்மை சமூகங்களுக்கு நன்மை இல்லை

sampanthan.jpg1978 இல் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பும் அதனூடாக உருவாக்கப்பட்ட நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையும் இந்த நாட்டின் சிறுபான்மைச் சமூகங்களுக்கு மட்டுமல்ல முழு நாட்டுக்குமே ஆபத்தையும், அழிவையும் ஏற்படுத்தி விட்டிருப்பதாகத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றக் குழுத்தலைவர் ஆர்.சம்பந்தன் நாட்டில் சாதாரண நீதி கூட நடைமுறைச் சாத்தியமாக்கப்படவில்லை எனவும் இன்று காணப்படுவது குழம்பிப்போனதொரு அரசியல் கலாசாரமே எனவும் சுட்டிக்காட்டினார்.

மறைந்த அமைச்சர் லலித் அத்துலத்முதலியின் நினைவையொட்டி ஜனநாயக தலைமைத்துவ நிறுவனமும், பிரட்ரிக் நோமன் மன்றமும் இணைந்து கொழும்பு டீன்ஸ் வீதியிலுள்ள பூக்கர் ரெட்ஸ் மண்டபத்தில் நடத்திய பகிரங்க கலந்துரையாடலில் கலந்து கொண்டு பேசுகையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

“நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்பு சிறுபான்மை சமூகங்கள் மீதான அதன் தாக்கம் எனும் தொனிப் பொருளில் இக் கலந்துரையாடல் இடம்பெற்றது.அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த சம்பந்தன் கூறியதாவது;நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையால் சிறுபான்மைச் சமூகங்கள் மட்டும் பாதிப்படையவில்லை. சிங்கள மக்களும் கூட பிரச்சினைகளை எதிர்கொள்ளவே செய்கின்றனர்.

இந்த 1978 ஆம் ஆண்டின் அரசியலமைப்பின் பிதாமகனாக ஜே.ஆர்.ஜயவர்தன காணப்படுகிறார். அதனூடாகவே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையும் ஏற்படுத்தப்பட்டது. இந்த அதிகார முறையின் பேராபத்தை உணர்ந்து அன்றைய அரசியலிலிருந்த லலித் அத்துலத் முதலி கூட பிற்பட்ட காலத்தில் அதனைக் கடுமையாக எதிர்த்தார். நிறைவேற்று அதிகாரம் இன்று சர்வாதிகாரத் தன்மை கொண்டதாக மாற்றம் பெற்றுள்ளது.என்று இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

மலையக மக்கள் முன்னணி இன்று தீர்மானம்

ஜனாதிபதி தேர்தலில் மலையக மக்கள் முன்னணியின் நிலைப்பா ட்டை தீர்மானிக்க “விரிவுபடுத்தப் பட்ட மத்திய குழு” இன்று சனிக்கிழமை தலவாக்கலையில் கூடி ஆரா ய்கிறது. தமிழர்களின் இனப்பிரச்சினை தொடர்பாகவும் மலையக மக்களின் எதிர்கால அரசியல் உரிமைகள் தொடர்பாகவும் ஜனாதிபதி வேட்பாளர்கள் பகிரங்கப்படுத்தும் தீர்வுகளின் அடிப்படையிலேயே ஜனாதிபதி வேட்பாளரை தமது கட்சி ஆதரிக்க வேண்டுமென மலையக மக்கள் முன்னணியின் சகலமட்ட அங்கத்தவர்களும் முன்னணியின் தலைவரும், அமைச்சருமான பெ. சந்திரசேகரனை சந்தித்து வலியுறுத்தி வருகின்றனர்.