December

December

நிவாரண கிராமங்களில் சுதந்திர நடமாட்டம் – வெளிசெல்வோர் மீது அழுத்தங்கள் எதுவும் பிரயோகிக்கவில்லை

srilanka_displaced.jpgநலன்புரி நிலையங்களிலுள்ளோருக்கு சுதந்திரமாக நடமாடும் அனுமதி வழங்கப்பட்டதையடுத்து இதுவரை 22,443 பேர் வெளியில் சென்றுள்ளதுடன் அவர்களில் 9,762 பேர் மீளத் திரும்பியுள்ளதாக மனித உரிமைகள், அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

இவ்வாறு வெளிச்செல்வோர் 15 நாட்களுக்குள் மீளத்திரும்பிவிட வேண்டும் என்ற நிர்ப்பந்தம் உள்ளதாக வெளியிடப்படும் பிரசாரங்களை முற்றாக மறுத்த அமைச்சர் அக்கூற்று முற்றிலும் தவரானதெனத் தெரிவித்ததுடன் அத்தகைய எந்த நிபந்தனைகளையோ, அழுத்தங்களையோ எந்த அதிகாரிகளும் பிரயோகிக்கவில்லையெனவும் உறுதிபடக் கூறினார். அதேவேளை, நேற்றைய கணிப்பீட்டின்படி இன்னும் 1,12,062 பேரே எஞ்சியுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் சமரசிங்க, நேற்றைய தினமும் 1096 பேர் பூநகரிப் பகுதியில் மீளக்குடியமர்த்தப்பட்டனர் எனவும் தெரிவித்தார்.

இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் தொடர்பாக நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு விளக்கமளித்த அமைச்சர், எவர் எத்தகைய பிரசாரங்களை மேற்கொண்டாலும் மீள்குடியேற்ற விடயத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேரடிக் கவனத்தைச் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

சுதந்திரமாக நடமாடும் அனுமதி வழங்கப்பட்டதையடுத்து நலன்புரி முகாம்களிலிருந்து முதலாவது நாள் 9143 பேர் வெளியில் சென்றதுடன் 5020 பேர் மீளத் திரும்பிவிட்டனர். இரண்டாவது நாளில் 6,900 பேர் வெளியில் சென்றதுடன் அதில் 1,992 பேர் மீளத்திரும்பியுள்ளனர். மூன்றாம் நாளான நேற்று முன்தினம் 6399 பேர் வெளியில் சென்றதுடன் 2766 பேர் மீளத்திரும்பிவிட்டனர்.
 

யாழ் மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்டோருக்கு நிரந்தர வீடுகள்

நலன்புரி நிலையங்களிலிருந்து யாழ். மாவட்டத்தில் மீளக்குடியேறி யோர்களில் வீடற்றவர்களுக்கு அரை நிரந்தர வீடுகளைக் கட்டிக்கொடுக்க சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் முன்வந்துள்ளது.

யாழ். மாவட்டத்தைச் சொந்த முகவரியாகக் கொண்டு, வடமராட்சி, பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் மீளக்குடியேறியோர்களில் 400 குடும்பங்களுக்கு வீடுகள் இல்லையென அடையாளம் காணப்பட்டுள்ளது.

இவர்களுக்கு 12×16 சதுர அடி நீள, அகலத்தைக் கொண்ட தற்கா லிக வீடுகள் அமைத்துக் கொடுக்கப் படவுள்ளன. இவ்வீடுகள் அமைக் கும் பணி விரைவில் ஆரம்பமாகுமென பருத்தித்துறை பிரதேச செயலர் வரதீஸ்வரன் தெரிவித்தார்.

அரசியல் நடவடிக்கையை புதுப்பிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகிறது இந்தியா

smkrishnaindianforeignminis.jpgஇலங் கையில் அரசியல் நடவடிக்கைகள் புதுப்பிக்கப்பட்டு சகல தரப்பினரையும் உள்ளடக்கிய பேச்சுவார்த்தை இடம்பெறுவதை பார்ப்பதில் ஆர்வமாக உள்ளதாக இந்திய அரசாங்கம் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. இந்திய பாராளுமன்றத்தின் மேற்சபையான மாநிலங்கள் அவையில் (ராஜ்யசபை) நேற்று அறிக்கையொன்றை விடுத்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இடம்பெயர்ந்த 3 இலட்சம் மக்களுக்கு நிவாரண உதவி வழங்க இந்தியா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை விபரித்ததுடன் அரசியல் நடவடிக்கைகள் புதுப்பிக்கப்படுவதைப் பார்ப்பதில் இந்தியா ஆர்வமாக இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

“இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றத்தை உறுதிப்படுத்துவதில் நாம் தொடர்ந்து இலங்கை அரசுடன் இணைந்து பணியாற்றுவோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.வட இலங்கையின் அண்மைய நிகழ்வுகள் தொடர்பாக அறிக்கை விடுத்த கிருஷ்ணா, இடம்பெயர்ந்த சுமார் 3 இலட்சம் பேரின் உடனடி மனிதாபிமானத் தேவைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டியது முக்கியமான தேவையாக இருந்ததாகவும் அவர்களின் சொந்த வதிவிடங்களில் அவர்களை மீளக்குடியமர்த்துவதற்கான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த விடயம் குறித்து இந்தியா தனது கவலையையும் அக்கறையையும் தெரியப்படுத்திய பின்பே இடம்பெயர்ந்தோரில் அதிக தொகையினரை 180 நாட்களுக்குள் மீளக்குடியேற்ற இலங்கை அரசாங்கம் இணங்கியதாகவும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு கிருஷ்ணா கூறியுள்ளார். இலங்கையில் அரசியல் நடவடிக்கைகள் புதுப்பிக்கப்படுவதைப் பார்க்க அரசாங்கம் ஆர்வமாக உள்ளது. அந்த நடவடிக்கைகள் தமிழர்கள், முஸ்லிம்கள் உட்பட சகல சமூகங்களினதும் நியாயபூர்வமான நலன்கள், அபிலாசைகளை நிறைவேற்றுவதாக இருக்க வேண்டும். ஒன்றுபட்ட இலங்கை கட்டமைப்புக்குள் இவை இடம்பெறுவதைப் பார்க்க இந்திய அரசு ஆர்வமாக இருக்கிறது என்றும் கிருஷ்ணா மேலும் கூறியுள்ளார்.

4 பக்க அறிக்கையை வாசிக்க கிருஷ்ணா ஆரம்பிப்பதற்கு முன்னர் பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் வெங்கையா நாயுடு அதற்கு ஆட்சேபனை தெரிவித்தார்.13 ஆவது திருத்தத்திற்கு அப்பால் செல்லக்கூடிய அர்த்த புஷ்டியுடன் கூடிய அதிகாரப் பகிர்வுத் திட்டத்தை முன்வைக்குமாறு இலங்கை அரசுக்கு இந்தியா தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்து வருவதாகவும் கிருஷ்ணா தனது உரையில் கூறினார். இந்த நடவடிக்கைகளில் மாற்றம், மறுசீரமைப்பு தொடர்பாக தொடர்ந்தும் அவர்களுடன் (இலங்கை) நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியிருந்தோரில் அரைவாசித் தொகையினர் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர். 1 இலட்சத்து 45 ஆயிரம் பேர் தொடர்ந்தும் முகாம்களில் உள்ளனர். அவர்களுக்கான பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது. 2010 ஜனவரி இறுதியில் இடம்பெயர்ந்த சகலரும் மீளக்குடியமர்த்தப்படுவார்களென எமக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது. சகலரும் மீளக்குடியமர்த்தப்படுவதை உறுதி செய்வதற்கு இலங்கை அரசுடன் தொடர்ந்து பணியாற்றுவோம். இடம்பெயர்ந்த மக்களின் புனர்வாழ்வுக்காக 500 கோடி ரூபாவை இந்தியா ஒதுக்கீடு செய்துள்ளது. கண்ணிவெடி அகற்றும் பணியில் 4 இந்தியக் குழுக்கள் ஈடுபட்டுள்ளன. நிவாரணப் பொருட்கள், அவசரகால கள வைத்தியசாலை வசதிகள் என்பன வழங்கப்பட்டன. 2600 தொன் புகலிடப் பொருட்கள் உட்பட மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட்டது என்றும் கிருஷ்ணா கூறியுள்ளார்.

கிழக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினராக பிரசாந்தன் நியமனம்

கிழக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினராக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பூ. பிரசாந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ரீ. எம். வி. பி. சார்பில் ஐ. ம. சு. மு. வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்படி பிரசாந்தன் போட்டியிட்டிருந்தார். 37 உறுப்பினர்களைக் கொண்ட கிழக்கு மாகாண சபையில் ஒரு உறுப்பினர் பதவி வெற்றிடமாக இருந்தது. இவ் வெற்றிடத்திற்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சிபார்சின் பேரில் மேற்படி பிரசாந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மீள்குடியேற்ற நிறைவுடன் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு – ஜனாதிபதி மஹிந்தவை ஆதரிக்கப் போவதாக ஈ.பி.டி.பி அறிவிப்பு

douglas.jpgஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பதற்கு ஈ.பி.டி.பி. முடிவு செய்துள்ளது. இதனை விளக்கும் செய்தியாளர் மாநாடு அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது கட்சியின் நிலைப்பாட்டை விளக்கினார்.

மக்கள் நலன் சார்ந்த 10 அம்சக் கோரிக்கைகளை ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ், அவைகளை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதாகக் கூறினார். அதேநேரம் 10 அம்சங்களையும் நிறைவேற்றுவதற்கான பொறுப்பை ஜனாதிபதியே ஏற்றுக்கொண்டுள்ளாரெனவும் அமைச்சர் டக்ளஸ் தெரிவித்தார்.

கேள்வியொன்றுக்குப் பதிலளித்த அமைச்சர் தேவானந்தா, வடக்கில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் நிறைவடைந்ததும் அரசியல் தீர்வும் வெளிப்படும் எனக் கூறினார்.

13 வது திருத்தத்திற்கு அப்பால் சென்று இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. ஜனாதிபதியில் நம்பிக்கை வைத்துச் செயற்படுகிறோம். அரசியல் தீர்வு வெளிப்படும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதித் தேர்தல் முடிந்ததும் பாராளுமன்ற தேர்தல் வடக்கில் மாகாண சபைத் தேர்தல் உள்ளூராட்சித் தேர்தல்கள் நடத்தப்படவுள்ளன. அதன் பின்னர்தான் வடக்கில் அரசியல் தலைமைத்துவம் இல்லையென்ற குறை போக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

ஓர் அரசியல் வேலைத்திட்டத்தின் அடிப்படையிலேயே அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கி வந்திருப்பதால் அதன் அடிப்படையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் நடைமுறை சாத்தியமான வழிமுறை யிலான பத்து அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தியிருப்பதானது எமது மக்களின் அரசியல் இலக்கை எட்டுவதற்கான சூழலை நிச்சயம் உருவாக்கியே தீரும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். அந்த பத்து அம்ச கோரிக்கைகளுள் பிரதானமானவை வருமாறு:

1. தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைக்குத் தீர்வாக 13 வது திருத்தச் சட்டத்தில் ஆரம்பித்து படிப்படியாக கூடுதல் அதிகாரங்களைப் பெற்று மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற அரசியல் இலக்கை நோக்கி முன்னேறுதல்.

2. தமிழர்கள் இலங்கையர்களாகவும் அதேவேளையில் தமிழர்களாகவும் இருப்பதற்கான அவர்களது விருப்பங்களை உறுதிப்படுத்துதல்.

3. இலங்கையர் என்ற நிலையான சமத்துவ உணர்வையும் இனக்குழுமம் என்ற அடிப்படையான பண்பாட்டையும் இனங்களுக்கு இடையில் சமத்துவத்தையும் பேணுதல்.

4. வன்னிப்பகுதியில் இருந்தும் அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் இருந்தும் இடம்பெயர்ந்த எமது மக்களை மீளக்குடியமர்த்தி அவர்களுக்கான வாழ்வியல் உரிமைகளுக்கான செயற்திட்டங்களை விரைவாக நடைமுறைப்படுத்தல்.

5. கடந்த மூன்று தசாப்தங்களாக நடைமுறையில் இருக்கும் பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டம் என்பவற்றை நீக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு வன்முறைகள் அற்ற அடிப்படை ஜனநாயக உரிமைகளை பாதுகாத்தல்.

6. இலங்கையின் ஏனைய பகுதிகளைப் போல் ஏ-9 பாதை உட்பட ஏனைய போக்குவரத்திலும் தடைகளற்ற பயணத்தை உறுதிப்படுத்துதல்.

சரத்பொன்சேகாவுக்கு எதிராக நேற்று முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முன்வந்துள்ள சரத் பொன்சேகாவுக்கு எதிராக கொழும்பு மருதானை ஸாஹிரா பள்ளிவாசலுக்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

நேற்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின் பள்ளிவாசலுக்கு முன்னால் கூடிய முஸ்லிம்கள் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முன்வந்த சரத் பொன்சேகாவுக்கு தமது கடும் கண்டனத்தை தெரிவித்ததுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே தமது முழுமையான ஆதரவையும் வழங்குவதாக கோஷமிட்டனர்.

‘நாட்டிலிருந்த பயங்கரவாதத்தை ஒழித்த தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே’ ‘வெளிநாட்டு சக்திகளின் சதி வலைக்குள் சிக்கிய பொன்சேகாவே’ போன்ற கோஷங்களை ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் எழுப்பினர்.

தவறான செயல்களில் ஈடுபடுவோரை திருத்த சமூக மாற்றம் அவசியம் -ஜனாதிபதி

mahinda0.jpgஇந்த நாட்டில் எவ்வளவோ நல்ல வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் சிலர் இந்நாட்டை பிழையான நாடாக உலகிற்குக் காட்ட முயற்சி செய்கின்றனர் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று காலியில் தெரிவித்தார்.

நாட்டை எவ்வளவு தான் அபிவிருத்தி செய்த போதிலும் சமூகத்தில் நற்பண்புகள் வீழ்ச்சி அடையுமாயின் அந்த அபிவிருத்திகள் அனைத்தும் அர்த்தமற்றதாகிவிடும். அதனால் நற்பண்புகள் நிறைந்த சமூகத்தைக் கட்டியெழுப்புவதை எமது கடமையாக கருதி வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம் என்றும் ஜனாதிபதி கூறினார்.

காலி சங்கமித்தா மகளிர் வித்தியாலயத்தின் பரிசளிப்பு வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இவ்வைபத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்று கையில், அன்றைய கால கட்டத்தில் காணப்பட்ட மிசனறி பாடசாலைகளுக்குப் பதிலாகவே சங்கமித்தா மகளிர் வித்தியாலயம், ஆனந்தா, நாலந்தா, விசாகா கல்லூரிகளும் உருவாக்கப்பட்டன. இக் கல்லூரிகளின் ஊடாக நற்பண்புகள் நிறைந்த, நாட்டுப்பற்று மிக்க மனிதர்களின் உருவாக்கமே பிரதானமாக எதிர் பார்க்கப்பட்டது. இந்த நாட்டில் எவ்வளவோ நல்ல மனிதர்கள் வாழுகின்றார்கள். எவ்வளவோ சிறப்பான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இருந்தும் சிலர் இவற்றைக் கண்டு கொள்ளுவதில்லை. அவர்கள் எல்லாவற்றையுமே தவறாகவே பார்க்கின்றனர். அதனால் அவர்களுக்கு எல்லாமே குறையாகவும், தவறாகவுமே தெரிகின்றது. இவர்கள் தான் இந்நாடு குறித்து வெளிநாடுகளில் பிழையாகக் கூறி மகிழ்ச்சி அடைகின்றனர். இங்கு ஒன்றும் நடப்பதில்லை. எல்லாமே பொய் என்று கூறி அவர்கள் அகமகிழ்கின்றனர்.

இங்கு பல இன, மத மக்கள் வாழ்கின்றனர். அவர்களுக்கிடையில் எந்த பிரச்சினையுமே இல்லை. அவர்கள் புரிந்துணர்வுடன் ஒற்றுமையாக உள்ளனர். இதேவேளை “சார்க்” மாநாட்டில் பங்கு பற்ற இங்கு வருகை தந்த ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி “ஒரு வைபவத்தில் பல மதங்களின் ஆசீர்வாதம் இடம்பெறும் நிகழ்வை தாம் வெறெங்கும் கண்டதில்லை” என்று குறிப்பிட்டார்.

இவ்வாறு உயர் பண்புகள் நிறைந்து காணப்படும் மக்கள் வாழும் கெளரவமான நாடு இது. என்றாலும் தவறான செயல்களில் ஈடுபடக் கூடிய மனிதர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். அதற்காக முழு சமூகத்தையும் குறை கூற முடியாது. தவறான செயல்களில் ஈடுபடுபவர்களை திருத்த சமூக மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

இதேநேரம் போதைப் பொருள், துஷ்பிரயோகம், பாதாள உலகம் என்பன நாட்டை சீரழிக்கப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. இவற்றைப் புரிந்து கொண்டு ஒவ்வொருவரும் செயற்படுவது அவசியம். சில பெண்கள் சம உரிமை கோருகின்றனர். இந்த கோரிக்கையை நான் ஏற்றுக் கொள்ளவில்லை.  இக் கோரிக்கையை விடவும் மேலானவர் களாகவே பெண்களை நான் பார்க்கின்றேன். எம் தாய்மாரை நாம் புனிதமானவர்களாகத் தான் பார்க்கின்றோம். அதன்படி பெண்களைப் புனிதமானவர்களாகவே நான் கருதுகின்றேன்.

இரத்மலானை இந்துக் கல்லூரி: புனர்வாழ்வு பெறும் புலி உறுப்பினர்களுக்கு உதவ தமிழ் வர்த்தர்கள் முன்வருகை

இரத்மலானை இந்துக் கல்லூரியில் கல்வி கற்று வரும் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு உதவி புரிவதற்கு பல தமிழ் வர்த்தக பிரமுகர்கள் முன்வந்துள்ளனர்.

நேற்றுமுன்தினம் கல்லூரிக்கு விஜயம் செய்த அவர்கள், மாணவர்களின் நிலவரத்தை நேரில் அறிந்து கொண்ட பின் இந்த உறுதி மொழியை வழங் கியுள்ளனர். பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, அமைச்சர் மிலிந்த மொறகொட ஆகியோரு டன் கல்லூரிக்கு விஜயம் செய்த இல ங்கை வங்கியின் முன்னாள் தலைவர் இராஜன் ஆசீர்வாதம், ஜோன் கீல்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதித் தலைவர் விஸ்வநாதன் கைலாசபிள்ளை ஆகியோரே இந்த மாணவர்களுக்கு உதவி புரிவதாக உறுதியளித்துள்ளனர்.

பாகிஸ்தான் மசூதி தாக்குதலில் நாற்பது பேர் பலி

pakisthan.jpgபாகிஸ் தானின் ராவல்பிண்டி நகரில் உள்ள இராணுவ தலைமையகத்திற்கு அருகிலிருக்கும் மசூதியில் மக்கள் நிறைந்திருந்த நேரத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் நாற்பது பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.

அங்கே தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது குறைந்தது நான்குபேர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டும் கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினார்கள். மசூதியின் ஆண்கள் மற்றும் பெண்கள் தொழுகை செய்யும் இரண்டு பகுதிகளிலும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. அங்கே மனிதர்கள் விலங்குகளைபோல படுகொலை செய்யப்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறினார்.

தாக்குதல்தாரிகளுடன் பாதுகாப்பு படையினர் சுமார் ஒரு மணித்தியாலம் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டதாகவும், இறுதியில் தாக்குதல் நடத்தியவர்களில் இருவர் தம்மீது கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. பாகிஸ்தான் ராணுவத்தில் பணிபுரியும் இந்நாள் மற்றும் முன்னாள் அதிகாரிகள் பலரும் இந்த மசூதிக்கு வருவது வழமை.

இலங்கையில் என்றுமில்லாதளவு வெளிநாட்டு கையிருப்பு – 5200 மில் டொலர்; ஆளுநர் தகவல்

இலங்கையில் என்றும் மில்லாத அளவுக்கு வெளிநாட்டு கையிருப்பு சுமார் 5200 மில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது. இவற்றில் ஒரு பகுதியை கையிருப்பாக தங்கத்தை வைத்திருப்பதற்கு மத்திய வங்கி முடிவு செய்துள்ளது. இதன்படியே தங்கத்தைக் கொள்முதல் செய்ததாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.

மத்திய வங்கியின் கையிருப்பிலுள்ள தங்கம் பற்றி ஒவ்வொருவரும் தமக்கு வந்ததெல்லாம் கூறிக்கொண்டு இருக்கிறார்கள். இவற்றில் எவ்வித உண்மையுமில்லை எனக் கூறிய ஆளுநர், எமது அயல் நாடான இந்தியா உட்பட உலக நாடுகள் தங்கத்தை கையிருப்பில் வைத்துள்ளன. வைத்திருப்பதில் ஆர்வமும் காட்டுகின்றன.

பணத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை ஈடுசெய்வதற்கு தங்கத்தின் கையிருப்பு வெகுவாக உதவிபுரியும் என்றும் கூறினார்.வன்னியில் வெள்ளைமுள்ளி வாய்க்கால் பகுதியில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின்போது கைப்பற்றப்பட்ட ஒரு தொகை தங்கம் தொடர்பாக எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்புகின்றனர். இதன் உண்மைநிலை என்ன? என ஆளுநரிடம் கேட்டபோது;

கைப்பற்றப்பட்ட தங்கம் ஒருபோதும் மத்திய வங்கிக்கு நேரடியாக கிடைப்பதில்லை. அவற்றுக்கு ஒரு சட்டரீதியான நடைமுறைகள் உள்ளன. நீதிமன்றத்தினூடாகவே அவை மத்திய வங்கிக்கு ஒப்படைக்கப்படும். அவ்வாறு ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனவா? என கேட்டபோது; இதுவரை அவ்வாறான நடைமுறைகள் எடுக்கப்படவில்லை என்றார்.

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கிடைக்கும் நிதி பற்றி கேட்டபோது; சர்வதேச நாணயம் எமக்கு வழங்குவதாக கூறிய நிதியை வழங்கிவருகிறது. எமது இலக்கை சரியான முறையில் பூர்த்தி செய்வதற்கு முடியும் என்றும் ஆளுநர் தெரிவித்தார்.