17

17

யாழ். மாநகரசபைக்கான தேர்தலில் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுவோம்: வீ ஆனந்தசங்கரி

TULF Leader Anandasangaree Vயாழ். மாநகரசபைக்கான தேர்தலில் தாங்கள் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடப் போவதாக த.வி. கூ. தலைவர் வீ ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியில் உள்ள கட்சிகள் இதற்கு இணக்கம் தெரிவித்தால் அவர்களுக்கும் இடமளிக்கப்படும் என்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தமது ஆதரவாளர்கள், பொதுமக்கள் ஆகியோரை வவுனியாவில் சந்தித்துக் கலந்துரையாடியபோது தெரிவித்துள்ளார்.

இலங்கையில் முதலாவது பன்றிக் காய்ச்சல் நோயாளி அடையாளம் காணப்பட்டார்!

swine_flu.jpgஇலங் கையில் பன்றிக் காய்ச்சல் நோயினால் பீடிக்கப்பட்ட முதலாவது நபர் வத்தளை பிரதேசத்தில் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளார் என சுகாதார சேவைகள் மற்றும் போஷாக்குத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். இலங்கையில் முதலாவது பன்றிக் காய்ச்சல் நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளமை தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிப்பதற்காக நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். கொழும்பிலுள்ள சுகாதார அமைச்சில் இடம்பெற்ற இச்செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

அவுஸ்திரேலியாவிலிருந்து சிங்கப்பூரினூடாக நேற்று இலங்கைக்கு வருகை தந்த தமிழ் குடும்பமொன்றைச் சேர்ந்த 8 வயது சிறுவனே சுவைன் ப்ளு எனப்படும் பன்றிக் காய்ச்சல் நோய்க்கு ஆளாகியுள்ளார். இலங்கையில் நடைபெறும் திருமண வைபவம் ஒன்றில் கலந்துகொள்வதற்காக இங்கு வருகை தந்த இச்சிறுவன் தற்போது தொற்றுநோய் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடும் காய்ச்சலுக்கு உள்ளான சிறுவனது உடல்நிலை குறித்து சந்தேகம் கொண்ட அவனது தந்தை இதுபற்றி இலங்கையிலள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்துக்கு அறிவித்துள்ளார். உடனடியாக தொற்றுநோய் சிகிச்சைப் பிரிவினர் சிறுவன் தங்கியிருந்த வத்தளைப் பிரதேசத்துக்குச் சென்று அவனை அழைத்து வந்து மேற்கொண்ட பரிசோதனைகள் மூலம் அது பன்றிக் காய்ச்சல் என ஊர்ஜிதமாகியுள்ளது.

இத்தொற்று ஏற்பட்டு 5 முதல் 7 நாட்கள் வரை சென்ற பின்னரே இந்நோய்க்கான அறிகுறிகள் தோன்றும். இதன் காரணமாகவே கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள பன்றிக் காய்ச்சலை இனங்காண்பதற்கான இயந்திரத்தால் இச்சிறுவனின் நோய்த் தாக்கத்தை அடையாளம் காணமுடியாமல் போனது.

நாட்டில் பன்றிக் காய்ச்சல் அடையாளம் காணப்பட்டுள்ளபோதும் இந்நோயைத் தடுப்பதற்கான சகல நடவடிக்கைகளும் திருப்திகரமாக மேற்கொள்ளப்பட்டிருப்பதால் இது குறித்து எவரும் பதற்றமடையத் தேவையில்லை. பன்றிக் காய்ச்சல் பற்றிய தற்போதைய நிலைமை தொடர்பாக அனைத்து பிராந்திய மருத்துவ நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டிருப்பதுடன் தேவையான மருந்துகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ள. அவ்வாறே போதியளவு மருந்துகளும் கையிருப்பில் காணப்படுகின்றன என்றும் அமைச்சர் கூறினார்.

தொடர்ச்சியான இருமல், தொண்டை அரிப்பு, தலைவலி, காய்ச்சல் மற்றும் உடல் வலி என்பன இருப்பின் எவரும் அதுபற்றி அலட்சியமாக இருக்க வேண்டாமென இச்செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட தொற்றுநோய் சிகிச்சைப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர்கள் தெரிவித்தனர். எச்சில், கண்ணீர் என்பன மூலமே இந்நோய் பரவுவதால் கைக்குட்டை உபயோகித்தல், கைகளை அடிக்கடி கழுவுதல் என்பவற்றின் மூலம் இந்த வைரஸ் பரவுவதைத் தடுக்க முடியுமென்றும் அவர்கள் மேலும் குறிப்பிட்டனர். 

“இரு எம்.பி.க்களுக்கு விசா மறுக்கப்பட்டபோதும் தமிழர் விவகாரத்தில் கனடா தூரவிலகி நிற்காது’

canada.jpgகனடா வின் பாராளுமன்றச் செயலாளர் தீபக் ஒபராலிற்கு விசா வழங்க இலங்கை மறுத்துள்ள போதிலும் இலங்கைத் தமிழர் விவகாரம் மற்றும் யுத்தத்தினால் இடம் பெயர்ந்த தமிழ் மக்களை மீளக் குடியமர்த்தும் வேலைத்திட்டம் என்பவற்றில் தொடர்ந்து இலங்கையுடன் இணைந்து செயலாற்றவுள்ளதாக கனடா நேற்று முன்தினம் திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.

கனடாவிலுள்ள உயர் ஸ்தானிகராலயம் அந்நாட்டின் இந்திய வம்சாவளிப் பாராளுமன்றச் செயலாளரான (இந்திய அமைச்சருக்கு நிகரான பதவி) தீபக் ஒபராலிற்கு விசா வழங்க மறுத்துள்ளதாக தெரிவித்த கனடா, இருப்பினும் இலங்கையில் இடம்பெறும் நல்லிணக்க நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

விசா மறுக்கப்பட்டமை தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த தீபக் ஒபரால், எனக்கு விசா வழங்க மறுக்கப்பட்டுள்ள போதிலும், நாம் இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழ் மக்களுக்குமிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதிலேயே உறுதியாகவுள்ளோம் எனத் தெரிவித்தார். இவர் கடந்த வாரத்தில் இலங்கைக்குள் வர அனுமதி மறுக்கப்பட்ட இரண்டாவது கனடிய முக்கியஸ்தர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இவருக்கு முன்னர் இலங்கைக்கு வருகைதந்த கனடாவின் எதிர்க்கட்சி எம்.பி. பொப் ரேய் கட்டுநாயக்காவிலிருந்து கனடாவுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் இவர் விடுதலைப் புலிகள் ஆதரவாளர் எனத் தெரிவிக்கப்பட்டது. கனடாவின் எதிர்க்கட்சியான லிபரலின் (நிழல் வெளிவிவகார அமைச்சர்) ரேய் அடுத்த விமானத்தில் திருப்பியனுப்பப்படும் வரை கட்டுநாயக்கா விமான நிலையத்திலேயே தடுத்து வைக்கப்பட்டார்.

இவர் அதிக எண்ணிக்கையிலான தமிழர்கள் வாழும் பகுதியான ரொறன்டோவின் பிரதிநிதி.

இலங்கை ரேயைத் திரும்பியனுப்பிய வேளையிலேயே என்னையும் ஏற்றுக் கொள்ள முடியாதெனத் தெரிவித்திருந்து எனது விசாவும் நேரடியாகவே மறுக்கப்பட்டுள்ளதென ஒபரால் தெரிவித்தார்.

பொப் ரேயையும் என்னையும் இலங்கைக்குள் அனுமதிக்க மறுத்தமை இலங்கை தொடர்பான கனடாவின் நிலைப்பாட்டை மாற்றாது. நாம் தொடர்ந்தும் அவர்களுடன் இணைந்து செயற்படுவோம் எனவும் தெரிவித்தார்.

அத்துடன் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த தமிழ் மக்களை மீளக் குடியமர்த்துவதற்கான மனிதாபிமான வேலைத் திட்டங்களுக்காக கனடா, இலங்கைக்கு 3 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது. நாம் இடம்பெயர்ந்துள்ள மக்கள் தொடர்பாக அவதானம் கொண்டுள்ளோம். அவர்களை பழைய நிலைக்கு கொண்டு செல்வது அவசியமானது. அத்துடன் நாட்டில் நல்லிணக்கச் செயற்பாட்டிலுள்ள தடைகள் நீக்கப்பட வேண்டுமென மேலும் தெரிவித்தார்.

யாழ்.குடாநாட்டில் 350 மெற்றிக்தொன் கோதுமை மா கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக விநியோகம்

யாழ்.குடாநாட்டில் கோதுமை மாவுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து கடந்த வாரம் கப்பல் மூலமாக எடுத்துவரப்பட்ட 350 மெற்றிக்தொன் கோதுமை மாவை அங்குள்ள 24 பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுக்கும் வழங்கிய அரச அதிபர், ஒரு கிலோ மாவினை 72 ரூபா வீதம் விநியோகிக்குமாறும் கோரியுள்ளார்.
குடாநாட்டில் இருக்கின்ற 23 பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களும் இந்த விலை நிர்ணயத்தை ஏற்றுக் கொண்டு பொதுமக்களுக்கு 72 ரூபா வீதம் விநியோகித்துக் கொண்டிருக்கின்ற நிலையில் வேலணைப் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் மட்டும் 73 ரூபா வீதம் விற்பனை செய்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஏ9 நெடுஞ்சாலை மூடப்பட்ட பின்னர் கப்பல் மூலமாகக் குடாநாட்டுக்கு எடுத்துவரப்படுகின்ற பொருட்களுக்கு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளரும் அரச அதிபரும் இணைந்தே விலை நிர்ணயம் செய்கின்றனர்.

பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் உட்பட வர்த்தக நிலையங்களும் இந்த விலை நிர்ணயத்தின் அடிப்படையிலேயே மக்களுக்குப் பொருட்களை விநியோகம் செய்கின்றனர்.

இந்நிலையில், வேலணை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் ஒரு ரூபா அதிகரித்த விலையில் கோதுமை மாவை விற்பனை செய்வது குறித்து பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் குறித்து உரிய விசாரணைகளை மேற்கொண்டு தற்போது விநியோகிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் கோதுமை மா உட்பட இனிவரும் காலங்களில் விநியோகிக்கின்ற பொருட்களையும் நிர்ணய விலைக்கு பொதுமக்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி யாழ்.மாவட்டக் கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளருக்குப் பொதுமக்கள் கடிதமொன்றையும் அனுப்பி வைத்துள்ளனர்.

இதேவேளை, யாழ்.குடாநாட்டிலுள்ள பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் அண்மைக் காலத்தில் மோசடிகளில் ஈடுபட்டுள்ளமை தொடர்பாக இனங்கண்டுள்ள பொதுமக்கள் இது குறித்து கடும் விசனமடைந்திருக்கின்றமையும் குறிப்பிட்டத்தக்கது.

பிரபாகரனது நாட்குறிப்பேடு படைவீரரின் பொதியிலிருந்து மீட்பு- பொலிஸ் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர

police_spokesman_ranjith.jpgதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் 2008ஆம் ஆண்டு பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் நாட்குறிப்பேடொன்று இராணுவ வீரர் ஒருவருக்குச் சொந்தமான பயணப் பொதியொன்றிலிருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. அத்துடன் அந்த நாட்குறிப்பேட்டில் குறிப்பிடப்பட்டிருந்த தொலைபேசி இலக்கமொன்று தொடர்பில் விசாரணை நடத்திய பொலிஸார் அவ்விலக்கத்துக்குச் சொந்தக்காரராகிய முஸ்லிம் இராணுவ வீரர் ஒருவரையும் கைது செய்தள்ளனர்.

கொழும்பு புறக்கோட்டை குணசிங்கபுர பிரதான பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் ஒன்றினுள் அனாதரவாகக் கிடந்த பொதியிலிருந்தே நேற்று முன்தினம் மேற்படி நாட்குறிப்பேடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். பிரபாகரனின் கையெழுத்தினாலேயே எழுதப்பட்டிருப்பதாகச் சந்தேகிக்கப்படும் அந்த நாட்குறிப்பேட்டின் முன் பக்கத்தில் அவருடைய பெயர் விலாசம் உள்ளிட்ட அனைத்துத் தகவல்களும் எழுதப்பட்டிருந்ததாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:

கடந்த வருடம் விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் அவ்வாண்டு கொழும்பில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வின் போது மேற்கொள்ளவிருந்த தாக்குதல் திட்டம் போன்றன குறித்த பல தகவல்கள் மேற்படி நாட்குறிப்பேட்டில் எழுதப்பட்டிருந்தன.

இதேவேளை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இராணுவ வீரர் வடக்கிலுள்ள இராணுவ முகாமொன்றில் சேவையாற்றி வருபவர் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. அவர் விடுமுறைக்காக வீடு திரும்பும் போதே மேற்படி பயணப் பொதியினை பஸ்ஸிலேயே விட்டுச் சென்றுள்ளார் என்றும் தெரியவந்துள்ளது. புதுமாத்தளன் பகுதியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போர் நடவடிக்கைகளின் போது மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான பதுங்கு குழியொன்றிலிருந்தே மேற்படி நாட்குறிப்பேட்டினைக் கண்டெடுத்ததாக கைது செய்யப்பட்ட இராணுவ வீரர் பொலிஸ் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார். இது பிரபாகரனுடையது என்ற சந்தேகிக்கப்பட்டே தான் அதனை எடுத்துக்கொண்டதாகவும் அவர் பொலிஸாரிடம் கூறியுள்ளார். அத்துடன் கடந்த வருட சுதந்திர தினத்தன்று புலிகள் இயக்கத்தினரால் நடத்த திட்டமிடப்பட்டிருந்த தாக்குதலை முன்னெடுத்த புலி உறுப்பினரின் பெயர் மற்றும் விபரங்கள் அந்த நாட்குறிப்பேட்டில் குறிப்பிடப்பட்டிருந்ததுடன் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த பல உறுப்பினர்களது விபரங்களும் அதில் உள்ளடக்கப்பட்டிருந்தன.

தொழிநுட்பத்துடன் தயாரிக்கப்பட்டிருந்த மேற்படி நாட்குறிப்பில் பிரபாகரனுடைய புகைப்படம் அவ்வியக்கத்தினரால் பயன்படத்தப்பட்ட அதி தொழிநுட்பம் வாய்ந்த ஆயுதங்களின் புகைப்படங்கள் பயிற்சி பெறும் போராளிகளின் புகைப்படங்கள் போன்றனவும் உள்ளடக்கப்பட்டிருந்தன. இந்த நாட்குறிப்பேட்டினை எடுத்துச் சென்ற இராணுவ வீரர் தற்போது தடுத்து வைக்கப்பட்டு தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.

இலங்கையில் மட்டக்களப்பில் தங்கியிருந்த சம்பூர் அகதிகள் மூதூர் கிளிவெட்டிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்

இலங்கையின் கிழக்கே மூதூரில் சம்பூர் பிரதேச உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக இருப்பிடங்களை இழந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் முகாம்களில் தங்கியிருந்த குடும்பங்களில் முதற்கட்டமாக ஒரு தொகுதியினர் மூதூர் பிரதேசத்திலுள்ள கிளிவெட்டி அகதி முகாமுக்கு அதிகாரிகளால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 750 குடும்பங்களைச் சேர்ந்த 2700க்கும் மேற்பட்டவர்கள் 11 அகதி முகாம்களில் கடந்த இரண்டரை வருடங்களுக்கும் மேலாகத் தங்கிவருகிறார்கள்.

மூன்று முகாம்களை மூடிவிட்டு அங்கிருந்தவர்களை கிளிவெட்டிக்கு அனுப்பிவைக்க அதிகாரிகள் முன்னர் செய்திருந்த முயற்சி பலனளித்திருக்கவில்லை.

சில குடும்பங்கள் சுய விருப்பத்தின் பேரில் சென்றிருந்தாலும் பல குடும்பங்கள் கட்டாயத்தின் பேரில் அனுப்பி வைக்கப்பட்டதாக வெளியேற்றப்பட்ட பலரும் கூறுகின்றனர்.

எனினும் மக்கள் பலவந்தமாக அனுப்பிவைக்கப்பட்டதாக சுமத்தப்பட்டக் குற்றச்சாட்டை கிழக்கு மாகாண முதலமைச்சரின் மீள் குடியேற்றப் பிரிவு இணைப்பு அதிகாரியான அருணாசலம் செல்வேந்திரன் மறுத்துள்ளார்.

பாலைவனமாதல், வறட்சிக்கு எதிரான தினம் World Day to Combat Desertification and Drought – புன்னியாமீன்

2009-world-day-to-combat-desertification.png1994ஆம் ஆண்டில் ஐ.நா பொதுச்சபையின் தீர்மானத்திற்கமைய ஏற்றுக்கொள்ளப்பட்டு ஜுன் 17ஆம் திகதி முதல் இத்தினம் அனுஸ்டிக்கப்படுகிறது. 1995ஆம்ஆண்டு ஜனவரி இலக்கம் A/RES/49/115 பிரகடனப்படி (January 30, 1995 by the United Nations General Assembly resolution A/RES/49/115) பாலைவனமாதல், வறட்சிக்கு எதிரான போராட்ட தினமாக ஜுன் 17ஆம் திகதி உத்தியோக பூர்வமாக பிரகடனப்படுத்தப்பட்டது.

அன்று முதல் இன்று வரை ஐக்கிய நாடுகளின் பாலைவனமாதல், வறட்சிக்கு எதிரான மகாநாட்டுக் குழுக்களும் ( PARTIES)  அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் இது பற்றி விழிப்புணர்வுடன்  செயற்படுபவர்களும் இத்தினத்தை உலகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். இத்தினத்தில் 11ஆவது வருடாந்தக் கொண்டாட்டம் கொண்டாடப்பட்ட போது வறுமை ஒழிப்பு,  பொருளாதார உதவி மற்றும் இம்மிலேனியத்தின் அபிவிருத்தி இலக்குகளை அடைதல் என்பன பற்றி முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.வரட்சி நிலத்தில் நிலச் சிதைவுகள் ஏற்படும் பிரச்சினையைப்பற்றி சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட  சட்டரீதியான பொறுப்பு மேற்கூறிய மகாநாடு மாத்திரமேயாகும். இதில் தற்போது 191 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

பாலைவனமாதலை உதாரணப்படுத்தக்கூடிய வகையில் பின்வரும் சம்பவத்தை இவ்விடத்தில சுட்டிக்காட்டுவது ஏற்புடையதாக இருக்கும். அதாவது சில வரலாற்று சான்றுகளின் பிரகாரம் கி.மு மூன்றாம் நூற்றாண்டில் சஹாரா பாலைநில பகுதியில் சில நீரூற்றுகள் காணப்பட்டதாக தெரிய வருகின்றது.தற்போது அந்நிலப்பகுதி தனிப்பாலை நிலமாகவே காணப்படுகின்றது.இது மட்டுமல்ல உலகளாவிய ரீதியில் பாலைநிலங்களை நோக்கும் போது இத்தன்மையினை பொதுவாக அவதானிக்கலாம்.

பாலைவனமாதல், வறட்சிக்கு எதிரான இத்தினத்தின் போது,  பாலைவனமாவதற்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பதற்கான மனநிலையைத் தூண்டுவதற்கானதும் உணர்வூட்டுவதற்கானதுமான நடவடிக்ககைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாலைவனமாவதை இலகுவாகத் தடுக்கலாம். அதற்கான தீர்வுகள் மிக இலகுவானவை. இதற்குரிய ஒரே ஒரு நடவடிக்கை சகல மட்டத்திலுமுள்ள மக்கள் ஒன்றிணைந்து செயற்படுவதேயாகும்.

உலகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கிற பிரச்னைகளில் பூமி வெப்பமடைதல் மிக முக்கியமானதாகும். பூமியைச் சுற்றியுள்ள 8 கி.மீ. தொலைவுக்கு கரியமில வாயு, மீத்தேன்,  நைட்ரஸ் ஆக்ûஸடு மற்றும் குளோரோ புளோரா கார்பன் போன்ற வாயுக்களின் அடர்த்தி அதிகமாவதால் வாயு மண்டலம் சூடாகியுள்ளது. இவ்வாயுக்களை பசுமைக் கூடார வாயுக்கள் என்று அழைக்கின்றனர். இவ்வாயுக்கள் வாயுமண்டலத்தில் நிலைகொண்டு சூரியனின் ஒளிக் கதிர்களை உள்வாங்கி வெப்பமடைந்து வாயுமண்டலத்தை சூடாக்குகிறது. இவ்வாறு பூமி வெப்பமடைவதை பசுமைக் கூடார விளைவு என்று அழைக்கிறோம். இதனால் எதிர்காலத்தில் பூமியின் பல பகுதிகள் கடலுக்குள் மூழ்கலாம்,  மழை குறைந்து குடிநீர்ப் பற்றாக்குறை மற்றும் பஞ்சம் பட்டினி ஏற்படலாம்.

பல நோய்கள் உருவாகலாம். மக்கள்தொகை அதிகரிப்பு,  காடுகளை அழித்தல்,  அதிக அளவில் வாகனங்கள்,  பெட்ரோலியத்தை எரிபொருளாகப் பயன்படுத்துதல்,  குளிர்சாதன உபகரணங்களைப் பயன்படுத்துதல்,  வளர்ந்த நாடுகளில் தேவைக்கு அதிகமாக தனிநபர் மின் உபயோகம் மற்றும் வரைமுறை இல்லாத இயற்கை வளங்களை ஆடம்பர வாழ்க்கைக்குப் பயன்படுத்துவது போன்ற காரணங்களால் பசுமைக் கூடார வாயுக்கள் அதிகம் உற்பத்தி செய்யப்படுகின்றன. பூமியின் வெப்ப அதிகரிப்புக்கு பசுமைக் கூடார வாயுக்களே காரணம். இவ்வாயுக்களின் மூலக்கூறுகள் சூரிய ஒளியின் நீள அலைவரிசை ஒளிக்கற்றைகளை ஈர்த்து தன்னகத்தே உள்வாங்கி வெப்பத்தை நீண்ட நேரம் தேக்கி வைப்பதால் வாயுமண்டலம் வெப்பமாகிறது.

கரியமில வாயு பூமியை வெப்பமாக்குவதில் அதிகப் பங்கு வகிக்கிறது. வாயுமண்டலத்தில் கரியமில வாயு இதே அளவில் உயருமானால் 2100-ஆம் ஆண்டில் 540 – 970 பிபிஎம் ஆக உயர வாய்ப்புள்ளது. கரியமிலவாயு உற்பத்தியில் உலக அளவில் அமெரிக்கா முதலிடத்திலும் இந்தியா ஏழாவது இடத்திலும் உள்ளன. நிலக்கரியை ஆதாரமாகக் கொண்டு செயல்படும் அனல் மின் நிலையங்கள் மூலமாக அதிக அளவு பசுமைக் கூடார வாயுக்கள் வெளியேற்றப்படுகின்றன. குறிப்பாக இதில் கரியமில வாயுவின் அளவு அதிகம்.மக்கள்தொகைப் பெருக்கம்,  தொழில் வளர்ச்சி,  காடுகளை அழித்தல்,  அதிக அளவு பெட்ரோலியம் உபயோகித்தல் போன்ற காரணங்களால் இதன் விளைவு அதிகரித்துக் கொண்டே வந்துள்ளது.

கரியமில வாயுக்களின் துகள்கள் சூரிய ஒளியின் வெப்பத்தை உட்கொண்டு நீண்ட நேரம் தன்னகத்தே வைத்துக்கொள்ளும் தன்மையுடையது. காற்று மண்டலத்தில் இதன் ஆயுள்காலம்,  சுமார் 50 – 2000 ஆண்டுகளாகும். இது எளிதில் வெப்பத்தைக் கடத்தாது. எனவே,  இவ்வாயுவின் அளவு அதிகரிக்க அதிகரிக்க வெப்பம் உயர்ந்து கொண்டே இருக்கும்.

தற்போது மீத்தேனின் அளவு 1783 பிபிபி – யன்களாக உள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட 37 பிபிபி-யன்கள் அதிகம். காற்று மண்டலத்தில் சுமார் 10 ஆண்டுகள் வரை தங்கி வெப்பத்தை உண்டாக்கக் கூடியது. வெப்பத்தை உண்டாக்குவதில் கரியமில வாயுவைவிட இருமடங்கு சக்தி அதிகம்.60 சதவீத மீத்தேன் பெட்ரோலியம் மற்றும் நிலக்கரி உபயோகிப்பதாலும் நெல் வயலிலிருந்தும் கால்நடைகளின் கழிவுகளிலிருந்தும் உற்பத்தியாகின்றது. மீதமுள்ள 40 சதவீதம் சதுப்பு நிலம்,  தண்ணீர் தேங்கி ஈரமான நிலங்களிலும் மற்றும் கரையான்கள் மூலமாகவும் உற்பத்தி செய்கின்றது.

பூமியிலிருந்து 8 கிலோமீட்டர் வரை உள்ள வாயுமண்டலப் பகுதிகளில் கடந்த 100 ஆண்டுகளில் 0.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்துள்ளது. கடந்த 1000 ஆண்டுகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் அதிகபட்ச வெப்பம் கடந்த ஆண்டுகளில் அதிகமாக உயர்ந்துள்ளது. புவி வெப்பம் அதிகரிப்பால் தண்ணீர்ப் பற்றாக்குறையும்,  அதனால் வேளாண்மை உற்பத்தியில் பாதிப்பும் அதிகமாக இருக்கும். ஏழை நாடுகளில் கோடிக்கணக்கான மக்கள் குடிநீர் பற்றாக்குறையால் அவதிப்படலாம்.டஇத்தகைய நிலைகளையும் பாலைவனமாதல், வறட்சிக்கு எதிரான இத்தினத்தில் கவனத்தில் கொள்ளல் வேண்டும்.

பாலைவனமாதல், வறட்சிக்கு எதிரான இத்தினத்தில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள பெண்களுக்கு சிறப்பான முறையில் இதற்கெதிராகப் பாங்காற்ற முடியும் எனக்கூறப்படுகின்றது. குறிப்பாக வளர்முக நாடுகளின் கிராமப்புறப் பெண்களுக்கு இதற்கான வாய்ப்புகள் அதிகம்.எனவே இதற்கெதிரான நடைமுறைகள் பற்றிய நிகழ்வுகளை நடத்தி மக்களிடையே விழிப்புணர்வுகளை அதிகரிக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ள பல அமைப்புக்கள் முனைகின்றது.

‘நிலம் சிதைவடைவதற்கெதிரான செயற்திட்டம் ஒன்று பத்து வருடம் மெற்றிக் நகரில் ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. பாலைவனமாவதற்கும்,  வரட்சிக்கும் எதிரான தினம்  பற்றி நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்”என ஐ.நா.சபை செயளாலர் நாயகம் “பாங்கி-மூன் தமது செய்தியில் தெரிவித்தார்.இத்தினத்தின் வரட்சி நிலப்பிரச்சனையை சர்வதேச சூழல் நிகழ்ச்சி நிரலுக்கு உள்ளடக்க முனைகின்றனர். தனிப்பட்டவர்களும்,  அமைப்புக்களும் அவுஸ்திரேலியா, அல்ஜீரியா, கனடா,  சீனா,  கானா மற்றும் ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளில் சமீபகாலத்தில் இதுசம்பந்தமான நிகழ்ச்சிகளில் பங்கு பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இத்தினத்தில் மாத்திரம் பாலைவனமாதல் பற்றி விழிப்புணர்வுடன் செயற்படுவது போதுமானதல்ல.அல்ஜீரியா போன்ற நாடுகள் பாலைவனமாதலை எதித்துப்போராடவும்,  விவசாய நிலங்களைப்பாதுகாக்கவும் பிரேசில் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் உதவியுடன் ஒரு தேசிய திட்டத்ததை செயற்ப்படுத்தியுள்ளது.லெபனானில்; விவசாய பாதிப்புக்கெதிரான பல முக்கிய செயற்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. பாலைவனமாதல் மற்றும் வரடசிக்கெதிரான போராட்டங்கள் வெற்றிகரமாகச் செயற்படுத்தப்படுகின்றன.

இத்தினம் ஒரு பொது விடுமுறைதினமல்ல. பாலைவனமாதல், வறட்சிக்கு எதிரான போராட்டதினத்தில் மக்களில் பொது வாழ்வு பாதிக்கப்படுவதில்லை. இங்கு போராட்டம் எனும் போது விழிப்புணர்வு நடவடிக்கையே முதன்மைப்படுத்தப்படுகின்றது.

இத்தினம் தொடர்பான கருப்பொருட்கள் வருமாறு:-

2009 – Conserving land and water = Securing our common future
2008 – Combating land degradation for sustainable agriculture
2007 – Desertificaton and Climate Change – One Global Challenge
2006 – The Beauty of Deserts – The Challenge of Desertification
2005 – Women and Desertification
2004 – Social Dimensions of Desertification: Migration and Poverty

2006 – International Year of Deserts and Desertification (IYDD)

http://thatstamil.oneindia.in/cj/puniyameen/2009/0617-world-day-to-combat-desertification.html

கொழும்பு மறை மாவட்ட பேராயராக மெல்கம் ரஞ்சித்

16062009.jpgகொழும்பு மறைமாவட்டப் புதிய பேராய ராக கலாநிதி மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நியமிக்கப்பட்டுள்ளார்.

பரிசுத்த பாப்பரசர் 16வது ஆசிர்வாதப்பர் இவருக்கான நியமனத்தை வழங்கியுள்ளார். கொழும்பு பேராயர் பேரரு ட்திரு ஒஸ்வோல்ட் கோமிஸ் ஆண்டகை ஓய்வுபெற்றதையடுத்தே புதிய பேராயராக மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நியமிக்கப்பட்டிருப்பதாக இலங்கையிலுள்ள வத்திக்கான் தூதரகம் தெரிவித்துள்ளது.

ஊவா மாகாண சபைத் தேர்தல் வேட்பு மனுத்தாக்கல் இன்று ஆரம்பம்

uwa_provinces_and_districts.pngஊவா மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள்  இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என  தேர்தல் செயலகம் அறிவித்துள்ளது. இன்று ஆரம்பமாகவுள்ள வேட்புமனுத் தாக்கல் செய்யும் நடவடிக்கை எதிர்வரும் 24ஆம் திகதி நன்பகல் 12.00 மணியுடன் முடிவடையும் என உதவித் தேர்தல் ஆணையாளர் டபிள்யூ.பி. சுமணசிறி தெரிவித்துள்ளார்.

இத்தேர்தலில்; போட்டியிடவுள்ள சுயேச்சைக் குழுக்கள் அதன் கட்டுப்பணத்தை அந்தந்த மாவட்ட செயலகங்களில் எதிர்வரும் 23ஆம் திகதி நன்பகல் 12.00 மணி வரை செலுத்த முடியும் எனவும் இது தொடர்பான வர்த்தமாணி அறிவித்தல் கடந்த 3ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். 

சாவகச்சேரி, நெல்லியடியிலிருந்த அகதிகள் கொடிகாமத்துக்கு மாற்றப்பட்டனர்

சாவகச்சேரி மகளிர் கல்லூரியிலும் நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்திலும் தங்கவைக்கப்பட்டிருந்த 2700 வன்னி அகதிகள் கொடிகாமம் இராமா புனர்வாழ்வு கிராமத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர். இக்கிராமத்தில் 600 தற்காலிக கொட்டில்கள் அமைக்கப்பட்டிருப்பதால் இவர்கள் அங்கு குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

சாவகச்சேரி இந்துக் கல்லூரியிலும் கொடிகாமம் திருநாவுக்கரசு வித்தியாலயத்திலும் தங்கவைக்கப்பட்டிருந்த அகதிகள் பின்னர் இராமா கிராமத்தில் குடியமர்த்தப்பட்டனர்.

இப்புனர்வாழ்வுக் கிராமத்தில் கூட்டுறவுச்சங்க கிளைகள், சமூக மண்டபங்கள், படிப்பகம் , விளையாட்டு மைதானம், தொழில் பயிற்சி பெறுவதற்கான நிலையங்கள், தற்காலிக பாடசாலைகள் என்பன நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. மேலதிகமாக தொலைபேசி, தபால், வங்கிச்சேவைகளும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அகதிகள் சாவகச்சேரி மகளிர் கல்லூரியில் இருந்தும் நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் இருந்தும் வெளியேறியதையடுத்து இப்பாடசாலைகள் எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் சொந்தக்கட்டிடத்தில் இயங்கவுள்ளன. பாடசாலையை சுத்தப்படுத்தும் நடவடிக்கையை சுகாதாரப்பகுதியினர் மேற்கொண்டு வருகின்றனர்.