“இரு எம்.பி.க்களுக்கு விசா மறுக்கப்பட்டபோதும் தமிழர் விவகாரத்தில் கனடா தூரவிலகி நிற்காது’

canada.jpgகனடா வின் பாராளுமன்றச் செயலாளர் தீபக் ஒபராலிற்கு விசா வழங்க இலங்கை மறுத்துள்ள போதிலும் இலங்கைத் தமிழர் விவகாரம் மற்றும் யுத்தத்தினால் இடம் பெயர்ந்த தமிழ் மக்களை மீளக் குடியமர்த்தும் வேலைத்திட்டம் என்பவற்றில் தொடர்ந்து இலங்கையுடன் இணைந்து செயலாற்றவுள்ளதாக கனடா நேற்று முன்தினம் திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.

கனடாவிலுள்ள உயர் ஸ்தானிகராலயம் அந்நாட்டின் இந்திய வம்சாவளிப் பாராளுமன்றச் செயலாளரான (இந்திய அமைச்சருக்கு நிகரான பதவி) தீபக் ஒபராலிற்கு விசா வழங்க மறுத்துள்ளதாக தெரிவித்த கனடா, இருப்பினும் இலங்கையில் இடம்பெறும் நல்லிணக்க நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

விசா மறுக்கப்பட்டமை தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த தீபக் ஒபரால், எனக்கு விசா வழங்க மறுக்கப்பட்டுள்ள போதிலும், நாம் இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழ் மக்களுக்குமிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதிலேயே உறுதியாகவுள்ளோம் எனத் தெரிவித்தார். இவர் கடந்த வாரத்தில் இலங்கைக்குள் வர அனுமதி மறுக்கப்பட்ட இரண்டாவது கனடிய முக்கியஸ்தர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இவருக்கு முன்னர் இலங்கைக்கு வருகைதந்த கனடாவின் எதிர்க்கட்சி எம்.பி. பொப் ரேய் கட்டுநாயக்காவிலிருந்து கனடாவுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் இவர் விடுதலைப் புலிகள் ஆதரவாளர் எனத் தெரிவிக்கப்பட்டது. கனடாவின் எதிர்க்கட்சியான லிபரலின் (நிழல் வெளிவிவகார அமைச்சர்) ரேய் அடுத்த விமானத்தில் திருப்பியனுப்பப்படும் வரை கட்டுநாயக்கா விமான நிலையத்திலேயே தடுத்து வைக்கப்பட்டார்.

இவர் அதிக எண்ணிக்கையிலான தமிழர்கள் வாழும் பகுதியான ரொறன்டோவின் பிரதிநிதி.

இலங்கை ரேயைத் திரும்பியனுப்பிய வேளையிலேயே என்னையும் ஏற்றுக் கொள்ள முடியாதெனத் தெரிவித்திருந்து எனது விசாவும் நேரடியாகவே மறுக்கப்பட்டுள்ளதென ஒபரால் தெரிவித்தார்.

பொப் ரேயையும் என்னையும் இலங்கைக்குள் அனுமதிக்க மறுத்தமை இலங்கை தொடர்பான கனடாவின் நிலைப்பாட்டை மாற்றாது. நாம் தொடர்ந்தும் அவர்களுடன் இணைந்து செயற்படுவோம் எனவும் தெரிவித்தார்.

அத்துடன் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த தமிழ் மக்களை மீளக் குடியமர்த்துவதற்கான மனிதாபிமான வேலைத் திட்டங்களுக்காக கனடா, இலங்கைக்கு 3 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது. நாம் இடம்பெயர்ந்துள்ள மக்கள் தொடர்பாக அவதானம் கொண்டுள்ளோம். அவர்களை பழைய நிலைக்கு கொண்டு செல்வது அவசியமானது. அத்துடன் நாட்டில் நல்லிணக்கச் செயற்பாட்டிலுள்ள தடைகள் நீக்கப்பட வேண்டுமென மேலும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *