யாழ்.குடாநாட்டில் கோதுமை மாவுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து கடந்த வாரம் கப்பல் மூலமாக எடுத்துவரப்பட்ட 350 மெற்றிக்தொன் கோதுமை மாவை அங்குள்ள 24 பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுக்கும் வழங்கிய அரச அதிபர், ஒரு கிலோ மாவினை 72 ரூபா வீதம் விநியோகிக்குமாறும் கோரியுள்ளார்.
குடாநாட்டில் இருக்கின்ற 23 பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களும் இந்த விலை நிர்ணயத்தை ஏற்றுக் கொண்டு பொதுமக்களுக்கு 72 ரூபா வீதம் விநியோகித்துக் கொண்டிருக்கின்ற நிலையில் வேலணைப் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் மட்டும் 73 ரூபா வீதம் விற்பனை செய்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஏ9 நெடுஞ்சாலை மூடப்பட்ட பின்னர் கப்பல் மூலமாகக் குடாநாட்டுக்கு எடுத்துவரப்படுகின்ற பொருட்களுக்கு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளரும் அரச அதிபரும் இணைந்தே விலை நிர்ணயம் செய்கின்றனர்.
பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் உட்பட வர்த்தக நிலையங்களும் இந்த விலை நிர்ணயத்தின் அடிப்படையிலேயே மக்களுக்குப் பொருட்களை விநியோகம் செய்கின்றனர்.
இந்நிலையில், வேலணை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் ஒரு ரூபா அதிகரித்த விலையில் கோதுமை மாவை விற்பனை செய்வது குறித்து பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயம் குறித்து உரிய விசாரணைகளை மேற்கொண்டு தற்போது விநியோகிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் கோதுமை மா உட்பட இனிவரும் காலங்களில் விநியோகிக்கின்ற பொருட்களையும் நிர்ணய விலைக்கு பொதுமக்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி யாழ்.மாவட்டக் கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளருக்குப் பொதுமக்கள் கடிதமொன்றையும் அனுப்பி வைத்துள்ளனர்.
இதேவேளை, யாழ்.குடாநாட்டிலுள்ள பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் அண்மைக் காலத்தில் மோசடிகளில் ஈடுபட்டுள்ளமை தொடர்பாக இனங்கண்டுள்ள பொதுமக்கள் இது குறித்து கடும் விசனமடைந்திருக்கின்றமையும் குறிப்பிட்டத்தக்கது.