இலங் கையில் பன்றிக் காய்ச்சல் நோயினால் பீடிக்கப்பட்ட முதலாவது நபர் வத்தளை பிரதேசத்தில் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளார் என சுகாதார சேவைகள் மற்றும் போஷாக்குத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். இலங்கையில் முதலாவது பன்றிக் காய்ச்சல் நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளமை தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிப்பதற்காக நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். கொழும்பிலுள்ள சுகாதார அமைச்சில் இடம்பெற்ற இச்செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
அவுஸ்திரேலியாவிலிருந்து சிங்கப்பூரினூடாக நேற்று இலங்கைக்கு வருகை தந்த தமிழ் குடும்பமொன்றைச் சேர்ந்த 8 வயது சிறுவனே சுவைன் ப்ளு எனப்படும் பன்றிக் காய்ச்சல் நோய்க்கு ஆளாகியுள்ளார். இலங்கையில் நடைபெறும் திருமண வைபவம் ஒன்றில் கலந்துகொள்வதற்காக இங்கு வருகை தந்த இச்சிறுவன் தற்போது தொற்றுநோய் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடும் காய்ச்சலுக்கு உள்ளான சிறுவனது உடல்நிலை குறித்து சந்தேகம் கொண்ட அவனது தந்தை இதுபற்றி இலங்கையிலள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்துக்கு அறிவித்துள்ளார். உடனடியாக தொற்றுநோய் சிகிச்சைப் பிரிவினர் சிறுவன் தங்கியிருந்த வத்தளைப் பிரதேசத்துக்குச் சென்று அவனை அழைத்து வந்து மேற்கொண்ட பரிசோதனைகள் மூலம் அது பன்றிக் காய்ச்சல் என ஊர்ஜிதமாகியுள்ளது.
இத்தொற்று ஏற்பட்டு 5 முதல் 7 நாட்கள் வரை சென்ற பின்னரே இந்நோய்க்கான அறிகுறிகள் தோன்றும். இதன் காரணமாகவே கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள பன்றிக் காய்ச்சலை இனங்காண்பதற்கான இயந்திரத்தால் இச்சிறுவனின் நோய்த் தாக்கத்தை அடையாளம் காணமுடியாமல் போனது.
நாட்டில் பன்றிக் காய்ச்சல் அடையாளம் காணப்பட்டுள்ளபோதும் இந்நோயைத் தடுப்பதற்கான சகல நடவடிக்கைகளும் திருப்திகரமாக மேற்கொள்ளப்பட்டிருப்பதால் இது குறித்து எவரும் பதற்றமடையத் தேவையில்லை. பன்றிக் காய்ச்சல் பற்றிய தற்போதைய நிலைமை தொடர்பாக அனைத்து பிராந்திய மருத்துவ நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டிருப்பதுடன் தேவையான மருந்துகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ள. அவ்வாறே போதியளவு மருந்துகளும் கையிருப்பில் காணப்படுகின்றன என்றும் அமைச்சர் கூறினார்.
தொடர்ச்சியான இருமல், தொண்டை அரிப்பு, தலைவலி, காய்ச்சல் மற்றும் உடல் வலி என்பன இருப்பின் எவரும் அதுபற்றி அலட்சியமாக இருக்க வேண்டாமென இச்செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட தொற்றுநோய் சிகிச்சைப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர்கள் தெரிவித்தனர். எச்சில், கண்ணீர் என்பன மூலமே இந்நோய் பரவுவதால் கைக்குட்டை உபயோகித்தல், கைகளை அடிக்கடி கழுவுதல் என்பவற்றின் மூலம் இந்த வைரஸ் பரவுவதைத் தடுக்க முடியுமென்றும் அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.