சங்க மித்த பிக்குனி வெள்ளரசு மரக்கிளையுடன் வந்திறங்கிய யாழ்ப்பாணம், வடமராட்சியிலுள்ள தம்பகொலபட்டுன என்றழைக்கப்படும் பகுதிக்கு ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ் நேற்று விஜயம் செய்தார்.
அங்குள்ள தம்பகொலபட்டுன விகாரையில் சங்கமித்த பிக்குனியின் உருவச் சிலையொன்றையும் ஜனாதிபதியின் பாரியார் பிரதிஷ்டை செய்தார். இப்பகுதிக்கு விஜயம் செய்த ஜனாதிபதியின் பாரியார் மற்றும் அவர் தலைமையிலான குழுவினரை வட்டுக்கோட்டைப் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மாதகல், பொன்னாலை, காரைநகர் பிரதேசவாசிகளின் பிள்ளைகள் கோலாகலமாக வரவேற்றனர்.
இப்பிரதேச வாசிகளுக்கு ஜனாதிபதியின் பாரியார் தலைமையில் இயங்கும் சிறிலிய சவிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் முன்னூறு (300) உலர் உணவுப் பொதிகளும் பகிர்ந்தளிக்கப்பட்டன.
“இப்பிரதேசத்திலுள்ள பாடசாலைகளின் வசதிகளையும், உட்கட்டமைப்பு துறையையும் மேம்படுத்தத் துரித நடவ டிக்கை எடுக்கப்படும்” என்று இளைஞர்களுக்கு நாளை அமைப்பின் ஸ்தாபகர் நாமல் ராஜபக்ஷ இச்சமயம் உறுதியளித்தார்.
இவ்வைபவங்களில் ஜனாதிபதியின் பாரியாருடன், பிரதமரின் பாரியார் குசும் விக்கிரமநாயக்கா, கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட, திருமதி கரன்னாகொட உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டார்கள். நயினாதீவு விகாராதிபதி நவந்தகல பதுமகீர்த்தி திஸ்ஸ தேரோ பெளத்த வழிபாடுகளை முன்னின்று நடத்தினார்.