இலங் கையில் அரசுப் படையினரும், விடுதலைப் புலிகளும் செய்த போர்க் குற்றங்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் வலியுறுத்தியுள்ளார். மேலும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான வெற்றியை தமிழ் மக்களின் தோல்வி என கருதி இலங்கை அரசு ஆர்ப்பாட்டம் செய்யக் கூடாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று பான் கி மூன் பேசினார். இலங்கை விவகாரம் குறித்து அவர் பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இலங்கையில் நீடித்து நடந்த இனப் போரின்போது இரு தரப்பும் போர்க் குற்றங்கள் செய்திருக்க சாத்தியக்கூறுகள் உள்ளன. எனவே இதுகுறித்து விரிவான போர்க் குற்ற விசாரணை நடத்தப்படவேண்டும்
சர்வதேச அளவில் இந்த விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த விசாரணைக்கு இலங்கை அரசு ஒத்துழைக்க வேண்டும். எப்படிப்பட்ட முறையில் இது அமைய வேண்டும் என்பதை நான் விவரிக்க விரும்பவில்லை. இருப்பினும் சர்வதேச மனித உரிமை சட்டங்கள், மனித உரிமை நியதிகள் மீறல் உள்ளிட்டவை குறித்த முக்கியமான புகார்கள் குறித்து விசாரிக்கப்பட வேண்டியது அவசியமாகிறது.
எந்த விசாரணையாக இருந்தாலும் அது அர்த்தப்பூர்வமாக இருக்க வேண்டும். ஐ.நா. உறுப்பினர்களின் ஆதரவுடன் அது நடைபெற வேண்டும். பாரபட்சமில்லாமலும் அந்த விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார் பான்.