தமிழ் மக்களின் அதிகபட்ச அரசியல் அபிலாசைக்காக போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்து வெற்றிவாகை சூடியிருப்பதாய் இலங்கை அரசு கூறியிருக்கிறது. சிங்கள பௌத்த இனவாதம் மிகப்பெரிய தமிழ் இனப் படுகொலையை நடாத்தி போரை வெற்றி பெற்றதாக அறிவித்து நாடு முழுவதும் கொண்டாட்டங்களை நடாத்தி வருகிறது.
தமிழ் மக்களின் நியாயமான அரசியல் அபிலாசைகளுக்கான தீர்வை முன்வைக்காது இராணுவ ரீதியான தீர்வை முன்தள்ளி பல்லாயிரக்கணக்கான தமிழர்களை கொன்றொழித்து அவர்களது போராட்டத்தை நசிக்கியிருப்பதாக அறிவித்திருக்கிறது.
அனைத்து உலக சமூகமும் கண்மூடியிருக்க தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்பட்டார்கள். இறுதியாக காயப்பட்ட மக்கள், காயப்பட்ட போராளிகள், போராளிக் குடும்பங்கள், சரணடைந்த போராளிகளை பாதுகாப்பு வலயத்திலிருந்து வெளியே போகவிடாது இலங்கை இராணுவம் படுகொலையை நடாத்தி போரை முடிவுக்கு கொண்டுவந்துள்ளதாய் தெரிவித்திருக்கிறது. எஞ்சியவர்கள் அகதிச்சிறைகளுக்குள் அடைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளாகி வருகிறார்கள். தமிழ் மக்கள், சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பிற்கூடாக பாரம்பரிய நிலங்களில் இருந்து பலாத்காரமாக வெளியேற்றப்பட்டு அகதி முகாம்களுக்குள் நிரந்தரமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். அத்தோடு தமிழ் பிரதேசங்களில் சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்துவதில் இலங்கை அரசு முன்னின்று செயற்பட்டு வருகிறது.
சிங்கள பௌத்த இனவாதம், இலங்கை சுதந்திரம் அடைந்ததிலிருந்து இதுவரை எந்தவொரு விட்டுக்கொடுப்புமில்லாமல் கட்சி பேதமின்றி தனது அரசியல் – இராணுவ ஒடுக்குமுறையை செயற்படுத்தியே வருகின்றது. இனியும் தமிழ் மக்களின் மீதான அடக்குமுறை தொடரவே போகிறது. சிங்கள பேரினவாதம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைக்கு வைத்த தீர்வு இனப்படுகொலையே. இதற்கூடாக பெரும்பான்மை தமிழ் மக்களை தமிழீழ தனிநாடு நோக்கி இலங்கை இனவாத அரசு மீண்டும் தள்ளியுள்ளது.
எமது கடந்தகால தமிழர் அரசியல் வரலாறு என்பது கசப்பான பல அனுபவங்களை சுமந்திருக்கிறது. அவற்றை ஆரோக்கியமான முறையில் விமர்சித்து தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை முன்நிறுத்தி வென்றெடுப்பதற்கான போராட்டத்தில் இணைய வேண்டிய கடப்பாடு அனைத்து தமிழர்கள் மீதும் இன்று சுமத்தப்பட்டுள்ளது.
ஈழத் தமிழ் மக்களின் போராட்டம் இன்றோடு முடிந்ததாக சிங்கள பௌத்த இனவாதம் கொக்கரிக்கலாம். அதை அப்பாவி சிங்கள மக்களும் நம்பலாம். ஆனால் தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்திற்கான தேவை இன்னும் அழியவில்லை. அதற்கான தமிழ் மக்களின் ஆதரவு இன்னும் மழுங்கவுமில்லை.
எமது மக்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் பலதளங்களில் முன்னெடுக்கப்பட வேண்டிய உச்ச நிலையில் நாம் இன்று இருக்கின்றோம். உலகின் ஒடுக்கப்பட்ட மக்கள், தொழிலாளர்கள், மனிதவுரிமைவாதிகள், செயற்பாட்டாளர்கள், புத்திசீவிகள், பல்வேறு இனக்குழுமங்கள், சமூக உரிமை அமைப்புகள், அரசியல் தாபனங்கள் என பல்வேறுபட்ட உலக மக்களின் ஆதரவை தமிழர் சுய நிர்ணய உரிமைக்காய் வென்றெடுக்கப்படவேண்டிய தேவை இன்று உண்டு. அதற்கான வேலைத்திட்டங்களையும் போராட்டங்களையும் தொடரவேண்டிய தேவை எம்முன்னுள்ளது.
போராட்டத்தில் இராணுவ வெற்றிகளை மட்டுமே மையப்படுத்திப் பார்க்காது, இலங்கை இராணுவ வெற்றிகளை நிலைகுலையச் செய்யக்கூடிய அரசியல் நடவடிக்கைகளை தமிழ் மக்களால் செய்யமுடியுமென இதுவரை காலமும் உலகெங்கிலும் நடந்த போராட்டங்களுக்கூடாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
தமிழ் மக்களின் இருப்பை உறுதிப்படுத்துவதற்கான அரசியல் தீர்வென்பது ஈழத் தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையால் மட்டுமே சாத்தியமாய் உள்ளது. இலங்கை சிங்கள பௌத்த இனவாத ஒடுக்குமுறையிலிருந்து தமிழ் மக்கள் மீட்கப்படவேண்டும். அவர்களின் பாதுகாப்பும், மனிதவுரிமையும், வாழ்வும் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையால் மட்டுமே உறுதிப்படுத்த முடியும்.
எமது இலக்கு நோக்கிய போராட்டத்தில் எம் முன்னுள்ளது வெற்றிகள் மட்டுமே அல்ல தோல்விகளும் தான். அதை புரிந்து கொள்வதும் அரசியல் பின்னடைவுகளை விளங்கிக் கொள்வதும் எமது அடுத்தகட்ட நகர்வுக்கு எம்மை திடமாக முன்தள்ளும். சிங்கள பௌத்த இனவாதம் இலங்கையிலிருந்து நீக்கப்படும் வரை தமிழ் மக்களின் போராட்டம் தொடரவே செய்யும்.
சிங்கள பௌத்த இனவாதம் தமிழ் மக்களின் நியாயமான போராட்டத்தை நிலைகுலையச் செய்ய பல பிரயத்தனங்களை செய்துவருகிறது. இனவாத சிங்கள அரசை சர்தேச ரீதியில் அம்பலப்படுத்தி அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தி தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை வென்றெடுக்க வேண்டிய தேவையுள்ளது.
பன்முகத்தன்மையுடன் கூடிய அரசியல் ஜனநாயக வழிகளுக்கூடாக ஈழத்தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமைக்காய், உலகத் தமிழ் மக்கள் ஒன்றிணையவேண்டிய காலமிது. உலகம் தழுவிய ஒன்றிணைந்த போராட்டத்திற்கூடாக மட்டுமே சிங்கள பௌத்த பேரினவாதத்தை வெற்றிகொள்ள முடியும்.
சிங்கள அரசின் கொடூர அடக்குமுறையால் படுகொலை செய்யப்பட்ட போராளிகள், பொது மக்கள் அனைவருக்கும் எமது அஞ்சலிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
உலகத் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைவோம்!!
இலங்கை அரசை அம்பலப்படுத்துவோம்!!
ஈழத் தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமையை வென்றெடுப்போம்!!!
தமிழர் வகைதுறைவள நிலையம் – தேடகம்
மே 18, 2009
ரொரன்டோ, கனடா.