June

June

600 அநாதை சிறுவர்களை பொறுப்பேற்கிறது சிங்கப்பூர் பெளத்த சங்கம்

வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களிடையே உள்ள 600 அநாதைப் பிள்ளைகளை பொறுப்பேற்று அவர்களின் சகல தேவைகளையும் நிறைவேற்ற முடிவு செய்துள்ளதாக சிங்கப்பூர் மகாகர்ணா பெளத்த சங்க மத ஆலோசகர் வண. அலவ்வே குணரத்ன தேரர் தெரிவித்தார்.

தகவல் ஊடகத்துறை அமைச்சில் நேற்று (2) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

வடபகுதியில் இருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களுக்குச் சகலரும் இன, மத, பேதமின்றி சகல உதவிகளும் வழங்க வேண்டும். இந்த மக்களுக்கென சிங்கப்பூரில் இருந்து ஒரு கோடி ரூபா பெறுமதியான பொருட்கள், பணம் என்பன திரட்டியுள்ளோம். அவை கப்பல் மூலம் கொழும்பு துறைமுகத்தை வந்தடைய உள்ளன. வடபகுதியில் இருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள 10 வயதுக்குக் குறைவான பெற்றோரை இழந்த 350 பிள்ளைகளையும் 250 உயர் வகுப்பு மாணவர்களையும் நாம் பொறுப்பேற்க உள்ளோம்.

வடபகுதி மக்களுக்கு உதவுவதற்காக 100 பேர் கொண்ட சிங்கப்பூர் பிரஜைகள் குழுவொன்று இலங்கை வர உள்ளது. அந்நாட்டு மக்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சகல உதவிகளும் வழங்கி வருகின்றனர். நாம் வருடாந்தம் பொசன் பண்டிகையை முன்னிட்டு அநுராதபுரத்தில் அன்னதானம் வழங்கி வருகிறோம். இம்முறை மெனிக்பாமிலுள்ள தமிழ் மக்களுக்கு அன்னதானம் வழங்க அரசின் அனுமதியை கோரியுள்ளோம்.

வடக்கில் 13 வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த அரசாங்கம் எதிபார்க்கின்றது

yappa.jpgவடக்கில் 13 வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த உள்ளதாகவும் அதன் ஓர் அங்கமாக அங்கு ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காக யாழ், வவுனியா உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்த அராசங்கம் தீர்மானித்ததாகவும் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா தெரிவித்தார். தகவல் ஊடகத்துறை அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இரு உள்ளூராட்சி சபைகளுக்கும் தேர்தல் நடத்த ஏன் அவசரம் என ஜே. வி. பி. கேள்வி எழுப்பியுள்ளது. அங்கு இடம்பெயர்ந்த மக்களோ ஆயுதக் குழுக்களோ கிடையாது இப்பகுதிகளில் ஜனநாயகத்தை ஏற்படுத்துவதில் முன்பு ஆயுதக் குழுக்களின் பிரச்சினை காணப்பட்டது. இன்று எதுவித வெளிப்பிரச்சினைகளும் கிடையாது. அதனாலே தேர்தல் நடத்த அரசு நடவடிக்கை எடுத்தது.

2008 வாக்காளர் இடாப்பில் பதிவு செய்யப்பட்ட சகலரும் வாக்களிக்கலாம். சகல கட்சிகளுக்கும் எதுவித தடையுமின்றி போட்டியிட சந்தர்ப்பம் உள்ளது. எஞ்சிய உள்ளூராட்சி சபைகள் வடக்கு மாகாண சபை என்பவற்றுக்கும் தேர்தல் நடத்தி விரைவாக 13வது திருத்தச் சட்டத்தை வடக்கில் முழுமையாக அமுல்படுத்த உள்ளோம் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்

இடம்பெயர்ந்த மாணவர்களுக்கு 19 லொறிகளில் கல்வி உபகரணங்கள்

susil_prem_minister.jpgவட பகுதியிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மாணவர்களுக்கு 19 லொறிகளில் 130 மில்லியன் ரூபா பெறுமதியான கல்வி உபகரணங்கள் கல்வி அமைச்சிலிருந்து நேற்று அனுப்பி வைக்கப்பட்டன.கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த உத்தியோகபூர்வமாக இதனை உரிய அதிகாரிகளிடம் கையளித்தார்.

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா நலன்புரிக் கிராமங்களில் தங்கியுள்ள பாடசாலை மாணவர்களுக்கான சீருடை,  கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் இவ்வாறு அரசாங்கத்தினால் வவுனியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

மாணவ மாணவிகளுக்கான ஒன்றரை கோடி ரூபா பெறுமதியுடைய தற்காலிகச் சீருடை,  மூன்றரை கோடி ரூபா பெறுமதியான மேசை, கதிரை உள்ளிட்ட கல்வி உபகரணங்களும் 75 மில்லியன் ரூபா பெறுமதியான நூல்கள்,  அப்பியாசப் புத்தகங்களும்  இதிலடங்குவதாகக் கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார்.

இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை தேவையான உபகரணங்களை நலன்புரி நிலையங்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளைக் கல்வியமைச்சு மேற்கொண்டுள்ளது எனவும் அமைச்சர் கூறினார்.

வவுனியாவிற்குக் கொண்டு செல்லப்படும் தற்காலிக சீருடைகள் நலன்புரி நிலையங்களிலுள்ள மாணவர்களுக்கு நேரடியாகப் பகிர்ந்தளிக்கப்படுவதுடன் அங்குள்ள ஆசிரியைகளுக்கு வழங்குவதற்காக 2,000 சேலைகளும் எடுத்துச் செல்லப்படுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பிரதியமைச்சர் எம். சச்சிதானந்தன் உட்பட கல்வித்துறை சார்ந்த அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். நேற்று எடுத்துச் செல்லப்பட்ட கல்வி உபகரணங்கள் நாளை மறுதினம் 5ம் திகதி அங்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளன. 

பிரித்தானிய தூதராலய இணையத்தளம் மாலைதீவில் ஆரம்பிக்கப்பட்டது

பிரித்தானிய தூதராலயத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் நேற்று திங்கட்கிழமை மாலைதீவில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாகப் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
www.uinmaldives.fco.gov.lk எனும் இவ் இணையத்தளத்தை மாலைதீவின் ஜனாதிபதி மொஹமட் நசீட் ஆரம்பித்து வைத்துள்ளார்.

இதேவேளை, பிரித்தானியாவின் இலங்கை மற்றும் மாலைதீவிற்கான பிரதி உயர்ஸ்தானிகர் மார்க் குட்டிங் மாலைதீவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகரின் இவ் ஒருநாள் உத்தியோகபூர்வ விஜயம் பிரித்தானிய மற்றும் மாலைதீவிற்கான அரசியல் உறவுகள் பொருளாதார அபிவிருத்தி என்பனவற்றைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் அவர் இவ்விஜயத்தின் போது மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் நசீட், வெளிவிவகார அமைச்சர் அஹமட் சாகீட், பாதுகாப்பு அமைச்சர் அமீன் பைசல், வீடமைப்பு, சுற்றாடல் மற்றும் போக்குவரத்து அமைச்சர் மொஹமட் அஸ்லம், பொலிஸ் ஆணையாளர் அஹமட் பாஸிஷ் உட்பட பலரைச் சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விஜயத்தின் போது ஆரம்பித்து வைக்கப்பட்ட உத்தியோகபூர்வ இணையத்தளம் பற்றிக் கருத்துத் தெரிவித்த பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர்;

இவ் இணையத்தளமானது மாலைதீவு மக்கள் பிரித்தானியா பற்றிய தகவல்களை இலகுவில் பெற வழிவகுக்கும். அத்துடன் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் சேவையை மாலைதீவிற்கு நெருக்கமாக்குமென்றும் தெரிவித்தார்.

மாலைதீவிற்கான பிரித்தானியாவின் உயர்ஸ்தானிகராலயம் கொழும்பிலேயே உள்ளது.

மாலைதீவில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இணையத்தளம் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் பணிகள், உத்தியோகபூர்வ விஜயம் தொடர்பான செய்திகள், புகைப்படங்கள், பிரித்தானியா பற்றிய மேலதிக விபரங்கள், பிரித்தானிய கடவுச்சீட்டு மற்றும் விசாவிற்கு விண்ணப்பித்தல், அங்குள்ள கம்பனிகளில் முதலிடல் மற்றும் அவற்றிற்கு ஏற்றுமதி செய்தல், உயர்ஸ்தானிகராலயப் பணியாளர்களுடன் தொடர்பு கொள்ளல் போன்ற விடயங்களை உள்ளடக்கியதாகக் காணப்படுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

பேராசிரியர் கிருஷ்ணராஜாவின் மறைவுக்கு தமிழ்ச்சங்கம் அனுதாபம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் எஸ்.கிருஸ்ணராஜாவின் மறைவுக்கு கொழும்புத் தமிழ்ச்சங்கம் ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்தியில்;

தமிழ் மொழியில் மெய்யியல் கல்வியை வளர்த்தெடுப்பதற்கு பலவழிகளிலும் தொண்டாற்றியவர் பேராசிரியர் எஸ்.கிருஸ்ணராஜா. மெய்யியலிலும் இந்துத் தத்துவத்திலும் பல அரிய நூல்களை எழுதியுள்ளார்.

தமிழியலை நவீனப்படுத்துவதற்கு அவர் பெரும் தொண்டாற்றியுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சட்டபீடம், கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் இயங்குவதற்கு துணைவேந்தருடன் இணைந்து பெரும் பணியாற்றி, தமிழ் மாணவர்களின் சட்டக்கல்வி வளர்ச்சிக்கும் பேராசிரியர் பெரும் தொண்டாற்றியுள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மட்டுமன்றி கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தமிழ் மாணவர்களுக்கும் அவர் பெரும் தொண்டாற்றியுள்ளார்.  அன்னாரின் மறைவுக்கு கொழும்புத் தமிழ்ச்சங்கம் ஆழ்ந்த அனுதாபத்தினைத் தெரிவித்துக்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எமது நாட்டுக்கே உரிய ஒரு அரசியல் தீர்வை முன்வைக்க அரசு நடவடிக்கை -மஹிந்த சமரசிங்க

mahinda_samarasinghe_.jpgநாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவானதும் எமது நாட்டுக்கே உரியதுமான ஒரு அரசியல் தீர்வை மிக விரைவில் முன்வைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக இடர் முகாமைத்துவ மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஜெனீவாவில் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 11வது அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

நாட்டின் ஏனைய பகுதி மக்கள் அநுபவிக்கும் உரிமைகளை வடபகுதி மக்களுக்கும் பெற்றுக்கொடுக்க வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார். எனவே, அவர்களுக்கான அரசியல் தீர்வை உலகில் எந்த நாடும்,  அரசாங்கமும் கொண்டுவராத வேகத்தில் முன்வைக்க வேண்டும். ஆனால் அது வேறு ஒரு நாட்டின் மூலம் பெற்றுக்கொண்டதாக இருக்காது. வேறு நாடுகளின் தீர்வு யோசனைகளை ஆராய்ந்துகொண்டிருப்பதற்கு எமக்கு நேரமில்லை.

எனவே,  எமது நாட்டுக்கே உரிய ஒரு தீர்வையே நாம் காணவேண்டும். அது அனைத்து மக்களாலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும். இந்தத் தீர்வுக்காக நாம் சர்வதேச சமூகத்தின் ஆதரவினை எதிர்பார்க்கின்றோம்; மாறாக இடையூறுகளை அல்ல,  உலகம் வெற்றிகொள்ள முடியாத சவால்களை நாம் வெற்றிகொண்டிருக்கும் வேளையில்,  தீர்வொன்றைக் காண்பதற்கு எமக்கு முடியாது என சர்வதேச சமூகம் சந்தேகிக்கின்றதா? இல்லை. எமக்கு இதைச் செய்ய முடியும்’ என்றும் அமைச்சர் சமரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

தேசிய வெற்றி விழாவில் ஜனாதிபதி தமிழில் உரை

he_speech_ranaviru_.jpgஎல்.ரீ.ரீ.ஈ.  யினரைத் தோற்கடித்து பாதுகாப்புப் படைவீரர்கள் பெற்றுத் தந்த வெற்றி எமது நாட்டில் வாழும் எல்லா மக்களினதும் வெற்றியாகும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழில் தெரிவித்தார்.  படைவீரர்களின் வெற்றியைக் கொண்டாடும் தேசிய வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

கொழும்பு,  காலிமுகத்திடலில் தற்போது மிகவும் கோலாகலமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் இவ்வைபவத்தில் சற்றுநேரத்துக்கு முன்னர் உரையாற்றிய ஜனாதிபதி தனது உரையின் ஆரம்பத்தில் சிங்களத்தில் சில வார்த்தைகளைக் கூறிவிட்டு தமிழ் மொழியில் உரையாற்றினார். ஜனாதிபதி தமதுரையில் குறிப்பிட்ட தமிழ் வாசகங்கள் கீழே.

அன்பர்களே,  இது நம் எல்லோருடைய தாய்நாடு. இந்த நாட்டில் நாம் எல்லோரும் ஒருதாய் மக்களாக சகோதரர்கள் போல் வாழ வேண்டும். இங்கே எந்தவித பேதமும் இருக்க முடியாது.

எல்.ரீ.ரீ.ஈ. யினருடன் நடத்திய யுத்தம் தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தம் அல்ல. எல்.ரீ.ரீ.ஈ. யினரின் பிடியிலிருந்து அப்பாவி சகோதர தமிழ் மக்களைப் பாதுகாக்க எமது படைவீரர்கள் உயிர் நீத்தார்கள். அவர்கள் செய்த சேவை மறக்க முடியாதது.

எல்.ரீ.ரீ.ஈ. யினரைத் தோல்வி பெறச் செய்து நாம் பெற்ற வெற்றி இந்த தேசத்தின் வெற்றி. நீங்கள் பெற்றுத் தந்த பெருவெற்றி. எமது நாட்டில் வாழும் எல்லா மக்களின் வெற்றி.

அன்பான படைவீரர்களே,  இப்போது பயங்கரவாதிகளுடன் செய்த யுத்தம் முடிந்துவிட்டது. இனி நாம் எமது தமிழ் மக்களுடைய உள்ளங்களை வெற்றிகொள்ள வேண்டும். தமிழ் பேசும் மக்களைப் பாதுகாக்க வேண்டும். அவர்கள் பயம்,  சந்தேகம் இல்லாமல் வாழ வேண்டும். அதுதான் நம் எல்லோருடைய கடமை.

இந்நாட்களில் கடலில் குளிப்பது மிகவும் ஆபத்தானது

sea.jpgஇந் நாட்களில் கடலில் குளிப்பது மிகவும் ஆபத்தானது என சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை எச்சரித்துள்ளதுடன் இவ்வாறு கடலில் குளிக்கச் செல்லும் சிறுவர்களைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பெற்றோர்கள் ஆசிரியர்கள் மற்றும் பொறுப்பு வாய்ந்தவர்களை கேட்டுள்ளது.

கடந்த சில நாட்களில் கடலில் மற்றும் நீர்த்தேக்கங்களில் குளிக்கச் சென்ற பலர் விபத்துக்குள்ளாகியுள்ளனர். கவனயீனமே இவ்வாறான விபத்துக்களுக்கு கூடுதலான காரணம் என்று அதிகாரசபை தெரிவிக்கின்றது.

படைவீரர்களின் வெற்றியைக் கொண்டாடும் தேசிய வைபவம் இன்று

nationalflagflatteringsss.gifநாட்டி லிருந்து தீவிரவாதத்தை முழுமையாக முறியடித்த படைவீரர்களின் வெற்றியைக் கொண்டாடும் தேசிய வைபவம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று கொழும்பில் மிகவும் கோலாகலமாக நடைபெறவுள்ளது.

மிகவும் பிரமாண்டமான முறையில் கொழும்பு,  காலி முகத்திடலில் இன்று காலை நடைபெறவுள்ள இவ்வைபவத்தை முன்னிட்டு கொழும்பு நகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் போக்குவரத்தும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இன்றைய வைபவத்தில் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க,  சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம். லொக்குபண்டார, பிரதம நீதியரசர் சரத் என். சில்வா,  அமைச்சர்கள்,  பாராளுமன்ற உறுப்பினர்கள்,  மாகாண ஆளுநர்கள், முதலமைச்சர்கள்,  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தூதுவர்கள் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

பாதுகாப்புப் படையினரின் வெற்றியைப் பாராட்டும் வகையிலும், அவர்களது சாகசங்களை வெளிப்படுத்தும் வகையிலும் முப்படையினர் மற்றும் பொலிஸாரின் மரியாதை அணிவகுப்புக்களும் இன்று இடம்பெறவுள்ளன. அணிவகுப்பின்போது யுத்த நடவடிக்கைகளில் அங்கவீனமுற்ற படைவீர்ரகளும் சக்கர நாற்காலிகளில் இருந்தவாறு பங்கேற்கவுள்ளனர்.

இந்த அணிவகுப்பின்போது யுத்தத்தில் படையினரால் பயன்படுத்தப்பட்ட கனரக ஆயுதங்களின் பவனியும்,  கடல் மற்றும் விமானப் படையினரின் சாகசங்களும் இடம்பெறவுள்ளன.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விசேட உரையாற்றவுள்ளதுடன் வடக்கு,  கிழக்கு மீட்பு நடவடிக்கைகளின்போது களமுனையிலிருந்து செயற்பட்ட படைவீரர்கள் மற்றும் படைத் தளபதிகள் கௌரவிக்கப்படவுள்ளனர்.

இதுதவிர பாடசாலை மாணவ, மாணவிகளின் அணிவகுப்புக்களும்,  கலாசார பாரம்பரியங்களைப் பிரதிபலிக்கும் வகையிலான அணிவகுப்பும் இடம்பெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் முக்கிய பங்காளி இந்தியா – அமைச்சர் போகொல்லாகம

rohitabogallaagama.jpgஅரசிய லமைப்பின் 13 ஆவது திருத்தத்திலும் கூடுதலாக புதிய தீர்வுத்திட்ட யோசனையானது இப்போது “தீர்மானிக்கப்படும் கட்டத்தில்’ இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம தெரிவித்திருப்பதுடன், இதன் மூலம் அதிகாரப் பகிர்வு நடவடிக்கைகள் அதிகளவில் “உறுதிப்படுத்தப்பட்டவை’யாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.  சிங்கப்பூரில் இடம்பெற்ற ஆசிய பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சர் போகொல்லாகம “இந்து’ பத்திரிகைக்கு இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளில் “இந்தியாவை முக்கியமான பங்காளியாக’ இலங்கை பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை இதனைக் கூறியுள்ள அமைச்சர் போகொல்லாகம; “”உள்நாட்டில் உருவாக்கப்படும் (அரசியல்) நடவடிக்கைகளில் இந்தியா எப்போதும் அங்கமாக உள்ளது’ என்று குறிப்பிட்டார். ஆனால் விடுதலைப் புலிகளுக்குப் பின்னரான முன்முயற்சிகளை இலங்கை உருவாக்குவது தொடர்பாகவோ அல்லது துரிதமாக முன்னகர்த்துவது குறித்தோ இந்தியா எந்தவிதமான பங்களிப்பை வழங்கமுடியும் என்பது பற்றி அவர் விசேடப்படுத்திக் குறிப்பிட்டிருக்கவில்லை.

புதுடில்லியானது யோசனைகள் உள்நாட்டு மட்டத்திலிருந்து உருவாக்கப்படுவதற்கு மதிப்பளித்துள்ளது. இலங்கை இந்திய உடன்படிக்கையிலிருந்தே அதிகாரப்பகிர்வு தொடர்பான 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் வடிவமைக்கப்பட்டது. ஆனால், உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட நடவடிக்கைகள் மூலமான விளைவையே சட்டமூலம் ஏற்படுத்தியுள்ளது.

புதிய சூத்திரமான “13 ஆவது திருத்தத்திலும் கூடுதலானது’ இப்போது தீர்மானிக்கப்படும் கட்டத்தில் இருக்கிறது. இது அதிகாரப்பகிர்வு ஏற்பாடுகளை அதிகளவுக்கு உறுதிப்படுத்தப்பட்டதாக கொண்டதாக அமையும் என்றும் போகொல்லாகம கூறியுள்ளார்.

தற்போதைய நடவடிக்கையானது மத்தியில் பிராந்திய மட்டப் பிரதிநிதித்துவத்தை விரிவானதாக்குவதற்கும் வழி வகுக்கக்கூடும். அதாவது இரு சபைகள் என்ற அணுகுமுறை மூலம் பிராந்திய மட்ட பிரதிநிதித்துவத்தை மத்தியில் விரிவுபடுத்துவதற்கு வழிசமைக்கக்கூடும் என்று அவர் கூறியுள்ளார்.

இந்தக் கொள்கையை உருவாக்குவது தொடர்பாக ஜனாதிபதியின் விசேட உரிமையின் பரிமாணம் குறித்து அவர் வெளிப்படுத்தவில்லை. பொருளாதார ரீதியில் இப்போது அபிவிருத்தி நிகழ்ச்சிநிரல் விரிவுபடுத்தப்பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார். தற்போது இந்தியாவுடன் இருக்கும் வர்த்தக உடன்படிக்கை தொடர்பாக அவர் இதனைக் கூறியுள்ளார்.

இலங்கையில் சீனா, பாகிஸ்தானின் ஏதாவது அரசியல், அபிவிருத்தி நிகழ்ச்சி நிரல்களில் சம்பந்தப்பட்ட பங்களிப்புகள் குறித்து கருத்துத் தெரிவித்த அவர்; வர்த்தகத் துறைமுகத்திற்காக கடனடிப்படையில் சீன அரசு உதவியுள்ளதாகவும் இது சீன ஒப்பந்தக் காரர்களால் நிர்மாணிக்கப்படுவதாகவும் அதற்கு அப்பால் வேறு எதுவும் இல்லை எனவும் அவர் கூறினார். பொதுவாகக் கூறினால் எமது பாதுகாப்புத் தொடர்பான தேவைகள், நாம் பெற்றுக்கொள்பவை பற்றி இந்தியாவுக்கு நன்கு தெரியும். ஆதலால், எமது பாதுகாப்பு தேவைகளை நாம் எவ்வாறு கையாள்கிறோம் என்பது தொடர்பாக பகிரங்கமாக ஒலிபரப்புவதற்கான தேவை இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.