இடம்பெயர்ந்த மாணவர்களுக்கு 19 லொறிகளில் கல்வி உபகரணங்கள்

susil_prem_minister.jpgவட பகுதியிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மாணவர்களுக்கு 19 லொறிகளில் 130 மில்லியன் ரூபா பெறுமதியான கல்வி உபகரணங்கள் கல்வி அமைச்சிலிருந்து நேற்று அனுப்பி வைக்கப்பட்டன.கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த உத்தியோகபூர்வமாக இதனை உரிய அதிகாரிகளிடம் கையளித்தார்.

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா நலன்புரிக் கிராமங்களில் தங்கியுள்ள பாடசாலை மாணவர்களுக்கான சீருடை,  கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் இவ்வாறு அரசாங்கத்தினால் வவுனியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

மாணவ மாணவிகளுக்கான ஒன்றரை கோடி ரூபா பெறுமதியுடைய தற்காலிகச் சீருடை,  மூன்றரை கோடி ரூபா பெறுமதியான மேசை, கதிரை உள்ளிட்ட கல்வி உபகரணங்களும் 75 மில்லியன் ரூபா பெறுமதியான நூல்கள்,  அப்பியாசப் புத்தகங்களும்  இதிலடங்குவதாகக் கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார்.

இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை தேவையான உபகரணங்களை நலன்புரி நிலையங்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளைக் கல்வியமைச்சு மேற்கொண்டுள்ளது எனவும் அமைச்சர் கூறினார்.

வவுனியாவிற்குக் கொண்டு செல்லப்படும் தற்காலிக சீருடைகள் நலன்புரி நிலையங்களிலுள்ள மாணவர்களுக்கு நேரடியாகப் பகிர்ந்தளிக்கப்படுவதுடன் அங்குள்ள ஆசிரியைகளுக்கு வழங்குவதற்காக 2,000 சேலைகளும் எடுத்துச் செல்லப்படுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பிரதியமைச்சர் எம். சச்சிதானந்தன் உட்பட கல்வித்துறை சார்ந்த அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். நேற்று எடுத்துச் செல்லப்பட்ட கல்வி உபகரணங்கள் நாளை மறுதினம் 5ம் திகதி அங்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளன. 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *