பிரித்தானிய தூதராலய இணையத்தளம் மாலைதீவில் ஆரம்பிக்கப்பட்டது

பிரித்தானிய தூதராலயத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் நேற்று திங்கட்கிழமை மாலைதீவில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாகப் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
www.uinmaldives.fco.gov.lk எனும் இவ் இணையத்தளத்தை மாலைதீவின் ஜனாதிபதி மொஹமட் நசீட் ஆரம்பித்து வைத்துள்ளார்.

இதேவேளை, பிரித்தானியாவின் இலங்கை மற்றும் மாலைதீவிற்கான பிரதி உயர்ஸ்தானிகர் மார்க் குட்டிங் மாலைதீவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகரின் இவ் ஒருநாள் உத்தியோகபூர்வ விஜயம் பிரித்தானிய மற்றும் மாலைதீவிற்கான அரசியல் உறவுகள் பொருளாதார அபிவிருத்தி என்பனவற்றைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் அவர் இவ்விஜயத்தின் போது மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் நசீட், வெளிவிவகார அமைச்சர் அஹமட் சாகீட், பாதுகாப்பு அமைச்சர் அமீன் பைசல், வீடமைப்பு, சுற்றாடல் மற்றும் போக்குவரத்து அமைச்சர் மொஹமட் அஸ்லம், பொலிஸ் ஆணையாளர் அஹமட் பாஸிஷ் உட்பட பலரைச் சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விஜயத்தின் போது ஆரம்பித்து வைக்கப்பட்ட உத்தியோகபூர்வ இணையத்தளம் பற்றிக் கருத்துத் தெரிவித்த பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர்;

இவ் இணையத்தளமானது மாலைதீவு மக்கள் பிரித்தானியா பற்றிய தகவல்களை இலகுவில் பெற வழிவகுக்கும். அத்துடன் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் சேவையை மாலைதீவிற்கு நெருக்கமாக்குமென்றும் தெரிவித்தார்.

மாலைதீவிற்கான பிரித்தானியாவின் உயர்ஸ்தானிகராலயம் கொழும்பிலேயே உள்ளது.

மாலைதீவில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இணையத்தளம் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் பணிகள், உத்தியோகபூர்வ விஜயம் தொடர்பான செய்திகள், புகைப்படங்கள், பிரித்தானியா பற்றிய மேலதிக விபரங்கள், பிரித்தானிய கடவுச்சீட்டு மற்றும் விசாவிற்கு விண்ணப்பித்தல், அங்குள்ள கம்பனிகளில் முதலிடல் மற்றும் அவற்றிற்கு ஏற்றுமதி செய்தல், உயர்ஸ்தானிகராலயப் பணியாளர்களுடன் தொடர்பு கொள்ளல் போன்ற விடயங்களை உள்ளடக்கியதாகக் காணப்படுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *