நாட்டி லிருந்து தீவிரவாதத்தை முழுமையாக முறியடித்த படைவீரர்களின் வெற்றியைக் கொண்டாடும் தேசிய வைபவம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று கொழும்பில் மிகவும் கோலாகலமாக நடைபெறவுள்ளது.
மிகவும் பிரமாண்டமான முறையில் கொழும்பு, காலி முகத்திடலில் இன்று காலை நடைபெறவுள்ள இவ்வைபவத்தை முன்னிட்டு கொழும்பு நகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் போக்குவரத்தும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இன்றைய வைபவத்தில் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க, சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம். லொக்குபண்டார, பிரதம நீதியரசர் சரத் என். சில்வா, அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண ஆளுநர்கள், முதலமைச்சர்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தூதுவர்கள் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
பாதுகாப்புப் படையினரின் வெற்றியைப் பாராட்டும் வகையிலும், அவர்களது சாகசங்களை வெளிப்படுத்தும் வகையிலும் முப்படையினர் மற்றும் பொலிஸாரின் மரியாதை அணிவகுப்புக்களும் இன்று இடம்பெறவுள்ளன. அணிவகுப்பின்போது யுத்த நடவடிக்கைகளில் அங்கவீனமுற்ற படைவீர்ரகளும் சக்கர நாற்காலிகளில் இருந்தவாறு பங்கேற்கவுள்ளனர்.
இந்த அணிவகுப்பின்போது யுத்தத்தில் படையினரால் பயன்படுத்தப்பட்ட கனரக ஆயுதங்களின் பவனியும், கடல் மற்றும் விமானப் படையினரின் சாகசங்களும் இடம்பெறவுள்ளன.
இந்த நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விசேட உரையாற்றவுள்ளதுடன் வடக்கு, கிழக்கு மீட்பு நடவடிக்கைகளின்போது களமுனையிலிருந்து செயற்பட்ட படைவீரர்கள் மற்றும் படைத் தளபதிகள் கௌரவிக்கப்படவுள்ளனர்.
இதுதவிர பாடசாலை மாணவ, மாணவிகளின் அணிவகுப்புக்களும், கலாசார பாரம்பரியங்களைப் பிரதிபலிக்கும் வகையிலான அணிவகுப்பும் இடம்பெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.