June

June

போத்தல ஜயந்த மீதான தாக்குதல் தொடர்பாக விசாரிக்க ஜனாதிபதி உத்தரவு – அமைச்சரவைப் பேச்சாளர் தகவல்

33222.jpgஊடகவி யலாளர் போத்தல ஜயந்த மீதான தாக்குதல் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமைய விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று காலை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளர் போத்தல ஜயந்தவின் வைத்தியசாலைக் கட்டணங்களை லேக்ஹவுஸ் நிறுவனம் வழங்கும். ஊடகவியலாளர்கள் எவருக்கேனும் அச்சுறுத்தல்கள் இருக்குமாயின் அதுபற்றி விசாரிக்க முடியும் என்றும் அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை,  கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த அமைச்சர்,  சில ஊடகவியலாளர்கள் எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்திடமிருந்து பணம் பெற்றுக்கொண்டமை தொடர்பாக இடம்பெற்று வரும் விசாரணைகள் முடிவடைந்த பின்னரே அதுபற்றிய தகவல்களைக் கூற முடியும் எனத் தெரிவித்தார். 

தமிழ் சிங்கள பாடசாலைகளின் தவணைக் காலத்தில் மாற்றம் – கல்வி அமைச்சு அறிவிப்பு

students1.jpgநாட்டில் உள்ள அனைத்து சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான 2ஆம் மற்றும் 3ஆம் தவணைக் காலம் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இத்திருத்தத்தின்படி சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான 2ஆம் தவணைக் காலம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 7ஆம் திகதி முடிவடைவதோடு 3ஆம் தவணைக்காக மீண்டும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதென அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது. கடந்த 2008.11.04 இல் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்று நிருபத்தின்படி இவ்வருடம் ஜுலை மாதம் 31ஆம் திகதியே இரண்டாம் தவணைக் காலம் நிறைவுபெறவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சுவீர் இந்திய ஹோட்டல் நிறுவனத்துக்கு கட்டுநாயக்காவில் காணி

anura_priyadarshana_yapa4.jpgகட்டுநாயக்கா ஏற்றுமதி வலயத்துக்கு அருகில் சுவீர் இந்திய ஹோட்டல் நிறுவனத்துக்கு காணி ஒன்றை வழங்க அமைச்சரவை முடிவுசெய்துள்ளது.

முதலீட்டு அபிவிருத்தி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார்.

குத்தகை அடிப்படையில் 50 வருட காலத்துக்கு ஐந்து கோடியே 58 இலட்ச ரூபாவுக்கு இக்காணி வழங்கப்படுகிறது. காணி வழங்கப்பட்டு 30 நாட்களுக்குள் குறிப்பிட்ட தொகையின் 25 வீதத்தை சம்பந்தப்பட்ட நிறுவனம் செலுத்த வேண்டும்

யாழ்ப்பாண தொழில்நுட்பக் கல்லூரியில் இளைஞர் யுவதிகளுக்கு தொழில் பயிற்சிகள்

north_.jpgவிசேட தொழில்நுட்ப பயிற்சித் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாண தொழில்நுட்பக் கல்லூரி, பாடசாலையை விட்டு வெளியேறிய ஐயாயிரம் இளைஞர், யுவதிகளுக்கு பல்வேறு தொழில் பயிற்சி நெறிகளை ஆரம்பித்திருப்பதாக கல்லூரி அதிபர் எம்.யோகராஜன் அறிவித்துள்ளார்.

இத்திட்டத்தின் கீழ் வடமராட்சி மாணவர்களின் நன்மைகருதி யாழ்ப்பாண தொழில்நுட்பக் கல்லூரியும் வடமராட்சி சுருக்கெழுத்துக் கழகமும் இணைந்து வடமராட்சி சுருக்கெழுத்துக்கழக தொழில் பயிற்சிக்கழகத்தில் ஐந்து கற்கை நெறிகளை உடனடியாக ஆரம்பிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. இக்கற்கை நெறியில் இணைந்துகொள்ள விரும்பும் மாணவர்களுக்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் ஆறாம், ஏழாம் திகதிகளில் யாழ்.தொழில்நுட்பக் கல்லூரியில் இடம்பெறவுள்ளது.

பயிற்சி நெறிகள் மூன்று மாதகாலத்துக்குரியதாக நடத்தப்படுமெனவும் பகுதிநேர அலுவலக கணினிப் பயிற்சி நெறி, ஆங்கில மொழி, சிங்கள மொழி பகுதிநேர கற்கை நெறி, தமிழ் சுருக்கெழுத்து பகுதி நேரம், முழுநேரக் கற்கை நெறியாகவும் நடத்தப்படவுள்ளது.

முதலாவது அணியாக மின்தட்டு, நீர்க்குழாய் பொருத்துதல், மேசன் வேலை, கணினிகற்கை நெறி, மோட்டார் வாகனம் திருத்துதல் ஆகிய பயிற்சி நெறிக்கு 900 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு பயிற்சி நெறிகள் ஆரம்பமாகியுள்ளன.

சுகாதார அமைச்சுக்கு 20 அம்பியுலன்ஸ் வண்டிகள்

nimal-sripala.jpgசுகாதாரப் பாதுகாப்பு மற்றும் போஷாக்குத்துறை அமைச்சுக்கு 20 அம்பியுலன்ஸ் வண்டிகளைக் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் போஷாக்குத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார்.

நாட்டில் நிலவும் அவசரத்தேவைக்கு ஏற்ப டெண்டர் முறையின்றி குறைந்த விலையை சமர்பித்துள்ள உள்நாட்டு வாகன உற்பத்தி நிறுவனமான மைக்ரோ நிறுவனத்திடம் இவற்றை உடனடியாக கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

12 வீத வற்வரி உட்பட 49 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வீதம் 20 அம்பியுலன்ஸ் வண்டிகளை கொள்வனவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

சரக்கு ரயில் என்ஜின் தடம்புரண்டு தீப்பிடிப்பு தலாவ ரயில் நிலையத்தில் நேற்று சம்பவம்

அனுராதபுரத்திற்கு எரிபொருளை எடுத்துச் சென்ற சரக்கு ரயிலின் என்ஜின் தலாவ ரயில் நிலையத்தில் நேற்று தடம் புரண்டு தீப்பற்றியதாக அனுராதபுரம் ரயில்வே பிரதான கட்டுப்பாட்டாளர் எம். எம். எஸ். மனதுங்க தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக ரயில்வே திணைக்கள அதிகாரிகளும், பொலிஸாரும் தனித்தனியாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், கொழும்பிலிருந்து அனுராதபுரத்திற்கு எரிபொ ருளை எடுத்துச் சென்ற ரயில் தலாவ ரயில் நிலையத்தில் நேற்று காலை 7.00 மணியளவில் தடம் புரண் டது.

ரயிலின் என்ஜின் உட்பட மூன்று எண்ணெய் கொள் கலன்கள் தடம்புரண்டன.  இதனால் ரயில் என்ஜின் தீப்பிடித்து எரிந்தது.

அனுராதபுரம் தீயணைப்பு படையினரின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

ரயில் என்ஜினில் ஏற்பட்ட தீயினால் உயிரிழப்புகளோ காயங்களோ ஏற்படவில்லை. அத்தோடு ரயிலின் பெட்டிகளுக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை.

இச்சம்பவம் ஏற்படும் போது ஐந்து ரயில் கொள்கலன்களில் 29 ஆயிரம் லீட்டர் டீசலும், ஒரு கொள்கலனில் பத்தாயிரம் லீட்டர் பெற்றோலும் இருந்தன. இச்சம்பவத்தினால் அவற்றுக்கு எதுவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.

காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களை செஞ்சிலுவை தொண்டர்கள் பராமரிப்பு

medical_lorry.jpgவன்னியில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கையில் படுகாயமடைந்து வவுனியா செட்டிகுளம் ஆஸ்பத்திரிகளிலும் பம்பைமடு மற்றும் வவுனியா திருச்சபை பாடசாலைகளில் தங்கியுள்ள நோயாளர்களுக்கு இலங்கை செஞ்சிலுவைச் சங்க வவுனியா கிளையின் தொண்டர்கள் 24 மணி நேரமும் உதவிப்பணிகளைச் செய்து வருகின்றனர்.
இதற்காக 240 தொண்டர்கள் இப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் இவர்கள் செஞ்சிலுவைச் சின்னம் பொறிக்கப்பட்ட மேலாடைகளை அணிந்து கடமையிலிருப்பதாகவும் செஞ்சிலுவைச் சங்க அதிகாரி தெரிவித்தார்.

வன்னிப் பகுதியில் இடம்பெற்ற ஷெல் தாக்குதல், துப்பாக்கிச் சூடு காரணமாகவே இவர்கள் காயமடைந்துள்ளனர். இவர்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உள்ளனர். சிறு சிறு காயமடைந்தவர்கள், சத்திரசிகிச்சைக்குள்ளானவர்கள், கை, கால்கள் துண்டிக்கப்பட்டவர்கள் என பல தரப்பினரும் இவர்களில் அடங்குவார்கள்.

நலன்புரி நிலையங்களில் திடீரென சுகயீனம் ஏற்படும் நோயாளர்களை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல செஞ்சிலுவை சங்க அம்புலன்ஸ் வாகனமும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அத்துடன், நலன்புரி நிலையங்களுக்கு பௌசர்கள் மூலமும் செஞ்சிலுவைச் சங்கம் நீர் விநியோகம் செய்து வருகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

நுகர்வோர் விவகாரம் தொடர்பான அதிகாரசபைச் சட்டத்தில் திருத்தம்

bandula_gunawardena.jpg2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க நுகர்வோர் விவகாரம் தொடர்பான அதிகாரசபைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.

வாத்தக விற்பனை அபிவிருத்தி கூட்டுறவு மற்றும் நுகர்வேர் சேவைகள் அமைச்சர் பந்துல குணவர்தன இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார்.

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு உதவவேண்டுமென ரணில் கோரவேண்டும்

ranil-wickramasinghe.jpgபேதங்களை மறக்க வேண்டுமென கேட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இலங்கைக்கு உதவி வழங்க சர்வதேச நாணய நிதியத்தை கோர வேண்டுமென அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஊடக அமைச்சில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ஊடக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன இந்தக்கோரிக்கையை விடுத்தார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்;

“பேதங்களை மறந்து செயற்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் கூறியிருந்தார். இவ்வாறு வந்தால் எம்மால் ஏற்றுக் கொள்ள முடியும். இதேநேரம், எச்.எஸ்.பி.சி. வங்கி அரசாங்கத்துக்கு கடன் கொடுத்தால் அதை நாம் பொறுப்பேற்க மாட்டோமென எதிர்க்கட்சித் தலைவர் ஏற்கனவே தெரிவித்திருந்தார். எனவே, இலங்கைக்கு உதவ வேண்டுமென சர்வதேச நாணய நிதியத்தை எதிர்க்கட்சித் தலைவர் தற்போது கோர வேண்டும்.

நேர்மையாக உதவ முன்வந்தால் எதிர்க்கட்சியுடன் இணைந்து அரசாங்கத்துக்கு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க முடியும்’

“இடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் மக்களை கூடிய விரைவில் அவரவரது சொந்த இடங்களில் மீள குடியமர்த்துவதே அரசாங்கத்தின் நோக்கம். கிழக்கில் எதிர்பார்த்ததை விட குறுகிய காலத்தில் மீள் குடியேற்றங்களை செய்தது போல் வடக்கிலும் கண்ணிவெடிகள் அகற்றும் பணிகள் நிறைவடைந்ததன் பின்னர் மக்கள் வெகு விரைவில் மீளகுடியமர்த்தப்படுவார்கள்.

இதேவேளை, அனைவரும் தற்போது முன்வந்துள்ளனர். தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கூட முன்னர் போலன்றி தற்போது இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவுமாறு இந்தியாவில் சென்று கோரிக்கை விடுக்கின்றனர். ஏனெனில், தனி இராச்சியம் குறித்து பேச அவர்களுக்கு தற்போது சந்தர்ப்பம் இல்லாமல் போயுள்ளது.

அத்துடன் இந்தியாவும் எமக்கு மில்லியன் கணக்கில் உதவியுள்ளது. அதுமட்டுமல்லாது இலங்கைக்கு இயன்ற வரை உதவ தயாராக இருப்பதாக இந்தியாவின் வெளிவிவகார அமைச்சரும் தெரிவித்திருக்கிறார். அதன் நோக்கமாகவே ஜனாதிபதியின் இந்திய விஜயமும் அமையவுள்ளது.

இதேவேளை, ஜே.ஆர்.ஜெவர்தனவின் அரசியலமைப்பின் பிரகாரம், 1987 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட (13 ஆவது) அரசியலமைப்பு திருத்தத்தின் மூலமும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் குறித்தவொரு காலப்பகுதிக்கு ஒன்றிணைக்கப்பட்டிருந்தது. எனினும் அது தவறென நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே நீதிமன்ற தீர்ப்பை எமக்கு மீறி செயற்பட முடியாது.

கிழக்கில் மாகாண சபை செயற்படுத்தப்பட்டது போல, விரைவில் வடக்கிலும் மாகாணசபை செயற்பாட்டுக்கு கொண்டுவரப்படும். மீள்குடியேற்றம் செய்யப்படுவதற்கு சமாந்தரமாக உள்ளூராட்சி தேர்தல்களை நடத்தி கூடிய விரைவில் வடக்கிலும் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் அமுல்படுத்தப்படும்’ என்று கூறினார்.

நாட்டை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகளை மூவின மக்களும் இணைந்து முன்னெடுக்க வேண்டும் – அமைச்சர் நிமால் சிறிபால

nimal-siriiii.jpgமூவின மக்களும் ஒன்றிணைந்து இந்நாட்டை அபிவிருத்தி செய்யும் செயற்பாடுகளை முன்னெடுப்பதன் மூலமே எமது நாட்டை வளங்கொழிக்கச் செய்யமுடியுமென சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

உலக சுகாதாரப் பேரவையின் தலைவராக சுகாதார அமைச்சர் தெரிவு செய்யப்பட்டதற்காக ஊவா மாகாண சபை கேட்போர் கூடத்தில் அவருக்கு கௌரவிப்பு விழாவொன்று ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்;

தோட்டத் தொழிலாளர்கள் அனைவரும் நாட்டின் ஏனைய சமூகத்தினருக்கு நிகராக வாழக்கூடிய சூழலை உருவாக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கல்வி, சுகாதாரம், குடிநீர் வசதிகள், வீதி புனரமைப்பு ஆகியவற்றின் மேம்பாடுகள் பெருந்தோட்டப் பகுதிகளில் துரிதப்படுத்தப்படும். மேலும் இந் நாட்டில் வாழும் அனைத்து மக்களும் ஒரு தாய் மக்கள் போன்று வாழ வேண்டும். அதற்கான அடித்தளமும் பதுளையிலேயே ஆரம்பிக்கப்பட்டு ஏனைய பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்படும்.

ஆரம்ப காலம் முதல் தோட்டத் தொழிலாளர்களும் கிராமவாசிகளும் மிகுந்த ஐக்கியத்துடன் வாழ்ந்து வந்தனர். இவ்விரு சமூகங்களுக்கிடையிலும் பரஸ்பர ஒற்றுமையும் இருந்து வந்தது. ஆனால், யுத்த சூழலின் போது ஏற்பட்டிருந்த பரஸ்பர ஒற்றுமையில் இரு சமூகங்களுக்கிடையில் விரிசல்கள் ஏற்பட்டன. தற்போது யுத்தத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இவ் யுத்தமானது தமிழ் மக்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட யுத்தம் அல்ல. பயங்கரவாதத்திற்கெதிராகவே மேற்கொள்ளப்பட்டதாகும். இனிமேல், யுத்தமோ, பயங்கரவாதமோ எமது நாட்டிற்குத் தேவையில்லை. மூவின மக்களும் ஒன்றிணைந்து இந்நாட்டினை துரிதமாக அபிவிருத்தி செய்யும் யுத்தத்தை முன்னெடுப்பதன் மூலமே இந் நாட்டை வளங்கொழிக்கச் செய்ய முடியும்.

இந்நாட்டின் அனைத்து மக்களும் சமமாக மதிக்கப்படல் வேண்டும். பாகுபாடுகள், பாரபட்சங்கள் எவ்வகையிலும் இடம்பெறக்கூடாது. பெருந்தோட்டப் பகுதி மக்களினது கல்வி, சுகாதாரம், வீதிபுனரமைப்பு, குடிநீர் விநியோக வசதிகள் என்பவற்றை ஏற்படுத்தி அவர்களின் வாழ்க்கையில் புதியதோர் மாற்றத்தினை ஏற்படுத்துவதற்கான விசேட திட்டத்தினை முன்வைத்துள்ளேன். ஏனைய சமூகத்திற்கு நிகராக பெருந்தோட்ட சமூகம் இருக்கவேண்டும். இதனை பதுளை மாவட்டத்திலிருந்தே நடைமுறைப்படுத்தவுள்ளேன்.

ஊவா மாகாண மக்கள் இவ்வருடத்தின் மூன்று தேர்தலை எதிர்கொள்ள் வேண்டியுள்ளது. முதலாவதாக வருவது ஊவா மாகாணசபைத் தேர்தல், அதையடுத்து ஜனாதிபதி தேர்தல், அதன்பின்னர் நாடாளுமன்ற தேர்தல், இத்தேர்தல் அனைத்திலுமே அதிகப் பெரும்பான்மைப் பலத்துடன் ஸ்ரீ.ல.சு. கட்சியே வெற்றியடையும். ஆகையினால் அனைத்து மக்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியையே ஆதரிக்க முன்வந்துள்ளனர். நடைபெறும் தேர்தல்கள் அனைத்திலுமே பெருந்தோட்டத்துறை மக்கள் அனைவரும் ஸ்ரீ.ல.சு.கட்சியையே பூரணமாக ஆதரித்து அதிகப் பெரும்பான்மைப் பலத்துடன் வெற்றியடைய வைப்பர். இதுவிடயத்தில் எவ்வித சந்தேகமும் இல்லை என்றார்.