ஊடகவி யலாளர் போத்தல ஜயந்த மீதான தாக்குதல் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமைய விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று காலை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளர் போத்தல ஜயந்தவின் வைத்தியசாலைக் கட்டணங்களை லேக்ஹவுஸ் நிறுவனம் வழங்கும். ஊடகவியலாளர்கள் எவருக்கேனும் அச்சுறுத்தல்கள் இருக்குமாயின் அதுபற்றி விசாரிக்க முடியும் என்றும் அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை, கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த அமைச்சர், சில ஊடகவியலாளர்கள் எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்திடமிருந்து பணம் பெற்றுக்கொண்டமை தொடர்பாக இடம்பெற்று வரும் விசாரணைகள் முடிவடைந்த பின்னரே அதுபற்றிய தகவல்களைக் கூற முடியும் எனத் தெரிவித்தார்.