June

June

வடக்கில் அரசு முன்னெடுக்கும் திட்டங்களுக்கு பூரண ஆதரவு – சிவநாதன் கிஷோர் எம்.பி. தெரிவிப்பு

kishore.jpgவடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் கீழ் அரசாங்கம் முன்னெடுக்கும் சகல நடவடிக்கைகளுக்கும் பூரண ஆதரவு வழங்குவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தென்றல் அலைவரிசையில் இன்று காலை ஒலிபரப்பான பல்திசை நோக்கு எனும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். இந்நிகழ்ச்சியில் அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட அஹிம்சை வழி மற்றும் ஆயுதப் போராட்டங்கள் அனைத்தும் முற்றாகத் தோல்வியடைந்துள்ளன. இந்நிலையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத் திட்டங்களுக்கு ஆதரவு வழங்க வேண்டியது அவசியமாகும்.

வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் நிவாரணக் கிராமங்கள் மற்றும் நலன்புரி நிலையங்களில் உட்கட்டமைப்பு உட்பட ஏனைய வசதிகளை மேம்படுத்துவது குறித்து கூடுதல் கவனம் செலுத்தவுள்ளேன். இம்மக்களின் அன்றாடப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இயலுமான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் கிஷோர் எம்.பி. மேலும் குறிப்பிட்டார்

கஷ்டப்பிரதேச ஆசிரியர் நியமனத்திற்காக குடாநாட்டில் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டோர்

கல்வியியல் கல்லூரிகளில் 2006/2008 கல்வி ஆண்டுகளில் பயிற்சி நெறியை பூர்த்தி செய்து கற்பித்தல் தொடர்பான தேசிய டிப்ளோமா சான்றிதழ் பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளவர்களை மாகாண அரசசேவைத் திட்டத்தின் கீழ் ஆசிரியராக வடமாகாணத்தில் உள்ள அதிகஷ்ட, கஷ்ட பிரதேசப் பாடசாலைகளுக்கு நியமிப்பது தொடர்பான நேர்முகப் பரீட்சை யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஜூன் 19 ஆம் திகதி யாழ். மேலதிக கல்விப்பணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெறவிருக்கிறது. நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டவர்கள் தேசிய அடையாள அட்டை அல்லது அடையாளத்தை நிரூபிப்பதற்கான புகைப்படத்துடன் கூடிய ஆவணம், பிறப்புச்சான்றிதழ், கா.பொ.த சா/த, உ/த சான்றிதழ்கள், இறுதியாகக்கற்ற பாடசாலை அதிபர், கிராம சேவகர், இன்னும் ஒருவரின் சான்றிதழ் மற்றும் தேசியக்கல்வியியல் கல்லூரியில் அனுமதி பெறுவதற்குச் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் முதலியவற்றை சமர்ப்பிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரிகளின் பெயர்கள் வருமாறு;

யாழ்ப்பாணம் மாவட்டம் தமிழ்மொழி மூலம்

மகாலிங்க சிவம் பிரதீபன், கல்யாண கோவிந்தபிள்ளை, சுகிர்தா கிருஷ்ணபிள்ளை, கோமகன் கனகசபை, சத்யா வைத்தியநாதன், சுகிர்தா குணரத்னம், விஜயராணி கேசவபாலன், கார்த்திகா செல்வராஜா, பிருந்தா ஜெகதீஸன், தயாரஞ்சினி மார்க்கண்டு, மைதிலி வேலாயுதம், மேகலா குணசிங்கம், கிருஷ்ணவேணி விஷ்ணுசாமி, யசோதா செல்வராசா, பாமினி நாகேஸ்வரன், செல்வநாதன் திலக், தவராசா வதனரூபன், தர்மசீலன் பரமசிவம், சிவசீலன் அனந்தகுமார், சிவகரன் சிவபுண்ணியம், ஷர்மிளா சந்திரன், பிரவினா சண்முகதாஸன், உஷாபேபி மதியாபரணம், மதிரூபன் கந்தையா, மதனிகா சின்னத்தம்பி, கவிதா சிவராஜா, தவரூபி தவராசா, திருவாணி நடராஜா, ரஜினி தில்லையம்பலம், வினோஜா சீவரத்னம், சுதாமதி கதிரேசபிள்ளை, பிரமிளா கனகலிங்கம், மதியுதயா சிவபாதசுந்தரம், ஆர்த்திகா நடராஜா, ராதிகா துரைசிங்கம், ஷர்மினி கணபதிப்பிள்ளை, காயத்திரி ராஜநாயகம், நவரத்னமலர் திருநடராஜா, சரிதா ராஜரட்னம், அமிதாசனி பக்திநாதன், தர்மினிதவராசா, சாமந்தி திருக்கேதீஸ்வரன், கீதாஞ்சலி மகேஸ்வரன், கவிதா அப்பர், கிரிஷா கிருஷ்ணபிள்ளை, தர்மினி தியாகராசா, தவராசா தவசீலன், சிவானந்தம் கமலேஸ்வரன், காயத்திரி பரமநாதன், ரேணுகா காந்திமதி நாதன், சின்னத்தம்பி வசீகரநாதன், சிவதர்சினி செல்லையா, மதுரா ஜெயராசா, ஜென்ஷி மரியதாஸ், பாமதி அம்பலவாணர், விஜிதா சுந்தரலிங்கம், கவிதா சிவக்கொழுந்து, சுரேகா தங்கராஜா, ஷியாமினி கணேஸ்வரன், தாட்சாயினி பாலசுப்பிரமணியம், சுஜாதா அந்தோனிப்பிள்ளை, சுகிர்தா தில்லைநாதன், வினோதா தங்கராசா, குமுதினி சோமசுந்தரம், தர்சினி குணரத்னம், அனிதா அற்புதமூர்த்தி, தங்கராசா ருஷான், விலாசினி குலேந்திரன், வேலுப்பிள்ளை சுசிகரன், நடேசப்பெருமாள் சிவநாதன், ஜசிந்தா குலசிங்கம்,சிவபாலன் கமலவேந்தன், ஜெயராஜா ஜெயகிறிஸ்ரோ, சதாயினி பிறைசூடி, தியாகராஜா உமாகரன், தங்கராஜா காந்தரூபன், நிரஞ்சனா பத்மநாதன், சைலாஜன்கிணி ரவீந்திரன்,தேவிகா கணேசலிங்கம்,பிரதீபன் சந்திரலிங்கம், மேரி டயானா மரியநாயகம், தயாளன் சரவணபவானந்தன், முரளிதரன் வேலாயுதம், கார்த்திகேசு ரிஷிகேஷன், ஸ்ரீரதம் சேந்தன், கமலநாதன் சண்முகம், சுபேந்திரன் சிதம்பரப்பிள்ளை, சந்திரகாந்தன் கோகுலநாத், தங்கவடிவேல் மதிகரன், சுதாஜினி நாகரத்னம், மதுரா சாந்திகுமார், காயத்ரி தவராசா, சிந்துஜா கந்தசாமி, இந்திராதேவி செல்வராசா, தவேந்திரன் ஜனனி, யசோதா மயில்வாகனம், பிரியந்தி ராஜரட்னம், நடராஜா சிவரூபி, ரத்தினம் ஷர்மிளா, சோபிகா கணேசலிங்கம், கோகிலா புவனேஸ்வரன், கவிதா சிவனேசன், தேன்மொழி ஈஸ்வரதாசன், ஜெயதர்சினி ராசேந்திரம், கார்த்திகா முருகேசு, தெய்வேந்திரம் கலைவாணி, ஒஸ்ரனிஸ்லோஸ் , லாவண்யா சௌந்தரராஜன்.

யாழ்.மாவட்டம் ஆங்கில மொழிமூலம்

வனிமலர் செல்வநாதன், வான்மதி தம்பிஐயா,இமயந்தி மாணிக்கவாசகர், கிருஷாந்தி வல்லிபுரம், மேகலா சிவசுப்பிரமணியம், சாந்தினி சூரியமூர்த்தி, ரோஸ்பேரி ஸ்ரனிஸ்வாஸ், பாலநந்தினி சரவணபவானந்தன், மீரோஜினி ஜெயகாந்தன், ஜஸ்மின் தங்கராஜா, இராமச்சந்திரன் மணிவண்ணன், தனுஜா தவயோகராஜா, சயந்தா காசிநாதன், கைதேகி பொன்னுசாமி, பாலசுந்தரம் பார்த்திபன், சுதர்சினி மகாலிங்கம், லாவண்யா சதாசிவம், விஜயதர்ஷினி கணேசராஜா, அருளானந்தன் தர்ஷன், சோபியா தவகுமாரன், பிரியதர்ஷினி சிவந்தன், மதற்சினி மோகனதாஸன், ஜெயஜெனனி சுந்தரலிங்கம்.

கச்சதீவில் இலங்கை இராணுவ முகாம் : தீவிர கண்காணிப்பு அவசியமென மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் கடிதம்

karunanithi.jpg“இலங்கை கடற்படை கச்சத்தீவில் மையம் அமைக்கவிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் குறித்து மத்திய அரசு கவனிக்க வேண்டும். இதுதொடர்பாக தீவிரமாக கண்காணிக்க வேண்டியது அவசியம்” எனக் குறிப்பிட்டு முதல்வர் கருணாநிதி, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கையில் போர் முடிவடைந்துள்ள நிலையில், புலிகள் மீண்டும் தலைதூக்காமல் தடுக்கும் முயற்சிகளில் படைகள் இறங்கியுள்ளன. இதன் ஒரு முயற்சியாக கச்சத்தீவில் கடற்படைத் தளத்தை அமைக்க இலங்கை அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனைக் கச்சத்தீவுக்கு அருகே சென்று மீன் பிடித்துத் திரும்பிய தமிழக மீனவர்களும் உறுதி செய்துள்ளனர்.

கச்சத்தீவில் இலங்கை கடற்படை முகாம் அமைந்தால் அது ஒட்டுமொத்த தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் சீர்குலைத்து விடும் என அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், முதல்வர் கருணாநிதி இதுகுறித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், கூறியிருப்பதாவது:

“மாநில அரசு பல்வேறு முறை கேட்டுக்கொண்டும், இந்திய அரசுக்கு இலங்கை அரசு பலமுறை உறுதியளித்த நிலையிலும் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்தும் தாக்கப்பட்டு வருவதை உங்கள் கவனத்திற்கு வருத்தத்துடன் கொண்டு வருகின்றேன்.

உங்களின் கனிவான பார்வைக்கு சில நிகழ்வுகளைத் தெரிவித்து அதன் அடிப்படையில் தொடர் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கின்றேன்.

மீன் இனப்பெருக்கத்திற்கு பாதகம் ஏற்படக்கூடாது என்பதற்காக, இயந்திரப்படகுகளையும், சாதாரண படகுகளையும் கொண்டு, ஆண்டுதோறும் சில கால கட்டங்களில் மீன் பிடிக்கக் கூடாது என்று தமிழக அரசு விதித்திருந்த தடையானது கடந்த மே மாதம் 29ஆந் திகதியுடன் முடிவடைந்தது.

அந்தக் காலகட்டங்களில் இலங்கையில் உள்ள அரசியல் நிலைமை மாறுதலடைந்துள்ளது என்பதால், எவ்வித சிரமமுமின்றி அமைதியாக மீன்பிடித்து தமது வாழ்வாதாரத்தைச் சீர் செய்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் ராமேஸ்வரம் பகுதி வாழ் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.

தமிழக மீனவர்கள் தாக்கப்படும் அவலம்

ஆனால் அவர்கள் அதிர்ச்சியுறும் வகையில், இலங்கை கடற்படையினர், தொடர்ந்து தமிழக அப்பாவி மீனவர்களை கடுமையாகத் தாக்கி வருகின்றனர்.

தமிழக மீனவர்களின் படகுகளைச் சேதப்படுத்தியும், அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களை அபகரித்தும், நடுக்கடலில் வழி மறித்து அவர்களைக் கடுமையாகத் தாக்கியும், துன்புறுத்தியும் வருகின்றனர்.

இம்மாதம் 9ஆந் திகதி ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் இரண்டு படகுகளைக் கைப்பற்றி, 9 மீனவர்களையும் பிடித்துச் சென்று, தலைமன்னார் காவல் நிலையத்தில் ஒப்படைத்து, அங்கே அவர்கள் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.

மாநில மற்றும் மத்திய அரசுகளின் தீவிர முயற்சியின் காரணமாக தூதரக மட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கையால் அவர்கள் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளனர்.

இம்மாதம் 15ஆந் திகதி, ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவுக்கு அருகே மீன்பிடிக்கச் சென்றபோது, அவர்கள் இலங்கை கடலோர காவல் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டு, அச்சுறுத்தப்பட்டுள்ளதோடு, அவர்களின் மீன்பிடி வலைகளையும், பிடிபட்ட மீன்களையும் கைப்பற்றி உள்ளனர். அதன் பிறகு அவர்கள் துரத்தி அடிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு படகு, பதிவு எண் டி.என்/10/எம்எப்பி/660 என்ற படகு, கடுமையாக தாக்கப்பட்டு மோசமாக சேதப்படுத்தப்பட்டு, அதில் இருந்த மீனவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் மூழ்கடிக்கப்பட்டது.

பதிவு எண் : டி.என்/10/எம்எப்பி/573 என்ற படகும் மோசமாக சேதப்படுத்தப்பட்டுள்ளது. அதிஷ்டவசமாக இந்த இரு சம்பவங்களிலும் எவருடைய உயிருக்கும் ஆபத்து ஏற்படவில்லை.

இந்தச் சம்பவங்கள், உண்மையிலேயே ராமேஸ்வரம் பகுதி மீனவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதோடு, அவர்கள் பாதுகாப்பற்ற நிலையிலும், உதவி பெற முடியாத நிலையிலும் ஒரு வித அச்சத்திலும் இருந்து வருகின்றனர்.

இதுவும் தவிர, இலங்கை இராணுவத்தினர் கச்சத்தீவு பகுதியில் இராணுவ மையத்தையும், கண்காணிப்பு கோபுரத்தையும் அமைக்க விரும்பி அதற்காக திட்டமிட்டுள்ளதாக நாளிதழ்களில் செய்தி வந்துள்ளது.

தன்னிச்சையான நடவடிக்கை

இலங்கை கடற்படையினரின் தன்னிச்சையான இந்த நடவடிக்கை மாநில அரசுக்கும், மீனவர்களுக்கும் பெருத்த வருத்தத்தை அளித்துள்ளது. இலங்கை கடற்படையின் அத்தகைய நடவடிக்கை, இந்திய அரசின் நிறுவனங்களால் கண்காணிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

இந்திய அரசும், இலங்கை அரசும் 26.10.2008 அன்று ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. அதன்படி சர்வதேச கடல் எல்லையை தாண்டும் இருநாட்டு மீனவர்களும் அமைதியாக, எவ்வித பாதிப்புக்கும் உள்ளாகாதவாறு நடைமுறை ஏற்பாடுகளை மேற்கொள்ளவும், அவர்கள் மீன்பிடி பணியை மேற்கொள்ளவும் அந்த ஒப்பந்தத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

இத்தகைய நிலையில், கச்சத்தீவு பகுதியில், இலங்கை கடற்படையினரின் தாக்குதல் தொடர்பான சம்பவங்களை அறியும் போது, அது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கின்றது.

எனவே, தூதரக அளவில் ஒப்புக்கொண்ட முடிவுகளை எந்த வகையிலும் மீறக்கூடாது என்றும், மீனவர்களைத் தாக்கக் கூடாது என்றும் இலங்கை அரசுக்கு தெரிவிக்குமாறு உங்களை கேட்டுக் கொள்கின்றேன்.

இத்தகைய பதற்றமான பிரச்சினையில் மீனவர்களின் வாழ்வாதாரம் அடங்கியுள்ளது என்பதால், உடனடியாக இலங்கை அரசின் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் இந்தப் பிரச்சினையைக் கொண்டு செல்லுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.” இவ்வாறு முதல்வர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் நிவாரண கிராமங்களுக்கு விஜயம் – அரசாங்கம் வழங்கியுள்ள வசதிகளுக்குப் பாராட்டு

aloka_prasad.jpgஇலங் கைக்கான இந்தியத் தூதுவர் ஆலோக் பிரசாத் நேற்று வவுனியா நிவாரணக் கிராமங்களுக்கு விஜயம் செய்தார். மெனிக்பாம் கதிர்காமர் நிவாரணக் கிராமம் உட்பட பல நிவாரணக் கிராமங்களுக்கும் அவர் சென்று பார்வையிட்டதுடன் மக்களுடன் கலந்துரையாடினார். இந்தியா வழங்கியுள்ள நடமாடும் மருத்துவ மனைக்கும் விஜயம் செய்த இந்திய தூதுவர் இந்திய டாக்டர்களுடனும் உரையாடினார்.

இந்தியா அனுப்பிவைத்துள்ள மருந்துப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் போன்றவற்றையும் பார்வையிட்ட தூதுவர் பற்றாக்குறை தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டார்.

இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு இலங்கை அரசு வழங்கியுள்ள வசதிகள் குறித்து பாராட்டுத் தெரிவித்த அவர்,  இந்தியா தொடர்ந்தும் உதவிகளை வழங்கும் என்றும் தெரிவித்தார்.

உலக பங்கு சந்தை பட்டியலில் இலங்கைக்கு 8ஆவது இடம்- 51 வீத வளர்ச்சி கண்டுள்ளது

உலக பங்கு சந்தையின் பட்டியலில் இலங்கைக்கு 8 ஆவது இடம். 2009ஆம் ஆண்டு ஜனவரி தொடக்கம் இன்று வரை 518 வீதம் வளர்ச்சி கண்டுள்ளதாக இலங்கை பிணைகள் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் தலைவர் உதயசிறி காரியவசம் தெரிவித்தார். இலங்கையில் 30 ஆண்டுகால உள்நாட்டு யுத்தம் முடிவடைந்துள்ள நிலைமையே பங்குச் சந்தையின் வளர்ச்சி திடீரென அதிகரித்தமைக்கு பிரதான காரணம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விஷேட நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

யாழ். மாநகரசபைக்கான தேர்தலில் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுவோம்: வீ ஆனந்தசங்கரி

TULF Leader Anandasangaree Vயாழ். மாநகரசபைக்கான தேர்தலில் தாங்கள் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடப் போவதாக த.வி. கூ. தலைவர் வீ ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியில் உள்ள கட்சிகள் இதற்கு இணக்கம் தெரிவித்தால் அவர்களுக்கும் இடமளிக்கப்படும் என்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தமது ஆதரவாளர்கள், பொதுமக்கள் ஆகியோரை வவுனியாவில் சந்தித்துக் கலந்துரையாடியபோது தெரிவித்துள்ளார்.

இலங்கையில் முதலாவது பன்றிக் காய்ச்சல் நோயாளி அடையாளம் காணப்பட்டார்!

swine_flu.jpgஇலங் கையில் பன்றிக் காய்ச்சல் நோயினால் பீடிக்கப்பட்ட முதலாவது நபர் வத்தளை பிரதேசத்தில் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளார் என சுகாதார சேவைகள் மற்றும் போஷாக்குத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். இலங்கையில் முதலாவது பன்றிக் காய்ச்சல் நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளமை தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிப்பதற்காக நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். கொழும்பிலுள்ள சுகாதார அமைச்சில் இடம்பெற்ற இச்செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

அவுஸ்திரேலியாவிலிருந்து சிங்கப்பூரினூடாக நேற்று இலங்கைக்கு வருகை தந்த தமிழ் குடும்பமொன்றைச் சேர்ந்த 8 வயது சிறுவனே சுவைன் ப்ளு எனப்படும் பன்றிக் காய்ச்சல் நோய்க்கு ஆளாகியுள்ளார். இலங்கையில் நடைபெறும் திருமண வைபவம் ஒன்றில் கலந்துகொள்வதற்காக இங்கு வருகை தந்த இச்சிறுவன் தற்போது தொற்றுநோய் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடும் காய்ச்சலுக்கு உள்ளான சிறுவனது உடல்நிலை குறித்து சந்தேகம் கொண்ட அவனது தந்தை இதுபற்றி இலங்கையிலள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்துக்கு அறிவித்துள்ளார். உடனடியாக தொற்றுநோய் சிகிச்சைப் பிரிவினர் சிறுவன் தங்கியிருந்த வத்தளைப் பிரதேசத்துக்குச் சென்று அவனை அழைத்து வந்து மேற்கொண்ட பரிசோதனைகள் மூலம் அது பன்றிக் காய்ச்சல் என ஊர்ஜிதமாகியுள்ளது.

இத்தொற்று ஏற்பட்டு 5 முதல் 7 நாட்கள் வரை சென்ற பின்னரே இந்நோய்க்கான அறிகுறிகள் தோன்றும். இதன் காரணமாகவே கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள பன்றிக் காய்ச்சலை இனங்காண்பதற்கான இயந்திரத்தால் இச்சிறுவனின் நோய்த் தாக்கத்தை அடையாளம் காணமுடியாமல் போனது.

நாட்டில் பன்றிக் காய்ச்சல் அடையாளம் காணப்பட்டுள்ளபோதும் இந்நோயைத் தடுப்பதற்கான சகல நடவடிக்கைகளும் திருப்திகரமாக மேற்கொள்ளப்பட்டிருப்பதால் இது குறித்து எவரும் பதற்றமடையத் தேவையில்லை. பன்றிக் காய்ச்சல் பற்றிய தற்போதைய நிலைமை தொடர்பாக அனைத்து பிராந்திய மருத்துவ நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டிருப்பதுடன் தேவையான மருந்துகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ள. அவ்வாறே போதியளவு மருந்துகளும் கையிருப்பில் காணப்படுகின்றன என்றும் அமைச்சர் கூறினார்.

தொடர்ச்சியான இருமல், தொண்டை அரிப்பு, தலைவலி, காய்ச்சல் மற்றும் உடல் வலி என்பன இருப்பின் எவரும் அதுபற்றி அலட்சியமாக இருக்க வேண்டாமென இச்செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட தொற்றுநோய் சிகிச்சைப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர்கள் தெரிவித்தனர். எச்சில், கண்ணீர் என்பன மூலமே இந்நோய் பரவுவதால் கைக்குட்டை உபயோகித்தல், கைகளை அடிக்கடி கழுவுதல் என்பவற்றின் மூலம் இந்த வைரஸ் பரவுவதைத் தடுக்க முடியுமென்றும் அவர்கள் மேலும் குறிப்பிட்டனர். 

“இரு எம்.பி.க்களுக்கு விசா மறுக்கப்பட்டபோதும் தமிழர் விவகாரத்தில் கனடா தூரவிலகி நிற்காது’

canada.jpgகனடா வின் பாராளுமன்றச் செயலாளர் தீபக் ஒபராலிற்கு விசா வழங்க இலங்கை மறுத்துள்ள போதிலும் இலங்கைத் தமிழர் விவகாரம் மற்றும் யுத்தத்தினால் இடம் பெயர்ந்த தமிழ் மக்களை மீளக் குடியமர்த்தும் வேலைத்திட்டம் என்பவற்றில் தொடர்ந்து இலங்கையுடன் இணைந்து செயலாற்றவுள்ளதாக கனடா நேற்று முன்தினம் திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.

கனடாவிலுள்ள உயர் ஸ்தானிகராலயம் அந்நாட்டின் இந்திய வம்சாவளிப் பாராளுமன்றச் செயலாளரான (இந்திய அமைச்சருக்கு நிகரான பதவி) தீபக் ஒபராலிற்கு விசா வழங்க மறுத்துள்ளதாக தெரிவித்த கனடா, இருப்பினும் இலங்கையில் இடம்பெறும் நல்லிணக்க நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

விசா மறுக்கப்பட்டமை தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த தீபக் ஒபரால், எனக்கு விசா வழங்க மறுக்கப்பட்டுள்ள போதிலும், நாம் இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழ் மக்களுக்குமிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதிலேயே உறுதியாகவுள்ளோம் எனத் தெரிவித்தார். இவர் கடந்த வாரத்தில் இலங்கைக்குள் வர அனுமதி மறுக்கப்பட்ட இரண்டாவது கனடிய முக்கியஸ்தர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இவருக்கு முன்னர் இலங்கைக்கு வருகைதந்த கனடாவின் எதிர்க்கட்சி எம்.பி. பொப் ரேய் கட்டுநாயக்காவிலிருந்து கனடாவுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் இவர் விடுதலைப் புலிகள் ஆதரவாளர் எனத் தெரிவிக்கப்பட்டது. கனடாவின் எதிர்க்கட்சியான லிபரலின் (நிழல் வெளிவிவகார அமைச்சர்) ரேய் அடுத்த விமானத்தில் திருப்பியனுப்பப்படும் வரை கட்டுநாயக்கா விமான நிலையத்திலேயே தடுத்து வைக்கப்பட்டார்.

இவர் அதிக எண்ணிக்கையிலான தமிழர்கள் வாழும் பகுதியான ரொறன்டோவின் பிரதிநிதி.

இலங்கை ரேயைத் திரும்பியனுப்பிய வேளையிலேயே என்னையும் ஏற்றுக் கொள்ள முடியாதெனத் தெரிவித்திருந்து எனது விசாவும் நேரடியாகவே மறுக்கப்பட்டுள்ளதென ஒபரால் தெரிவித்தார்.

பொப் ரேயையும் என்னையும் இலங்கைக்குள் அனுமதிக்க மறுத்தமை இலங்கை தொடர்பான கனடாவின் நிலைப்பாட்டை மாற்றாது. நாம் தொடர்ந்தும் அவர்களுடன் இணைந்து செயற்படுவோம் எனவும் தெரிவித்தார்.

அத்துடன் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த தமிழ் மக்களை மீளக் குடியமர்த்துவதற்கான மனிதாபிமான வேலைத் திட்டங்களுக்காக கனடா, இலங்கைக்கு 3 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது. நாம் இடம்பெயர்ந்துள்ள மக்கள் தொடர்பாக அவதானம் கொண்டுள்ளோம். அவர்களை பழைய நிலைக்கு கொண்டு செல்வது அவசியமானது. அத்துடன் நாட்டில் நல்லிணக்கச் செயற்பாட்டிலுள்ள தடைகள் நீக்கப்பட வேண்டுமென மேலும் தெரிவித்தார்.

யாழ்.குடாநாட்டில் 350 மெற்றிக்தொன் கோதுமை மா கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக விநியோகம்

யாழ்.குடாநாட்டில் கோதுமை மாவுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து கடந்த வாரம் கப்பல் மூலமாக எடுத்துவரப்பட்ட 350 மெற்றிக்தொன் கோதுமை மாவை அங்குள்ள 24 பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுக்கும் வழங்கிய அரச அதிபர், ஒரு கிலோ மாவினை 72 ரூபா வீதம் விநியோகிக்குமாறும் கோரியுள்ளார்.
குடாநாட்டில் இருக்கின்ற 23 பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களும் இந்த விலை நிர்ணயத்தை ஏற்றுக் கொண்டு பொதுமக்களுக்கு 72 ரூபா வீதம் விநியோகித்துக் கொண்டிருக்கின்ற நிலையில் வேலணைப் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் மட்டும் 73 ரூபா வீதம் விற்பனை செய்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஏ9 நெடுஞ்சாலை மூடப்பட்ட பின்னர் கப்பல் மூலமாகக் குடாநாட்டுக்கு எடுத்துவரப்படுகின்ற பொருட்களுக்கு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளரும் அரச அதிபரும் இணைந்தே விலை நிர்ணயம் செய்கின்றனர்.

பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் உட்பட வர்த்தக நிலையங்களும் இந்த விலை நிர்ணயத்தின் அடிப்படையிலேயே மக்களுக்குப் பொருட்களை விநியோகம் செய்கின்றனர்.

இந்நிலையில், வேலணை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் ஒரு ரூபா அதிகரித்த விலையில் கோதுமை மாவை விற்பனை செய்வது குறித்து பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் குறித்து உரிய விசாரணைகளை மேற்கொண்டு தற்போது விநியோகிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் கோதுமை மா உட்பட இனிவரும் காலங்களில் விநியோகிக்கின்ற பொருட்களையும் நிர்ணய விலைக்கு பொதுமக்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி யாழ்.மாவட்டக் கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளருக்குப் பொதுமக்கள் கடிதமொன்றையும் அனுப்பி வைத்துள்ளனர்.

இதேவேளை, யாழ்.குடாநாட்டிலுள்ள பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் அண்மைக் காலத்தில் மோசடிகளில் ஈடுபட்டுள்ளமை தொடர்பாக இனங்கண்டுள்ள பொதுமக்கள் இது குறித்து கடும் விசனமடைந்திருக்கின்றமையும் குறிப்பிட்டத்தக்கது.

பிரபாகரனது நாட்குறிப்பேடு படைவீரரின் பொதியிலிருந்து மீட்பு- பொலிஸ் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர

police_spokesman_ranjith.jpgதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் 2008ஆம் ஆண்டு பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் நாட்குறிப்பேடொன்று இராணுவ வீரர் ஒருவருக்குச் சொந்தமான பயணப் பொதியொன்றிலிருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. அத்துடன் அந்த நாட்குறிப்பேட்டில் குறிப்பிடப்பட்டிருந்த தொலைபேசி இலக்கமொன்று தொடர்பில் விசாரணை நடத்திய பொலிஸார் அவ்விலக்கத்துக்குச் சொந்தக்காரராகிய முஸ்லிம் இராணுவ வீரர் ஒருவரையும் கைது செய்தள்ளனர்.

கொழும்பு புறக்கோட்டை குணசிங்கபுர பிரதான பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் ஒன்றினுள் அனாதரவாகக் கிடந்த பொதியிலிருந்தே நேற்று முன்தினம் மேற்படி நாட்குறிப்பேடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். பிரபாகரனின் கையெழுத்தினாலேயே எழுதப்பட்டிருப்பதாகச் சந்தேகிக்கப்படும் அந்த நாட்குறிப்பேட்டின் முன் பக்கத்தில் அவருடைய பெயர் விலாசம் உள்ளிட்ட அனைத்துத் தகவல்களும் எழுதப்பட்டிருந்ததாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:

கடந்த வருடம் விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் அவ்வாண்டு கொழும்பில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வின் போது மேற்கொள்ளவிருந்த தாக்குதல் திட்டம் போன்றன குறித்த பல தகவல்கள் மேற்படி நாட்குறிப்பேட்டில் எழுதப்பட்டிருந்தன.

இதேவேளை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இராணுவ வீரர் வடக்கிலுள்ள இராணுவ முகாமொன்றில் சேவையாற்றி வருபவர் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. அவர் விடுமுறைக்காக வீடு திரும்பும் போதே மேற்படி பயணப் பொதியினை பஸ்ஸிலேயே விட்டுச் சென்றுள்ளார் என்றும் தெரியவந்துள்ளது. புதுமாத்தளன் பகுதியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போர் நடவடிக்கைகளின் போது மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான பதுங்கு குழியொன்றிலிருந்தே மேற்படி நாட்குறிப்பேட்டினைக் கண்டெடுத்ததாக கைது செய்யப்பட்ட இராணுவ வீரர் பொலிஸ் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார். இது பிரபாகரனுடையது என்ற சந்தேகிக்கப்பட்டே தான் அதனை எடுத்துக்கொண்டதாகவும் அவர் பொலிஸாரிடம் கூறியுள்ளார். அத்துடன் கடந்த வருட சுதந்திர தினத்தன்று புலிகள் இயக்கத்தினரால் நடத்த திட்டமிடப்பட்டிருந்த தாக்குதலை முன்னெடுத்த புலி உறுப்பினரின் பெயர் மற்றும் விபரங்கள் அந்த நாட்குறிப்பேட்டில் குறிப்பிடப்பட்டிருந்ததுடன் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த பல உறுப்பினர்களது விபரங்களும் அதில் உள்ளடக்கப்பட்டிருந்தன.

தொழிநுட்பத்துடன் தயாரிக்கப்பட்டிருந்த மேற்படி நாட்குறிப்பில் பிரபாகரனுடைய புகைப்படம் அவ்வியக்கத்தினரால் பயன்படத்தப்பட்ட அதி தொழிநுட்பம் வாய்ந்த ஆயுதங்களின் புகைப்படங்கள் பயிற்சி பெறும் போராளிகளின் புகைப்படங்கள் போன்றனவும் உள்ளடக்கப்பட்டிருந்தன. இந்த நாட்குறிப்பேட்டினை எடுத்துச் சென்ற இராணுவ வீரர் தற்போது தடுத்து வைக்கப்பட்டு தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.