முகாம்களில் உள்ள மக்களுக்காக செய்யும் போரட்டம் அவர்களின் அவல நிலையையும் அவர்கள் திரும்பிப் போய் தமது சொந்த இடங்களில் வாழும்நிலையை உருவாக்கும் போராட்டமாக இருக்க வேண்டும். அந்த வகையில் யூன் 20ல் BTF -British Tamil Forum ஒழுங்கு செய்துள்ள பேரணி முகாம்களில் அவஸ்த்தைப்படும் மக்கள் மீண்டும் தமது வாழ்விடங்களுக்கு மீள குடியேற்ற உதவும் என்பதை நம்புவது மிகவும் கடினமாக உள்ளது.
2. கடந்த காலங்களில் பிரிஎப் (பிரித்தானிய தமிழர் பேரவை) போன்ற புலிகளின் ஆதவாளர்களால் நடாத்தப்பட்ட போராட்டங்கள் புலிகளின் அழிவுக்கும் புலிகளின் தலைவரின் படுகொலைக்கும் துணை போனது மட்டுமல்ல பல்லாயிரக் கணக்கான தமிழர்களின் உயிரிழப்பிற்கும் காரணமானது.
3. ‘புலிகளுக்கும் தமிழீழம் வேணும் எமக்கும் தமிழீழம் வேணும்’ என்பதால் நாம் அவர்கள் இயக்கத்தையும் அந்தக் கொடியையும் ஏற்றுக் கொண்டோம் என்று இயங்கி தமிழீழக் கோசம், பிரபாகரன் படம், புலிக்கொடியடன் நடாத்திய பேரணிகள் போல் இந்த முறையும் பிரிஎப் புலிக்கொடி தமிழ்க் கொடி விற்று நிதி சேகரிப்பில் இறங்கினால்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.
4. புலிகளின் ஆதரவாளர்களால் இயக்குனர்களால் கடந்த காலங்களில் புலிகளின் பெயரால் மக்களுக்காக மக்களிடமிருந்து சேர்த்த நிதி மோசடிகளும் தாம் போராட்டத்திற்கு உதவி செய்கிறோம் என்று போராட்த்திற்கும் துரோகம் இழைத்துள்ளதை புலிகளின் ஆதரவாளர்களால் பகிரங்கமாகவே பேசப்படும் விடயமாக உள்ளது.
5. இன்றுவரையில் உயிரிழந்த புலிப் போராளிகளுக்கும் அதன் தலைவருக்கும் அஞ்சலிக் கூட்டம் செய்யாமலும் இன்றும் புலிகள் மீண்டும் எழுவர்; 5வது தமிழீழப்போர் தொடுப்பர்; புலிக்கொடியே தேசியக் கொடி என்றும் கோசம் இட்டு முகாம்களில் உள்ள மக்களின் வாழ்வில் நிலைமைகளை மோசமாக்கும் நிலைக்குத் தள்ளிவிடுவார்கள் என்ற அச்சம் தவிர்க்க முடியாதது.
6. நாட்டில் உள்ள உண்மைச்சுற்றாடல் நிகழ்வை கவனத்தில் எடுக்காமல் புலம்பெயர் சூழலில் கனவு உலகில் தவறான முடிவுகள் எடுக்ப்பட்டு தவறாக வழிநடாத்தப்பட்டது. இதன் முடிவில் புலிகளின் தலைமையும் புலிப்போராளிகளும் அழிக்கப்பட்டனர். இந்த போராட்டங்களின் முடிவுகளின் விமர்சனங்கள் இல்லாமல் மீண்டும் ஒரு போரட்டம் நடத்துவதும் அதுவம் இவ்வளவு அவசர அவசரமாக இது நடாத்தப்படுவதும் இது புலிகளுக்குள்ளேயே நடைபெறும் குழுவாத்தின் பிரதிபலிப்புக்களா என்ற பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
7. இன்று இந்த மக்கள் முகாம்களில் அவலநிலைக்குத் தள்ளப்பட்டதற்கு முக்கிய காரணமாக இருப்பது கிளிநொச்சி மன்னார் முல்லைத்தீவு வவுனியா பிரதேசங்களில் வாழ்ந்த மக்களை புலிகளின் தலைவரையும் ஆயுதங்களையும் பாதுகாக்கும் பொருட்டு மனிதக் கேடயங்களாக பயன்படுத்த இழுத்துச்சென்றதே என்பதை பிரிஎப் மறந்து விடக்கூடாது. இப்படி இழுத்துச்சென்ற மக்களை புதைகுழிகளுக்குள்ளும் செல் மழைக்குள்ளும் பசி பட்டினியுடன் மரணத்தை எதிர்நோக்க வைத்ததும் புலம்பெயர் புலிகளின் தவறான வழிகாட்டலே என்பதை பிரிஎப் மறந்துவிடக்கூடாது. இன்றுள்ள வன்னி முகாம்களைவிட மிகவும் மோசமான நிலையிலேயே இந்த மக்களை புலிகளின் தலைமை வைத்திருந்ததும் இந்த மக்களை புலம் பெயர் புலிகளின் தவறான புத்திமதியில் பலிக்கடாக்களாக்கும் திட்டத்தின் தோல்வியையும் பிரிஎப் மறந்துவிடக் கூடாது.
8. இன்றுள்ள முகாம் வாழ்க்கையை புலிகளே புதுமாத்தளன் – முள்ளி வாய்க்கால் பகுதியில் ஆரம்பித்து வைத்து மக்களை மரணம் நோக்கி நடாத்தினர் என்பதையும் இந்த சம்பவங்களை பிரிஎப் புலிகளிடம் தட்டிக்கேட்கவில்லை என்பதையும் இங்கே கூறிக்கொள்வது தவிர்க்க முடியாதது.
9. அது மட்டுமல்ல இப்படியான இந்த சூழ்நிலையிலிருந்து தப்பி ஓடி வந்தவர்களை தலைவரை தனியே விட்டுவிட்டு ஓடிவந்த துரோகிகள் என்றும் இந்த துரோகிகளுக்கு எந்த உதவியும் செய்யக் கூடாது என்று கூறியவர்களும் பிரிஎப் மற்றும் புலிகளின் ஆதரவாளர்களே.
10. மேலும் மேற்கூறிய இந்த துரோகப்பட்டத்தை ஏக்காளமாக தூபமிட்டு பரப்பிய ஜபிசி ஜிரிவி தீபம் போன்ற ஊடகங்கள் இன்று இவற்றுக்கு என்ன சொல்கிறார்கள்? அரசியல் சவால்களைவிட இராணுவ வெற்றிகளை தமிழீழ வெற்றியாக ஊதித் தொலைத்த இந்த ஊடகங்கள் இன்றும் உங்கள் பேரணியை ஊதித்தள்ளும்.
11. மூன்று மாதங்களுக்கு முன்பு அந்த மக்களின் பரிதாபத்தை துரோகம் என்று கூறிவிட்டு இன்று அதேமாதிரியான சூழ்நிலையில் ஆனால் ஓரளவு மரணபயம் இல்லாமல் வாழும் மக்களை அரசின் மனித உரிமை மீறல்கள் என்று சத்தம்போடும் பிரிஎப் ஏன் அன்று புலிகளால் இதே போன்ற கொடுமைகள் நடைபெறும் போது எதிர்த்து குரல் எழுப்பவில்லை. அப்படி குரல் எழுப்பி தடுத்து வைக்கப்பட்டு இருந்த மக்களை விடுவிக்கும்படி புலிகளை வற்புறுத்தியிருந்தால் இந்த நிலைமை இப்படி ஏற்ப்பட்டிருக்காது.
12. இன்று புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டபின்பும் அந்தப் பிரதேசங்களில் மீளக் குடியேற்றம் செய்யாமல் எமது மக்களை இப்படியாக அடைத்து வைத்திருப்பதை மனிதாபிமானமுள்ள எவரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அப்படியான மனித உரிமை மீறல்களை தமிழ்பேசும் மக்கள் எதிர்த்தே வந்துள்ளனர். ஆனால் இதேமாதிரியான மனித உரிமை மீறல்களை புலிகள் செய்யும் பொது மட்டும் காரணம் கூறிய பிரிஎப் இப்போது அரசிற்கு எதிராக குரல் எழுப்புவதை வரவேற்கும் அதே வேளை தமது கடந்தகால தவறுகளையும் பகிரங்கமாக மக்களிடம் ஒத்துக்கொள்ள துணிந்து முன்வர வேண்டும்.
13. இந்த யுத்த திருவிழாவை நடாத்த பண உதவி செய்த புலம் பெயர் மக்கள் திருவிழா முடிவில் துப்பரவு வேவைகளுக்கும் செய்யவும் முன்வரவேண்டும். வன்னி நிலப் பரப்பு எங்கும் நிலக் கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டு இருப்பதாக அரசு தெரிவிக்கிறது. புலிகளும் அதனைத் தெரிவித்துள்ளனர். ஆகவே இந்த யுத்தத்திற்கு ஆரம்பத்தில் போர் முழக்கம் இட்டவர்கள் இந்தக் கண்ணி வெடி அகற்றும் பணிக்கு உதவுவது அவசியம்.
14. இன்று வன்னி மக்களின் முகாம் வாழ்க்கையில் இலங்கை இராணுவம் பொலீசார் ஒருபக்கம் லஞ்சம் வாங்கிக்கொண்டு மக்களை வெளியே அனுமதித்துவிட்டு மக்கள் தப்பி ஓடிவிட்டனர் என்று தேடுதல் வேட்டைகள் செய்வதும் இவர்கள் காணாமல் போனோர் என தமிழர்கள் பிரச்சாரம் செய்வதும் நிகழ்கின்றது. புலிகளுடன் தொடர்புபட்டவர்கள் அழைத்துச் செல்லப்படும் சம்பவங்கள் நிகழ்ந்தள்ளன. நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. இவர்கள் எங்கு கொண்டு செல்லப்படுகிறார்கள் என்பது பற்றிய விபரங்களை அரசு வெளியிடவில்லை. இவை பற்றி சுனில் அபயசேகர போன்ற மனித உரிமைவாதிகள் தொடர்ச்சியாக கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அவர்களது குரல்களைப் பலப்படுத்துவது மிக மிக அவசியம்.
15. மேற்கூறிய காரணங்களின் அடிப்படையில் கடந்தகாலத் தவறுகள் பற்றிய விமர்சனத்தை முன்வைக்காமல் பிரிஎப் திடீரென இந்த மக்களுக்கான போராட்ட களத்தில் இறங்கியுள்ளது பலமான சந்தேகங்களை உருவாக்கியுள்ளது. இப்படியான போராட்டங்களை ஆரம்பிக்க முன்னர் பிரிஎப் ஒரு சுய விமர்சனத்தை முன்வைத்திருக்க வேண்டும்.